என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக நாகை மாவட்டம் மாறி வருகிறது. நாகை மாவட்டத்தில் இதுவரை 3,383 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    கடந்த 9-ந் தேதி நிலவரப்படி 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த 12 பேரும் நாகை, நாகூர், பொரவச்சேரி, திருக்களாச் சேரி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இவர்கள் வசித்து வந்த பகுதிகளுக்கு வெளி ஆட்கள் நுழைவது முற்றிலும் தடை செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் தூவுவது உள்ளிட்ட சுகாதார பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    ஆனாலும் நாகையை கொரோனா எனும் அபாயம் தொடர்ந்து துரத்தி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரில் 9 பேர் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள். 3 பேர் நாகூரை சேர்ந்தவர்கள். இவர்களை ஏற்கனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி கண்காணித்த வந்தனர்.

    அவர்களுடைய ரத்த மாதிரி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து 12 பேரும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நாகை மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

    பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து இருப்பதால் நாகை மாவட்ட பகுதி அபாயகரமான சிறப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேதாரண்ம் அருகே கள்ளக்காதலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தொழிலதிபர் தப்பி ஓடியுள்ளார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மருத்துவ அவசரம் என காரில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி கள்ளக்காதலியை பார்க்க வந்தபோது தனிமைப்படுத்தப்பட்ட தொழிலதிபர் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து நேற்று அதிகாலை தப்பி ஓட்டம்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா (வயது 37)‌ தனது கணவரை பிரிந்த அமுதா மலேசிய நாட்டிற்கு உணவகத்திற்கு வேலைக்குச் சென்றார். அங்கு ஓட்டல் உரிமையாளர் அப்துல் அகமது மைதீன் (57) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அப்துல்லா அகமது மைதீன் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே அமுதா மலேசியாவிலிருந்து வந்து தலைஞாயிறில் உள்ள தனது வீட்டில் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் அப்துல் அகமது மைதீன் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு வந்துள்ளார். அவர் அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து சொகுசு காரில் மருத்துவம் அவசரம் என போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு தலைஞாயிறு வந்து அமுதா வீட்டில் தங்கி உள்ளார். தகவலறிந்த சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை அமுதா வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அப்துல் அகமது மைதீன் போலி ஸ்டிக்கர் ஒட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அமுதா மற்றும் அப்துல்அகமது மைதீன் ஆகியோர் மலேசியாவிலிருந்து இங்கு சமீபத்தில் வந்ததையடுத்து அவர்களது ரத்த மாதிரி மற்றும் அமுதாவின் மகன், மகள் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என அமுதாவின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வீட்டிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    அப்துல் அகமது மைதீன் போலி ஸ்டிக்கர் ஒட்டி காரில் வந்ததையடுத்து அவர் அமுதா வீட்டிலிருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அப்துல்லா அகமது மைதீன் அவரது காரிலேயே தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து சற்று தூரத்தில் காரை நிறுத்தி இருந்ததால் அதிகாலையில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அவரது கார் இல்லாததை கண்டு போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது அப்துல் அகமதுமைதீன் தப்பி ஓடியது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து தப்பியோடிய அப்துல் அகமது மைதினின் கார் சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டி கள்ளக்காதலி வீட்டுக்கு வந்தவர் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா (37). தனது கனவரை பிரிந்த அமுதா, மலேசியா நாட்டிற்கு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் அகமது மைதீன் (57) என்பவருடன் பழக்கம் ஏப்பட்டது. இதனால் அப்துல் அகமது மைதீன் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே அமுதா மலேசியாவில் இருந்து வந்து தலைஞாயிறில் தனது வீட்டில் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து அப்துல் அகமது மைதீன் சொகுசு காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வீட்டில் வந்து தங்கி உள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதரத்துறையினர் மற்றும் போலீசார் சென்று வீட்டில் சோதனை செய்தனர். பின்னர் அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. வீட்டில் இருந்த அமுதா, அப்துல் அகமது மைதீன் மற்றும் அமுதாவின் மகன், மகள் ஆகிய 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

    அப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர். 4 பேரும் வீட்டை விட்டு வெளியே வராமல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நாகையில் டாக்டர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனது மகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்ற அவர் 15 நாட்களுக்கு முன்பு நாகை திரும்பி உள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருந்தது. இவர்கள் நாகை, நாகூர், பொரவச்சேரி, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு வெளி ஆட்கள் வருவதற்கும், அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாகையில் டாக்டர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனது மகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்ற அவர் 15 நாட்களுக்கு முன்பு நாகை திரும்பி உள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு தொண்டை கரகரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு திருவாரூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆ உயர்ந்துள்ளது.

