என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    144 தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் ரேஸ் நடவடிக்கையில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மத்திய,மாநில அரசால் பிறபிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டுக்கு ஒருவர் மட்டும் மிகவும் தேவை ஏற்படும் போது பொருட்கள் வாங்க உரிய காரணத்துடன் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆனால் சீர்காழி பகுதியில் ஊரடங்கு உத்தரவை சிலர் மதிக்காமல் மிகுந்த அலட்சியபோக்குடன் இருசக்கரவாகனங்களில் வீதிகளில் உலாவருகின்றனர்.  சீர்காழி போலீசார் கடுமையாக எச்சரித்து, வழக்குபதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் சிலர் எதை பற்றியும் சிந்திக்காமல் சுற்றுகின்றனர்.

    பெரும்பாலும் இளைஞர்கள் அதிவேக இருசக்கர வாகனங்களில் இருவர், மூவர் என நகரில் சுற்றி திரிவதை வீடியோ எடுத்து அதனை தங்களது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டசாக பதிவிட விரும்புகின்றனர்.

    சில இளைஞர்கள் நகரில் அதிவேகமாக ரேஸ் விடுகின்றனர். ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவரும் போலீசார் உத்தரவுகளை மதிக்காமல் சுற்றிவரும் நபர்களை கட்டுப்படுத்த சிரமப்படுகின்றனர்.  எனவே இதுபோன்ற அதிவேக மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்களை கைது செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்சால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இதனை பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுதளங்கள், சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடத்த மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான இந்து கோவில்களில் கோவில் குருக்கள் மட்டும் பூஜைகள் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை என்ற கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இந்த பண்டிகையை யொட்டி கிறிஸ்தவர்கள், இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூறும் விதமாக 40 நாட்களுக்கு மேலாக நோன்பிருப்பது வழக்கம். இந்த நோன்பு காலத்தை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்று அழைக்கிறார்கள்.

    இந்த ஆண்டு 46 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து ஜெபிப்பார்கள். தவக்காலத்தில் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. வெள்ளிக்கிழமைதோறும் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாடு நிகழ்ச்சிகளை நடத்தி ஜெபிப்பார்கள்.

    இந்நிலையில் உலக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ ஆலயமான நாகை மாவட்ட வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோவிலில் ஆண்டு தோறும் ஈஸ்டர் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    ஆனால் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயம் கடந்த வாரம் பூட்டப்பட்டது. இதனால் கோவிலில் திருப்பலிகள் அனைத்தும் மறுஅறிவிப்பு வரும்வரை நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இதனால் தவக்காலத்தின் இறுதி வாரமான வருகிற ஏப்ரல் 9-ந் தேதி (பெரிய வியாழக்கிழமை) அன்று இயேசு தன் சீடர்களின் பாதங்களை கழுவியதின் நினைவாக நடைபெற இருந்த பாதம் கழுவும் நிகழ்ச்சியும், ஏப்ரல் 10-ந் தேதி பெரிய வெள்ளி அல்லது (புனித வெள்ளி) இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூறும் விதமாக மும்மணி ஆராதனை, சிலுவைப்பாடு ஆராதனை போன்ற நிகழ்ச்சிகளும் அதனை தொடர்ந்து ஏப்ரல் 12ந் தேதி இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்ற ஈஸ்டர் பண்டிகை நிகழ்ச்சியும் நடைபெறாது என வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால் கிறிஸ்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    டெல்லி சென்று திரும்பிய சீர்காழியை சேர்ந்தவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த பெருந்தோட்டம், பள்ளிவாசல் மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (வயது 50). வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்கான விசா சம்பந்தமாக அப்துல் மாலிக் அடிக்கடி வெளிநாடுகள் சென்று வருவாராம்.

    கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அப்துல் மாலிக் டெல்லி சென்றிருந்தார். அங்கு சேலத்தை சேர்ந்த 7 பேர், இந்தோனேஷியாவை சேர்ந்த 4 பேர் என இவருடன் சேர்த்து மொத்தம் 12 பேர் ஒரு அறையில் தங்கியிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மார்ச் 8-ந்தேதி அப்துல் மாலிக் சேலம் சென்றுள்ளார். பின்னர் அங்கு தனது பணிகளை முடித்துக்கொண்டு கடந்த 16-ந்தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

    இந்நிலையில் வெளிமாநிலம் சென்றுவந்ததால் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்ற அச்சத்தில் அப்துல் மாலிக் நேற்று முன்தினம் (புதன்கிழமை) திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

    உடனே மருத்துவ குழுவினர் அப்துல் மாலிக்கை மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு வார்டில் அனுமதிக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

    பின்னர் அவரை பரிசோதித்த சிறப்பு மருத்துவர்கள் அவரிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இன்று ரத்தமாதிரியின் முடிவு தெரிந்தவுடன் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று தெரியவரும். இதற்கிடையே அப்துல்மாலிக்குடன் டெல்லியில் தங்கியிருந்த சேலத்தை சேர்ந்த 4 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    சீர்காழியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி உள்ளது அப்பகுதி மக்களை மட்டுமின்றி டெல்டா பகுதி மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்டர்காடு வடக்கு கிராமத்தில் கணேசன் மனைவி ஈஸ்வரி (வயது 55) என்ற பெண் டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டிற்கு அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார்.

    தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்ததில் ஈஸ்வரி வீட்டிற்கு அருகே 150 மிலி அளவு கொண்ட 271 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    ஊரடங்கு உத்தரவையடுத்து தஞ்சை, நாகையில் நேற்று 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ.14 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டன.
    நாகப்பட்டினம்:

    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    நாகை மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் விசைப்படகு, 12 ஆயிரம் பைபர்கள் படகுகளில் 80 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ.3 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் நாகை துறைமுகம் மீன் விற்பனை நடை பெறாததால் வெறிச்சோடி காணப்பட்டன.

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் 134 விசைப்படகுகளிலும், 4,500 நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்யக்கூடிய 10 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.10 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகை மாவட்ட வேளாங்கண்ணியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகழ்பெற்ற நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டன.
    நாகப்பட்டினம்:

    கொரோனா நோய் தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக வழிபாட்டு தளங்கள், மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாகையில் உலக புகழ்பெற்ற இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான நாகூர் தர்காவிற்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிவது வழக்கம், இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்துவரும் நாகை மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி நாகூர் தர்கா இன்று முதல் வருகின்ற 31-ந் தேதி வரை மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், வழக்கமாக நடைபெறும் வழிபாடுகள், போன்றவைகள் நடக்கும் என்றும், காலை மற்றும் மாலை வேலைகளில் தலா ஒருமணிநேரம் தர்கா திறக்கப்பட்டு இருக்கும் என்றும் நாகூர் தர்காவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    எனவே வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் மறுஅறிவிப்பு வரும்வரை நாகூர் தர்காவிற்கு வரவேண்டாம் என்றும் தர்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தர்கா மூடப்பட்டுள்ளதால், உட்புறம் மற்றும் வெளிப்புறம் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

    அதேபோல் நாகை மாவட்டம் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயமும் நேற்று முதல் மூடப்பட்டது. இதுதொடர்பாக பேராலய முகப்பில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அதில் மறுஅறிவிப்பு வரும்வரை வேளாங்கண்ணி பேராலயத்தில் எவ்வித பொதுவழிபாடும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டதையடுத்து தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடபட்டன. கடற்கரைகள் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுனாமி, கஜாபுயல் போன்ற மிகப்பெரிய இயற்கை பேரிடர் காலங்களில் கூட வேளாங்கண்ணி பேராலயம் மூடப்படவில்லை.

    பேராலயம் பூட்டப்பட்டாலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் பேராலயத்துக்கு வெளியில் நின்று செய்துவிட்டு செல்கின்றனர்.

