என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
தமிழகத்தின் கடலோர கிராமங்களை சூறையாடி பல ஆயிரம் உயிர்களை பறித்து சென்ற சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையில் நாகை மாவட்டத்தில் 6,060 பேர் உயிரிழந்தனர்.
சுனாமி சூறையாடி விட்டுச் சென்று 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது என்றாலும் தமிழகத்தின் ஒவ்வொரு கடலோர கிராமத்திலும் சுனாமி ஏற்படுத்திச் சென்ற சுவடுகள் இன்னமும் மாறவில்லை.
நாகை, வேளாங்கண்ணி. மாவட்டத்தில் கடற்கரை மணற்பரப்பு முழுவதும் கொத்து கொத்தாக உயிரிழந்தவர்களை அடுக்கி வைத்திருந்ததை இப்போது நினைத்தாலும் உயிர் பதைபதைக்கிறது.
உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி சுனாமி நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாகை மாவட்டம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, நாகை ஆரிய நாட்டு தெரு, செருதூர், நாகூர், நம்பியார்நகரில் சுனாமியின் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு அவர்களது உறவினர்கள் படையலிட்டு பால் ஊற்றி, மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதைப்போல் கீச்சாங்குப்பம் கிராமத்தில் நினைவு ஸ்தூபி முன்பு சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு, உறவினர்கள் திதி கொடுத்து அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அக்கரைப்பேட்டை மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் மவுன ஊர்வலம் சென்று சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால் நாகை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோரின் உறவினர்கள், மீனவர்கள் இன்று கடற்கரையில் குவிந்து கடலுக்குள் பாலை ஊற்றி பூக்களை தூவி வழிபாடு நடத்தினர். மறைந்த உறவினர்களுக்கு பிடித்த உணவுப்பண்டங்களை வைத்தும் படையலிட்டனர். மீன்பிடி இறங்குதளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் மீனவர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு 11 மணிக்கு திருப்பலியுடன் தொடங்கியது. வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மறையுரை, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
பேராலய அதிபர் இருதயராஜ் கிருஸ்துமஸ் திருப்பலிகளை நிறைவேற்றினார். பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவிப் பங்குத் தந்தைகள் பூஜைகளை நடத்தினர். திருப்பலிகளின் நிறைவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார்.
அப்போது அனைவரும் மண்டியிட்டு இயேசு துதி வாசகங்களை ஜெபித்தனர். பேராலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் கிருஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டி கையையொட்டி பேராலய கோபுரங்கள் மட்டுமின்றி வேளாங்கண்ணி நகரமே மின்னொளி பந்தலில் ஜொலித்தது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டு தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை காரணமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் 10 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்ததால் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வந்தனர்.
மழை நின்றவுடன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் கோடியக்கரையில் இருந்து ேநற்று முன்தினம் நூற்றுக்கணக்கான பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள், மீன்களை பிடித்து கொண்டு நேற்று காலையில் கரைக்கு திரும்பினர்.
மீனவர்கள் வலையில் திருக்கை, மட்லீஸ், வாவல், காலா, நண்டு உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கின. இந்த மீன்களை வாங்க கடற்கரையில் வியாபாரிகள் குவிந்தனர். மீன்களை வாங்கிய வியாபாரிகள், அதை கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் திருக்கை, மட்லீஸ் மீன்களும், மற்ற மீன்கள் 1 டன்னும் சிக்குவதால் மீனவர்கள் தெரிவித்தனர். நேற்று காலா மீன் ஒரு கிலோ ரூ. 550-ம், வாவல் மீன் ரூ.900-க்கும் மட்லீஸ் மீன் ரூ.100-க்கும், திருக்கை ரூ.150-க்கும் நீலக்கால் நண்டுரூ.850-க்கும், புள்ளி நண்டுரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதிக அளவில் சிக்கிய மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது. உப்பு உற்பத்தி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
வடகிழக்குப்பருவ மழை காலத்தில் வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் உப்பு உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மழை ஓய்ந்து வெயில் அடித்து வருவதால் உப்பள பாத்திகளில் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது.
இதனால் ஜனவரி மாதத்தில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தற்போது முன்கூட்டியே டிசம்பர் மாதத்தில் தொடங்கி உள்ளது. இந்த பணிகளில் உப்பு உற்பத்தியாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட உப்பு பாத்திகளை சரி செய்தல், வரப்பு அமைத்தல், வாய்க்கால் சீர் செய்தல், தண்ணீர் இறைப்பதற்கு மின்மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து முழுவீச்சில் உப்பு உற்பத்தி ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
நாகை அருகே தெற்கு பொய்கைநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் மணிமாறன் (வயது21). அதே தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஹரிஹரன்(21).
மணிமாறன், ஹரிஹரன் ஆகிய இருவரும் தனது நண்பர் மனோஜ்குமாருடன் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் தெற்கு பொய்கைநல்லூர் பைலட் கடை அருகே சென்றபோது வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் இறந்து விட்டார்.
படுகாயமடைந்த ஹரிஹரன் மற்றும் அவரது நண்பரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஹரிஹரனும் இறந்தார். மனோஜ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளானோர் கலந்து கொள்வார்கள். இதை முன்னிட்டு வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக குடில் அமைக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் அருகே உள்ள விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை சால்ட் ரோடு பகுதியை சேர்ந்த செல்வமணி மகன் செல்வராகவன்(வயது 15). நாகையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். செல்வராகவன் மற்றும் அவனுடைய நண்பர்கள் சிலர் நேற்று முன்தினம் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள அக்கரை குளத்திற்கு குளிப்பதற்காக சென்றனர்.
அப்போது நண்பர்களுடன் செல்வராகவன் குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி சென்றான். பாதி தூரம் சென்றபோது தொடர்ந்து செல்வராகவனால் நீந்த முடியாததால் குளத்தில் மூழ்கினான்.
இதையடுத்து நண்பர்கள் மற்றும் அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் செல்வராகவனை தேடினர். ஆனால் அவனை காணவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு படை வீரர்கள் குளத்தில் மூழ்கிய செல்வராகவனை தீவிரமாக தேடினர்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு செல்வராகவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டான். அவனுடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.






