என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகை அருகே அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள்-பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் கனமழை பெய்தது.இதனால் நாகை, வடகுடி, கூத்தூர், பட்டமங்கலம், தேவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமாகியது.

    மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து நேற்று வடகுடி பகுதியில் உள்ள வயலில் இறங்கி விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதி்ல் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் சரபோஜி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தங்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய கணக்கெடுப்பு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கீழ்வேளூர் அருகே அத்திப்புலியூர்,நீலப்பாடி, ராதாநல்லூர்.குருமணாங்குடி செருநல்லூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் 600 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அத்திப்புலியூரில் விவசாயிகள் மற்றும் பெண்கள் அழுகிய நெற்பயிர்களுடன் வயல்களில் இறங்கி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் கீழ்வேளூர் அருகே கூத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் வயலில் இறங்கி நிவாரணம் வழங்கக்கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். கூத்தூர், பட்டமங்கலம், தேவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திட்டசேரி அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கக்கோரி வயதில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கீழப்பூதனூர், திருச்செங்கட்டாங்குடி ஊராட்சி பகுதிகளில் 3 ஆயிரத்து 200 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கபட்ட நெற்பயிர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். சதவீத அடிப்படையில் நிவாரணம் வழங்குவதை தமிழக அரசு கைவிட வேண்டும். ஈரப்பதம் கணக்கிடாமல் நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழப்பூதனூர், திருச்செங்கட்டாங்குடி ஆகிய 2 இடங்களில் விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் திருமருகல் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் இளஞ்செழியன், ஒன்றியக்குழு உறுப்பினர் அபிநயா அருண்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருச்செங்கட்டாங்குடி வள்ளி கலியமூர்த்தி, கீழப்பூதனூர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி விருதுநகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் மணிகண்டபிரபு (வயது26). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது உறவினர் கண்ணதாசன் மற்றும் நண்பர்கள் சரவணன், ரமேஷ் ஆகியோருடன் கடந்த 16-ந் தேதி திருநள்ளாறு வந்தார். அங்கு சனிபகவான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு வந்து மாதாவை தரிசனம் செய்து விட்டு கடற்கரைக்கு சென்றனர்.

    அங்கு மணிகண்டபிரபு, கண்ணதாசன், சரவணன் ஆகிய 3 பேரும் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அலையில் சிக்கி 3 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். உடனே கரையில் நின்ற ரமேஷ் சுதாரித்துக் கொண்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கடலில் இறங்கி சரவணன், கண்ணதாசன் ஆகிய 2 பேரையும் காப்பாற்றினார்.

    மணிகண்டபிரபுவை நீண்ட நேரம் தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்து கடலோர காவல்படை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் கடலில் இறங்கி தேடி பார்த்தனர். இந்த நிலையில் மணிகண்டபிரபு கடலில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. கரை ஒதுங்கிய அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகை அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூர் புதுமனை தெருவை சேர்ந்தவர் இஸ்தியாக் மாலிம்(வயது20). பாலிடெக்னிக் மாணவர். இவர் பிளஸ்- 2 மாணவி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

    இந்தநிலையில் மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இஸ்தியாக் மாலிமிடம் கேட்டார். அப்போது அவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் இஸ்தியாக்மாலிம் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொள்ளிடம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குருவியான்பள்ளம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் முனுசாமி (வயது 55). இவர் கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சீர்காழி அருகே இளைய மதுக்கூடம் கிராமம் அண்ணாநகரை சேர்ந்த தனது மகள் அமலா கிருஷ்ணகுமார் வீட்டிற்கு சென்று பொங்கல் சீர்வரிசை கொடுத்து விட்டு அங்கிருந்து பேரன் ஆக்ரிஸ் (5) என்பவனை குருவியான்பள்ளம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். சிறுவன் ஆக்ரிஸ் நேற்று மாலை வீட்டின் அருகே குளம் இருக்கும் பகுதியில் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக குளத்துக்குள் சிறுவன் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான். உடனே அங்கிருந்தவர்கள் குளத்தில் இறங்கி சிறுவனின் உடலை மீட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதன் வழியாக கழிவுநீர் வெளியேறுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நகரில் ஆங்காங்கே ஆள்நுழைவுத் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைந்து சாலைகள் உள்வாங்குகின்றன. மயிலாடுதுறை நகரில் ஆள்நுழைவுத் தொட்டிகள் மட்டும் 15 இடங்களில் உடைந்து சேதமடைந்து சீரமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தரங்கம்பாடி சாலையில் ஆள்நுழைவுத் தொட்டி உடைந்து உள்வாங்கியதால் அங்கு தற்போது வரை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

    இதன் காரணமாக தரங்கம்பாடி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு குறுகலான தருமபுரம் சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கால் டெக்ஸ் நான்கு ரோடு சந்திப்பில் ஒரு பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் உடைந்து சாலை உள்வாங்கி வட்டவடிவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சாலை உள்வாங்கிய பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து, அந்த இடத்தில் யாரும் அருகில் செல்லாதவாறு தடுப்பு வைத்துள்ளனர். பாதாள சாக்கடை குழாய் உடைந்து இந்த பள்ளம் ஏற்பட்டதால் சீர்காழி சாலை, பூம்புகார் சாலை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் செல்லமுடியாமல் ஆள்நுழைவுத் தொட்டிகளிலிருந்து வெளியேறி வருகிறது.

    எனவே பாதாள சாக்கடை திட்டத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை சரி செய்து, பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொள்ளிடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீர்காழி தாடாளன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சீர்காழியில் இருந்து பழையாறு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ஓலகொட்டாய்மேடு என்ற இடத்தில் சென்றபோது, எதிரே எருக்கூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் மகன் சிவராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ரமேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் ரமேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந் சிவராஜ் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான விவசாயி ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    கீழ்வேளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே தேவூர் குயவர் தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகன் வீரமுத்து (வயது24).இவர் சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவர் தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விஜயலட்சுமி திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். இரவில் வீரமுத்து நாகைக்கு சினிமா பார்த்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்த இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் 102 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கல் பண்டிகைகள் என்றும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

    மாட்டு பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டதால் மதுபியர்கள் முன் எச்சரிக்கையாக பொங்கல் பண்டிகை அன்றே மதுபாட்டில்களை வாங்கி குவித்து வைத்து விட்டனர்.

    இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் விற்பனையும் அதிகரித்தது. போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய 2 நாட்களில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    நாகையில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் ஓடியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சிக்கு உட்பட்ட பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் நேற்று பாதாள சாக்கடையில் கழிவு நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் வழிந்தோடியது.

    இதுகுறித்து நகராட்சிக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக கழிவு நீர் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் மறியலை கைவிட்டு ெபாதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானி தெருவில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சீர்காழி போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், போலீசார் ஸ்டாலின், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சீர்காழி ஈசானி தெருவை சேர்ந்த காளிதாஸ் மனைவி அமுதா (வயது37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 419 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்தனர். .பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
    திருக்குவளையில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சரகம் வாழக்கரை மேல கட்டளை பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். சிங்காரவேல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

    இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயில் கருகி படுகாயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் நாகை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    ×