என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யத்தில் தூக்கு மாட்டி வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தேத்தாகுடி தெற்கில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வீரசுந்தரம் (வயது 18). டிப்ளமோ படித்து உள்ளார். தனது பாட்டியிடம் செலவிற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்துள்ளார்.

    இதனால் மனம் உடைந்த வீரசுந்தரம் வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் வீரசுந்தரத்தின் உடலை வேதாரண்யம் போலீசார் கைப்பற்றி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சீர்காழியில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி தாடாளன் கோவில் சபாநாயகர் தெருவை சேர்ந்த ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்று ஊருக்கு திரும்பினார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    சீர்காழிக்கு வருகை தந்த அவருக்கு ஒரு சமூகத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்து ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

    தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தடையை மீறி கூட்டமாக சென்றதாக சீர்காழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சீர்காழி போலீசார், தடையை மீறி ஊர்வலமாக சென்ற 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை அருகே வயல் வெளியில் கறிவிருந்து வைத்து டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட 10 பேர் போலீசில் சிக்கினர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அடுத்து மணல்மேடு அருகே வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் வயல் வெளியில் பிரியாணி தயாரித்து சமுக விலகலை தவிர்த்து உணவு அருந்தியதை டிக்-டாக் வீடியோவாக வெளியிட்டனர்.

    இதை பார்த்து போலீசார் எந்தஊர் என விசாரித்ததில் மேற்படி மணல்மேடு வில்லியநல்லூர் என தெரியவந்தது இதை அடுத்து நேற்று அதிகாலை தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுராஜா தலைமையில் வில்லியநல்லூர் கிராமத்திற்கு சென்று கறிவிருந்தில் பங்குபெற்ற வில்லியநல்லூர் உத்ராபதி கோவில் தெருவை சேர்ந்த அருண் என்ற அருண்பிரசாத் (வயது22), அக்ஹராகரம் அப்புஎன்ற சதீஸ்குமார் (22), சிவா(27), பாலமுருகன் (22), வெங்கடேஷ்(26).கலைமணி(27), ராஜேஷ் (22), பாலசுந்தரம்(22).தினேஷ் (21) மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து மணல்மேடு போலீசார் அவர்களை இதுபோல் தடைஉத்தரவு காலங்களில் விதிமீறல் நடைபெறக்கூடாது என உறுதிமொழி எடுத்து எச்சரித்து அனுப்பினர்.
    நடக்க முடியாத 3 மகன்கள், உடல்நிலை சரியில்லாத கணவர் ஆகியோரை பராமரித்துக்கொண்டே பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்த பெண், தற்போது ஊரடங்கால் கடையும் மூடப்பட்டு விட்டதால் சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்து வருகிறார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த துளசியாப்பட்டினம் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ் (வயது 70). இவரது மனைவி ஜெயா (55). இவர்களுக்கு கடந்த 1984-ம் ஆண்டு திருமணம் நடந்தது. துரைராஜூக்கு ஜெயா இரண்டாவது மனைவி ஆவார்.

    இவர்களுக்கு ஜெயராஜ் (32), ஆனந்த்ராஜ் (30), வெங்கடேஷ்(28) ஆகிய மூன்று மகன்கள். மூன்று மகன்களும் பிறவியிலேயே உடல் மற்றும் மன வளர்ச்சி இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாக படுத்த படுக்கையிலேயே உள்ளனர். துரைராஜ் ஆரம்ப காலங்களில் பால் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

    பால் வியாபாரத்திற்காக சைக்கிளில் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்ததால் பால் வியாபாரம் செய்வதை நிறுத்தி விட்டார். கடந்த 2006-ம் ஆண்டு தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியின் மூலம் வசூல் செய்து கொடுத்த ரூ.1 லட்சத்தில் வீட்டின் முன்புறம் சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி மனைவி மற்றும் மகன்களை காப்பாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக துரைராஜ் உடல்நலமின்றி நோய்வாய்ப்பட்டு வருவதால் ஜெயா தனது 3 மகன்கள் மற்றும் கணவருடன் சேர்த்து காப்பாற்றுவதற்கு வாழ்வாதாரம் இல்லாமல் பெட்டிக்கடை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டமான சூழலில் நாட்களை கடத்தி வந்தார்.

    இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தங்கள் குடும்பத்தினருக்கு பிழைப்பு அளித்து வந்த பெட்டிக்கடையையும் மூட வேண்டிய சூழல் ஜெயாவுக்கு ஏற்பட்டது. கடையில் அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பசியாறி வந்த இந்த குடும்பம் தற்போது கடையும் மூடப்பட்டு வருமானம் இல்லாததால் அன்றாட உணவுக்கே 5 பேரும் தவித்து வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளிகளான ஜெயாவின் மூன்று மகன்களுக்கும் சேர்த்து மாதம் ரூ.4 ஆயிரம் அரசின் சார்பில் கிடைத்து வருகிறது. இதை வைத்துக்கொண்டு கடந்த 26 நாட்களாக ஜெயா தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    தனது மூன்று மகன்களையும் அரசு ஏதாவது ஒரு மருத்துவமனையில் சேர்த்து சரி செய்ய வேண்டும் எனவும், தனது கணவரும் உடல்நலம் குன்றி வீட்டில் இருப்பதால் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கும், நிரந்தர வருமானத்திற்கும் அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என ஜெயா கண்ணீருடன் கூறினார்.

