search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் பொற்கிழி வழங்கும் விழா
    X

    கோமுக்தீஸ்வரர் கோவிலில் பொற்கிழி வழங்கும் விழா நடந்தது.

    திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் பொற்கிழி வழங்கும் விழா

    • கோவில் கொடிமரம் அருகே திருஞானசம்பந்தர் எழுந்தருள, ஓதுவார்கள் உலவாக்கிழி பதிகம் பாடினர்.
    • பக்தர்களுக்கு சாமியிடம் வைத்து பூஜிக்கப்பட்ட நாணயங்களை குரு மகா–சன்னிதானம் பிரசாதமாக வழங்கினார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, திருவாவடுதுறையில் தேவாரபாடல் பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்புடைய அதுல்ய குஜாம்பிகை உடனாகிய கோமுக்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    ஆண்டுதோறும், இக்கோவிலில் தை ரதசப்தமி விழாவின் 5-ஆம் நாள் திருஞானசம்பத்திற்கு இறைவன் பொற்கிழி அளிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டு ரதசப்தமி விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாளான நேற்று பொற்கிழி அளிக்கும் ஐதீக விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி கோவில் கொடிமரம் அருகே திருஞானசம்பந்தர் எழுந்தருள, ஓதுவார்கள் உலவாக்கிழி பதிகத்தை பாடினர். தொடர்ந்து சாமி சன்னதியில் இருந்து பூதகனம் பொற்கிழியை சுமந்து வந்து பீடத்தில் வைத்தது.

    இதனை அடுத்து திருஞானசம்பந்தருக்கு சாமி பொற்கிழி வழங்கும் ஐதீக நிகழ்வு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருமுறை இசை அறிஞர் 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அடங்கிய பொற்கிழியை குருமகா சன்னிதானம் அளித்து ஆசியுரை வழங்கினார்.

    தொடர்ந்து, பக்தர்களுக்கு சாமியிடம் வைத்து பூஜிக்கப்பட்ட நாணயங்களை குரு மகா–சன்னிதானம் பிரசாதமாக வழங்கினார்.

    விழாவில் ஆதீன கட்டளை தப்பிரான்கள், ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×