    டாக்டர் பணியாற்றிய கிளினிக்கில் நேற்று இரவு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. நாகையில் மக்கள் நடமாட்டத்தை போலீசார் டிரோன் மூலமாக கண்காணித்து வருகிறார்கள். அதேபோல் துப்புரவு பணிழும் முழு வீச்சல் நடந்து வருகின்றன.
    நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சமூக வளைதளத்தில் வதந்திகளை பரப்பிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சமூக வளைதளத்தில் வதந்திகளை பரப்பிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எஸ்.பி. அலுவலக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளத்தில் வரும் உண்மைக்கு மாறான செய்திகளை பார்த்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவ்துறை இணைந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம்.

    எனவே பொது மக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க உரிய தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஊரடங்கு உத்தரவு காரணமாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாததால் சீர்காழி பகுதியில் மீனவர்கள், கடற்கரையோரங்களில் மீன்களை பிடித்து வருகின்றனர்.
    திருவெண்காடு:

    நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் பூம்புகார், வாணகிரி, திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட 18 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் விசைப்படகு மற்றும் பைபர் படகு, கட்டுமரங்களில் மீன்பிடிக்க செல்லாமல் கடந்த 15 நாட்களாக மீனவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மீனவர்களின் அன்றாட உணவில் மீன்கள் முக்கிய இடம் பிடிக்கும். இந்த நிலையில் கடலுக்குள் செல்லாததால் இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்கரையோரத்தில் இருக்கும் மீன்களை பிடித்து வருகின்றனர். பின்னர் அந்த மீன்களை, அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து உணவு சமைத்து சாப்பிடுகின்றனர்.

    இது குறித்து வாணகிரி மீனவர் ராமன் கூறுகையில், கொரோனா வைரஸ் ஊரடங்கால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாங்கள் சைவ உணவு சாப்பிட்டு வருகிறோம். எங்களது அன்றாட உணவில் மீன்களை சாப்பிட்டு பழக்கப்பட்டு விட்டோம். இதனால் எங்களால் மீன் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை.

    இதன் காரணமாக எங்கள் பயன்பாட்டுக்கு மட்டும் கடற்கரையோரம் உள்ள மீன்களை பிடித்து சமைத்து சாப்பிட்டு வருகிறோம். கடற்கரையோரம் மீன்களை பிடிக்கும் பணியில் மீனவ இளைஞர்கள் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். 
    நாகை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    நாகை:

    டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு ஊருக்கு திரும்பி வந்த நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிலர் தாமாகவே முன்வந்து சுகாதாரத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவில் அனுமதிகக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இவர்களில் நாகையில் 2 பேருக்கும், நாகூரில் 2 பேருக்கும், பொரவச்சேரியில் ஒருவருக்கும் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்தநிலையில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி 6-வது வார்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், திருமருகல் ஒன்றிய பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், தரங்கம்பாடி தாலுகா, பொறையாறு அருகே திருக்களாச்சேரி ஊராட்சி கூத்தூர் பிலால்நகரை சேர்ந்த ஒருவருக்கும், நாகை முதலாவது கடற்கரை தெருவில் உள்ள அந்தோணியார்கோவில் தெருவை சேர்ந்த ஒருவருக்கும் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளன. சீல் வைத்த பகுதிகளில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அந்த பகுதியின் உள்ளே யாரும் செல்லக்கூடாது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வேறு பகுதிக்கு சென்றார்களா? என்றும் அவர்களது உறவினர்கள் யாருக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என்பது குறித்தும் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கொரோனா வைரஸ் பற்றி வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஒருவருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும் அதனால் அந்த பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என எச்சரித்து வாட்ஸ்அப் மூலம் செய்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தோப்புத்துறை ஜமாத் மன்ற தலைவர் ஷேக்அப்துல்லா வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் வேதாரண்யம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா மற்றும் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் கொரோனா வைரஸ் பற்றி வதந்தி பரப்பிய தேத்தாகுடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 36) என்பவரை கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட விஜயகுமார் நாகை மாவட்டம் திருமருகல் பகுதி பெருநாட்டான் பகுதியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    டெல்லி மாநாட்டில் பங்கேற்று சீர்காழி பகுதிக்கு திரும்பிய நபர்கள் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக மயிலாடுதுறை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
    சீர்காழி:

