என் மலர்
மயிலாடுதுறை
- துணை ஆய்வாளர் ஊதியம் முரண்பாடுகளை கலைய வேண்டும்.
- தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் தொடங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சங்கங்தினர் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் தர்மராஜ், மாவட்ட செயலாளர் முருகானந்தம், முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்திடவும், களப்பணியாளர்கள் மீது சுமத்தப்பட்ட ஒழுங்கு நடவடி க்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
தரம் இறக்கப்பட்ட உருவட்ட அளவர் பதவிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமித்திட வேண்டும்.
துணை ஆய்வாளர் ஊதியம் முரண்பாடுகளை கலந்திட வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் துவங்கிட வேண்டும். களப்பணியாளருக்கு மழை படி வழங்கிட வேண்டும்.
அனைத்து வட்டங்களிலும் ஒரு டிஜிபி எஸ் கருவி வாங்கி பணிசுமையை போக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 கோரிக்களை வெளியிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோட்ட பொறுப்பாளர் பத்மா மற்றும் அனைத்து நில அளவை ஊழியர்கள் சங்கத்தினர் கலந்துகொன்டனர். முடிவில் நகர அளவை ஆய்வாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.
- கோவில் கொடிமரம் அருகே திருஞானசம்பந்தர் எழுந்தருள, ஓதுவார்கள் உலவாக்கிழி பதிகம் பாடினர்.
- பக்தர்களுக்கு சாமியிடம் வைத்து பூஜிக்கப்பட்ட நாணயங்களை குரு மகா–சன்னிதானம் பிரசாதமாக வழங்கினார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, திருவாவடுதுறையில் தேவாரபாடல் பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்புடைய அதுல்ய குஜாம்பிகை உடனாகிய கோமுக்தீஸ்வரர் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும், இக்கோவிலில் தை ரதசப்தமி விழாவின் 5-ஆம் நாள் திருஞானசம்பத்திற்கு இறைவன் பொற்கிழி அளிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு ரதசப்தமி விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாளான நேற்று பொற்கிழி அளிக்கும் ஐதீக விழா நடைபெற்றது.
விழாவையொட்டி கோவில் கொடிமரம் அருகே திருஞானசம்பந்தர் எழுந்தருள, ஓதுவார்கள் உலவாக்கிழி பதிகத்தை பாடினர். தொடர்ந்து சாமி சன்னதியில் இருந்து பூதகனம் பொற்கிழியை சுமந்து வந்து பீடத்தில் வைத்தது.
இதனை அடுத்து திருஞானசம்பந்தருக்கு சாமி பொற்கிழி வழங்கும் ஐதீக நிகழ்வு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருமுறை இசை அறிஞர் 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அடங்கிய பொற்கிழியை குருமகா சன்னிதானம் அளித்து ஆசியுரை வழங்கினார்.
தொடர்ந்து, பக்தர்களுக்கு சாமியிடம் வைத்து பூஜிக்கப்பட்ட நாணயங்களை குரு மகா–சன்னிதானம் பிரசாதமாக வழங்கினார்.
விழாவில் ஆதீன கட்டளை தப்பிரான்கள், ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பெருஞ்சேரி கிராமத்திலேயே ஆஸ்பத்திரி அமைத்து மருத்துவ சேவை வழங்க திட்டமிட்டனர்.
- மருத்துவ முகாமை பார்வையிட்டதுடன், தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி தெற்குத் தெருவை சேர்ந்த சேஷாசலம் என்பவரின் பேரன்கள் கண்ணா, டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர்.
இவர்களில் கண்ணா லண்டனிலும், டாக்டர் ராமகிருஷ்ணன் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்று அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று 35 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தான் பிறந்த ஊருக்கு ஏதாவது சேவை செய்ய எண்ணிய கண்ணா, டாக்டர் ராமகிருஷ்ணனுடன் ஆலோசித்து பெருஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் மக்கள் தற்போது, மருத்துவ அவசர தேவைகளுக்கு 7 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள மங்கைநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதை உணர்ந்தனர்.
இதையடுத்து பெருஞ்சேரி கிராமத்திலேயே மருத்துவமனை அமைத்து மருத்துவ சேவை வழங்க திட்டமிட்டனர்.