    நாகை மாவட்ட மீனவர்கள் கொரோனா வைரஸ் எதிரொலியால் வருகிற 31-ந் தேதிவரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அனைத்து படகுகளும் அந்தந்த மீன்பிடி துரைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

    சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்துள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர்ர் பூம்புகார் அருகேயுள்ள தருமகுளம், கீழேயூர் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (வயது24) என்பதும் அவர் சீர்காழி தாலுகாவில் உள்ள பல்வேறு பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து அவரிடமிருந்த 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம் தாலுக்கா வாய்மேட்டில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த டிரைவரை கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் தனிப்படை போலிசார் வாய்மேடு திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் வாகன சோதனை மற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் வாய்மேடு பகுதியிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த டாராஸ் லாரியை சோதனை செய்தனர். அந்த லாரியில் சவுடு மணல் இருந்ததும் அதை எடுத்துச் செல்வதற்கு எந்த அனுமதியும் இல்லை என தெரிவந்தது. அந்த லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து லாரியை ஒட்டிவந்த டிரைவர் ஓரடியம்புலத்தைச் சேர்ந்த இளம்பரிதி (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாகை மாவட்டத்தில் வெள்ளரிக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாமல் விவசாயிகள் தவிப்பு வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தின் தெற்குப்பொய்கைநல்லூர் , வடக்கு பொய்கைநல்லூர்,பரவை, பூவைத்தேடி, காமேஷ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரன் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் பராமரிப்பு செலவு குறைவு. நான்கு மாத பயிரான இது பிப்ரவரி மாதம் பயிரிபடும் 2 மாதங்களில் மகசூல் தரும் வெள்ளரி தற்பொழுது சீசன் தொடங்கி உள்ளதால் பரவை சந்தையில் இருந்து கோயம்பேடு, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 

    ஆனால் தற்போது நிலவும் கொரோனோ வைரஸ் பாதிப்பால் மற்ற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கு விலை போன வெள்ளரிக் காய்கள் தற்போது 20 ரூபாய்க்கு மட்டுமே விற்க்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    நாகை அருகே 15 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. இவர் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் தங்கி ஆடுகள் மேய்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்(46) கூலிதொழிலாளி.

    இவர் அப்பகுதிக்கு அடிக்கடி செல்வார். இதில் அந்த சிறுமிக்கும், செந்திலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் முதல் செந்தில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

    இதில் சிறுமி இரண்டரை மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அந்த சிறுமி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் செந்திலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல்நலம் அதிகமாகபாதிக்கப்பட்டதால் வீட்டில் மாமரத்திற்கு தெளிக்க பயன்படும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த கோவிந்தசாமியை அருகில் இருந்தவர்கள் கடந்த 13-ந் தேதி அன்று வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்துவிட்டார்.

    இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    உலக நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்த்து வருகின்றனர்.

    குறிப்பாக கோவில், தேவாலயம், பேருந்து நிலையங்களில் கொரோனா வைரஸ் பரவும் சூழல் நிலவுவதால் மக்கள் அச்சத்தில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கின்றனர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி கீழ்வேளூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், சிறப்பு நிலை பேரூராட்சியும் ஆகும்.

    இங்கு தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. வேளாங்கண்ணி தமிழகத்திலும், இந்திய நாட்டிலும் தலைசிறந்த கத்தோலிக்க திருத்தலமாக விளங்குகிறது. அன்னை மரியா காட்சி கொடுத்த இடத்தில் கட்டப்பட்டுள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.

    எல்லா சமயங்களை சேர்ந்த திருப்பயணிகளும் அங்கு சென்று, அன்னை மரியாவிடம் பிரார்த்தனை செய்து, காணிக்கைகள் அளித்து, ஜெபங்கள் ஒப்புக் கொடுக்கிறார்கள். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி பேராலயத்தில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்துள்ளது.

    கடைகள், பேருந்து நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்ததால் வேளாங்கண்ணியில் மெழுகு வர்த்தி, பூ மாலை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் வெறிச் சோடிஉள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

    தற்போது கிறிஸ்தவர்களின் பண்டிகையான தவக்காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட வேளாங்கண்ணிக்கு ஆண்டு தோறும் அதிக அளவு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சத்தில் வேளாங்கண்ணி பேராலயம் பக்தர்கள் கூட்டமின்றி காணப்படுகிறது.

    அதிகளவு பக்தர்கள், வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எதிர்பாத்த்து காத்திருந்த வியாபாரிகளுக்கு கொரோனோ அச்சுறுத்தல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×