என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மீனவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவி உள்பட பல்வேறு உபகரணங்களை கொள்ளையடித்து தப்பினர்.
    • தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்தவர்கள் மணியன் (வயது 55), வேல்முருகன் (27), சத்யராஜ் (30), அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் கோடிலிங்கம் (53). இவர்கள் 4 பேரும் மீனவர்கள்.

    நேற்று மாலை இவர்கள் அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க புறப்பட்டனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு படகில் 3 இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து மீனவர்கள் படகில் ஏறி கத்தியை காட்டி பொருட்களை கொடுக்குமாறு மிரட்டினர்.

    பின்னர் மீனவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவி உள்பட பல்வேறு உபகரணங்களை கொள்ளையடித்து தப்பினர்.

    இலங்கை கடற்கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குதலால் மீனவர்கள் மணியன், கோடிலிங்கம், வேல்முருகன், சத்தியராஜ் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் காயத்துடன் வேக வேகமாக கரைக்கு திரும்பி உறவினர்களிடம் நடந்த விவரங்களை கூறினர். அதனை தொடர்ந்து 4 பேரும் ஆம்புலன்சில் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. தொடரும் அட்டூழியத்தால் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதோடு மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஆதினங்குடியிலிருந்து கணபதிபுரம் வரை செல்லும் சாலை உள்ளது.

    இந்த சாலை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு கொண்டது.

    இந்த சாலையை ஆதினங்குடி,பண்டாரவடை, இடையாத்தங்குடி, தென்பிடாகை, கிடாமங்கலம், ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடும் நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வர இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

    மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியே சென்று வருகின்றன.

    மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் வெளியூர்களுக்கு எடுத்துச்செல்ல இதே சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றன.

    இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் சாலையில் மின் வசதி இல்லாத காரணத்தால் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • மனைவி வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார்
    • பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    நாகப்பட்டினம்,

    நாகூர் அருகே உள்ள சன்னமங்களம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆமீர் ஹம்சா மகன் ஹாஜா மெய்தீன் (வயது 30). இவர் நாகையில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார்.

    ஹாஜா மெய்தீனுக்கு ஆயிஷா நூர் என்ற மனைவியும், ஆஷீதீன் என்ற 7 வயது மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சிஇருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆயிஷா நூர் அவரது தந்தை வீட்டுக்கு சென்று உள்ளார். பின்னர் நேற்று காலை அவரது மனைவி வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார்.

    வெகு நேரமாகியும் கதவு திறக்கவில்லை. தூக்குப்போட்டு தற்கொலை உடனே அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹாஜா மெய்தீன் புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிணமாக கிடந்த ஹாஜா மெய்தீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
    • அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியா-இலங்கை இடையிலான நல்லிணக்க கூட்டு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து நாகை துறைமுகத்தில் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரு சில நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாகை துறைமுகத்தில் இருந்து 2 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு சென்று வரும் வகையில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்துவிட்டது. மேலும் பயணிகள் கட்டணம் நிர்ணயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து துறைமுக நிர்வாகத்துடன் மத்திய, மாநில அரசு துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

    நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்காக கொச்சியில் இருந்து ஒரு கப்பல் சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. இந்த கப்பல் இலங்கை வழியாக நாளை (சனிக்கிழமை) மாலை அல்லது 8-ந் தேதி காலை நாகைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு பிறகு அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும். இதைத்தொடர்ந்து ஓரிரு வாரத்தில் நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

    இதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க சார்பில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 11 வாரங்கள் வழங்கப்படாமல் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும்.

    100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    சில ஊராட்சிகளில் வாரம் விட்டு வாரம் வேலை வழங்குவதை நிறுத்திவிட்டு, முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதில் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாரியம்மனுக்கு தினசரி பூஜைகளும் வழிபாடு நடந்தது.
    • அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் அமைந்துள்ளது நாட்டு மடம் மாரியம்மன் கோவில்.

    இந்த மாரியம்மனை திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் ஒரு மடம் அமைத்து அதில் இந்த மாரியம்மனை வைத்து வழிபாடு செய்ததாக வரலாறு.

    அதனால் இந்த மாரியம்மனுக்கு நாட்டு மடம் மாரியம்மன் என பெயர்.

    இந்த மாரியம்மனுக்கு தினசரி பூஜைகளும், ஞாயிறு, வெ்ளளி, செவ்வாய் கிழமைகளில் வழிபாடும் நடைபெறும்.

    ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாள் விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா 29-ந்தேதி அன்று தொடங்கியது.

    இதையொட்டி வேதாரண்யேஸ்வரர் கோவிலிலிருந்து அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வந்தடைந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    நான்காம் நாள் மண்டகபடியான திங்கள் கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, வண்ண மலர்களால், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதியுலா காட்சி நடந்தது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்தும், மாவிளக்கு போட்டும் அம்மனை வழிபட்டனர்.

    பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடு களை அர்ச்சரக்கட்டளை கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மீனவர்கள் 100க்கும் மேற்பட படகுகளை கடலில் இருந்து கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
    • கடும் காற்றின் காரணமாக கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வீசும் சூறைக்காற்று காரணமாக கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது.