இதற்காக தங்கள் தாத்தா தனசேஷன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்தனர். தாங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களாக இருப்பதால், இந்தியாவில் வசிக்கும் தனசேஷனின் பேத்தி வனிதா ஜெயராமனை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராகவும், உறவினர்கள் ராஜதிலக், சுரேகா, தீபக் ஆகியோரை நிர்வாகிகளாகவும் நியமித்து, தங்கள் பூர்வீக வீட்டையே மருத்துவமனையாக மாற்றி உருவாக்கியுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமித்து, ரூ.10 மட்டும் கட்டணமாக பெற்றுக்கொண்டு மருத்துவ சேவையை தொடங்கியுள்ளனர்.
எலும்பு முறிவு மருத்துவ நிபுணர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவமனை திறப்பு விழாவில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா கலந்துகொண்டு, கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து, அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டதுடன், தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
இதில் வட்டாட்சியர் கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிராமத்தை விட்டுச் சென்று பல வருடங்கள் கடந்த பின்னரும், சொந்த ஊரை மறக்காத கண்ணா, ராமகிருஷ்ணன் குடும்பத்தினரை கிராமமக்கள் மனமார வாழ்த்தினர்.
- எனது கணவருக்கும், ஊராட்சி தலைவி ஒருவருக்கும் இருக்கும் தொடர்பு தான் இதற்கு காரணம்.
- போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் என்னையே மிரட்டுகின்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் வந்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 6 மாதத்திற்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது குடும்பத்தினர் 16 பவுன் நகை, புல்லட் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சீதனமாக கொடுத்தனர்.
ஆனால் திருமணமான 2 மாதத்திலேயே எனது கணவர் என்னை தாக்கி அடித்து துரத்தி விட்டார். எனது கணவருக்கும், ஊராட்சி தலைவி ஒருவ ருக்கும் இருக்கும் தொடர்பு தான் இதற்கு காரணம் ஆகும்.
எனது கணவர் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
ஆனால் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் என்னையே மிரட்டுகின்றனர்.
எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரை ஊராட்சி மன்ற தலைவியிடம் இருந்து மீட்டுத் தாருங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்.
- கடலோர காவல் படையினர் மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த ஒத்தாளவெளி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ் (வயது18).
இவர் கொள்ளிடம் அருகே அரசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. ஏ.சி. மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கூழையார் பகுதியில் உள்ள கடலில் தனது நண்பர்கள் 6 பேருடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி மாயமானார்.
இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கூழையார் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்து சென்று கடலில் மூழ்கி மாயமான மாணவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்
- சீர்காழி, பொறையாறு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- பழையாறு, பழைய பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார்மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், பொறையாறு, கிடாரம் கொண்டான், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழைய பாளையம், திருமுல்லைவாசல், பூம்புகார்மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.
- ஆயக்கலைகள் 64-ல் முதன்மையான கலையாக போற்றப்படும் பரதக்கலை அரங்கேற்ற விழா நடந்தது.
- தருமை ஆதீனம் பரத கலையின் சிறப்பு குறித்து உரையாற்றினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் நிருத்யாலயா என்னும் நாட்டியப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் ஆடல் கலைமணி விருது பெற்ற புவனேஸ்வரி சுகுமார் என்பவர் மாணவிகளுக்கு பரதக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார்.
ஆயக்கலைகள் 64 இல் முதன்மையான கலையாக போற்றப்படும் பரதக்கலையை சிறப்போடு கற்று வரும் மாணவிகளின் அரங்கேற்ற விழா நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் விழாவிற்கு வருகை தந்து சலங்கை பூஜை செய்து மாணவிகளுக்கு சலங்கையும் நற்சான்றிதழையும் வழங்கினார்.
தருமை ஆதீனம் பரதக் கலையின் சிறப்புகள் பற்றி தனது ஆசிரியர் உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
விழாவில் மயிலாடுதுறை நகரமன்ற தலைவர் செல்வராஜ், உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார்.
- இரவு மகா மண்டபத்தில் அபிராமி பட்டர் சிலை வைக்கப்பட்டு அபிராமி அம்மன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு தை அமாவாசை தினத்தன்று ஸ்ரீஅமிராமி அம்மனின் பக்தரான அபிராமிபட்டர் வழிபட அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்த சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டார்.
அபிராமி பட்டர் அபிராமி அம்மனை நினைத்து தியானத்தில் இருந்த நிலையில், பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார். இன்று பௌர்ணமி வரவில்லை என்றால் மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் கூறினார்.
இதனையடுத்து அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார்.
100 கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது 79வது பாடலான "விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு, எமக்கு அவ்வழி கிடக்க, பழிக்கே சுழன்று, வெம் பாவங்களேசெய்து, பாழ் நரகக் குழிக்கே, அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே? " என்ற பாடலை பாடினார்.