    வறுமையில் வாடும் இந்த தாயின் சோக குரலுக்கு யாராவது செவிசாய்ப்பார்களா? அவருக்கு ஏதாவது நல்வழி கிடைக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    சீர்காழியில், ஊரடங்கை பயன்படுத்தி போலீஸ்கார கணவருடன் சேர்ந்து கடைகளில் பணம் வசூல் செய்தார் பெண் இன்ஸ்பெக்டர். இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீபிரியா. இவருக்கு கொரோனா பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் இவர் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

    இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவின் கணவர் சோமசுந்தரம். இவர், திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தனது கணவர் சோமசுந்தரத்துடன் தங்களுக்கு சொந்தமான காரில் சீர்காழியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சென்று உள்ளார்.

    அந்த கடைகளில் சமூக இடைவெளியை கடைப் பிடிக்காமல் கூட்டம் கூடுவதாக கடைக்காரர்களை மிரட்டி கடந்த சில நாட்களாக தொடர்ந்து பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள், இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரி ஒருவர் சீர்காழியில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர், தனது விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் அளித்தார்.

    பெண் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவும், அவரது கணவர் சோமசுந்தரமும் கடைக்காரர்களிடம் பணம் வசூல் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். 
    வேதாரண்யத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் வேதாரண்யம் தாலுக்காவில் வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றியம், காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேதாரண்யம் நகராட்சி பகுதிக்குள் வாகனங்கள் வருவதை கட்டுப்படுத்த 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இதையும் மீறி நாள்தோறும் 1000 முதல் 2 ஆயிரம் வாகனங்கள் வரை நகராட்சி பகுதிக்குள் வந்து செல்கின்றன. மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்கு நாகை மாவட்ட எல்லையான துளசியாப் பட்டினம், செங்காதலை பாலம் ஆகியவை அடைக்கப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
    வெளிநாட்டில் உள்ள கணவர், தன்னிடம் பேசாததால் மனம் உடைந்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே நிர்த்தனமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் சுகந்தி(வயது 24). இவருக்கும், தஞ்சை கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் ராஜா(33) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.

    திருமணம் முடித்த இரண்டு மாதத்திற்கு பிறகு ராஜா, வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு சுகந்தி, ராஜாவின் வளர்ப்பு தந்தையான பாஸ்கரன் என்பவர் வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் சுகந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரது பெற்றோர் வீட்டுக்கு, ராஜாவின் வளர்ப்பு தந்தை அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக ராஜா, சுகந்தியிடம் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் சுகந்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கணவர் தன்னிடம் பேசாததால் மனம் உடைந்த சுகந்தி நேற்று முன்தினம் தனது தந்தை வீட்டிற்கு பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சுகந்திக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இதுபற்றி நாகை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    திருக்கடையூரில் பெண் ஒருவர் இறந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகள் அடைக்கப்பட்டன.
    திருக்கடையூர்:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டம், திருக்கடையூர் கடைத்தெருவில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளான மளிகை கடை, பால் கடை, காய்கறி கடை, இறைச்சி கடை உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று திருக்கடையூர் பகுதியில் ஒரு பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் இருக்குமோ? என்ற அச்சத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணின் ரத்த பரிசோதனை வரும் வரை அனைத்து கடைகளையும் தொடர்ந்து அடைக்க வேண்டும் என நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை 11 மணியில் இருந்து திருக்கடையூர் ஊராட்சியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போன பெண் வசித்த பகுதி மற்றும் சுற்று பகுதி அடைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதனால் திருக்கடையூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வேதாரண்யம் அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். ஊரடங்கு உத்தரவால் அவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் வேதாரண்யம்- நாகை செல்லும் பிரதான சாலையில் மாவடிவாய்க்கால் என்ற இடத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலை மீது மர்ம நபர்கள் செருப்புமாலை அணிவித்து அவமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க., தி.க உள்ளிட்ட கட்சிகள் அங்கு குவிய தொடங்கினர்.

