என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று நாகையில், மத்தியக்குழுவினர் கூறினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் யாதேந்திரஜெயின் தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு சாட்டியக்குடியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினர், நெல்மூட்டைகளில் ஊசி கரண்டி மூலம் துளையிட்டு நெல்லை பரிசோதனைக்காக எடுத்தனர்.

    அந்த நெல்லை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து அந்த நெல் எந்த பகுதியில் விளைந்தது? யாருடைய நிலத்தில் விளைந்தது? இந்த நெல் எந்த ரகத்தை சேர்ந்தது? போன்ற விவரங்களை குறிப்பெடுத்து எழுதி வைத்துக்கொண்டனர்.

    பின்னர் அதிகாரிகள் குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது மழைக்காலம் என்பதால் விவசாயிகள் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டும் கொள்முதல் செய்கிறது. 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாமா? என்பது குறித்து ஆய்வு செய்ய கொள்முதல் செய்த நெல்லை எடுத்து செல்கிறோம். ஆய்வகத்தில் இந்த நெல் மாதிரிகளை ஆய்வு செய்த பின்னர் அதன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    வகுப்பறையில் வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சீர்காழி ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா கொண்டல் காலனி தெருவை சேர்ந்தவர் மூவேந்தன்(வயது 28). இவர், அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதியன்று வகுப்பறையில் இருந்தபோது 3-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு வகுப்பறையில் வைத்து இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர், சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவேந்தனை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நாகை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில்(போக்சோ சட்ட பிரிவு) நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி நேற்று தீர்ப்பு கூறினார்.

    நீதிபதி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மூவேந்தனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக ஒரு சட்டப்பிரிவின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனையும், துன்புறுத்தியதற்காக மற்றொரு சட்டப்பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகள் அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மூவேந்தனை போலீசார் கடலூர் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர்.
    கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் ஆழியூர் பிரிவு சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகூர் அருகே மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்த ராமன் மகன் மணிகண்டன் (வயது23), தெத்தி பகுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் உமாபதி (19) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெருங்கடம்பனூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெருங்கடம்பனூரை சேர்ந்த தனபால் மகன் நிதிஷ்குமார் (20), அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் விஜய் (19) என்பதும், சாராயம் கடத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிஷ்குமார், விஜய் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யத்தில், வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையை சேர்ந்தவர் அப்துல்கனி. இவர், தனது மகன் சாகுல் அமீதுடன் தோப்புத்துறை சிவன் கோவில் வடக்கு தெருவில் வசித்து வருகிறார். அப்துல்கனிக்கு உடல்நிலை சரியில்லாததால் திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.

    மருத்துவமனையில் அப்துல்கனி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் அவரை தவிர மற்றவர்கள் அனைவரும் திருச்சியில் இருந்து ஊருக்கு திரும்பி வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு செல்லாமல் அருகில் உள்ள சாகுல் அமீதுவின் சகோதரி வீட்டுக்கு சென்று தங்கினர்.

    இந்த நிலையில் நேற்று சாகுல் அமீது மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் இருந்த இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    சாகுல் அமீது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டின் அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்திற்கு சாகுல் அமீது தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.

    நாகையில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் ‘துலிப்’ சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

    இந்த கொள்ளை தொடர்பாக வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் அருள்குமார்(வயது 54). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தார்.

    அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அருள்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.





    வேளாங்கண்ணி அருகே சட்டத்திற்கு விரோதமாக குயில்களை பிடித்தவர்களுக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் கவுண்டர்புரத்தில் உள்ள முந்திரி தோப்பில் குயில்கள் அடைந்து வருகின்றன. இதனை மர்மநபர்கள் பிடித்து செல்வதாக நாகப்பட்டினம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று வனச்சரக அதிகாரி குமரேசன் (பொறுப்பு) தலைமையில் வனசரக அதிகாரிகள் மற்றும் வனவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒருவர் நான்கு குயில்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பிரதாபராமபுரம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த செல்லையன் மகன் குமணன் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த நான்கு குயில்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து, அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதேபோல் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் உள்ள ஒரு தோப்பில் 10 குயில்களை அந்த பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் ராகவன் (25) என்பவர் பிடித்து வைத்து இருந்தார். பிடித்து வைத்திருந்த 10 குயில்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து, அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    பின்னர் வனசரக அதிகாரி குமரேசன் கூறுகையில், பறவைகளை தனிநபர்கள் பிடித்து செல்வது சட்டப்படி குற்றமாகும். இதை யாரும் செய்யக்கூடாது என்றார்.
    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கக்கோரி நாகையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க துடிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு

    மாவட்ட செயலாளர் கார்த்திகேசன் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மத்திய அரசு பறிக்கும் போக்கை கைவிட வேண்டும். திண்டுக்கல் சிறுமி கலைவாணி பாலியல் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    தமிழக மக்களின் சொத்தான அண்ணா பல்கலைகழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க துடிக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
    வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் கோவில் கட்டும் பணிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டினார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது வேதாமிர்த ஏரி. அதிக மழை காலங்களில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் இந்த ஏரிக்கு வந்தடைந்து நிரம்புகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், புனித நீராடவும் பயன்படும் இந்த ஏரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் காலத்தில் வெட்டப்பட்டது. 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரி முழுமையாக தூர்வாரப்பட்டு வருகிறது. தமிழக அரசு ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீட்டில் நகராட்சி மூலம் சுற்றுச்சுவர் அமைத்தல், பொதுமக்கள் நடைபயிற்சிக்கும், பொழுதுபோக்கு பூங்காக்களும் அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.

