என் மலர்
நாமக்கல்
- போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தாயிடம் செயின் தொலைந்தது குறித்து எப்படி தெரிவிப்பது என்று மாணவன் புலம்பியதாக கூறப்படுகிறது
பரமத்திவேலூர்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மஞ்சகன்னி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ். இவரது மகன் விஜயன் (18). இவர் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விடுதியில் தங்கி சிவில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று இரவு 10.30 மணிக்கு அறையில் இருந்து வெளியே வந்த விஜயன் 3-வது மாடியில் உள்ள வாயில் அருகில் உட்கார்ந்து கொண்டு செல்போனில் மெசேஜ் செய்து கொண்டிருந்தார்.
இன்று காலை 6.30 மணிக்கு பிரேம் ஆனந்த் என்ற மாணவன் படிப்பதற்காக 3-வது மாடி படி அருகே சென்றபோது விஜயன் அங்கிருந்த அறை ஒன்றில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
அதிர்ச்சியடைந்த பிரேம் ஆனந்த் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவன் தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து போன மாணவர் நேற்று இரவு 11:30 மணி முதல் 12.30 மணி வரை அசோக் என்பவரிடம் தனது அம்மா வாங்கி கொடுத்த செயின் தொலைந்து விட்டதாக வருத்தமாக தெரிவித்துள்ளார்.
மேலும் தாயிடம் செயின் தொலைந்தது குறித்து எப்படி தெரிவிப்பது என்று புலம்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன.
- வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன. இவற்றின் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 27 கோடி வருவாய் கிடைக்கிறது.
இதனைக்கொண்டு நகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம், மின் இணைப்பு கட்டணம் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி, தொழில்வரி வசூல் செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில் இதுவரை 35 சதவீத தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 65 சதவீத தொகை நிலுவையாக உள்ளது.
பொதுமக்களில் பெரும்பாலானோர் வரி மற்றும் கட்டணங்களை மார்ச் மாதம் செலுத்த வேண்டும் என தவறுதலாக கருதி வருகிறார்கள். தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் திருந்திய சட்டத்தின் படி முதல் அரையாண்டுக்கான வரி இனங்கள் ஏப்ரல் 30ந் தேதிக்கு முன்னரும், இரண்டாம் அரையாண்டிற்கான தொகையினை அக்டோபர் மாதம் 31ந் தேதிக்கு உள்ளும் செலுத்தி இருக்க வேண்டும்.
20232024ம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு உரிய தொகையினை முழுவதுமாக கடந்த 31ந் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். எனவே தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும் வருகிற 30ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்தி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார்.
- ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.
குமாரபாளையம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து நாமக்கல் மாவட்டம் குமார பாளை யத்தில் சங்கரய்யா விற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது உருவப்ப டத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி கைகளில் ஏந்தியவாறும், மாணவ, மாணவிகள், பொதுநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக அனைத்து கட்சியினர் சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பின்னர் நகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகே வைக்கப்பட்ட சங்கரய்யாவின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
இதில் காங்கிரஸ் ஜானகிராமன், தி.மு.க. செல்வராஜ், ஜெயபிரகாஷ், தே.மு.தி.க. நாராயணசாமி, மகாலிங்கம், மக்கள் நீதி மய்யம் சித்ரா, உஷா, தி.க. சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கணேஷ்குமார், வக்கீல் கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரில் பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது.
- திருவிழாவையொட்டி அம்மனுக்கு 3 நாட்களும் சிறுதானிய உணவு வகைகளை சமைத்து படைத்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரில் பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று இரவு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
இந்த திருவிழாவையொட்டி கூனவேலம்பட்டி புதூர், கூனவேலம்பட்டி, பாலப்பாளையம், ஆனைக்கட்டி பாளையம், குருக்கபுரம், ஆண்டகளூர்கேட், சக்தி நகர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை, நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 3 நாட்களும் அரிசி சோறு சாப்பிடவில்லை. தினை, கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானிய வகைகளைத் தான் சாப்பிட்டு வந்தனர்.
கோவிலில் பொங்கல் வைத்த பெண்கள் வெள்ளை சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்தனர். திருவிழாவையொட்டி அம்மனுக்கு 3 நாட்களும் சிறுதானிய உணவு வகைகளை சமைத்து படைத்தனர்.
பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழாவில் நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
- பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
- பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
மேலும் ஆடி 18 திருவிழா வெகு விமரிசையாக இந்த கோவிலில் நடைபெறும். ஆடி 18 திருவிழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கோவில் பூசாரி பூஜை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு பூசாரி வந்து பார்க்கும்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. நள்ளிரவில் கொள்ளையர்கள் கோவிலுக்குள் புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
வருகிற 21-ந் தேதி நாமக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக பிற்பகல் 3 மணி அளவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
பின்னர் அங்கு நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ள பந்தலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜேஸ்குமார் எம்.பி. நாமக்கல்லுக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், சங்கர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
- 21-ந் தேதி அன்று காலை 10 மணி அளவில் பரமத்திவேலூர் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடக்கிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆர்.டி.ஓ. சுகந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இம்மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி அன்று காலை 10 மணி அளவில் பரமத்திவேலூர் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
- அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.
