என் மலர்
மயிலாடுதுறை
- புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தனர்.
- கோபுர விமானத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குமரக்கட்டளை உள்ளது.
இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் நிறைவுற்று கடந்த 19-ஆம் தேதி எஜமான அனுக்ஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
ஆறுகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாகுதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் பாலச்சந்தர் சிவாச்சாரியர், திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தனர்.
அப்போது கருடன் வட்டமிட, வேத விற்பன்னர்கள் சிவ ஆகமங்கள் முறைப்படி மந்திரங்கள் ஓத, பக்தர்கள் முருகா முருகா என கோஷங்கள் எழுப்ப, மேளதாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்,
வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் மற்றும் தருமபுரம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான்கள் முன்னிலையில் விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதனை தொடர்ந்து கருவறையில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய சுப்பிரமணியருக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் மேலாளர் சண்முகம், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, மாயூரநாதர் பெரிய கோயில் காசாளர் வெங்கடேசன், நகரமன்ற தலைவர் செல்வராஜ், தருமபுரம் கல்லூரிச் செயலர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் என ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
- நகரின் முக்கிய சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
- ரூ. 1.40 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற செவ்வாய் பரிகால ஸ்தலமான வைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவர். இதனிடையே வைத்தீஸ்வரன்கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வாகனங்களில் வருவதாலும், சீர்காழி-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கோயில் அமைந்துள்ளதாலும் பிரதான சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துவருகிறது.
இதனிடையே வைத்தீ ஸ்வரன் கோவிலில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.40கோடி செலவில் 300மீட்டர் தூரத்திற்கு இருவழிதடத்தினை பல வழிதடமாக மாற்றும் வகையில் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
சாலை விரிவாக்க பணியை நெடுஞ்சாலை உதவிகோட்டபொறியாளர் ஆனந்தி, உதவி பொறியாளர் சசிகலாதேவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பணிகள் நிறைவடைவதன் மூலம் சற்று போக்குவரத்து நெருக்கடி குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
- சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- கோவில் கிணற்றில் உள்ள நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் பிரம்மன் உயிர் பெற்ற தலம் என்ற சிறப்புடைய ஆம்ல குஜாம்பிகா எனும் வாடா முலையாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயில் இந்து சமய அறநிலைத் துறைக்கு சொந்தமானது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைப்பெறுவது வழக்கம். தேவார சிறப்புமிக்க 274 திருத்தலங்களில் மூவரால் பாடப்பட்ட 44 தலங்களில் இதுவும் ஒன்றாக போற்றப்படுகிறது.
இக்கோயிலில் உள்ள கிணற்றில் இருந்து புனிதநீரை எடுத்து வந்து தினமும் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நாளில் கோயில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவது சிறப்பாகும். இந்த நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டில் இந்த ஒரு நாள் மட்டும் கோயில் கிணற்றில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டு நேற்று முன்தினம் அசுபதி நட்சத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையொட்டி ஆம்ல குஜாம்பிகா, பிரம்ம புரீஸ்வரர் ஆகிய சாமிக ளுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில் கிணற்றில் இருந்து வாரி இறைக்கப்பட்ட தண்ணீரில் பக்தர்கள் புனித நீராடி சாமி வழிபாடு செய்தனர்.
இந்த தீர்த்தவாரி விழாவில் கணேச குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உள்ளூர், வெளியூர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 13 வகையான மீன்களை மக்கள் அதிகளவில சமைத்து உண்கின்றனர்.
- பிடிக்கப்படும் மீன்களில் ஒரு பகுதி இங்கேயே கருவாடாக உலர்த்தப்பட்டு வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இங்கு பல வகையான மீன்கள் பிடிக்கப்பட்டாலும் கெளுத்தி, நெத்திலி, கிழங்கான், பொறுவாய்,குத்து வாய், வாழை, வெள்ளுருட்டான், கவலை, சுறா உள்ளிட்ட 13 வகையான மீன்களை மக்கள் அதிக அளவில சமைத்து உண்கின்றனர்.
அதேசமயம் இந்த வகை மீன்களை கருவாடாக உண்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த வகையான மீன்களை கருவாடாக வாங்கி சமைத்து உண்பதை மக்கள் பெரிதும் விரும்பி வருகின்றனர்.
