என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே தேவூர், காக்கழனி, ராதாமங்கலம் பகுதிகளில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவூர்- இரட்டைமதகடி சாலை கடுவையாறு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், தேவூர் பிடாரி கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் பிரபு (வயது 33) என்பதும். இவர் சாராயம் விற்றதும் தெரிய வந்ததது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதே போல காக்கழனி தோப்பு தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் தங்கபாண்டியன் ( 27), ராதாமங்கலம் எறும்புகன்னி மெயின்ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் கண்ணதாசன் (52), கீழகாவலக்குடி காளவாய்கரை பகுதியில் சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம், தென்கரை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி அமிர்தம் (54) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம் பகுதியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தென்னம்புலம் பிராந்தியங்கரை மூலக்கரை வடமழைமணக்காடு கத்திரிப்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசில் புகார் அளித்தனர். ஆடு திருடர்களை பிடிக்க வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று செட்டிபுலம் பகுதியில் ஆடு திருடி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. தொடர்ந்து தனிப்படை போலீசார் வேதாரண்யம் செங்காதலை பாலம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால் பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ்(வயது19), திருத்துறைபூண்டி பெரிய சிங்களாந்தியை சேர்ந்த ஆனந்த் (19) ஆகிய 2 பேர் என்பதும், இவர்கள் கரியாப்பட்டினம் பகுதியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை  தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 29). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோடியக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சியடைந்த துரைமுருகன் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் சாலையில் வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூரில், கச்சனம் சாலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை குறைக்கக்கோரியும் சாலையில் வாகனம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாஸ், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதேபோல பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருமருகல் பஸ்நிலையம் எதிரே சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட குழு உறுப்பினர் லெனின் தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு முன்னிலை வகித்தார்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மார்க்ஸ், பிரபாகரன், கஸ்தூரி, வாலிபர் சங்க கிளை செயலாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
    நாகையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரீகன் (வயது36) என்பதும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீகனை கைது செய்தனர்.

    இதேபோல, ரெயிலடி தெருவில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பரமன் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தொழிலாளியை தாக்கியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் பம்பு பிட்டராக வேலை பார்ப்பவர் உலகநாதன் (40). இவர் அந்த ஊராட்சியில் அண்டர்காடு கிழக்கு கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இவரது நண்பர் பாலசுப்பிரமணியன் என்பவர் ஆதனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவரும் பம்பு பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (32) என்பவர் கடந்த மாதம் உலகநாதனிடம் தகராறு செய்துவிட்டு வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் 4.12.21 இரவு ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

    மீண்டும் 5ம் தேதி உலகநாதனை தரக்குறைவாக பேசி கத்தியை காட்டி மிரட்டி வீட்டின் மீது கல்வீசி தாக்கியுள்ளார்.

    இதில் உலகநாதன் வீட்டின் ஜன்னல் கதவுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து உலகநாதன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர்.
    நாகையில் குளத்தில் கால்நடை மருத்துவ பெண் உதவியாளர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெளிப்பாளையம்:

    நாகை வெளிப்பாளையம் சுப்பையா முதலியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி உமாமகேஸ்வரி(வயது 47). இவர், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் உமாமகேஸ்வரி, வெளிப்பாளையம் சிவன் கோவில் குளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கும், வெளிப்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உமாமகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாமகேஸ்வரி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகையில், கால்நடை மருத்துவ பெண் உதவியாளர், குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பொறையாறு அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    பொறையாறு அருகே திருக்கடையூர் திருமெய்ஞானம் வடக்கு தெருவைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவருடைய நாய் அதே தெருவைச் சேர்ந்த காமராஜ் என்பவரை கடித்து விட்டதாக கூறி இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் மணிகண்டன் (வயது 21), காமராஜ், சதீஷ், தினேஷ், சசிகுமார் ஆகியோர் சேர்ந்து நம்பிராஜன், அவருடைய மனைவி கவிதா, சகோதரர் கணேசன் உள்ளிட்டவர்களை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த நம்பிராஜன் குடும்பத்தார் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து பொறையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் வழக்குப்பதிவு செய்து. மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தார்.

    நாகையை அடுத்த பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நாகையை அடுத்த பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்கள் கொண்டுவந்த மூட்டையை சோதனையிட்டனர். மூட்டையில் 21 கிலோ கஞ்சா இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மூவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி சேர்ந்த ரெங்கநாதன், கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் தோப்புத்துறை சேர்ந்த ஹலித் என்பது தெரியவந்தது.

