என் மலர்
நாகப்பட்டினம்
- ராகுல்காந்தியின் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
ராகுல்காந்தியின் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு கடை தெருவில் காங்கிரஸ் கட்சியினர் மபநில பொதுச் செயலாளர் விவசாய பிரிவு சுர்ஜித் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் அருண்சோரி முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜா சிறப்புரை ஆற்றினார். தி.மு.க ஒன்றிள செயலாளர் மகாகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், இந்திய கம்யூஸ்ட் கட்சி முன்னாள்மாவட்ட செயலாளர் சம்பந்தம் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தை தொகுதி அமைப்பாளர் இளையராஜா, காங்கிரஸ் கட்சி மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா ,வட்டார தலைவர் கனகராஜ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் நன்றி கூறினார் .
- வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- பொம்மை தயாரித்தல் பயிற்சி, செயற்கை ஆபரணம் நகை தயாரித்தல் போன்ற பயிற்சி பெற்றவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயற்குழு கூட்டம் மற்றும் சமுதாய திறன் பள்ளி மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடை பெற்றது.
இதில் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெற உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து சமுதாய திறன் பள்ளி மூலம் கட்டுமான பயிற்சி, பொம்மை தயாரித்தல் பயிற்சி, செயற்கை ஆபரணம் நகை தயாரித்தல் போன்ற பயிற்சி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது அவர், பயிற்சி பெற்றவர்கள் வீட்டிலேயே இருந்துவிடாமல் சுயமாகவோ அல்லது வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலமாக நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித்தர வேண்டும்.
- மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் அழிஞ்சமங்கலம் அரசு ஆதிதிராவிட நலப்பள்ளி துவங்கப்பட்டு நூற்றாண்டு கடந்துள்ளன.
இதை முன்னிட்டு நடை பெற்ற நூற்றாண்டு விழாவில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டு பேசியதாவது:-
குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வருவது என்பது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ள கடமை, பிள்ளைகளின் கல்வியை மெருகேற்ற செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி தருவது மிக, மிக முக்கியமானது, எனவே மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினார்.
பின்னர் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர்கள், உதவியாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
- நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நீலா வடக்கு வீதியில் இயங்கி வரும் ஸ்ரீ லலிதாம்பிகா வித்யா மந்திர் பள்ளியில் கடந்த பிப்ரவரி 25 ம் தேதி அறிவியல் கண்காட்சி மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிலையில் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிகாட்டிய மாணவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்களையும், கேடயங்களையும், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஆர்த்தி சந்தோஷ், பள்ளியின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
- சுமார் ரூ. 1 கோடி 50 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
- நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.
இதையடுத்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செண்பகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 1, கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1, டன் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 30 பெட்டிகளில் இருந்த சுமார்1000 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அக்கரைப்பேட்டையை சேர்ந்த செண்பகம் மகன் சபரிநாதன், செல்லூரை சேர்ந்த சுரேஷ், அக்கரைப்பேட்டை டாட்டா நகரை சேர்ந்த செல்வம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.முதற்கட்ட விசாரணையில் கடல் அட்டைகள் நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திச் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
- கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
- வண்ண மலர்களால் சிவன்- அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அந்தணப்பேட்டை ஊராட்சி கருவேலி பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பிகை சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இவ் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 120 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
கடந்த 22 ஆம் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை நான்கு காலங்கள் நடைபெற்றது நான்காம் கால யாகசாலை பூஜைக்கு நேற்று காலை கோவிலில் நான்கு பிரகாரங்கள் வழியாக மல்லாரி இசை முழங்க புனித கடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், உள்ளிட்ட கோபுர கலசங்களுக்குபுனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவன் மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில்சூரியனார் கோயில் ஆதீனம் தவத்திரு சிவக்கர தேசிக சுவாமிகள்அறநிலை துறை உதவி ஆணையர் இராணிமற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நாகப்பட்டினம்:
திருமருகல் பஸ் நிலையம் அருகில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், சித்ரா ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் என்பதை சிவசேனா வரவேற்கிறது.
- அரிசி, கேழ்வரகு, பருப்பு உள்ளிட்டவைகளை இந்து அறநிலையத்துறை மூலம் வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாநில முதன்மைச் செயலாளர் சுந்தர வடிவேலன் ஆகியோர் நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் விவசாயிகள் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாததால் விவசாய பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளது. விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் என்பதை சிவசேனா வரவேற்கிறது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை அரசு மேம்படுத்த வேண்டும். சட்டசபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கருத்துக்கள் சொல்ல உரிமை உள்ளது.
அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. நாகை மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.
மீன்பிடித்தொழிலை தவிர வேறு எதுவும் இல்லாததால், மக்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை உருவாகி உள்ளது.