இதுகுறித்து பழையார் கருவாடு வியாபாரி பொன்னையா கூறுகையில், பழையார் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த பருவ மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலும், கடற்கரை பகுதிகளில் போதுமான மீன் வரத்து இல்லாததாலும், கருவாடு தேவைக்கான மீன்வரத்து குறைந்து காணப்படுகிறது.
தற்போது இங்கு மீன்களை வாங்கி உப்புகள் தெளித்து பதப்படுத்தி கருவாடுகளை காய வைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் பழையாறு கிராமத்தில் உள்ள கருவாடுகளை வாங்கி செல்வது வழக்கம். அதாவது நெத்திலி,பாறை, சுறா, திருக்கை ,காரை ஆகிய மீன்களின் கருவாடுகள் பதப்படுத்தப்பட்டு அவற்றை நன்கு காய வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பிடிக்கப்படும் மீன்களில் ஒரு பகுதி இங்கேயே கருவாடாக உலர்த்தப்பட்டு தினந்தோறும் பல்லடம், ஒட்டன்சத்திரம்,திருச்சி, வேலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகிறோம்.
ஒரு நாளைக்கு இந்த துறைமுகத்தில் இருந்து 2 டன் மற்றும் அதற்கு மேலான கருவாடுகள் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்சென்று விற்கப்படுவது வழக்கம்.
அதன்படி கருவாடுகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கபட்டு வந்த நிலையில் தற்போது மீன் வரத்து குறைவின் காரணமாக கருவாடு உற்பத்தி குறைந்துள்ளது.
மேலும் பழையார் துறைமுகத்தில் கருவாடு உலர்தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டுகாலம் சட்ட விதிப்படி கட்சியை வழிநடத்தி மகத்தான வெற்றி பெற்று தந்தனர்.
- தமிழகத்தில் முழுமையாக ஆளுகின்ற உரிமை பெற்ற கட்சி அதிமுக என்ற நிலையை உருவாக்கி உள்ளனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் கஜேந்திரன் இல்ல திருமணத்திற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒற்றுமையாக இருந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறும், சாதாரண தொண்டர் கூட கழகத்தின் உச்ச பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதிமுறையை மாற்றி தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சட்டத்தை திருத்தி உள்ளார். இதைத்தான் நாங்கள் கூடாது என்கிறோம்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டுகாலம் சட்ட விதிப்படி கட்சியை வழிநடத்தி மகத்தான வெற்றி பெற்று தந்தனர். தமிழகத்தில் முழுமையாக ஆளுகின்ற உரிமை பெற்ற கட்சி அதிமுக என்ற நிலையை உருவாக்கி உள்ளனர். அதைத்தான் நாங்களும் வழிமொழிகிறோம்.
சட்ட விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினராக இருப்பவரை புதுப்பிப்பது என்று ஏற்கனவே கழகத்தில் சட்ட விதிகள் உள்ளது. இந்த விதிகள் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்த விதிகள். இந்த விதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. பழைய விதிகள் தொடர்ந்தால் நான் போட்டிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மயிலாடுதுறையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- ஊர்வலத்தை கலெக்்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சுகாதாரத்துறையின் சார்பில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஊர்வலத்தை கொடியசைத்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இந்தியாவில் காசநோய் காரணமாக 5 நிமிடத்திற்கு இருவர் இறந்துவிடுகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 913 நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றோம்.
காசநோய் பரம்பரை வியாதியல்ல.
காசநோய் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும், பெரும்பாலும் காசநோய் நுரையீரலைத் தாக்குகிறது. காசநோய் 80 சதவீதம் நுரையீரலையும், 20 சதவீதம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.
காசநோய் அறிகுறி உள்ளவர்கள் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.
பின்னர் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் சங்கீதா, மாவட்ட கலெக்்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், மருத்துவ அலுவலர்கள் ஜெய்கணேஷ், கார்த்திக், ஆனந்த்பிரபு மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
- நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிப்பு விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும்.
- ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுக்கா கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பவளச்சந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், கோட்ட செயலாளர் கோபாலகி ருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு காலத்தை இருட்டாக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிப்பு விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதிய மீண்டும் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அனைத்து வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இரட்டை பிள்ளையார் கோவில் அருகில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் அன்புச் செழியன், செயல் அலுவலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளநிலை உதவியாளர் பாமா மன்ற தீர்மானங்களை படித்தார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உறுப்பினர்களி டையே நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-
ராஜ கார்த்திக் (அதிமுக):-
வைத்தீஸ்வரன் கோவில் கீழ கோபுர வாசல் அருகில் குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
வித்யாதேவி சுரேஷ் (இந்திய கம்யூனிஸ்ட்) :-
எனது பகுதியில் உள்ள குளத்தில் படித்துறை அமைத்து தர வேண்டும்.
