search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rising petrol prices"

    புதுச்சேரி உட்பட இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கணிசமாக குறைத்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டும் குறைத்தது.டீசல் மீதான வரியை குறைக்கவே இல்லை.

    தற்போது மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் குறைத்துள்ள நிலையில், இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி உட்பட இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கணிசமாக குறைத்துள்ள நிலையில், அதனைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

    அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் கட்டுமானப்பொருட்கள், வாகன வாடகை ஆகியவை பிற மாநிலங்களுக்கு சமமாக குறைய வாய்ப்பிருக்கும் என்றும், இல்லையெனில், கூடுதல் சுமையை சுமக்கக் கூடிய நிலைக்கு தமிழ்நாடு மக்கள் தள்ளப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் புதுச்சேரியை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில் எரி பொருளை நிரப்புவதற்கு பதிலாக புதுச்சேரியில் நிரப்பக்கூடிய சூழ்நிலை உருவாகி அதன்மூலம் தமிழ்நாட்டிற்கு வரும் வருவாயும் குறையும் நிலை ஏற்படும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு

    பிற மாநிலங்களுக்கு இணையாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புப் கூட்டு வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாடு மக்களிடையே மேலோங்கி இருந்தாலும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியான பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்பதற்கேற்ப, ஏற்கனவே பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், குறைந்தபட்சம் பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்க தி.மு.க. அரசு கண்டிப்பாக முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இவ்வாறு குறைக்கப்படும் பட்சத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.40 காசாகவும், டீசல் விலை ரூ.87.43 காசாகவும் விற்பனையாகும். இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக குறையும்.

    எனவே நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டும், அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டும், முதல்-அமைச்சர் இதில் உடினடியாக தலையிட்டு, பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டதை போல் குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையிலாவது பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியினை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

    ×