என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நான்கு தவணைகளாக ரூ. 34,000 பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார்.
    • மோசடியில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார்.

    நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் மெயின் ரோடு பட்டமங்கலம் மனோகர் மகள் கீர்த்தனா (வயது 22).

    இவர் தனது செல்போன் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் உறவினர்கள் போல் பேசி அவசரமாக பணம் உதவி தேவைப்படுகிறது எனக்கூறி கூகுள் பே மூலம் நான்கு தவணைகளாக ரூ.34,000 பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் விசாரணை செய்ய உத்தரவிட்டார். சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்–குமரன், தலைமை காவலர் முருகதாஸ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியின் வங்கி கணக்கினை முடக்கி ரூ.34,000 பணத்தினை மீட்டனர்.

    மீட்ட பணத்தை கீர்த்தனாவிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஒப்படைத்தார்.

    மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    • தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதியின் படி இயங்கிட தமிழக அரசு உத்தரவு.
    • கேமராக்கள் வரும் 15-ந் தேதிக்குள் பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதியின் படி இயங்கிட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதை தொடர்ந்து அனைத்து பள்ளி வாகனங்களிலும் சென்சார் உடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே மேற்கண்ட அரசாணையில் உள்ள துணை விதியின் குறிப்பிட்டுள்ளபடி பொருத்தப்பட வேண்டும் என இதன் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

    பள்ளி வாகனங்களில் சென்சார் உடன் கூடிய கேமராக்கள் வரும் 15-ந் தேதிக்குள் பொருத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு பொருத்தப்படாமல் இயக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    • வயலின் அருகே நின்று பார்க்கும்போது காளை மாடு வயலில் நிற்பது போன்ற தோற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
    • விவசாயிகளின் ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கு எல்லையே இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா நீர்மூளை ஊராட்சியில் உள்ள மாராச்சேரி கிராமத்தில் வசிப்பவர் வேணு காளிதாஸ். விவசாயி.

    இவர் தனது ஒரு வயலின் நடுவே வேறொரு விவசாயின் முயற்சியால் கலப்பினமாக இருந்து மீட்டெடுக்கப்பட்ட ஒரு அரிய வகையான சின்னார் என்ற சிவப்பு நெல் ரகத்தை வேளாண்மையின் அச்சாணியான காளை வடிவத்தில் நட்டு அதற்கு தீவனமான குதிரைவாலி புல் ரகத்தை சின்னார் நெல்லை சுற்றி நட்டுள்ளார்.

    அந்த 2 பயிரும் நன்றாக வளர்ந்த உள்ளது. வயலின் அருகே நின்று பார்க்கும்போது காளை மாடு வயலில் நிற்பது போன்ற தோற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    விவசாயிகளின் ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கு எல்லையே இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வயலில் காளை மாடு உருவம் போல் நெற்பயிர் சாகுபடி படம் சமூகவளைதலங்களில் வைரலாகி விவசாயிக்கு பாராட்டு குவிகிறது.

    • உம்பளச்சேரி செல்லும் சாலையில் ரோந்து பணி.
    • வழக்குப்பதிவு செய்து தலா ரூ. 20,000 இருவருக்கும் அபராதம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பிராந்தியங்கரையில் திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வன உயிரிக்காப்பாளர் யோஹேஸ்குமார் மீனா உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் பறவைகள் வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர்கள் ராமதாஸ், வனவர், செல்வி, மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், செல்வி, இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர் பிராந்தியங்கரையில் உம்பளச்சேரி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டிமேடு பகுதியை சேர்ந்த அலி அக்பர், ஹாஜா அலாவுதீன் ஆகியோர் மூன்று மடையான், இரண்டு வக்கா பறவைகள் சமைக்க விலைக்கி வாங்கி வந்தனர்.

    இருவரையும் பிடித்து கோடியக்கரை வனச்சரகர் அலுவலகம் கொண்டுவந்து விசாரணை செய்து இந்திய வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து தலா ரூ. 20,000 இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    • நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
    • ரெயில்வேயை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர், நாகப்பட்டினம் மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் ரெயில்வே துறையை கண்டித்து போராட்டத்தை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    செல்வராஜ் எம்.பி ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூருக்கு சரியான சாலை வசதி இல்லாததால் தரை வழிப் போக்குவரத்து சவாலாக உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகம் செயலிழந்துள்ளதால் நீர்வழிப் போக்குவரத்தும் இல்லை.

