என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் காவல் சரகத்திற்கு உட்பட்ட துள்ளு வெட்டி அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த சாவித்திரி (வயது 50) என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை தகனம் செய்ய அவருக்கு உரிமை உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உப்பனாறு மேல்கரை வழியாக செல்வதற்கு உள்ள பாதை சுனாமி காலத்தில் இருந்து உடைப்பு ஏற்பட்டு சாலை வசதி இல்லாமல் போய்விட்டது.
இதை சரி செய்ய பலமுறை நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் இன்று வரை நடைபெறவில்லை. இதனால் அந்த உடலை ரோட்டிலேயே வைத்து தகனம் செய்து விடுவோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள், இதுகுறித்து தோப்புத்துறை கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் (54) என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று மாற்று வழியில் உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய சென்றுள்ளார்.
அப்போது குடிபோதையில் இருந்த துள்ளு வெட்டி அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (26) என்பவர் கிராம நிர்வாக அதிகாரியை தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததோடு, உயர் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர், தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இறந்தவர் உடலை மாற்று பாதையில் எடுத்துச் சென்று தகனம் செய்வதற்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.
நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? என போலீசாரும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை நகர் பகுதியில் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரிய கடைத்தெரு பகுதியில் சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் அந்தணப்பேட்டையை சேர்ந்த முகமது பயாஸ் (வயது 26) என்பதும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு வினியோகம்செய்ய மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பயாசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 10 கிலோ புகையிலை பொருட்களையும் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.






