search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உப்பளங்களில் உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    உப்பளங்களில் உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    வேதாரண்யத்தில் உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தொடக்கம்

    வேதாரண்யத்தில் ஜனவரி மாதத்தில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தற்போது முன்கூட்டியே டிசம்பர் மாதத்தில் தொடங்கி உள்ளது.
    வேதாரண்யம்:

    தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது. உப்பு உற்பத்தி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    வடகிழக்குப்பருவ மழை காலத்தில் வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் உப்பு உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மழை ஓய்ந்து வெயில் அடித்து வருவதால் உப்பள பாத்திகளில் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது.

    இதனால் ஜனவரி மாதத்தில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தற்போது முன்கூட்டியே டிசம்பர் மாதத்தில் தொடங்கி உள்ளது. இந்த பணிகளில் உப்பு உற்பத்தியாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    மழையால் பாதிக்கப்பட்ட உப்பு பாத்திகளை சரி செய்தல், வரப்பு அமைத்தல், வாய்க்கால் சீர் செய்தல், தண்ணீர் இறைப்பதற்கு மின்மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து முழுவீச்சில் உப்பு உற்பத்தி ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×