என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, மோகனூர் மெயின் ரோட்டில், கொண்டிசெட்டிப்பட்டி குளம் அமைந்துள்ளது.
- சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக் கின்றன.மீன்கள் செத்து மிதப்பதாலும், கழிவுநீர் கலப்பதாலும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, மோகனூர் மெயின் ரோட்டில், கொண்டிசெட்டிப்பட்டி குளம் அமைந்துள்ளது. சுமார் 17.5 ஏக்கள் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம், கடந்த 2015–-20ம் ஆண்டுகளில், பொது மக்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு, பூங்கா மற்றும் குழந்தைகள் விளையாட்டு வசதிகள் அமைக்கப்பட்டு, குளத்தை சுற்றியும் பாதை அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
அதையடுத்து, டெண்டர் விடப்பட்டு, குளத்தில் ஜிலேபி, கெண்டை, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட மீன் வகைகள், வாத்துகள் ஆகியவை விடப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால், இந்த குளம் நிரம்பி, தற்போதும் சுமார் 90 சதவீத கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேலும், தற்போது, நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் ஏற்பாட்டின் பேரில் குளக்கரையில் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டு, காலையும், மாலையும் ஏராளமான ஆண்களும், பெண்களும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்ற னர். இந்தநிலையில், கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, கே.கே.நகர், முல்லை நகர், சிங்கிலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சாக்கடை வழியாக குளத்தில் கலக்கிறது. அத னால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக் கின்றன.மீன்கள் செத்து மிதப்பதாலும், கழிவுநீர் கலப்பதாலும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதனால், குளத்தின் அருகே வசிக்கும் பொதுமக்கள் சுவசிக்க முடியாமல் கஷ்ட்டபட்டு வருகிறாகள்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன், கழிவுநீர் கலந்ததால், ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. அவற்றை நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதார சீர்கேட்டையும், மக்களின் நிலையையும் கருத்தில் கொண்டு, குளத்தில், கழிவு நீர் கலப்பதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான்பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூரில்450 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரை யாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில் பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் எழுந்த ருளியுள்ள சிவபெரு மானுக்கும், நந்தி பெருமா னுக்கும் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
- சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்கா ளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திர சேகரபுரம், அணைப்பாளை யம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்க பட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஏலத்திற்கு 2007 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 1,896 மூட்டைகளும், டி.சி.எச் ரக பருத்தி 47 மூட்டைகளும், கொட்டு பருத்தி 64 மூட்டைகளும், கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6699-க்கும், அதிக பட்சமாக ரூ.7909-க்கும், டி.சி.எச். ரக பருத்தி குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.6559-க்கும், அதிகபட்சமாக ரூ.8333-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.4890-க்கும், அதிகப்பட்சமாக ரூ.5709-க்கும் ஏலம் விடப்பட்டது.
இதன்படி நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
- தமிழகம் முழுவதும் தற்போது, கோடை வெப்பதின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
- ஹைட்ரோபோனிக் பசுமை குடில் முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தலாம்.
நாமக்கல்:
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-
தமிழகம் முழுவதும் தற்போது, கோடை வெப்பதின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
தண்ணீர் பற்றாக்குறை நிலவும் கோடை காலத்தில் போதிய அளவு பசுந்தீவனங்கள் கிடைக்காத போது, ஹைட்ரோபோனிக் பசுமை குடில் முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தலாம்.
மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறையில் 5 முதல் 7 நாட்களில் சுமார் 5 முதல் 7 மடங்கு வரை மக்காச்சோள பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். விதைகளை (தானியங்கள், பயறு வகை விதைகள்) 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு தட்டுக்களில் 7 நாட்கள் வரை வைத்து வளர்க்கப்பட வேண்டும். ஒரு கிலோ பசுந்தீவன உற்பத்திக்கு 3 முதல் 4 லிட்டர் வரை மட்டுமே தண்ணீர் தேவைப்படும்.
ஹைட்ரோபோனிக் பசுந்தீவனத்தை கால்நடை கள் விரும்பி உண்ணும். இந்த வகை தீவனம் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. கறவை மாடுகளுக்கு 10 முதல் 15 கிலோ, ஆடுகளுக்கு 1 முதல் 2 கிலோ, முயல்களுக்கு 1/2 கிலோ, கோழிகளுக்கு 100 கிராம் வரையிலும் இந்த பசுந்தீவனம் அளிக்கலாம்.
