என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 55). பெயிண்டர். இவர் சம்பவத்தன்று வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி கிராமத்தில் உள்ள குளுந்தாளம்மன் மற்றும் முனீஸ்வரர் கோவிலுக்கு தனது மோட்டார்சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் அங்கு நடந்த பூஜையில் கலந்து கொண்டு, ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது வேதாரண்யம் நாகை மெயின்ரோட்டில் வெள்ளபள்ளம் கிராமம் அருகே சென்ற போது, எதிரே நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த முருகானந்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    நாகையில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக கவர்னரை கண்டித்து நாகை அபிராமி அம்மன் சன்னதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பாபுகான் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் அபுஹாசிம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சேக்அலாவுதீன் தொடங்கி வைத்தார். எஸ்.டி.டி.யூ மாவட்ட தலைவர் சாதிக், மண்டல செயற்குழு உறுப்பினர் சலீம், பெண்கள் பிரிவு மாவட்ட தலைவர் பஷீராகனி, பொதுச்செயலாளர் சுலைகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை நகரச்செயலாளர் மெய்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரதலைவர் பகுருதீன் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 70 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி மாவட்ட தலைவர் சபீக்அகமது தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கண்ணன் வரவேற்று பேசினார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் பகுதியில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    விசாரணையில் அவர்கள் கீழ்வேளூர் அருகே குற்றம்பொருத்தான் இருப்பு ரோட்டு பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது31), உத்தமசோழபுரத்தை சேர்ந்த சக்திவேல் (21), ஏரவாஞ்சேரியை சேர்ந்த ஜெயசீலன் (28) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கீழ்வேளூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே ராதாமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரமேஷ்(வயது30). இவருக்கு திருமணம் செய்ய பல இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் வரன் அமையவில்லை. இதனால் தனக்கு திருமணம் ஆகவில்லை என விரக்தியால் சம்பவத்தன்று பூச்சிகொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகள் மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
    குத்தாலம்:

    திருவாலங்காடு சோதனை சாவடி அருகே குத்தாலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது மயிலாடுதுறை அருகே திருமங்கலத்தில் இருந்து வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் அனுமதியின்றி அள்ளி வந்த மணல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 2 லாரிகளை பறிமுதல் செய்து, லாரி டிரைவர்களான புதுக்கோட்டை தேரிப்பட்டியை சேர்ந்த முரளி (வயது 39), அறந்தாங்கியை சேர்ந்த ஜெய்சங்கர் (49) மற்றும் லாரி கிளீனர் வலங்கைமான் கிளக்காடு காளிதாஸ் மகன் பிரபாகரன் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதேபோல சேத்திராபாலபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சோழம்பேட்டையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் வழிமறித்து பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சோழம்பேட்டையை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அமிர்தராஜ் (21) மற்றும் உடன் வந்த அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் அருண்குமார் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேதாரண்யம் அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை தந்தையை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கத்தரிப்புலம் கிராமம் கோவில்குத்தகை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(வயது78). இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நாகராஜனுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவரது முதல் மகன் கார்த்திகேயன். 2-வது மகன் முருகையன்(42).

    கூலித்தொழிலாளியான முருகையனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்றுமுன்தினம் இரவு இவர் மதுஅருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு திண்ணையில் தண்ணீர் இறைக்கும் மோட்டார் வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த முருகையன் என் தாய் தூங்கிய இடத்தில் யார் இந்த மோட்டாரை வைத்தது என கேட்டார்.

    பின்னர் அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து தனது தந்தை நாகராஜனை தாக்க முயன்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் நாகராஜன் மரக்கட்டையால் தனது மகன் முருகையனை தாக்கினார். இதில் படுகாயமடைந்த முருகையன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்த புகாரின்பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் ஆழியூர்-பெருங்கடம்பனூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருங்கடம்பனூர் கடைத்தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெருங்கடம்பனூரை சேர்ந்த செல்லமுத்து (வயது22), தினேஷ் (23) ஆகியோர் என்பதும், மோட்டார்சைக்கிளில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதேபோல் பெருங்கடம்பனூர் ஐ.டி.ஐ. அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் பெருங்கடம்பனூரை சேர்ந்த கலையரசன் (45) என்பதும், 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    ஆழியூர் பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பழையனூர் மேல்பாதியை சேர்ந்த ஜெயராமன் (45) என்பதும், 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 330 லிட்டர் சாராயம் மற்றும் 3 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
    லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவுத்தல்படியும், தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நாகை அருகே நாகூர் கால்மாட்டு தெருவில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு தனிபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்த நபரை பிடித்து நாகூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது 33) என்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுப்பை கைது செய்தனர்.
    ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் ராஜாதெருவை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 68). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி தனது மகள் சண்முகபிரியாவை பார்ப்பதற்காக தனசேகரன், தனது மனைவி தமிழரசியுடன் காரைக்கால் சென்று விட்டார்.

    பின்னர் 22-ந்தேதி இரவு 7.30 மணி அளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் அறையில் மின்விளக்கு எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதவுக்கு அருகில் சென்று பார்த்த போது வாசலில் இரும்பு கதவு மற்றும் வீட்டின் மற்ற கதவுகளும் திறந்து கிடந்தன. அருகில் சென்று பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து நாகப்பட்டினத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை மேற்கொண்டனர். நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழி அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கீழஆத்துக்குடி கிராமம் மாதாக்கோவில் தெருவை சேர்ந்தவர் ரொசாரி அடைக்லமேரி(வயது88). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பகுதியில் ஈரத்துணியை காய வைத்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அப்போது கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

    வருகிற 31-ந்தேதி வரை கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பல்வேறு தளர்வுகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதியிலிருந்து வேளாங் கண்ணி பேராலயத்திற்கு வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து மாதாவை தரிசித்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளித்திருந்தது.

    அதனை தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கார்களிலும், பஸ் மூலமாகவும் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது. இங்குவரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக மொட்டை அடித்து கடலில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
    மேலப்புதனூர் அருகே சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டச்சேரி:

    நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், திருக்கண்ணபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணதாசன், சம்பத் மற்றும் போலீசார் திருமருகல் ஒன்றியம் மேலப்புதனூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திசோதனை செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 110 லிட்டர் சாராயம், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மேலப்பூதனூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராஜீவ் (வயது42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×