அப்பொது அம்மன் நேரில் தோன்றி தனது தோட்டை வீசி எறிந்து முழுநிலவை தோன்றச்செய்து அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது.
அதன்படி தை அமாவாசையான நேற்று அபிராமி பட்டரின் உயிரை காப்பாற்றுவதற்காக அபிராமி அம்மன் நேரில் தோன்றி தை அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய நிகழ்வு நடத்தப்பட்டது. இரவு மகா மண்டபத்தில் அபிராமி பட்டர் சிலை வைக்கப்பட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளினார்.
தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதியின் பாடல்களை பாடினர்.
ஓவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று கயிறு அறுக்கப்பட்டது. 79 பாடலின் முடிவில் நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு 100 பாடல்கள் பாடி நிறைவு செய்யப்பட்டது.
- திருஞானசம்பந்தருக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது.
- வருகிற மே மாதம் 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் தேவஸ்தானம் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோவில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.
இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு இக்கோவில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.
சட்ட நாதர் கோவிலின் திருப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகளை விரைந்து முடித்து மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கிழக்கு கோபுரத்திற்கு முன்பு தோரண வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில், வக்கீல் பாலாஜி, அரசு மருத்துவமனை மருந்தா–ளுநர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சம்பந்தம் மேல்நிலைப்பள்ளியில் வெறிநாய்கடி தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
- நாய்களை பராமரிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இணை இயக்குனர் (பொ) விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் ஆலோசனைப்படி செம்பனார்கோயில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சி சம்பந்தம் மேல்நிலைப்பள்ளியில் வெறிநாய்கடி தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் அன்பரசன், சுதா, மோனிஷா புகழ் ஆகியோர் கலந்துகொண்டு வெறிநாய் கடி தடுப்பு குறித்து மாணவ- மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முன்னதாக கால்நடை துறை சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி தலைவர் சண்முகம், பள்ளி ஆலோசகர் பாண்டியன், தலைமையாசிரியர் செல்வம் ஆகியோர் உரையாற்றினர். நோய் தடுப்பு குறித்தும், நாய்களை பராமரிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்.
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கூறைநாடு காமாட்சியம்மன் கோயிலில் தை முதல் வெள்ளியை முன்னிட்டு பூச்சொரிதல் எனப்படும் புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது.
விஸ்கர்ம சமுதாய மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று புஷ்பாஞ்சலி விழா நடத்தப்படுவது வழக்கம்.
அதைப்போல் நேற்று விழாவையொட்டி, அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் மற்றும் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்யப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பக்தர்கள் எடுத்துவந்த மலர்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்று. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தக்கர் கோவிந்தராஜன், சாமிநாதன், தலைவர் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ரமேஷ், குருக்கள் இசைசுந்தர் உள்ளிட்ட விழா குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
- 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கனிகா தேர்வு.
- மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டிக்கு 11-ம் வகுப்பு மாணவி ஷமீனராகவி தகுதி.
சீர்காழி:
தமிழ்நாடு மாநில அளவிலான குடியரசு மற்றும் பாரதியார் தின புதிய விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியானது கம்பு சண்டை, ஒற்றை கம்பு, இரட்டை கம்பு என அனைத்து வயது பிரிவினருக்கும் இப்போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கு 13 மாணவ, மாணவிகள் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியிலிருந்து தகுதி பெற்றுள்ளனர். 6-ம் வகுப்பு மாணவி யாழினி, 7-ம் வகுப்பு மாணவி யுவேத்திதா, 9-ம் வகுப்பு மாணவி தீபிகா,
கீர்த்தனா , 11-ம் வகுப்பு மாணவி ஷாமிலி, 12-ம் வகுப்பு மாணவி கனிகா, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ரிஷிகாந்த், ஆதவன், நீசார்தின் 9-ம் வகுப்பு மாணவன் சபரிநாதன் மற்றும்
10-ம் வகுப்பு மாணவர்கள் அஜய், சிவப்பிரவின் ஆகியோர்கள் சிலம்பம் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டிக்கு 11-ம் வகுப்பு மாணவி ஷமீனராகவி தகுதி பெற்றுள்ளார்.
மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் வரதராஜன், துளசிரங்கன், மேலும் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் மேலும் பள்ளியின் முன்னாள் செயலர் பாலசுப்பிர மணியன், பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், பள்ளி குழு தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.