    இவர்கள் வேதாரண்யத்தில் இருந்து நாகையில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    நாகையில் புதிய கடற்கரை பொலிவிழந்து காணப்படுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
    வெளிப்பாளையம்:

    வங்க கடலோரம் அமைந்துள்ள எழில்மிகு நகரமாக நாகை திகழ்கிறது. நாகை நகரத்தையொட்டி சிக்கல், நாகூர், வேளாங்கண்ணி போன்ற ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக நாகை நகர பகுதிக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    நாகை காடம்பாடி பகுதியில் புதிய கடற்கரை அமைந்து உள்ளது. பொழுதுபோக்கு தலமாக விளங்கும் புதிய கடற்கரைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினசரி வருகிறார்கள். நடைபயிற்சி ேமற்கொள்வதற்கும் பலர் வருகின்றனர்.

    இந்த நிலையில் புதிய கடற்கரை கடந்த சில மாதங்களாக பொலிவிழந்து காணப்படுகிறது. கன மழையால் கடற்கரையில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து காணப்படுகின்றன. ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனயே இங்கு வர வேண்டி உள்ளது.

    பொதுவாக மாலை நேரங்களில் நாகை புதிய கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது கடற்கரை உரிய பராமரிப்பின்றி இருப்பதால் மக்கள் வருவது குறைந்து விட்டது. மின் விளக்குகள் ஒளிராததால், சமூக விரோதிகளின் கூடாரமாக நாகை புதிய கடற்கரை மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    குழந்தைகளை இங்கு அழைத்து வருவதற்கு அச்சமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே பொலிவிழந்து காணப்படும் புதிய கடற்கரையில் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மக்கள் அச்சமின்றி வந்து செல்லும் வகையில் கடற்கரையை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் முழுவதும் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து தெரிவிக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கன மழையால் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட கருங்கண்ணி, மேலப்பிடாகை, வாழக்கரை, மடப்புரம், பாலக்குறிச்சி, இறையான்குடி சோழவித்தியாபுரம் ஆகிய கிராமங்களில் தற்போது பெய்த கனமழையால் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர் பாதிப்புகளை 2-வது முறையாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை இணைந்து கணக்கெடுத்து வருகிறது.

    முதலில் பெய்த கனமழையில் 14 ஆயிரம் 500 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்ததாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தற்போது பெய்த மழையில் 51 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. ஆனால் வயல்களில் தேங்கி உள்ள மழைநீர் முழுவதுமாக வடிந்த பிறகு தான் சரியான பயிர் சேதம் குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இதை தொடர்ந்து நாகூர் வள்ளியம்மை நகர், அமிர்தா நகர், அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் நடந்த மருத்துவ முகாம்களையும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், தாசில்தார் ஜெயபால், நாகூர் நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    நாகையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எய்ட்ஸ் நோயாளிகளை குற்றவாளிகள் போல் பார்க்க கூடாது என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் (காசநோய்) ராஜா வரவேற்றார். இதில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    எய்ட்ஸ் எனப்படும் பால்வினை நோய் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பாதுகாப்பற்ற உடலுறவால் பரவுகிறது. இதை தவிர பரிசோதனை செய்யப்படாத ரத்தம் செலுத்துவதன் வாயிலாகவும் பரவுகிறது.

    எனவே எய்ட்ஸ் நோய் என்றால் என்ன என்று கூட தெரியாதவர்களுக்கு சில காரணங்களால் பரவுகிறது. எனவே எய்ட்ஸ் நோயாளிகளை குற்றவாளிகள் போல் பார்க்க கூடாது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

    இந்த நோய் குறித்து அனைத்து மருத்துவமனைகளிலும் ஆலோசனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு சாதாரணமான முறையில் பரவாது. கருவுற்ற காலத்தில் இருந்து தாய்மார்கள் குழந்தை பெற்ற பின் ஒன்றரை ஆண்டுகள் தாய்சேய் நல பதிவேட்டில் அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

    ஏ.ஆர்.டி. எனப்படும் கூட்டு மருந்து சிகிச்சை மூலம் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. கிருமி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் திட்ட இயக்குனர் சக்திவேல் நன்றி கூறினார்.

    ×