கால்நடைகளை கோடை வெப்பத்தில் இருந்து காக்க நல்ல காற்றோட்டம் உள்ள கொட்டகைகள் மற்றும் மர நிழல்களில் அவற்றை பராமரிக்க வேண்டும். கொட்டகையின் மேற்கூரையின் மீது தென்னங்கீற்று அல்லது வைக்கோல் பரப்பி, பகல் நேரத்தின் அதன்மீது தண்ணீர் தெளிப்பதன் மூலம் வெப்பதாக்கத்தி லிருந்து கால்நடைகளை பாதுகாக்கலாம்.
கறவை பசுக்களில் ஒரு பசுவுக்கு நாள் ஒன்றுக்கு 30-50 கிராம் என்ற அளவில் அடர் தீவனத்துடன் தானுவாஸ் தாது உப்பு கலவையினை அளிக்க வேண்டும். விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பண்ணையாளர்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாண்டு தங்களின் கால்நடைகள் மற்றும் கோழிகளை வெப்ப தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மணிமேகலை விருது வழங்குவதற்காக தமிழக அரசு ரூ. 2.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
- மணிமேகலை விருது தேர்வுக்கான தகுதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விருதுக்கு தேர்வு செய்யப்படும் சுயஉதவிக் குழுக்கள் அ மற்றும் ஆ தரமதிப்பீடு உடையதாக இருக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது:-
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சிறந்த சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்காக தமிழக அரசு ரூ. 2.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மணிமேகலை விருது தேர்வுக்கான தகுதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விருதுக்கு தேர்வு செய்யப்படும் சுயஉதவிக் குழுக்கள் அ மற்றும் ஆ தரமதிப்பீடு உடையதாக இருக்க வேண்டும். சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.
வங்கி கடன் குறைந்தபட்சம் 3 முறை பெற்று முறையாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 அலுவலக நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்திருக்க வேண்டும்.
சிறந்த ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிற்காக விருது பெற, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும்.
சிறந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கம் விருது பெற, விண்ணப்பிக்க கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும்.
சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு விருது பெற, சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். வட்டார அளவிலான கூட்டமைப்பு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
சிறந்த பகுதி அளவிலான கூட்டமைப்பு விருது பெற, அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து சுயஉதவிக்குழுக் களும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும்.
சிறந்த நகர அளவிலான கூட்டமைப்பிற்கான விருது பெற, நகர அளவிலான கூட்டமைப்பு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 1 வருடம் முடிந்திருக்க வேண்டும்.
2022-2023-ம் ஆண்டிற்கு மணிமேகலை விருதிற்கு தகுதியான குழுவினர் வருகிற ஏப்.25-ம் தேதிக்குள், அதற்கான விண்ணப்பங்களை வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் நுழையும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
- பேளுக்குறிச்சி போலீசில் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி புகார் கொடுத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சியில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் வழிபாடு நடத்துவது சம்பந்தமாக இரு பிரிவினர் இடையே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அந்தக் கோவிலுக்கு வழிபாடு செய்ய வரவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. நேற்று ஒரு பிரிவினர், பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் நுழையும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதை அறிந்த மற்றொரு பிரிவினர், பேளுக்குறிச்சி போலீசில் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி புகார் கொடுத்தனர்.
அதைதொடர்ந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில், போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமீபத்தில் அந்த இரு சமூகத்தினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த கோவிலில் ஏற்கனவே என்ன நடைமுறையோ அதுவே பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். இதை ஒரு பிரிவினர் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் நாமக்கல் உதவி கலெக்டர் பிரபாகரன் நேற்று, சேந்தமங்கலம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பினை கருதி, பேளுக்குறிச்சி மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலுக்குள் வருகிற 17-ந் தேதி வரை பொதுமக்கள் உள்பட யாரும் நுழையக்கூடாது என்றும், கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவில் பிரச்சினையால், பேளுக்குறிச்சி பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், கோவில் உட்பட முக்கிய இடங்களில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நேற்று முன்தினம், வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்ச சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால்,
- சுமார் 4 மணிநேர தேடுதலுக்கு பிறகு, செல்லமுத்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 65). இவர் குப்புச்சிபாளையம் அருகே உள்ள கோவில்காடு ராஜா நகர் பகுதியில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம், வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்ச சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் செல்லமுத்துவை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, அங்குள்ள கிணற்றுக்கு அருகே செல்லமுத்துவின் துண்டு கிடந்துள்ளது.
