என் மலர்
மயிலாடுதுறை
- மயிலாடுதுறையில் மத்திய அரசு பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பியூன், கேட் கீப்பர்கள், காவலாளி, ஜுனியர் ஆபரேட்டர், உட்பட 11 ஆயிரத்து 409 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தின் வாயிலாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் செலக்சன் கமிசன் பல்வகை பணியாளர் பணிக்கு ஆபரேட்டர், பியூன், கேட் கீப்பர்கள், காவலாளி, ஜுனியர் ஆபரேட்டர், தோட்டக்காரர் ஹவல்தார் உட்பட 11 ஆயிரத்து 409 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 17.2.2023 ஆகும். இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தெளிவு பெற்று விண்ணப்பிக்கலாம். வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மேற்கண்ட மத்திய அரசு பணி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், படிக்க வேண்டிய பாடங்கள், இலவச பயிற்சி வகுப்புகள், பாடக்குறிப்புகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
மயிலாடுதுறை பூம்புகார் சாலை பாலாஜி நகர் 2-வது குறுக்குதெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து இணைய வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
- அறுவடை செய்யும் விவசாயிகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் எந்திரத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்
- பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து எதுவும் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில், 1200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயிகளின் வயல்வெளிகளில் ஆங்காங்கே மின் கம்பங்கள் உள்ளன.
இந்த மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாய பணிகள் செய்வதில் அச்சப்படுகின்றனர். மேலும் அறுவடை நேரங்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் விவசாயிகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் எந்திரத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தற்போது சம்பா சாகுபடி முடிவடைந்த நிலையில் விவசாயிகள் தங்களது நெல் வயல்களில் பயிர், உளுந்து உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர். குறுவை சாகுபடி அதனைத் தொடர்ந்து குறுவை சாகுபடி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இப்பகுதிகளில் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து எதுவும் ஏற்படுமோ என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'மின்வாரிய துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து வயல்வெளிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்' என்றனர்.
- மாலை 6 மணியை கடந்தும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் இருந்தது.
- இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லத்திற்கு திரும்பினார்.
ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணி இறக்கப்பட வேண்டும் வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவாகியும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் பறந்தவாறு இருந்தது.
தேசிய கொடியை அவமதித்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்கல் பரவியது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரி விடுத்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாதானம் அரசு ஆதிதிராவிடர்
நலத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் இடைநிலை ஆசிரியர் பிரியதர்ஷினி உள்ளிட்ட இரண்டு பேரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
- நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி முன்னிலை வகித்தார்.
- விழாவில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர் சங்க எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக சீர்காழி சார்பு நீதிமன்றத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி முன்னிலை வகித்தார்.
விழாவிற்கு சீர்காழி வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், வழக்கறிஞர் சங்க செயலாளர் எஸ்.பி.நெடுஞ்செழியன், மூத்த வக்கீல்கள் செல்வராஜ், சந்திரமோகன், பாலாஜி, சிங்காரவேலன், ராம்குமார், பாலசுப்பிரமணியன், கார்த்திக் ராஜன், கார்த்தி ராதிகா, சுதா, தியாகராஜன் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் எல்.எம்.சி பள்ளி மற்றும் பெஸ்ட் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ், நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி ஆகியோர் வழங்கினார்.
விழாவில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர் சங்க எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்மு டிவில் வக்கீல்கள் சங்கத்தின் பொருளாளர் வக்கீல் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.
- 27 அடி நீளமும் 11 அடி அகலத்தில் பிரமாண்டமான தேசிய கொடியை கோலம் வரைந்துள்ளார்.
- தேசியக்கொடி கோலத்தை வரைவதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்பட்டது.
சீர்காழி:
குடியரசு தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில்வே ரோடு தெருவை சார்ந்த கயல்விழிவினோதினி என்ற பெண் தனது வீட்டில் 27அடி நீளமும் 11 அடி அகலத்திலும் மிகப்பிரமாண்டமான தேசிய கொடியை கலர் கோல மாவுகளை பயன்படுத்தி வரைந்து உள்ளார்.
இவர் ஒவ்வொரு அரசு சார்பில் நடைபெறும் விழாக்களிலும் அதற்குரிய கோலத்தை இட்டு அசத்தி வருகிறார்.
கடந்த தைப்பொங்கல் திருநாளில் அசல் பட்டுப்புடவை போன்று வண்ண கோலம் இட்டு பார்ப்பவர்கள் அனைவரையும் வியக்க வைத்தார்.
