என் மலர்
நாகப்பட்டினம்
- விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் லயன்ஸ் கிளப், ரோட்டரி சங்கம், இன்னர்வீல் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வேளாங்கண்ணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா தொடங்கி வைத்தார். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையம், பேராலயம், கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு,
உத்திரமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் வழியாக பள்ளியில் நிறைவடைந்தது இந்த பேரணியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அவற்றின் பாதிப்புகள், எவ்வாறு தடுப்பது, சுகாதாரத்தை பேணிக்காப்பது, உணவு பழக்க வழக்கங்கள் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
மேலும் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் ஈரபுல நில பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் ஈரபுல நில பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் அறிவுரையின்படி, நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப் கான் அனைவரையும் வரவேற்றார். சமூக ஆர்வலர் டாக்டர். சிவகணேசன் முன்னிலை வகித்தார்.
கோடியக்கரை சரணா லயம், ஈரபுல நிலம் ராம்சார் சைட் ஆகியவை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோடியக்கரை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து, கடற்கரை பகுதியில் குப்பைகள், கழிவுகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதில் விமானப்படை ஊழியர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களை வனஉயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் வழங்கினர்.
- புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங் கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கன்னித்தோப்பில் பழமை வாய்ந்த ஸ்ரீ சௌந்தரராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபோகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி , பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு ஹோமங்கள் மாலை மாற்றும் நிகழ்வு, காப்புகட்டுதல் கன்னிகாதாரனம்,வஸ்திரம் சாத்துதல், பூநூல் அணிவித்தல்,நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கிராம மக்கள் சீர்வரிசை எடுத்துவர பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- சுமார் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
- வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு போதிய அளவு கிடைக்காததாலும், அணையின் தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் டீசல் மோட்டார் பம்பு செட்டு மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
ஒரு சில பகுதிகளில் மோட்டார் மூலம் இறைப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என பாதித்த பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு குறுவை அறுவடை பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். தாமதமாக சாகுபடி பணியில் ஈடுபட்ட குறுவை சாகுபடி விவசாயிகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சம்பா பணியை மேற்கொண்ட விவசாயிகளும் தண்ணீர் இன்றி பயிர் பாதித்துள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூண்டி அருகே கீழையூரில் இருந்து திருப்பூண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை அருகே சந்திரநதி வாய்க்கால் பாசனத்தில் காரப்ப பிடாகை, சிந்தாமணி, திருப்பூண்டி, பிஆர்பபுரம், காமேஸ்வரம், காரைநகர் உள்ளிட்ட பகுதிகளில் 700 மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் திருப்பூண்டி அருகே சந்திரநதி வாய்க்காலில் தேங்கிய மழைநீரை டீசல் மோட்டார் மூலம் இறைத்து ஒரு சில விவசாயிகள் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாய்காலை ஆழப்படுத்தி தண்ணீர் எடுத்தால் வரும் காலங்களில் அதில் சீராக தண்ணீர் வராது. எனவே வாய்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டும் கப்பல் இயக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- மறுமார்க்கமாக மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 23 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடைய உள்ளது.
நாகப்பட்டினம்;
இந்தியா-இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 14-ந் தேதி காலை நாகையில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த கப்பலில் 150 பேர் பயணம் செய்யலாம். முதல் நாளில் 50 பயணிகள் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தனர். தொடர்ந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 30 பயணிகள் நாகைக்கு வந்தடைந்தனர்.
இந்நிலையில், 7 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாலும், நிர்வாக காரணங்களாலும் நேற்று இந்த கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டும் கப்பல் இயக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று 2-வது நாளாக முன்பதிவு செய்திருந்த 15 பயணிகளுடன் காலை 7 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் புறப்பட்டது.
பின்னர், மறுமார்க்கமாக மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 23 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடைய உள்ளது.
- அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
- ஈரப்பதத்துடன் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு காலத்தோடு திறந்துவிடப்பட்ட காவிரி நீர் காரணமாக மகிழ்ச்சியோடு சாகுபடி தொடங்கிய விவசாயிகளுக்கு அடுத்த சில நாட்களிலேயே துயரம் காத்திருந்தது.
மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை வரை சீராக வந்து சேராத காரணத்தால் குறுவை சாகுபடி பெருமளவு பாதிக்க தொடங்கியது.
தண்ணீர் கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் விவசாயிகள் நடத்திய நிலையில் பயிர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்து அவர்கள் டீசல் இன்ஜின் வாடகைக்கு எடுத்து கூடுதல் செலவு செய்து குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து குறுவைப் பயிர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட அவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 மூட்டை வரை கிடைக்க வேண்டிய நிலையில் 10 முதல் 15 முட்டை வரையே தண்ணீர் இல்லாத காரணத்தால் அறுவடையில் கிடைத்ததாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
ஒரத்தூர், அகர ஒரத்தூர், வேர்க்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு காலத்தோடு நேரடி நெல் கொள்முதல் திறக்க வேண்டும் என கடந்த 10 கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக ஒரத்தூர், வேர்க்குடி, அகர ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் ஆயிரம் மூட்டை குருவை நெல்கள் நனைந்து பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பதோடு ஈரப்பதத்துடன் குருவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- சண்டியாகம் 23-ந் தேதி, ஊஞ்சல் உற்சவம் 25-ந் தேதி நடைபெறுகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் பிரசித்திப் பெற்ற தேவ துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா அம்மனுக்கு பூச்சொரிதலுடன் தொடங்கியது.