    இந்தப்பகுதியில் விமான நிலையம் இல்லாததால் வான்வழிப் போக்குவரத்தும் இல்லை. ரயில் பயணம் மட்டுமே வாய்ப்பாக உள்ளது. நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.

    ஒன்றிய அரசு எதையும் கேட்டவுடன் தந்து விடாது. போராடித்தான் பெற வேண்டும். எனவே ரயில்வேயை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

    அதற்கு முன்பு, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அவர் மூலம் ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு நாகை எம்.எல்.ஏ பேசினார்

    கூட்டத்தில், எம்.எல்.ஏ, .க்கள் பூண்டி கே.கலைவாணன் நாகை மாலி, மாரிமுத்து, தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டின் அருகில் கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார்.
    • காலையில் ஆட்டுக்கொட்டகையில் சென்று பார்த்தபோது 2 ஆடுகள் திருட்டு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் வசிப்பவர் ஜான்சுல்தான் (வயது 52).

    இவர் ஆடு வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்து உள்ளார்.

    காலையில் ஆட்டுக்கொட்டகையில் சென்று பார்த்தபோது அதில் 2 ஆடுகள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வேதாரண்யம் காவல்நிலையத்தில் ஜான் சுல்தான் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்கு பதிவு கோடியக்காடு பகுதி விஜய் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.

    தலைமறைவான கோடியக்காடு அஜீத் (22) என்பவரை தேடி வருகின்றனர்.

    • வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கல்.
    • இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்திய கிரகசத்தியாகிரக நினைவு கட்டிட நுழைவு வாயிலில் ஆட்டோ டிரைவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு வேதாரண்யம் காவல்து றையின் சார்பில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் உள்ளிட்ட போலீசார் வாகன ஒட்டிகளுக்கு சாலைவி ழிப்புணர்வு ஏற்பட்டுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர் நிகழ்ச்சியில் சாலை விதிகளை மதிக்க வேண்டும் வானத்தில் போகும்போது செல்போன் பேசக்கூடாது இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை போலீசார் எடுத்து கூறினர் மேலும் வேதாரண்யம் பகுதியில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களையும் போலிசார் வழங்கினர் நிகழ்ச்சியில் ஏரளமான போலீசார் பொது மக்கள் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

    • தொழில் திறன் பயிற்சி கடந்த 10 ஆண்டுகளாக முடக்கம்.
    • ஜி.எஸ்.டி வரி விதிப்பை மத்திய அரசு குறைத்தால் வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர்ர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர் நலத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன் 3,928 பயனாளிகளுக்கு, 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அமைச்சர் சிவி.கணேசன் பேட்டியளித்தபோது கூறுகையில்,

    கல்வி, திருமண உதவித்தொகை, விபத்து, மரணம் உள்ளிட்டவைகளில் 1 லட்சம் 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கம், அடுக்குமாடி குடியிருப்பு, மால் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை கட்டிய கொத்தனார் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை சொந்த வீடு இல்லை என்று வேதனை தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் முதற்கட்டமாக 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ. 400 கோடி மதிப்பில் வீடு கட்டும் திட்டம் வருகிற 15ம் தேதி முதல் அமைச்சரால் தொடங்கப்பட உள்ளதாக கூறினார்.

    தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் கூறுகையில்; கட்டிடத் தொழிலில் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்று வேதனை தெரிவித்தார். உள்நாட்டு தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்க தி.மு.க ஆட்சியில் வருடத்திற்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அளித்து வந்த தொழில் திறன் பயிற்சி கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் முடங்கி கிடந்ததாக குற்றம்சாட்டினார்.

    இந்த பயிற்சி கொடுத்தால் தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதித்து இருப்பது கொடூர செயல் என்று கடுமையாக விமர்சித்த பொன்.குமார், ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு 5 சதவீதமாக குறைத்தால், கட்டுமான வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    • கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை.
    • 2078 கிலோ குட்கா மற்றும் கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல்.