எனவே தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆடி மாதம் கோயில்களில் நடைபெறும் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்துக்களுக்கு எதிரானவர் அல்ல என்ற புரிதலை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
ஆடி மாதம் கோயில்களில் கூழ் ஊற்றும் வகையில், அதற்கு தேவையான அரிசி, கேழ்வரகு, பருப்பு உள்ளிட்டவைகளை இந்து அறநிலையத்துறை மூலம் வழங்க வேண்டும்.
இது குறித்து சிவசேனா கட்சி சார்பில் இந்து அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது மாநில இளைஞரணி செயலாளர் விஜய் உடன் இருந்தார்.
- பாஸ்கர் மது பாட்டில் கொடுக்க மறுத்து அவர்களை தட்டிக்கேட்டார்.
- புகழேந்திரன், அஜித் ஆகியோர் நேற்று நள்ளிரவு பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓடினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). இவர் தேவூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் எரும்புகண்ணியை சேர்ந்த புகழேந்திரன், பட்டமங்கலத்தை சேர்ந்த அஜித் ஆகிய 2 பேரும் அங்கு வந்து பாஸ்கரை கத்தியை காட்டி மிரட்டி இலவசமாக மதுபாட்டில் கொடுக்க வேண்டும் எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர். ஆனால் பாஸ்கர் மது பாட்டில் கொடுக்க மறுத்து அவர்களை தட்டிக்கேட்டார்.
அதன் பிறகு 2 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கடை மேற்பார்வையாளர் விஜயகுமார் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த புகழேந்திரன், அஜித் ஆகியோர் நேற்று நள்ளிரவு பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓடினர். இதில் வீட்டின் முன்புறம் தீ பற்றி எரிந்தது.
சத்தம் கேட்டவுடன் அங்கு தூங்கி கொண்டிருந்த பாஸ்கரின் மாமனார் பாலசுந்தரம் கண்விழித்து எழுந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.
இது பற்றி கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்தார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து புகழேந்திரன், அஜித் மற்றும் இதில் தொடர்புடைய 2 பேர் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாகும்.
- உலக மக்கள் அனைவரும் நோயின்றி வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை சகோதரத்து வத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.
இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.
பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டுமுஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க துவங்கினர்.
நோன்பு காலம் துவங்கியதை அடுத்து உலக புகழ் பெற்ற நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா சிறப்பு தொழுகை நடைபெற்றது
அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.
மேலும் அதிக நேரம் இறை வழிபாட்டில் ஈடுபடும் இஸ்லாமியர்கள் சாதி மத பேதமின்றி உலகில் அனைவரும் சுபிட்சமாக வாழவும் மீண்டும் கொரோனா அச்சம் தொற்றியுள்ள நிலையில் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் நோய் நொடி இல்லாமல் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லா மியர்கள் பங்கேற்றனர்.
- காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.
- ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
திருச்சி மண்டல இ.பி.எப். முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.பி.எப். (வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) சார்பில் "நிதி ஆப்கே நிகத்" என்ற பெயரில் இ.பி.எப் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாகை மாவட்டத்திற்கான குறை தீர்க்கும் முகாம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 27- ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.
இந்த முகாமில் இ.பி.எப். தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
செட்டில்மெண்ட் பெறுவது, வெவ்வேறு இ.பி.எப். கணக்குகளை ஒரே கணக்கில் இணைப்பது, இ.பி.எப். சந்தாதாரர்கள் தங்களது யு.ஏ.என். கணக்கினை பயன்படுத்தும் முறை, ஆதார் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தங்களது சுய விபரங்களை தங்களது யு.ஏ.என். கணக்கில் இணைத்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
மேலும் ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய இந்த முகாமிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தாதாரர்கள் தங்களது பெயர் மாற்றக் கோரிக்கை உட்பட அனைத்து கோரிக்கைகளையும் தகுந்த ஆதாரங்களுடன், எழுத்துப்பூர்வமாக முகாமில் சமர்ப்பிக்கலாம்.
இ.பி.எப். சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்களின் முதலாளிகள், முகவர்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளுக்காக பேசக்கூடிய இடம்.
- மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது.
நாகப்பட்டினம்:
திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சசிகலா நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வந்தார். அப்போது நாகை மாவட்ட ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளுக்காக பேசக்கூடிய இடம். அந்த இடத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக எந்த தீர்மானம், எது வந்தாலும் அதை மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தாராளமாக பேசலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை அ.தி.மு.க. தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும். சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது.
நான் இவ்வாறு கூறுவதால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது என்று கூறமுடியாது. அதே வேளையில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மோதல் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தி.மு.க.விற்கு சாதகமான சூழ்நிலையாக அமையாது. அப்படி ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன். ஓ. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் நாங்கள் பார்ப்பது கிடையாது. கண்டிப்பாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். தற்போது அ.தி.மு.க.வின் தோல்விக்கு பிரிந்து இருப்பது ஒன்று தான் முக்கியமான காரணம் ஆகும்.
அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






