என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே சூதாடிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வேதாரண்யம் நகராட்சி பகுதியை சேர்ந்த மறைஞானநல்லூர் பூப்பெட்டி பகுதியில் ரோந்து சென்றபோது பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது 42), தீபக் (34), சுரேஷ் (35) ஆகிய 3 பேரை பிடித்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த தேவா (25), சிவசுந்தர் (38), வினோத் (26) ஆகிய மூவரையும் பிடித்து பணத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    வேதாரண்யம் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் வீராசாமி மற்றும் போலீசார் தேத்தாகுடி வடக்கு கிராமத்தில் தம்பிகவுண்டர்காடு என்ற பகுதியில் ரோந்து சென்றபோது ராஜ சூரியன் (வயது 53) என்பவர்கள் விற்றுள்ளார். அவரை பிடித்து 3 லிட்டர் பனங்கள் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    வேளாங்கண்ணி:

    கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அருண்பதி முன்னிலை வகித்தார். நாகைமாலி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் டாக்டர் அரவிந்த்குமார், சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி மற்றும் தொழில்நுட்ப செவிலியர் ஷீலாவதி, ஊராட்சிமன்ற துனணத்தலைவர் சிவஞானம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் ஆழியூர்-பெருங்கடம்பனூர் சாலையில் வாகன சோதனையில் ஈடு்பட்டனர். அப்போது பெருங்கடம்பனூர் பஸ் நிறுத்தம் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாகூர் தைக்கால் தெருவை சேர்ந்த செய்யது முஸ்தபா மகன் அப்துல் ரகுமான் (வயது 20) என்பதும், அவர் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் ரகுமானை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம் நகராட்சியில் பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் பிரதான் பாபு (வயது 43).

    இவர் முக்கிய பிரமுகர் வருவதை ஒட்டி இரண்டு தெருக்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்க நகராட்சி பணியாளர் ஒருவரை நியமித்து உள்ளார். அந்த நபரை நகராட்சியில் லாரி டிரைவராக பணிபுரியும் சுப்பையா (44) என்பவர் வேறு பணிக்கு அழைத்துச் சென்று விட்டாராம்.

    இதுகுறித்து பொறியாளர் பிரதான் பாபு, சுப்பையாவிடம் கேட்டபோது, ஆத்திரமடைந்த சுப்பையா பிரதான் பாபுவை தாக்கியுள்ளார்.

    மேலும் சுப்பையா தன் சகோதரர் வீரபாண்டியனுக்கு (46) அவருக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்து அவரும் நகராட்சி அலுவலக பகுதிக்குள் வந்து பிரதான் பாபு தரக்குறைவாக பேசினாராம்.

    பொறியாளர் பிரதான் பாபு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் டி.எஸ்.பி. மகாதேவன் அறிவுரையின் படி இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பையா, வீரபாண்டி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    கடந்த 14-ந் தேதி கொச்சின் துறைமுகம் அருகே அமனி தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வீசிய டவ்தே புயலில் சிக்கி 23 மீனவர்களும் மாயமானார்கள்.
    நாகப்பட்டினம்:

    நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது50). இவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் அவரும், நாகையை சேர்ந்த 22 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதியில் இருந்து கேரளாவில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் இவர்கள், கடந்த 14-ந் தேதி கொச்சின் துறைமுகம் அருகே அமனி தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வீசிய டவ்தே புயலில் சிக்கி 23 மீனவர்களும் மாயமானார்கள். பின்னர் இவர்கள் படகுகளுடன் லட்சத்தீவு பகுதியில் கரை ஒதுங்கினர்.

    இதைத்தொடர்ந்து நாகை மீனவர்களை கேரள மீன்வளத்துறையினர் மீட்டு கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து மீனவர்களை 2 படகுகளில் நாகைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 25-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கு மீனவர்கள் வந்தனர். அப்போது பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்படவில்லை. இதனால் பாம்பன் தூக்குப்பாலத்தை திறக்கக்கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்பட்டதால் அங்கிருந்து புறப்பட்ட மீனவர்கள் நேற்று நாகை துறைமுகத்துக்கு வந்தடைந்தனர்.

    அப்போது மீனவர்களை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
    கொரோனாவை தடுக்க சாலையின் குறுக்கே வேப்பிலைகளை கட்டி தொங்க விட்டுள்ளதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் கோவில் குளம் இப்பகுதியில் கொரோனா கட்டுப்படுத்த சாலையில் தடுப்பு ஏற்படுத்தி வேப்பிலைக் கட்டி தொங்க விட்டுள்ளனர்.

    இதேபோல் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த சில தெருக்கள் தகரசீட் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது, நகரில் ஒரு சில கடைகாரர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா தொற்றில் இளம் வயதினர் மரணம் ஏற்படுவதால் பொதுமக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக வீடுகளிலேயே தங்கி உள்ளனர். வேதாரண்யத்தில் பெரும்பாலான கிராமங்களில் கொரோனாவின் பரவல் மிக அதிகமாக காணப்படுவதால் ஆங்காங்கே தெருக்கள் அடக்கப்பட்டும், ஊருக்குள் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது .

    இந்நிலையில் ஆயக்காரன்புலம் 4-ம் சேத்தி, கோயில்குளம் தெற்கு காட்டில் சாலையை அடைந்து குறுக்கே மரங்களை போட்டு அடைத்து வேப்பிலைகளை தொங்கவிட்டு உள்ளனர்.