வேலூர், ஜேடர்பா ளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.40-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.90-க்கும், அரளி கிலோ ரூ.170-க்கும், ரோஜா கிலோ ரூ.280-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- செல்வராஜ் (55). கூலி தொழிலாளி திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் தனது குடும்பத்தை விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.
- மகன் விஜய் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்த செல்வராஜ் நமது குடும்பத்தினருக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று மனவருத்தத்தில் கூறியுள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே தளிகை பொய்யேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). கூலி தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள், 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். 4 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் தனது குடும்பத்தை விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.
இந்நிலையில் கடந்த 15 வருடங்களாக ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதிக்கு சென்று அங்கு கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதமாக பொய்யேரி பாளையம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தில் மது வாங்கி குடித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மகன் விஜய் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்த செல்வராஜ் நமது குடும்பத்தினருக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று மனவருத்தத்தில் கூறியுள்ளார். இதனிடையே ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டு விஜய் வீட்டிற்கு வந்தபோது செல்வராஜ் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராஜ் விஷம் குடித்து இருந்ததாகவும், வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து விஜய் வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காமாட்சி விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
- இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சேளூர் செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி காமாட்சி (25). கூலித் தொழிலாளர்கள்.
கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காமாட்சி விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
தீக்குளிப்பு
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார் . உடலில் தீப்பற்றி எரியவே வலி தாங்க முடியாமல் காமாட்சி சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைத்து காப்பாற்றி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பரிதாபமாக இறந்தார்
இந்த நிலையில் காமாட்சி சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காமாட்சிக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆவதால் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகன்யா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- சோமசுந்தரம் (35). இவரது மனைவி மகேஸ்வரி (29). இவர்களுக்கு தேவதர்ஷன் (8), என்ற மகனும், நிகிதா (4) என்ற மகளும் உள்ளனர்.
- சோமசுந்தரம், தனது மனைவி மகேஸ்வரியை நீச்சல் கற்று கொடுப்பதாக கூறி அருகில் உள்ள ஒரு கிணற்றுக்கு அழைத்து சென்றார்.
திருச்செங்கோடு:
ஈரோடு மாவட்டம் கருக்கம் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (35). இவரது மனைவி மகேஸ்வரி (29). இவர்களுக்கு தேவதர்ஷன் (8), என்ற மகனும், நிகிதா (4) என்ற மகளும் உள்ளனர்.
தொழிலாளர்கள்
இவர்கள் தற்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர் குத்திப் பாளையம் சங்கங்காடு பகுதியில் வசித்து வந்தனர். சோமசுந்தரம் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். மகேஸ்வரி கோன் அட்டை மில்லில் ேவலைப்பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சோமசுந்தரம், தனது மனைவி மகேஸ்வரியை நீச்சல் கற்று கொடுப்பதாக கூறி அருகில் உள்ள ஒரு கிணற்றுக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு அவர்தனது மனைவிக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டு இருந்தார்.
தண்ணீரில் மூழ்கினர்
அப்போது மகேஸ்வரி மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் கிணற்றில் அடுத்தடுத்து மூழ்கி பலியானார்கள். இதுப்பற்றி தெரியவந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் மற்றும் திருச்ெசங்கோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பலியான சோமசுந்தரம் மற்றும்அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
சோமசுந்தரத்துக்கு நீச்சல் தெரிந்த நிலையில் அவரும், அவரது மனைவியும் எப்படி இறந்தார்கள் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்காக பாதிக்கப்பட்ட 2 சமூக மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் சிறுநல்லிகோவில் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்னன் தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள் குறித்து பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்காக பாதிக்கப்பட்ட 2 சமூக மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் சிறுநல்லிகோவில் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
சமூக விரோதிகள்
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்னன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இரு சமூகம் சார்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் ஒரு சில சமூக விரோதிகள் இரு தரப்பினர் மோதல் கொள்ளும் வகையில் இந்த வன்முறை சம்பவங்களை திட்டமிட்டு செய்கிறார்கள் என்றனர். மேலும் வதந்திகளுக்கு இடம் அளிக்காமல் குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தரவும் பொதுமக்கள் உறுதி அளித்தனர்.
ஒத்துழைப்பு
ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள், அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆங்காங்கே வாழை மரங்களை வெட்டுதல், டிராக்டர்களுக்கு தீ வைத்தல், பாக்கு மரங்களை வெட்டுதல் போன்றவை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுத்தவர்களின் பெயர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.
எனவே பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பொதுமக்களிடம் தெரிவித்தார். கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், சிறுநல்லி கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இரு சமூக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






