என் மலர்
நாமக்கல்
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கபிலர்மலை வட்டார கிளையின் வட்டார செயற்குழு கூட்டம் நடை பெற்றது.
- கூட்டத்திற்கு வட்டார தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கபிலர்மலை வட்டார கிளையின் வட்டார செயற்குழு கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு வட்டார தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டாரத் துணைத் தலைவர் சரவணன் வரவேற்றார்.வட்டாரச் செயலாளர் கண்ணன் தீர்மானங்களை விளக்கி இயக்க உரையாற்றி னார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வகுப்பறை கற்றல் கற்பித்தலில் நடைமுறை சாத்தியமற்ற மாணவர்க ளிடையே கற்றல் இடை வெளியை உருவாக்கும் எண்ணும்-எழுத்தும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தமிழக அரசு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணை யான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்.
கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு சரண்டர், அக விலைப்படி உயர்வு, நிலுவைத் தொகை போன்றவற்றை தமிழக அரசு திருப்பி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வட்டார பொருளாளர் ஜோதி நன்றி கூறினார்.
- பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் பரமத்தி வேலூர் பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி. சூரியாம்பாளையம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சிபாளையம், ஜேடர்பா ளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரைப்பா ளையம், கண்டிப்பாளையம், வடுகபாளையம், நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாயக்கனூர், சிறுநல்லி கோவில், கள்ளுக்கடை மேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், குரும்பல மகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பள்ளம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது
நல்லூர்
அதேபோல் நல்லூர் துணை மின் நிலையத்தில் வரும் 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நல்லூர், கந்தம்பாளையம்,கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல் கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளை யம், ஆகிய பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
- பூவன் வாழை, பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
- பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், ஜேடர் பாளையம், கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன் வாழை, பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.வாழைத்தார் முதிர்ச்சி அடைந்ததும் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய வாழைத்தார்கள் வியாபாரிகள் நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும்,மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.800-க்கும் விற்ப னையானது. வாழைத்தார் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது.
- இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டேபிள் பேன் வயரை பிடித்துள்ளது.
- அப்போது மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையத்தில் உள்ள ஒரு தம்பதியினரின் ஒரு வயது குழந்தை சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டேபிள் பேன் வயரை பிடித்துள்ளது. அப்போது மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து எழுந்த பெற்றோர் மின்சாரம் தாக்கி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை உடனடியாக மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடந்த ஒரு வாரமாக சுயநி னைவு சுயநினைவு இல்லாமல் இருந்த அக்குழந்தை இறந்து விட்டது. இது குறித்த செய்தி வாட்ஸ் அப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் உள்ள வீட்டில் மின் உபகரணங்களை பயன்படுத்தும் போது குழந்தை களுக்கு எட்டாத வகையில் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம் என மின்சார துறையினர் கேட்டு கொண்டு உள்ளனர்.
- சாலையின் இருபுறமும் இருந்த அனைத்து புளிய மரங்களையும் அகற்றும் பணி தினமும் நடந்து வருகிறது.
- பாதசாரிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விரைவில் இப்பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை நான்கு ரோட்டில் இருந்து பொத்தனூர் எம்.ஜி.ஆர்., சிலை வரை சாலையில் இரு புறமும் விரிவாக்க பணிக்காகவும் மற்றும் சாக்கடை வசதி அமைக்கும் பணிக்காகவும் சாலையின் இருபுறமும் இருந்த அனைத்து புளிய மரங்களையும் அகற்றும் பணி தினமும் நடந்து வருகிறது.இந்த சாலை பரமத்திவேலூரில் இருந்து பொத்தனூர். பாண்டமங்கலம். வெங்கரை. ஜேடர்பாளையம், சோழசிராமணி மற்றும் சோழசிராமணி வழியாக ஈரோடு செல்லும் முக்கிய சாலையாக திகழ்கிறது.
சுமார் 60-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் மற்றும் இதர மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். இப்பணி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காலை முதல் மாலை வரை மின்சாரமும் தினசரி தடை செய்து வருகின்றனர். தினசரி மின் வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணியால் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியை கடக்கும் பாதசாரிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விரைவில் இப்பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தினசரி மரங்களை வெட்டி நடுரோட்டில் சாய்த்து வருவதால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகள்ம ணிக்கணக்கில் நின்று அந்த வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை தினமும் ஏற்பட்டு வருகிறது. எனவே மரங்களை வெட்டி அகற்றும் பணியை இரவு நேரத்தில் செய்து தங்கு தடை இன்றி வாகனங்கள் செல்ல வாகன ஓட்டிகளுக்கு உதவ வேண்டும். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 60 அடி உயர முள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி யாகவேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் சாணார்பாளையத்தில் சுமார் 60 அடி உயர முள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டாலபிஷேகத்தை முன்னிட்டு 48 நாட்கள் தினந்தோறும் முனியப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
நேற்று மண்டலாபிஷேக நிறைவு நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முனியப்பசாமி கோவில் வளாகத்தில் அக்னிகுண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி யாகவேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் சேளூர் சாணார்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முனியப்பசாமியை வழிபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்நிலையில் கோவிலின் பக்தர்கள் அபிஷேகம் நிறைவுற்றதை முன்னிட்டு வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் முதல் தேதி அசைவ அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மாசி மாதம் முதல் தேதி அசைவ அபிஷேகம், அன்னதானமும் வழங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- இளம்பெண் வள்ளியம்பட்டியில் உள்ள கணவர் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
- உறவினர்கள் பரமத்திவேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர்.
