என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அ.ம.மு.க. பிரமுகரை கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கங்களாஞ்சேரி ரெயில்வே கேட் பகுதியில் மதுவிலக்கு சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் பகுதியைச் சேர்ந்த சர்புதீன் (வயது48) என்பதும், காரைக்கால் மாவட்டம் அ.ம.மு.க.வைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என்பதும் தெரியவந்தது.

    மேலும் அவர் திருவாரூர் மாவட்டத்திற்கு காரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.ம.மு.க. பிரமுகர் சர்புதீனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சாராய பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
    நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
    நாகையை அடுத்த நாகூரில் பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம நடைபெற்றது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திடலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டது

    முக்கிய வழியாக வந்து நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடைந்தது. பின்னர் பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தன குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்பட்டது. இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சியும், 27-ந்தேதி(புதன்கிழமை) கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    சந்தனம் பூசும் நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்பு பணியில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம் தலைமையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார்மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா முன்னிலையில் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1,500 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
    நாகை அருகே ரெயிலில் அடிபட்டு விவசாயி பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    நாகை அருகே சிக்கல் ஆவராணி ரெயில்வே கேட் அருகே உள்ள ஒத்தகை காட்டி அருகே நேற்று காலை 58 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக சிக்கல் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சென்று பார்வையிட்டு, நாகை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர் நாகை சட்டையப்பர் மேலவீதியை சேர்ந்த விவசாயியான ரமே‌‌ஷ்பாபு (வயது59) என்பது தெரியவந்தது. மேலும் இவர், மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயத்தில் ஏற்பட்ட ந‌‌ஷ்டத்தால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ரமே‌‌ஷ்பாபு சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து ஆவராணி ரெயில்வே கேட் பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த நேரத்தில் வந்த எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி நாகை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ரமே‌‌ஷ்பாபுவுக்கு அமுதா என்ற மனைவியும், அரவிந்த், ஹரி‌‌ஷ்கிரு‌‌ஷ்ணா என்ற 2 மகன்களும் உள்ளனர்.
    தொடர் மழையால் வேதாரண்யம் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம், பெரியகுத்தகை, செட்டிபுலம், செம்போடை, தேத்தாகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    இப்பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில் கடந்த மாதம் விதை கடலை போடப்பட்டு அவைகள் முளைத்து, பூ பூத்து விழுது இறங்கும் நிலையில் இருந்தது.

    கடந்த 10 நாட்களுக்கு பருவம் தவறிபெய்த கனமழையால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டது. விழுது இறங்கும் நேரத்தில் வயல்களில் மழை நீர் தேங்கியதால் செடியில் விழுது இறங்காமல் செடிகள் அழுகிவிட்டன. இதனால் கொத்துக்கொத்தாக கடலை வளரும் செடிகளில் தற்போது ஒரு சில கடலைகள் மட்டும் வளர்ந்துள்ளது.

    இதனால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆன்லைன் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம் மேல கோபுர வாசல் அருகே ஒருவர் தனது செல்போன் மூலம் ரகசியமாக மறைவிடத்தில் இருந்து பேசிக்கொண்டு இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செம்போடை மகாராஜபுரத்தை சேர்ந்த தியாகராஜன்(வயது42) என்றும் அவர் தனது ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து செல்போன் மற்றும் ரூ.420-ஐ பறிமுதல் செய்தனர்.
    குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை தாமரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் அருண்குமார்(வயது 25).தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, நிரம்பி இருந்த தாமரைக்குளத்தில் அருண்குமார் அவரது நண்பர்களோடு நேற்று தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி குளத்தில் விழுந்து மூழ்கினார். தகவல் அறிந்த நாகை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குளத்தில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அருண்குமார் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேதாரண்யம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே 2 பேர் மது விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேல ஆறுமுகக்கட்டளை சேர்ந்த சாமிதுரை(வயது36), பெரியகுத்தகை பகுதியை சேர்ந்த வேதராசு(53) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்களி்டம் இருந்து மொத்தம் 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இந்த சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும்.
    நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 464-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் இரவு வாணவேடிக்கை நடைபெற்றது.

    நேற்று இரவு 10 மணிக்கு தர்காவில் பீர் அமர வைத்தல்(பீர் ஜமாத்தார்) நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. அப்போது சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து செல்லும். சந்தனக்கூடு ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, சர்அகமதுதெரு உள்ளிட்ட தெருக்களில் பவனியாக செல்லும்.

    பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடையும். தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி பின்னர் வாணக்காரத்தெரு, தெற்கு தெரு, அலங்காரவாசல் வழியாக வந்து அங்குள்ள பாரம்பரிய முறைக்காரர் வீட்டில் சந்தனக்குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்படும். பின்னர் செய்யது பள்ளி தெரு வழியாக சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும். இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 4.30 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்படும். இதைத்தொடர்ந்து, ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். விழாவையொட்டி நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் சுமார் 50 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி ஆமையும் உடன் சிறிய வகை டால்பினும் இறந்து கரை ஒதுங்கி கிடந்தது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் இருந்து புஷ்பவனம் கடற்கரை பகுதி வரை பருவமழை காலங்களில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் வாழ்ந்து வரும் அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக 2 ஆயிரம் கி.மீ நீரோட்டத்திற்கு தகுந்தவாறு கடந்து இப்பகுதிக்கு வந்து, மேடான மணல் பரப்பில் குழி தோண்டி 25 முட்டைகள் வரை இட்டு செல்லும்.

    வனத்துறையினர் அந்த முட்டைகளை சமூக விரோதிகள், எடுத்து செல்லாமல் தடுக்க கோடியக்கரை ஆறுகாட்டுத்துறை ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் சேகரித்துக் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்து விடுவர்.

    அந்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் சுமார் 15 நாட்களுக்கு குறையாமல் அந்த பொறிப்பகத்தில் வைத்து வளர்த்து கடலில் விட்டுவிடுவர். இந்த நிலையில் வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் சுமார் 50 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி ஆமையும் உடன் சிறிய வகை டால்பினும் இறந்து கரை ஒதுங்கி கிடந்தது. வழக்கமாக கடல்வாழ் உயிரினங்கள் இயற்கை சீற்றம், கப்பல் மற்றும் படகுகளின் விசிறியில் அடிபட்டு கரை ஒதுங்குவது வழக்கம். நாகை மாவட்ட வனத்துறையினர் கால்நடை மருத்துவருடன் சென்று ஆலிவர் ரெட்லி ஆமை, டால்பினை உடற் பரிசோதனை செய்து புதைத்தனர்.
    நாகூர் பெருமாள் தெற்கு வீதியில் சாலையில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
    நாகூர்:

    நாகையை அடுத்த நாகூரில் பெருமாள் தெற்கு வீதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெரு வழியாக எம்.ஜி.ஆர். நகர், தும்பபூ மடத்தெரு, பெருமாள் வடக்கு வீதி, மாப்பிள்ளை தெரு, புதிய பஸ் நிலையம் ஆகிய தெருக்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    இந்த நிலையில் பெருமாள் தெற்கு வீதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீரும், மழைநீரும் கலந்து தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர்.

    கழிவுநீரில் கொசுகள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதியில் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெருமாள் தெற்கு வீதியில் சாலையில் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்ற வேண்டும். மேலும் மீண்டும் சாலையில் கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதி்ர்பார்த்துள்ளனர்.
    வாய்மேடு அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாய்மேடு:

    வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சுப்பிரமணியன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனித்துரை (வயது60). விவசாயி. இவர் தனது சைக்கிளில் தாணிக்கோட்டகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தாணிக்கோட்டகம் நைனாகுளம் அருகில் வந்த போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனித்துரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தாணிக்கோட்டகம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பழனித்துரைக்கு விஜயகுமாரி (55) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
    நாகூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்: 

     நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தல்படியும் நாகை மாவட்டத்தில் தமிழக அரசால்  தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில், பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

    இந்த நிலையில் நாகூரில் அலங்கார வாசல் பின்புறம் மற்றும் கடற்கரை சாலை ஆகிய இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அலங்கார வாசல் பின்புறம் உள்ள யானை  கட்டி சந்தில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

     விசாரணையில் அவர்கள் தெத்தி சமரச நகரை சேர்ந்த முஜீபு ரகுமான் (வயது 50), நாகூர் வெற்றிலைகாரன் தெருவை சேர்ந்த ஹாஜாமெய்தீன் மகன் ஷாகுல் அமீது (38)  என்பதும், இவர்கள்லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

     இதேபோல் கடற்கரைக்கு செல்லும் வழியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நாகூர் மெயின் ரோட்டை சேர்ந்த மன்சூர் (45) என்பவரை போலீசார் கைது  செய்தனர்.
    ×