என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளமுருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா

    • முருகன் கோவில்களில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் கடந்த 13-ந் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர்,வேலூர், கோப்பணம் பாளையம், பாலப்பட்டி, மோகனூர் மற்றும் பிராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் கடந்த 13-ந் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை காலை யாக பூஜைகள், மூலவர் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், மாலையில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை யாக பூஜைகளும், யாக வேள்வி நிறைவும், மஹா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலை முருகப்பெருமான் சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் 6 மணிக்கு மேல் சூரசம்ஹார விழாவும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சூரனை வதம் செய்த முருகப்பெருமான் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×