பரமத்திவேலூர்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வள்ளியம்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
வாலிபர் கேட்டரிங் முடித்து அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் நிலையில் இளம்பெண் வள்ளியம்பட்டியில் உள்ள கணவர் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
இந்நிலையில் இளம்பெண் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் அவரது மாமனார் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரமத்திவேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார், அதை கண்டு கொள்ளாத மாமியார் மற்றும் கணவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் 3 பேரையும் கைது செய்ய அவர்களது வீட்டிற்கு போலீசார் சென்றபோது அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
- வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 27.90 குவிண்டால் எடை கொண்ட 85-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.57-க்கும், சராசரி விலையாக ரூ.79.40-க்கும் என ரூ 2 லட்சத்து 18ஆயிரத்து 546-க்கு விற்பனையானது.
- தேசிய தரச் சான்று குழுவினர் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
- 13 பிரிவுகளில் நடந்த ஆய்வில் 93 மதிப்பெண்கள் மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது.
குமாரபாளையம்:
குமாரபாளையம், அரசு மருத்துவமனையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் என 3 கட்டங்களாக தேசிய தரச் சான்று குழுவினர் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் குமாரபாளையம் அரசு மருத்துவமனை பல அளவுகோல்களில் சிறப்பிடம் பெற்று தேசிய தரச்சான்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:-
குமாரபாளையம், அரசு மருத்துவமனையில் 3 கட்டங்களாக தேசிய தரச் சான்று குழுவினர் ஆய்வு செய்தனர். 13 பிரிவுகளில் நடந்த ஆய்வில் 93 மதிப்பெண்கள் மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. இதன் பலனாக தற்போது தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது.
மாவட்ட அளவில் ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய ஊர்களுக்கு அடுத்து குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு இது கிடைத்துள்ளது.
இதேபோல் லட்சயா திட்டத்தின் கீழ் மகப்பேறு அறை, அறுவை சிகிச்சை அறை ஆகியன ஆய்வு செய்யப்பட்டது. அதிலும் 95 மதிப்பெண்கள் கிடைக்கப்பெற்று, சுகாதார அமைச்சர் சுப்ரமணியம், சுகாதாரத்துறை இயக்குனர் கதன்தீப்சிங், லட்சயா திட்ட இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளனர்.
இந்த விருதுகள் பெற காரணமாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியா ளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தேசிய தரச்சான்று பெற்றதன் பலனாக அதிக படுக்கை வசதிகள், அதிக டாக்டர்கள், அதிக செவிலியர்கள், அதிக பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பெண்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட முருகேசன்
- பெண்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்லங்காட்டுவலசு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி வி.மேட்டூர் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட முருகேசன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் முருகேசன் மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வி.மேட்டூர் பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்லங்காட்டுவலசு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், சமூக செயல்பாட்டாளர் வக்கீல் கார்த்திகேயன், வி.மேட்டூரை சேர்ந்த முருகன், பழனிசாமி, செங்கோடன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டங்கள் வழிகாட்டி இருக்கும்போது, போலீசார் தவறு செய்தவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தவேண்டும்.
இந்த வழக்கை முழுமையாக விசாரித்து பெண்களை அவதூறாக சித்தரித்தவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.
- மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.
- மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆர்.எஸ். வழித்தடத்தில் குட்டைமுக்கு பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
மின்கம்பம் சேதம்
இதில் மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்தனர். சாலையில் மின்கம்பம் விழுந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
20 மணி நேர மின்தடை
இதனிடையே மின் கம்பம் உடைந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அப்பகுதி இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் தவித்தனர்.
இதையடுத்து நேற்று காலையில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் மின்கம்பம் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.
- நாமக்கல் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண் மீட்புக் குழுவினர் நாமக்கல் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.
- போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நடந்த இந்த பயிற்சியில் அதிரடி கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
நாமக்கல்:
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களைக் கண்டறிதல், தேவையான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் பேரிடர் மேலாண்மை மீட்புக்கு ழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.
போலீசாருக்கு பயிற்சி
நாமக்கல் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண் மீட்புக் குழுவினர் நாமக்கல் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர். போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நடந்த இந்த பயிற்சியில் அதிரடி கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்து ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
3 நாட்கள்
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியை அதிரடி கமாண்டோ படை சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழங்கி வருகிறார். இப்பயிற்சியில் 25 பெண் போலீசார் உள்பட 60 போலீசார் பங்கேற்றனர்.