இதை பார்த்து செல்லமுத்து கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கிணற்றில் தேடினர்.
சுமார் 4 மணிநேர தேடுதலுக்கு பிறகு, செல்லமுத்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாகி வருகிறது.
- முககவசம் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நாமக்கல்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாகி வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் அரசு மருத்து வமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், அவர்களுடன் இருப்பவர்கள், பாது காவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிறப்பித்து இருந்தார்.
அதன்படி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முகக்கவசம் அணியாமல் வந்த நோயாளிகளின் உறவினர்களை அங்கிருந்து பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு முக கவசம் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
- கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
- நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூப்பிட்டான் பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 82). இவரது மனைவி ராமாயி (80).
இவர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். ராமன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ராமனுக்கு உடல்நிலை மோசமானதால், பரமத்திவேலூர் தாலுகா, கோலாரத்தில் உள்ள அவரது மகள் சரசுவுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அவரது மகள் ராமனை, நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை, நேற்று நாமக்கல் நகர போலீசார் கைது செய்தனர்.
- பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் கொசவப் பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (வயது 36). இவர் கடந்த 2019-ம் ஆண்டு, ஒருவரிடம் காரை வாங்கி அடமானம் வைத்தார்.
இது தொடர்பான வழக்கில் நாமக்கல் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனால் நாமக்கல் நகர போலீசார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை, நேற்று நாமக்கல் நகர போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.
- பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது.
- இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.
நாமக்கல்:
கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளுக்கு முன் கடைபிடிக்கும் தவக்காலம், பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.
ஜெருசலேம் நகரில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து, ஒலிவ மரக்கிளை களைக் கையில் ஏந்தி 'தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்' என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.
அவற்றை நினைவு கூறும் வகையில், இந்த குருத் தோலை பவனியானது, ஆண்டு தோறும் கொண்டா டப்படுகிறது. இந்த குருத் தோலை ஞாயிறு திருப் பலியின் மூலம் புனித வார கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. அதன்படி, இந்த புனித வாரத்தில் வரும் வியாழக் கிழமை (6-ந் தேதி) புனித வியாழனாக கடைப்பிடிக்கப் படுகிறது.
மறுநாள் புனித வெள்ளி திருநாளன்று, முழு நாளும் நற்கருணை ஆராதனை நடக்கும். தொடர்ந்து, இறுதி சிலுவை பாதை நடக்கும். வரும், 8-ந் தேதி இரவு திருவிழிப்பு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் விசுவாசிகள் மன்றாட்டு, நற்கருணை வழிபாடு அனைத்தும் நடக்கும். அதையடுத்து, உயிர்ப்பு பெருவிழா, நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடக்கிறது.
9-ந் தேதி, ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப் படும். புனித வெள்ளி திரு நாளன்று, உலக மக்களுக் காகப் பாவங்களைச் சுமந்து உயிர் விட்ட இயேசுநாதர், 3-ம் நாள் உயிர்த்தெழும் திருநாளே, ஈஸ்டர் பெரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவால யத்தில் கிறிஸ்தவர்கள், பங்கு தந்தை செல்வம் தலைமையில், குருத்தோலை களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
தேவாலய வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், துறையூர் சாலை வழியாக சென்று, மீண்டும் தேவா லயத்தை அடைந்தது. தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
அதேபோல், நாமக்கல் கணேசபுரம் சி.எஸ்.ஐ. சர்ச், தமிழ் பாப்திஸ்து திருச்சபை, ஏ.ஜி. சர்ஜ், மோகனூர் அடுத்த பேட்டப்பாளையம் புனித செசிலீ ஆலயம் என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில், குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, சிறப்பு பிரார்த் தனை நடந்தது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
- பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.
- மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
நாமக்கல்:
மோகனூர் தாலுகா, அரூர் பஞ்சாயத்து, ஈச்சங்கோவில் பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 44), விவசாயி. இவரது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார்.
பின்னர் மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.
அதைக்கண்டு ரங்கசாமி சத்தம் போடவே 2 பேர் ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையம் பஞ்சாயத்து, அக்கரையாம்பாளையத்தை சேர்ந்த ரவி மகன் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது.
இவர், ஆடு மற்றும் கோழிகளைத் திருடி வள்ளிபுரத்தில் உள்ள இறைச்சி கடையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






