search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorcycle race"

    சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
    அடையாறு:

    சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தில் கடந்த 5-ந்தேதி நள்ளிரவில் சுமார் 35 பேர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனர். பல்வேறு விதமான மோட்டார் சைக்கிள்களில் அதிக வேகமாக சென்ற அவர்கள், மோட்டார் சைக்கிள் சாகசங்களிலும் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் அடையாறு உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளங்கோ, சாஸ்திரி நகர் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    போலீசார் வருவதை கண்டதும், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட வாலிபர்கள், அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    அப்போது அவர்களில் ஒருவரின் மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்றது. உடனே மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள், பழுதாகி நின்றவரின் மோட்டார் சைக்கிளை தங்கள் காலால் மிதித்து தள்ளியபடியே அங்கிருந்து தப்ப முயன்றனர்.

    ஆனால் பழுதான மோட்டார் சைக்கிளை அவர்களால் தள்ள முடியவில்லை. அதற்குள் போலீசாரும் துரத்தி வந்ததால், அந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர். அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் விவரத்தை சேகரித்த போது, அந்த வாகனம் இதுவரை 5 பேரிடம் கைமாறி உள்ளதும், தற்போது பெரம்பூரைச் சேர்ந்த முகமது சுப்பியான்(வயது 19) என்ற வாலிபரிடம் இருப்பதும் தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அதில் அவர், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து முகமது சுப்பியான் மற்றும் அவர் அளித்த தகவலின்பேரில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட அவருடைய நண்பர்களான பெரம்பூரைச் சேர்ந்த மெக்கானிக் சல்மான் (23), அதே பகுதியை சேர்ந்த துணிக்கடை ஊழியர் கலீல் பாஷா(19), புளியந்தோப்பை சேர்ந்த அப்துல் கரீம்(19), அதே பகுதியை சேர்ந்த முஜீம் ரகுமான் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 5 பேரையும் சிறையிலும் அடைத்தனர்.

    துரிதமாக செயல்பட்டு 6 பேரை கைது செய்த உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையிலான போலீசாரை கூடுதல் கமிஷனர்(தெற்கு) சாரங்கன் மற்றும் இணை கமிஷனர்(தெற்கு) மகேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.

    மேலும் கைதானவர்கள் கொடுத்த தகவல் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

    போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
    ×