    வேதாரண்யம் காசிவிஸ்வநாதர் கோவிலின் எதிரே உள்ள ஏரிக்குள் சிவன்-பார்வதி கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். விழாவில் நாகை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பையன், தீலிபன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், வக்கீல்கள் தங்க கதிரவன், நமசிவாயம், நகர மன்ற முன்னாள் துணை தலைவர் சுரேஷ்பாபு, குரவப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    நாகை கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபரை அரிவாளால் வெட்டி பணம், செல்போனை மர்மநபர்கள் பறித்து சென்றுவிட்டனர். தொடர் வழிப்பறியில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகரத்தை ஓட்டி அமைந்துள்ளது கிழக்கு கடற்கரை சாலை. இந்த சாலையில் வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு வடமாவட்டத்தில் இருந்து வரும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் நாகை புத்தூர் முதல் வடகுடி பிரிவு சாலை வரை உள்ள பகுதிகளில் திருநங்கைகள் சாலையில் செல்வோரிடம் தகாத செயல்களில் ஈடுபட்டு பணம் பறிப்பது நடைபெற்று வந்தது. பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் போலீசார் திருநங்கைகளை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அந்த வழியாக வேலைக்கு செல்வோரை குறிவைத்து அரிவாளை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறிப்பது தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் திருமலை மகன் சூரியபிரசாந்த்(வயது24). இவர் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு பணிக்காக நாகை கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சூரியபிரசாந்த்தை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த செல்போன், பணம், நகை ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களாக தொடர் வழிப்பறியால் பாதிக்கப்பட்டவர்கள் நாகை வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே உயிர் சேதம் ஏற்படும் முன் வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    வேளாங்கண்ணி அருகே மோட்டார்சைக்கிள் மோதி இளம்பெண் பரிதாபமாக இறந்தார். தாய் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் கைகாட்டி கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி வளர்மதி(வயது55). இவர்களது மகள் தமிழ்ச்செல்வி (19). சம்பவத்தன்று வளர்மதியும், தமிழ்ச்செல்வியும் அருகில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் திடீரென தாய், மகள் ஆகியோர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வளர்மதியை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனியாண்டி மகன் பழனிசாமி என்பது தெரியவந்தது. இந்த விபத்தில் பழனிசாமியும் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விவசாயிகள் கொண்டு வரும் நெல் அனைத்தும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்தார்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய புதிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா கீழையூரில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். புதிய கட்டிடத்திற்கான கல்வெட்டை மாநில செயலாளர் முத்தரசன் திறந்து வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட்டு கவர்னரிடமே வற்புறுத்தி இருக்கிறார். மேலும் தமிழகத்தை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் 5 பேரை அனுப்பி வைத்து அவர்களும் கவர்னரை சந்தித்திருக்கிறார்கள்.

    பாரதிய ஜனதா கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கவர்னர் கையெழுத்து போடவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். கவர்னரின் முடிவு தெரியாமல் கலந்தாய்வு நடத்தப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது. அதனால் காலதாமதம் ஆகிறது. சட்டசபையை மதித்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக கவர்னர் கையெழுத்து போட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இதை வற்புறுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். நாங்கள் எல்லோரும் உங்களோடு சேர்ந்து ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம்.

    டெல்டா மாவட்டம் முழுவதும் 10, 12 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குறுவை சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்தோடு மேற்கொண்டிருக்கிறார்கள். நல்ல விளைச்சலும் கிடைத்திருக்கிறது. ஆனால் விளைந்த நெல்லை விற்பனை செய்ய முடியாத ஒரு நெருக்கடிக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவித்திருந்தாலும் கூட அந்த அளவிற்கு கொள்முதல் செய்யப்படவில்லை. தேவையான அளவிற்கு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    அதே மாதிரி நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருக்கக்கூடாது. ஈரப்பதத்தை 22 சதவீதமாக அனுமதிக்க வேண்டும் என வற்புறுத்துகிறோம். விவசாயிகள் கொண்டு வரும் நெல் அனைத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு கூறினார்.

    இதில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், முன்னாள் ஒன்றிய தலைவர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், கீழையூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ராமலிங்கம் வரவேற்றார்.
    ×