    இதனால் மீனவர்கள் 2-ம் நாளாகமீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் 100க்கும் மேற்பட படகுகளை கடலில் இருந்து கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

    கோடியக்கரை கடற்கரை பகுதியில் வீசும் சூறை காற்று காரணமாக சாலைகளின் குறுக்கேயும், கடற்கரை பகுதிகளிலும் சுமார் 5 அடி உயரம் மணல் குன்றுகளாக குவிந்து காட்சியளிக்கிறது.

    இந்த திடீரென்று உருவான மணல் குன்றுகளால் மீனவர்கள் மற்றும் வாகனங்கள் அப்பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள் மண்ணில் புதைந்து காணப்படுகிறது. வழக்கமாக கோடியக்கரையில் அக்டோபர் முதல் மீன்பிடி வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    இந்த 6 மாத சீசன் காலத்தில் நாகை,திருவாரூர், தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன் பிடித்து தொழில் செய்வது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசன் துவங்கப்படவில்லை இதற்கு காரணம் தற்போது வழக்கத்துக்கு மாறாக வீசும் இந்த காற்றால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    எனவே சீசன் காலம் தொடங்க இன்னும் இரு வாரமாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். கடும் காற்றின் காரணமாக கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி பால்பண்ணைச் சேரியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-23 நிதியின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செந்தில் குமார், வி.சி.க. நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் அருட்செல்வன், நகரச் செயாளர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கருப்பம்புலம் ஊராட்சியில்காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.
    • 30 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலம் ஊராட்சியில்காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முருகையன் வரவேற்றார்.

    வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், 100 நாள் திட்ட பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் பணிகள் விரைந்து நடை பெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டிற்குள் பணிகள் முடிக்கபட்டு தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

    100 நாள் வேலைத்திட்ட பணியில்ஊதியம் வழங்குவதில் தேக்க நிலைஇருந்தது.

    தற்போது அது சரி செய்யப்பட்டு அவரவர் வங்கி கணக்கில் ஊதியம் ஏற்றப்படும். மேலும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு பெற்றவர்கள் உடனடியாக பணியை முடிக்க வேண்டும் .

    அப்படி முடித்தால் தான் மற்றவர்களுக்கு வீடு கிடைக்கும்.

    எனவே விரைந்து வீடு கட்டும் பணியை முடிக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய ஆணையர்ராஜு பேசினார்.

    கருப்பம்புலம் ஊராட்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு வீட்டு வரியை இனி ஊராட்சி மன்றமே செலுத்தும் என தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது.

    சென்ற ஆண்டு கிராம சபா கூட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி கிடையாது என்று அறிவிப்பு செய்து நடைமுறைப்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டம் முடிவில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தியராஜன் நன்றி கூறினார்.

    • காவிரி டெல்டாவில் பயிரிட்ட பயிர் உரிய தண்ணீர் இன்று கருகி வருகிறது.
    • விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    காவிரி டெல்டாவில் பயிரிட்ட பயிர் உரிய தண்ணீர் இன்று கருகி வருகிறது.

    இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய தண்ணீரை தமிழகத்திற்கு தரமறுக்கும் கார்நாடக அரசை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் உரிய தண்ணீர் பெற்றுதந்து விவசாயிகளை பாதுக்கவேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, பெரியார் சிலை அருகே முக்குலத்து புலிகள் அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முக்குலத்துபுலிகள் கட்சி தலைவர் ஆறு. சரவணன் தேவர் தலைமை தாங்கி பேசினார்.

    அதனை தொடர்ந்து சித்தராமையாவின் உருவ பொம்மை, படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உருவபொம்மை எரிப்பின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டது.

    இதில் முக்குலத்து புலிகள் கட்சியின் மாநில செயலாளர் எஸ்கே.தேவர், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முத்துப்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் பாலா திருவாரூர் நகர பொறுப்பா ளர் வினோத் குமார் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வடகாடு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கோதண்டராம சுவாமி கோவில் அமைந்துள்ளது.
    • ஆஞ்சநேயர் சன்னதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு வடகாடு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கோதண்டராம சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் இந்த ஆண்டு கம்பசேவை விழா நடைபெற்றது நிகழ்ச்சியில்கம்ப விளக்கிற்கு அபிஷேகம் நடைபெற்று, சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது.

    இதே போல் ஆஞ்சநேயர் சுவாமி திருஉருவ படம்வைக்கப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆஞ்சநேயர் சன்னதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    பக்தா்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனா். பெண்கள் பக்தர்களுக்கு வாழைப்பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன

    இதே போல் மறைஞாயநல்லூர், தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில், நாகக்குடையான் சீனிவாசபெருமாள் கோவில், கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமான் ஆகிய பெருமாள் கோவில்களில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னா் பெருமாள் வண்ண மலர்களாலும், துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் ஆங்காங்கே கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    • வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் பணி நடந்தது.
    • பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் அ. டயானா ஷர்மிளா தலைமையில், பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

    இதில் வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் எம். பொன்னுசாமி, கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் வருவாய் துறை அலுவலகர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    ×