    நாகப்பட்டினம்:

    தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி கயல்விழி உத்தரவின் பேரில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கண்டெய்னர் லாரியில் குட்கா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்சியில் இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் லாரியை சோதனையிட்டனர். அப்போது லாரியில் ரகசிய அறை இருப்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் ரகசிய அறையை திறந்து பார்த்தனர். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    குட்காவை கடத்திய பாலகுறிச்சியை சேர்ந்த கவாஸ்கர் மற்றும் கண்டெய்னர் லாரியின் டிரைவர் கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து கண்டெய்னர் லாரி மூலம் குட்காவை கடத்திவந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    பின்னர் கண்டெய்னர் லாரியில் இருந்த 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 2078 கிலோ குட்காவையும், கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களையும் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்டு குட்கா கடத்தலை தடுத்த தஞ்சாவூர் சரக தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி கயல்விழி பாராட்டினார்.

    • பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது.
    • கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த தீயணைப்புத்துறை இயக்குநர் ரவி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை அவ்வபோது பெய்து வருகிறது. இந்த நிலையில் தீயணைப்புத்துறை சார்பாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.

    தீயணைப்பு நிலையத்தில் மரம் வெட்டும் கருவி, கட்டிடம் இடிக்கும் கருவி, ஆபத்து காலத்தில் கதவுகளை உடைக்கும் கருவி உள்ளிட்ட நவீன மீட்பு பணி உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் கூறுகையில்;

    நாகை மாவட்டத்தில் 7 தீயணைப்பு நிலையங்களில், 7 மீட்பு படையினர், 160 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை காலங்களில் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது, பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது மற்றும் வெகுமதி கட்டாயம் உண்டு. மேலும், சுற்றுலா தலங்களாக விளங்கும் வேளாங்கண்ணி, நாகூர், தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    • கன்று குட்டியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.
    • பசுமாடு குட்டியை ஏக்கத்துடன் பார்த்தவாறு அதனை தனது நாவால் வருடி பாச மழை பொழிந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் வளர்த்து வந்த பசுமாடு நாகை கடற்கரை சாலை அருகே கன்றுக்குட்டி ஈன்றது. பசுவை காணாது பல்வேறு இடங்களில் தேடிச்சென்ற கணேசன் பசுமாடு கன்று குட்டி ஈன்ற நிலையில் கடற்கரை சாலையில் இருப்பதை கண்டார்.

    இதையடுத்து கன்று குட்டியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தனது கன்றுக்குட்டியை உரிமையாளர் ஆட்டோவில் அழைத்துச் செல்வதை கண்ட பசுமாடு மா, மா... என கத்திக் கொண்டு பின்னாடியே சுமார் 2 கிலோ மீட்டர் துரத்தி சென்றது.

    ஒரு கட்டத்தில் ஆட்டோவை வழிமறித்து நின்ற பசுமாடு குட்டியை ஏக்கத்துடன் பார்த்தவாறு அதனை தனது நாவால் வருடி பாச மழை பொழிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    • மீனவ சமுதாயத்தை சேர்ந்த 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு.
    • சுற்றுலா தளங்களில் கடலோர போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    கடலோர பாதுகாப்பு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக முதற்கட்டமாக பணியில் சேர்ந்த 24 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

    தமிழக அரசின் அறிவிப்பின்படி, முதன்முறையாக நாகை மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்கள் 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக 45 நாட்கள் பயிற்சி முடித்த ஊர்காவல் படையினருக்கு நாகப்பட்டினத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

    கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் அடையாள அட்டைகளை வழங்கினார்‌.

    பணியில் நியமிக்கப்பட்ட அனைவரும் வேளாங்கண்ணி மற்றும் பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கடலோர காவல்துறை பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள் என்றும், கடலில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியில் ஈடுபட உள்ளனர்.

    குறிப்பாக கடலோரங்களில் நடைபெறும் கடத்தல், அந்நியர்கள் ஊடுருவல்களை கண்காணிக்கும் பணி மற்றும் கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் உதவியாக பணியாற்றுவார்கள்‌‌.

    தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யப்படுள்ள நிலையில், மீனவர்கள் மற்றும் கடலோர காவல்துறை போலீசாருக்கு இணைப்பு பாலமாக திகழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×