இந்த தேசியக்கொடி கோலத்தை வரைவதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்பட்டது.
இந்த தேசிய கொடியை மிகுந்த தேசப்பற்றுடன் கோல மாவுகளை பயன்படுத்தி வரைந்ததாக கயல்விழி வினோதினி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்த கோலத்தை நேற்று அனைவரும் சென்று பார்த்து ரசித்து விட்டு சென்றனர்.
- அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
- நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டித்தரவேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் சிலேகா முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். கிராம சபை கூட்டத்தில் மணக்குடி ஊராட்சிக்கு சாலை வசதிகளை செய்து தருமாறும், அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தரக் கோரியும், நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டித் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குமாரராஜா, மகளிர் சுய குழு அலுவலர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் உமாபதி நன்றி கூறினார்.
- மீனவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் ஒன்றிய குழுதலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலெக்டர் இரா.லலிதா மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலா ளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சின்னமேடு மீனவ கிராம மக்கள் 149 குடும்பங்களுக்கும், சின்னங்குடி மீனவ கிராம மக்கள் 32 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, சாந்தி, மருதம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி மதியழகன் மற்றும் சின்னமேடு மீனவ கிராம பஞ்சாயத்தார் மதியழகன், கனக்குபிள்ளை, குழந்தைவேல், சின்னங்குடி மீனவ பஞ்சாயத்தார்கள், திமுக பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.
- பள்ளியில் தலைமை ஆசிரியை தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
- இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
சீர்காழி:
74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளி, தனியார் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிலையில் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது.
இங்கு சுமார் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகளை வழங்கினார்.
அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லத்திற்கு திரும்பினார்.
ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணி இறக்கப்பட வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவு வரை தேசியக்கொடி பறந்தவாறு இருந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இடையே தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது குறித்து மனவருத்தத்தை ஏற்படுத்தியது.
இரவு வரை தேசியக்கொடி இறக்கப்படாமல் பறந்த வாறு இருப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக்கொடியை ஏற்றினார்.
- கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு அரங்கத்தில் (ராஜன் தோட்டம்) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா இன்று (26.01.2023) காலை 08.05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
74-வது குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னால் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் வருடாந்திர பராமரிப்பு தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.18,000 மதிப்பில் மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், வருவாய்த்துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகையும், 40,பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் விதவை உதவித்தொகையும்,10 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பில் ஆண்களுக்கு திருமண உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும்,27 பயனாளிகளுக்கு தலா ரூ,2500 மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் 173 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 இலட்சம் மதிப்பில்;-
காப்பீடு உதவித்தொகையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பில் மானியத்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 4480 மதிப்பில் விசை தெளிப்பானும், 1 பயனாளிக்கு ரூ. 3 ஆயிரம் மதிப்பில் பண்ணை வேளாண் கருவிகளும், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் எனமொத்தம் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர்ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சணா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, இணை இயக்குநர்(வேளாண்மை) சேகர், மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொது) பாலாஜி, மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், முதன்மை கல்வி அலுவலர்ரேணுகா ,உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன் அவர்கள், மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல்;-
கண்காணிப்பாளர்த ங்க வேல், மயிலாடுதுறை ஒன்றிய குழுத்தலைவர்காமாட்சி மூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் அவர்கள், மயிலாடுதுறை வட்டாட்சியர்.மகேந்திரன், மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சீர்காழி புதிய பஸ் நிலையம் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கோஷங்கள்எ ழுப்பியும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் இளம் வாக்காளர்களை ஊக்குவித்தல் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துதல் வாக்குரிமை நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
முன்னதாக சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் தேர்தல் தனி தாசில்தார் ரஜினி, ஒருங்கிணைப்பாளர் தனியார் பள்ளி தாளாளர் சக்திவீரன், கிராம நிர்வாக அலுவலர் மோகன் உள்ளிட்டோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசிக்க அதனை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.
- நெல் ரகங்களுக்கு தேவையான வல்லுநர் விதை கருவிதையிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
- வயலாய்வு மேற்கொண்டு வயல் தரத்தை உறுதி செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.