    வெளிநபர்கள் யாரையும் இப்பகுதியில் அனுமதிப்பது இல்லை. கொரோனாவை தடுக்க சாலையின் குறுக்கே வேப்பிலைகளை கட்டி தொங்க விட்டுள்ளதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    செம்பனார்கோவில் அருகே வீட்டில் விற்பனைக்காக 1¼ கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    தரங்கம்பாடி:

    செம்பனார்கோவில் சரகம் பரசலூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மயில்வாகணன் (36). இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் மயில்வாகணனை கைது செய்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் மாவட்ட செயலாளராக மயில் வாகணன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பொது முடக்கத்தால் வேலைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்படுதால் ஏழை, எளிய மக்கள் பால் வாங்கி பருகுவதும் தடைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    சீர்காழி:

    தமிழக அரசு பொதுமக்களுக்கு தரமான பால் உரிய கட்டணம் நிர்ணயம் செய்து ஆவின் மூலம் விற்பனை செய்கிறது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் நிவாரணநிதி ரூ.2 ஆயிரம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவ்வாறு ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்பட்டு தற்போது தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

    சீர்காழி, புத்தூர், தைக்கால், வைத்தீஸ் வரன்கோவில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பாலகம் உள்ளது. இதில் கொள்ளிடத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் அரை லிட்டர் ஆவின் பால் (புல்கிரீம்) பழைய விலை ரூ.25.50 என்ற அச்சடிக்கப்பட்டதினை கருப்பு ஸ்டிக்கர் மூலம் திருத்தி,புதிய குறைக்கப்பட்ட விலைபட்டியல்படி ரூ.24 என 28.5.21 என்று தேதியுடன் அச்சடிக்கபட்டுள்ளது. ஆனால் விற்பனையாளர் ரூ.24-க்கு விற்காமல் ரூ.27-க்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் 200 மிலி ஆவின் பால் எம்ஆர்பி ரூ.11 என இருந்தும் ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து அதிக விலைக்கு ஏன் பால் விற்பனை செய்கீறிர்கள் என வாடிக்கையாளர்கள் கேட்கும்போது பால் பாக்கெட்டுகளை கெடாமல் வைத்திட குளிர்விப்பான் பீரி‌ஷர் பயன்படுத்துவதால் மின்சார செலவிற்காக கூடுதல் விலை என ஆவின் விற்பனையாளர் கூறிவருகிறார்.

    தற்போது பொது முடக்கத்தால் வேலைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் இவ்வாறு கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்படுதால் ஏழை, எளிய மக்கள் பால் வாங்கி பருகுவதும் தடைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    தமிழக அரசு மக்களின் நிலை அறிந்து லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்தும் இவ்வாறு விற்பனையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பல காரணங்களை கூறி கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்வதால் அதன் அரசின் திட்டத்தின் பயன் மக்களிடம் சென்றடைவதில்லை.

    இதனை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மாவட்டந்தோறும் ஆவின் பால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதாக 100 மோட்டார் சைக்கிள்களும், 4 கார்களும் என 104 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 104 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு்ள்ளது. இதில் பால், மருந்தகம், பெட்ரோல் விற்பனை நிலையம் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் நாகை புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி கிடைக்கிறது. மேலும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதாக 100 மோட்டார் சைக்கிள்களும், 4 கார்களும் என 104 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வேதாரண்யம் அருகே வயலில் உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் பகுதியில் உள்ள வடமலை மணக்காடு கிராமம் நோச்சி கோட்டத்தில் உள்ள தன்னுடைய வயலை கோடை உழவு செய்ய வடமலை மனக்காட்டில் உள்ள ஒரு தனியாரிடமிருந்து டிராக்டரை வாடகைக்கு எடுத்துச் சென்று நேற்று மதியம் உழவு செய்து கொண்டிருந்தார்.

    அப்போது டிராக்டர் கவிழ்ந்து விழுந்ததில் டிராக்டர் ஓட்டிச் சென்ற தகட்டூர் கிராமம் சாக்காடு பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் மகன் கலியமூர்த்தி (வயது 28) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரியாப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து பின்பு மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லெனின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் வடமலை மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45) கொத்தனார். மனைவி இறந்து விட்ட வேதனையில் இருந்து வந்த ராஜ்குமார் வி‌ஷம் குடித்தார். திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் கிழக்கில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    வாய்மேடு:

    வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் கிழக்கில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு ஊராட்சிமன்ற தலைவர் வீரத்தங்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவகுரு பாண்டியன், தேவிசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முகாமில் டாக்டர்கள் சுந்தர்ராஜன், வெங்கடேஷ், பரத் ஆகியோர் கலந்து கொண்டு மருதூர், பஞ்சநதிக்குளம், தகட்டூர், தென்னடார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.

    இதேபோல மருதூர் ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.இதில்மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உமா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) க.அன்பரசன், வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

    அதேபோல் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் இரா.கண்ணன் தலைமை தாங்கினார்.முகாமில் 150-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகராட்சியின் சார்பில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர் ராஜசேகர், சுகாதார பணியாளர்கள் கொண்ட குழுவினர் 200 பேருக்கு தடுப்பூசி போட்டனர்..இதேபோல் வேதாரண்யம் தாலுகாவில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.நேற்று ஒரே நாளில் வேதாரண்யம் பகுதியில் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    ×