முன்னதாக பெண்கள் பூத்தட்டுகளை சுமந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அம்மனுக்கு மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீ பாரதனை காண்பிக்க ப்பட்டது.
நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பால்குட ஊர்வலம் மற்றும் ரதக்காவடி ஊர்வலம் வரும் 22 தேதியும் , மகா சண்டியாகம் 23ஆம் தேதி, ஊஞ்சல் உற்சவம் 25ஆம் தேதி நடைபெறுகிறது.
இவ்விழாவில் கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி விஜயேந்திர சுவாமிகள் செய்திருந்தார்.
- நாகை - இலங்கை இடையான கப்பல் போக்குவரத்து சேவை நேற்று காலை நாகையிலிருந்து தொடங்கப்பட்டது.
- கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட மறுநாளே ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை - இலங்கை இடையான கப்பல் போக்குவரத்து சேவை நேற்று காலை நாகையிலிருந்து தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று காணொலி மூலம் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
நாகை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனாவால், தமிழக சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நேற்று கப்பலில் 50 பயணிகள் பயணம் செய்தனர். மீண்டும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் கப்பல் மாலை நாகை துறைமுகம் வந்தடைந்தது. கப்பலில் ஆர்வமுடன் வந்திறங்கிய 30 இலங்கை பயணிகளுக்கு நாகை துறைமுக அலுவலர்கள் இனிப்புகளை கொடுத்து வரவேற்றனர்.
இந்த நிலையில் இன்று நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் கப்பலில் செல்ல 7 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதால் இன்று பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே பயணிகள் கப்பல் இயக்கப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட மறுநாளே ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காதோலை கருகமணியை கடலில் விட்டு புனித நீராடி சூரியபகவானை வழிபட்டனர்.
- வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகும்.
இந்த நாட்களில் மூதாதையர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம்.
இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்ய வேண்டும். இதனால் அவர்களது ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். நாம் செய்த பாவங்கள் நீங்கும்.
நீர்நிலைகள் அருகே அமர்ந்து வேதமந்திரங்கள் சொல்லி திதி கொடுப்பது, மூதாதையர்கள் நினைவாக பிண்டம் செய்து உணவாக படைப்பது என்று செய்து வருகின்றனர்.
அதன்படி, நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது எனப்படும் சித்தர் கடலில் இன்று சூரிய உதயத்தின் போது கடலில் ஏரளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் தேங்காய், வெற்றிலைபாக்கு, எலும்பிச்சைபழம், காதோலை கருகமணியை கடலில் விட்டு புனித நீராடி சூரியபகவானை வழிபட்டனர் .
பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- அந்த பஸ் நிற்காமல் அதிவேகமாக சென்றது.
- விதிமீறல்கள் தொடர்பாக ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை வட்டார போக்கு வரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நாகை புறவழிச்சாலை செல்லூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேதாரண்யத்தில் இருந்து நாகை வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிறுத்த முயன்றனர்.
ஆனால் அந்த பஸ் நிற்காமல் அதி வேகமாக சென்றது.
இதில் சந்தேகம் அடைந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 2 கிலோ மீட்டர் விரட்டி சென்று வாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே பஸ்சை மடக்கி பிடித்தனர்.
பின்னர் ஆவணங்களை சோதனை செய்த போது, வரி கட்டாமல் பஸ்சை இயங்கியதும், பல்வேறு ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து விதிமீறல்கள் தொடர்பாக ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆம்னி பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவல கத்திற்கு கொண்டு சென்றனர்.
- நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.
- இந்தப் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குச் செல்வதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.7,670 டிக்கெட் (ரூ.6500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.7670) விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை www.kpvs.in. என்ற இணையதளத்திற்குச் சென்று பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இலங்கையின் இணையதளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.
முதல் நாள் பயணத்துக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜி.எஸ்.டி. வரி, 75 சதவீத சிறப்பு சலுகையுடன் ரூ.2,803 மட்டும் வசூலிக்கப்பட்டது.

இந்தப் பயணிகள் கப்பல் ஒரு மணிநேரத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதில் பயணிகளுக்குத் தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோக குளுகுளு ஏ.சி. வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள கப்பலில் பொழுதுபோக்கிற்காக 6 தொலைக்காட்சி பெட்டிகள் தமிழ், ஆங்கிலம், மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோக ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆபத்து காலங்களில் உயிர் காக்கும் மிதவை படகுகள், மருத்துவ உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் அனைத்தும் உள்ளன.
இந்தப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதன்பின் வட கிழக்கு பருவமழை காலம் என்பதால் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மார்ச் மாதம் முதல் தினமும் போக்குவரத்து தொடங்க உள்ளது.
- நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.
- இந்தப் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நாகப்பட்டினம்:
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.