திருப்பனந்தாள்:
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளால் விரும்பி விளைவிக்கப்படும் நெல் ரகங்களுக்கு தேவையான வல்லுநர் விதை கருவிதையிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
நடப்பு சம்பா பருவத்தில் சி.ஆர்.1009 (சாவித்திரி) ஏ.டி.டீ.-51 மற்றும் ஏ.டி.டீ.-52 ஆகிய நீண்டகால ரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இவற்றை பூக்கும் பருவத்தில் விதைச்சான்றுத் துறையினர் முதலாம் வயலாய்வு மேற்கொண்டு வயலில் தென்பட்ட ஒருசில கலவன்களை நீக்கி வயல் தரம் பேணிவந்த நிலையில் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் முகமது பாருக் தலைமையில் விதைச்சான்று அலுவலர்கள் செல்வமணி, ஜெகதீஸ்வர், பிரபு, மற்றும் அரவிந்த் ஆகியோர் ஆராய்ச்சி நிலையத்தின் மரபியல் துறை வல்லுநர்களுடன் இணைந்து 2 ஆம் வயலாய்வு மேற்கொண்டு வயல் தரத்தை உறுதி செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.
இவைரக வாரியாக முறையாக அறுவடை செய்யப்பட்டு உலர்த்தி, சுத்திப்பணிகள் செய்து, பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பொன்னிற மஞ்சள் சான்று அட்டை பொருத்தி வல்லுநர் விதையாக விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட வல்லுநர் விதைகளை கொண்டு அடுத்த ஆண்டு சம்பா பருவத்தில் தமிழ்நாடு அரசின் மாநில அரசு விதைப்பண்ணைகளில் ஆதாரநிலை விதைகளாக உற்பத்தி செய்து விதைகளை பெருக்கி வெள்ளைநிற சான்றட்டை பொருத்தி அதற்கு அடுத்த ஆண்டு விவசாயிகளின் வயல்களில் சான்றுநிலை விதைகளாக உற்பத்தி செய்து நீலநிற சான்று அட்டை பொருத்தி பின்வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு சான்றுபெற்ற விதைகளாக அளிக்கப்படுகிறது.
அரசின் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மான்ய விலையில் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கு கடல் சீற்றத்தால் மீனவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.
- இன்னும் 2,3 ஆண்டுகளில் மடவாமேடு கிராமமே கடலுக்குள் சென்று விடும் அபாயம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர மீனவ கிராமமான மடவாமேடு கிராமம் உள்ளது.
இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். முழுக்க முழுக்க மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இங்குள்ள மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து இங்கு பிடிக்கப்பட்டு வரும் மீன்கள் வெளியூர்களிலிருந்து வரும் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இங்கிருந்து பல வகையான மீன்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் இங்கு உலர வைக்கப்படும் பல வகையான மீன்களின் கருவாடுகளும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகின்றன.
உள்ளூர் பகுதிக ளிலும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு உணவுக்கு பயன்படுத்தப்பட முடியாத சிறு, சிறு வகையிலான நூற்றுக்கணக்கான வகை மீன்கள் காயவைத்து உலர வைக்கப்பட்டு கோழி தீவனத்துக்காக நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இப்படி மீன் மற்றும் கருவாடு வியாபாரங்களில் சிறந்த விளங்கி வரும் இந்த கிராம மக்கள் தினந்தோறும் கடல் அலைகளின் சத்தத்தால் அச்சமடைந்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கு கடல் சீற்றத்தால் அலைகள் எழும்பி கடல் நீர் கிராமத்துக்குள் புகுந்ததால் மீனவர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.
அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படும்போதெல்லாம் மடவாமேடு கடல் பகுதி மண் அரிப்பால் கடலுக்குள் கரைந்து சென்று கொண்டே இருக்கிறது. கடந்த 5 வருட காலத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மடவாமேடு கிராமப்பகுதி கடலுக்குள் சென்று விட்டது. இதனால் இந்த கிராமத்திலிருந்து கடல் அலை தொட்டுச் செல்லும் தூரம் வெறும் 50 மீட்டர் தூரமே உள்ளது.
தொடர்ந்து கடல் அலைகள் ஆர்ப்பரித்து வரும்போதெல்லாம் மடவாமேடு கிராமத்தின் மண்ணை அரித்து செல்கின்றது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மடவாமேடு கிராமமே கடலுக்குள் சென்று விடும் அபாய நிலையில் உள்ளது.
எனவே மடவா மேடு கிராமத்தில் மேலும் மண்ணரிப்பு ஏற்படாத வகையில் அலைகள் வந்து மோதும் இடத்தில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாறாங்கற்களை போட்டு தடுப்புச் சுவர் அமைத்தும் வேகமான மண் அரிப்பை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும் ஒன்றிய குழு உறுப்பினருமான அங்குதன் தெரிவித்துள்ளார்.