    இதையடுத்து சமபவ இடத்திற்கு வந்த வேதாரண்யம் போலீசார் பெரியார் சிலை மீது போடப்பட்ட செருப்பு மாலையை அப்புறப்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் கூட்டம் கூடாதவாறு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

    இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊரடங்கு உத்தரவால் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பெரியார் சிலைமீது செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளதா எனவும், யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என அந்த கிராமத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

    ஊடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரசியல் கடசியினர் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் இந்த பிரச்சனை திருவள்ளுவர் சிலை அவமதிப்பு பிரச்சனைபோல் பூதாகரமாகுவதற்குள் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மீனவர்கள் வேலை இழந்து சொல்லொண்ணாத கஷ்டத்தில் முடங்கி கிடக்கின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த மீனவ கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் பைபர் படகு மற்றும் விசைபடகு மூலம் மீன்பிடிக்கச் சென்று பல லட்சம் மதிப்புள்ள மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்து வந்தனர்.

    இந்த மீன்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், உள்ளுர் சில்லறை வியாபாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் மீன்பிடி தொழில் தடை செய்யப்பட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்து இல்லை. அதிகளவில் மீன்கள் கிடைத்த காலத்தில் விற்பனை செய்தது போக மீதமுள்ள மீன்களை மற்றும் தங்கியுள்ள மீன்களை மீனவ குடும்பத்தினர் கருவாடுக்கு பயன்படுத்தி அதை உப்பு வைத்து காயவைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. இதனால் இந்த பகுதியில் மீனவர்கள் வேலை இழந்து சொல்லொண்ணாத கஷ்டத்தில் முடங்கி கிடக்கின்றனர். என்றைக்கு தங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் நீங்கி விடிவு காலம் எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    வேதாரண்யம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எரிசாரயம் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவர்களுக்கு குரவப்புலம் பகுதியில் எரிசாரயம் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் அந்த பகுதிக்கு சென்று சோதனை செய்ததில் அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராசகுமார் (வயது 40) என்பவர் 120 லிட்டர் எரிசாரயம் பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். 

    இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ராசகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்திய அரசு நாட்டுப்படகு மீனவர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதியளித்துள்ளது
    நாகப்பட்டினம்:

    மத்திய அரசு நாட்டுப்படகு மீனவர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதியளித்துள்ளது இதனால் மீனவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப் பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, சேதுபாவா சத்திரம், கழுமங்குடா,காரங்குடா,அடைக்கத்தேவன்,மத்திரிப்பட்டிணம்,அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மா தேவிபட்டிணம், கணே‌ஷபுரம் உள்பட 27 மீனவ கிராமங்கள் உள்ளது. இதில் இஞ்சின் பொருத்தப்பட்ட பைபர்கிளாஸ் படகு,பாரம்பரிய நாட்டுப்படகு என 4500 படகுகள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸால் மத்திய,மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒருவார காலம் முன்கூட்டியே கடந்த 30 நாட்களுக்கு மேலாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு பல்வேறு கடும் நிபந்தனைகளுடன் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதியளித்து உள்ளது. இதன்படி பிடித்துவரும் மீன்களை மீன் ஏலக்கூடங்களில் ஏலம்விடக்கூடாது, ஏலக்கூடங்களில் மீனவர்கள் கூட்டம் கூடக்கூடாது, பிடித்துவரும் மீன்களை அந்தந்த கிராமங்களில் உள்ள வியாபாரிகளிடமே விற்பனை செய்ய வேண்டும்.

    மீன் விற்பனையை காலை 7 மணிக்குள் முடித்துகொள்ள வேண்டும் அதற்கு மேல் விற்பனை செய்யப்படும் மீன்களை பறிமுதல் செய்வதுடன் படகு உரிமமும் ரத்து செய்யப்படும், ஒவ்வொரு கிராமங்களிலும் குழு அமைத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும், மீன்வளத்துறை, காவல்துறை,வருவாய் துறை இணைந்து மீனவர்கள் கூட்டம் கூடுவதை கண்காணிக்க வேண்டும், மீன் இறங்கு தளங்களில் விற்பனை செய்யக்கூடாது, மீன்பிடி தொழிலுக்கு செல்லும் படகுகள் கூட்டமின்றி ஒன்றன் பின் ஒன்றாக கரைக்கு வரவேண்டும், நிபந்தனைகளை மீறும் படகுகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்,மீனவர்கள் முக்கவசம்,கையுறை கட்டாயம் அணியவேண்டும் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அடிக்கடி கை கழுவ வேண்டும் உள்ளிட்ட 11 க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது.

    வெளியூர் வியாபாரிகள் வந்தால்தான் மீன் நஷ்டம் இன்றி விற்பனை செய்ய முடியும். காலை 7 மணி என்ற காலக்கெடுவை கடைபிடிப்பது கஷ்டம் மேலும் மீனவர்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்துவது கடினம் எனவேதான் கடும் நிபந்தனைகளுடன் மீன்பிடி தொழில் செய்ய முடியுமா? என்ற குழப்பத்தில் உள்ளோம் என கூறுகின்றனர்.

    ×