    சீர்காழி வட்டம் பெருந்தோட்டம், சீர்காழி தாடாளன் கோயில் பகுதி ஆகிய இடங்களிலிருந்து 6 நபர்கள் மார்ச் 18 ம்தேதி புதுடில்லி சென்று மார்ச் 24 ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார்கள். இந்நிலையில் தில்லி சென்று திரும்பியவர்கள் கண்டறியப்பட்டு சீர்காழி வட்டார சுகாதாரத்துறை சார்பில் அவர்கள் அனைவரும் 28 நாட்கள் தனிமையில் இருக்கும்படியும், இடது கையில் நான் எனது நாட்டு மக்கள் நலனுக்காக தனிமையில் உள்ளேன் என்ற வாசகம் அடங்கிய ஸ்டாம்ப் இடப்பட்டு அவர்களின் வீட்டில் தனிமைபடுத்துதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

    இதனிடையே தில்லி சென்று திரும்பிய 6 நபர்களும் சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ராஜ்மோகன் தலைமையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மருத்துவ அலுவலர் டாக்டர்.பிரபாகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன், சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக்,ரெங்கராஜன், வருவாய் ஆய்வாளர் கலாவதி, கிராம நிர்வாக அலுவலர் பாலு, ஆகியோர் உடன் இருந்தனர்.
    நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

    நாகை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 10 பேருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, அவர்களுடைய ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்களின் பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக திறக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளை நாகை தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர் அவர் மாவட்ட சித்த மருத்துவமனையில் கபசுரகுடிநீர் இலவசமாக வழங்கப்படுவதை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முடங்கி போய் உள்ளது. இந்த நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்களின் பணி பாராட்டுக்குரியது. பிரதமர் நிவாரண நிதியை அள்ளி தரும்படி தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் டாடா குழுமம் ரூ.1,500 கோடி வழங்கியுள்ளது.

    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதாரத்தை ஈடுகட்டும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு இதுவரை கொரோனா வைரஸ் ஆய்வுக்கு 23 பேர் வந்துள்ளனர். இதில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. நாகை அரசு தலைமை மருத்துவமனையில் 130 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சித்த மருத்துவ துறை சார்பில் இலவசமாக கபசுரகுடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக எனது தொகுதி நிதியில் இருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மயிலாடுதுறையில் தடை உத்தரவை மீறி அனுமதியின்றி இயங்கிய காய்கறி, மீன் கடைகள் அகற்றப்பட்டதால் வியாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்டவை அனுமதி பெற்று திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளை பேருந்து நிலையத்தில் வைத்து விற்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அனுமதி பெறாமல் கடை வைத்திருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்து வந்தனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தலைமையில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பழைய பஸ் நிலையத்தில் காய்கறி கடைகளை ஆய்வு செய்தபோது சமூக விலகல் கடைபிடித்து பொருட்களை வாங்க பொதுமக்களை அறிவுறுத்தினர். பின்னர் தரங்கம்பாடி சாலையில் அனுமதியின்றி இயங்கிய காய்கறி கடைகளை அப்புறப்படுத்த கோரி எச்சரிக்கை விடுத்து தராசுகளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த அழுகிய மீன்களை பறிமுதல் செய்ய முற்பட்டபோது வியாபாரிகள், அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே மீன் விற்பனையை புதிய பஸ் நிலையத்தில் மாற்றக்கோரி உத்தரவிட்ட அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றா விட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர்.

    பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள சமூக விதிகளை கடைபிடித்து அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
    ×