என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்.
    • சம்பவத்தன்று இரவு எதிரே அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சண்முகம் (வயது 50).

    இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு ஜேடர்பாளையத்திற்கு பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளில் வேலகவுண்டம்பட்டியில் இருந்து நருவலூர் செல்லும் சாலையில் அணியார் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    சிகிச்சை

    இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சிலுவம்பட்டி, ரெட்டியார் தெருவை் சேர்ந்த கார் டிரைவர் சேகர் (38) என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • திருச்செங்கோடு கல்லுபாளையம் குடி தெருவை சேர்ந்தவர் அப்புசாமி. இவரது மகன் சங்கர் (வயது 32). ரிக் வண்டி உரிமையாளர்.
    • சங்கர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது மலைகாவலர் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சங்கர் மீது மோதியது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கல்லுபாளையம் குடி தெருவை சேர்ந்தவர் அப்புசாமி. இவரது மகன் சங்கர் (வயது 32). ரிக் வண்டி உரிமையாளர்.

    விபத்து

    நேற்று இரவு சுமார் 11 மணிக்கு திருச்செங்கோடு நகர பகுதிக்கு வந்து விட்டு சங்கர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது மலைகாவலர் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சங்கர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து சங்கரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டனர். அதில் சங்கருக்கு திருமணம் ஆகி சூர்யா என்ற மனைவியும், நட்சத்திரா என்ற 2 வயது பெண் குழந்தை இருப்பதும், கல்லு பாளையத்தில் புதிய வீடு கட்டுவதால் மலைசுற்றி ரோட்டில் மனைவி குழந்தையுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.

    கதறல்

    சங்கர் இறந்த தகவலை அவரது மனைவியிடம் போலீசார் தெரிவித்தனர். இதை கேட்டு அவர் கதறி அழுதார்.

    போலீசார் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவர் மற்றும் வாகனம் குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • சுப்பிரமணி (55). விவசாயி. இவரது மனைவி செல்வி (50). செல்வி அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
    • 2 மணி நேரம் கழித்து மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் உரம்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). விவசாயி. இவரது மனைவி செல்வி (50). செல்வி அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    பூட்டு உடைப்பு

    இதையடுத்து நேற்று காலையில் சுப்பிரமணி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். 2 மணி நேரம் கழித்து மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி, மோதிரம் உள்பட 5 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது.

    இதுபற்றி மங்களபுரம் போலீசில் சுப்பிரமணி புகார் அளித்தார். அதன்பேரில் மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் குமாரபாளையம் உயர்தொழில்நுட்ப பூங்கா செயல்பட்டு வருகிறது.
    • ஓடிசா மாநிலத்தை சேர்ந்த திம்பு மாஜி (22), பீகார் மாநிலத்தை சேர்ந்த கோமல் குமாரி (18) ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் குமாரபாளையம் உயர்தொழில்நுட்ப பூங்கா செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள ஒரு நிறுவனத்தில் வடமாநிலங்களை சேர்ந்த 15 குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

    காதல் ஜோடி

    இதில் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த திம்பு மாஜி (22), பீகார் மாநிலத்தை சேர்ந்த கோமல் குமாரி (18) ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று அதிகாலை இவர்கள் இருவரும் தங்கியிருந்த அறையில் இருந்து காணாமல் போயினர். இதுகுறித்து நிறுவன மேலாளர் விஜிநாதனிடம் கூறிவிட்டு வடமாநில தொழிலாளர்கள் சிலர் தேட சென்றனர். ஈரோடு ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருவரையும் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

    தூக்கு போட்டு தற்கொலை

    இந்த நிலையில் நேற்று பகல் அதே மில்லில் பணியாற்றும் ஆதித்யதாஸ் என்பவர் அருகில் உள்ள காலி இடத்தில் சென்றபோது அங்கிருந்த வேப்ப மரத்தில் காதலர்கள் இருவரும் ஒரே துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த ஆதித்யதாஸ் அதே மில்லில் பணியாற்றும் இறந்த பெண்ணின் மூத்த சகோதரி சாலோ குமாரியிடம் சென்று கூறினார். அவர் சம்பவ இடத்திற்கு வந்து தங்கையின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    விசாரணை

    இதனிடையே சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு நிறுவன மேலாளர் தகவல் அளித் தார். அதன்பேரில் போலீ சார் விரைந்து வந்து இரு வரது உடல்களையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காதலர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இப்பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி உள்ளது.
    • பரமத்தி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியை பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.

    கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இப்பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி உள்ளது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுகள் பரவாமல் தடுக்கும் வகையில் பரமத்தி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியை பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்.

    பரமத்தியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் முதல் கட்டமாக நேற்று கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மருந்துகள் தெளித்தும், கொசு ஒழிப்பு மருந்து அடித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் வீட்டை சுற்றியுள்ள உடைந்த தேங்காய் சிரட்டைகள், ஆட்டுக்கல் மற்றும் பழைய டயர்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்கி நிற்பதை அகற்றினர். பரமத்தி பேரூராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் இருந்த செடி, புற்களை அகற்றி வருகின்றனர்.

    • போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாயிடம் செயின் தொலைந்தது குறித்து எப்படி தெரிவிப்பது என்று மாணவன் புலம்பியதாக கூறப்படுகிறது

    பரமத்திவேலூர்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மஞ்சகன்னி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ். இவரது மகன் விஜயன் (18). இவர் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விடுதியில் தங்கி சிவில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று இரவு 10.30 மணிக்கு அறையில் இருந்து வெளியே வந்த விஜயன் 3-வது மாடியில் உள்ள வாயில் அருகில் உட்கார்ந்து கொண்டு செல்போனில் மெசேஜ் செய்து கொண்டிருந்தார்.

    இன்று காலை 6.30 மணிக்கு பிரேம் ஆனந்த் என்ற மாணவன் படிப்பதற்காக 3-வது மாடி படி அருகே சென்றபோது விஜயன் அங்கிருந்த அறை ஒன்றில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    அதிர்ச்சியடைந்த பிரேம் ஆனந்த் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவன் தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்து போன மாணவர் நேற்று இரவு 11:30 மணி முதல் 12.30 மணி வரை அசோக் என்பவரிடம் தனது அம்மா வாங்கி கொடுத்த செயின் தொலைந்து விட்டதாக வருத்தமாக தெரிவித்துள்ளார்.

    மேலும் தாயிடம் செயின் தொலைந்தது குறித்து எப்படி தெரிவிப்பது என்று புலம்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன.
    • வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன. இவற்றின் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 27 கோடி வருவாய் கிடைக்கிறது.

    இதனைக்கொண்டு நகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம், மின் இணைப்பு கட்டணம் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி, தொழில்வரி வசூல் செய்யப்பட்டு வருகின்றன.

    இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில் இதுவரை 35 சதவீத தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 65 சதவீத தொகை நிலுவையாக உள்ளது.

    பொதுமக்களில் பெரும்பாலானோர் வரி மற்றும் கட்டணங்களை மார்ச் மாதம் செலுத்த வேண்டும் என தவறுதலாக கருதி வருகிறார்கள். தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் திருந்திய சட்டத்தின் படி முதல் அரையாண்டுக்கான வரி இனங்கள் ஏப்ரல் 30ந் தேதிக்கு முன்னரும், இரண்டாம் அரையாண்டிற்கான தொகையினை அக்டோபர் மாதம் 31ந் தேதிக்கு உள்ளும் செலுத்தி இருக்க வேண்டும்.

    20232024ம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு உரிய தொகையினை முழுவதுமாக கடந்த 31ந் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். எனவே தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும் வருகிற 30ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்தி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார்.
    • ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.

    குமாரபாளையம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து நாமக்கல் மாவட்டம் குமார பாளை யத்தில் சங்கரய்யா விற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது உருவப்ப டத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி கைகளில் ஏந்தியவாறும், மாணவ, மாணவிகள், பொதுநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இதன் ஒரு பகுதியாக அனைத்து கட்சியினர் சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பின்னர் நகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகே வைக்கப்பட்ட சங்கரய்யாவின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

    இதில் காங்கிரஸ் ஜானகிராமன், தி.மு.க. செல்வராஜ், ஜெயபிரகாஷ், தே.மு.தி.க. நாராயணசாமி, மகாலிங்கம், மக்கள் நீதி மய்யம் சித்ரா, உஷா, தி.க. சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கணேஷ்குமார், வக்கீல் கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரில் பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது.
    • திருவிழாவையொட்டி அம்மனுக்கு 3 நாட்களும் சிறுதானிய உணவு வகைகளை சமைத்து படைத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரில் பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று இரவு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இந்த திருவிழாவையொட்டி கூனவேலம்பட்டி புதூர், கூனவேலம்பட்டி, பாலப்பாளையம், ஆனைக்கட்டி பாளையம், குருக்கபுரம், ஆண்டகளூர்கேட், சக்தி நகர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை, நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 3 நாட்களும் அரிசி சோறு சாப்பிடவில்லை. தினை, கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானிய வகைகளைத் தான் சாப்பிட்டு வந்தனர்.

    கோவிலில் பொங்கல் வைத்த பெண்கள் வெள்ளை சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்தனர். திருவிழாவையொட்டி அம்மனுக்கு 3 நாட்களும் சிறுதானிய உணவு வகைகளை சமைத்து படைத்தனர்.

    பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழாவில் நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

    • பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
    • பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேப்பர் மில் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமாவாசை நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    மேலும் ஆடி 18 திருவிழா வெகு விமரிசையாக இந்த கோவிலில் நடைபெறும். ஆடி 18 திருவிழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கோவில் பூசாரி பூஜை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு பூசாரி வந்து பார்க்கும்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. நள்ளிரவில் கொள்ளையர்கள் கோவிலுக்குள் புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆராய்ந்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இப்பணிகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    வருகிற 21-ந் தேதி நாமக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக பிற்பகல் 3 மணி அளவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

    பின்னர் அங்கு நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ள பந்தலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜேஸ்குமார் எம்.பி. நாமக்கல்லுக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், சங்கர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
    • 21-ந் தேதி அன்று காலை 10 மணி அளவில் பரமத்திவேலூர் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆர்.டி.ஓ. சுகந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் இம்மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி அன்று காலை 10 மணி அளவில் பரமத்திவேலூர் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    ×