பிரியங்கா (அதிமுக) :-
எனது பகுதியில் மயான சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். கூடுதலாக குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும். புதிதாக ரேஷன் கடையை கட்டி தர வேண்டும் என்றார்.
சியாமளாதேவி (திமுக) :-
கோடை காலமாக இருப்பதால் எனது வார்டு பகுதிகளில் கூடுதலாக குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.
கென்னடி (திமுக):-
வரும் காலம் கோடை காலமாக இருப்பதால் அனைத்து வாடுகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
துணைத் தலைவர் :-
2.0 திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்தினருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் முகூர்த்த அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து தடை யை தவிர்க்கும் வகையில் மாற்றாக ஒரு வழிப்பாதை அமைப்பதற்கு இடம் வழங்கிய தருமபுரம் ஆதீனத்திற்கு நன்றி தெரிவித்து பேசினார்.
தலைவர்:-
உறுப்பின ர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப சரி செய்யப்படும்.
குறிப்பாக குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் உடனுக்கு டன் நிறைவேற்றப்படும்.
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள அரசிடம் கூடுதல் நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது இதற்கு மன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்றார்.
- சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
- அரசு நலத்திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் இருந்தாலுல் தெரிவிக்கலாம்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் ஒன்றியம், இளையாளூர் ஊராட்சி, அரங்கக்குடியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரியாபர்வின் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார்.
கிராம நிர்வாக அலுவலர் கவிநிலவரம் முன்னிலை வைத்தனர்.
ஊராட்சி செயலர் புவனேஸ்வரி வரவேற்றார்.
அப்போது சுகாதாரமான நீர் வழங்க வேண்டும்.சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குடி தண்ணீர்களை வீணடிக்க கூடாது.
சிக்கனமாக பயன்படுத்த கொள்ள வேண்டும்.
குறைகள் ஏதாவது இருந்தால் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அரசு நல திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் ஏதேனும் இருந்தாலுல் தெரிவிக்கலாம் என ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பி னர்கள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் வார்டு உறுப்பினர் பார்த்திபன் நன்றி கூறினார்.
- அ.தி.மு.க. இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து நிச்சயமாக தலைமை ஏற்பேன்.
- கட்சியை சிதறவிடாமல் ஒன்றிணைந்து பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளில் வெற்றியை பெறுவோம்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் இன்று காலை சசிகலா சாமி தரிசனம் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டசபையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து கேட்ட கேள்விக்கு ஒரு தீர்மானம் கொண்டு வரும்போது ஒவ்வொருவரும் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் சார்ந்த பிரச்சனை என்பதால் ஓ.பி.எஸ் பேசியது எந்த தவறும் இல்லை.
அ.தி.மு.க. இரண்டு அணிகளையும் ஒருங்கிணைத்து நிச்சயமாக தலைமை ஏற்பேன். எதிர்கட்சிகள் எப்படி நினைத்தாலும் அ.தி.மு.க., எம். ஜி.ஆர். போட்ட விதை. அதனை வளர்த்து வந்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழி வந்த நாங்கள் கட்சியை சிதறவிடாமல் ஒன்றிணைந்து பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளில் வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இ-சேவை வழங்கும் இத்திட்டம் படித்த இளைஞர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சார்பில் அனைவருக்கும் இ-சேவை வழங்கும் இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இ-சேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இசேவை மையங்கள் அமைக்க உதவுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் அருகாமையிலையே விரைவான மற்றும் சிறந்த சேவையை வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.
இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க, கணினி, அச்சுப்பொறி, வருடி சாதனம், கைரேகை அங்கீகார சாதனம், இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும் மற்றும் குடிநீர் வசதி, பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும்.
மேலும் மைய ஆப்ரேட்டர் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை அனைத்தும் அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தவும்.
அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் வலைத்தளம் கடந்த 15.3.2023 முதல் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகிறது. தற்போது www. tnesevai.tn.gov.in (அல்லது)www. tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 14.4.2023 வரை 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
மேலும், வலைத்தளத்தில் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு மின் ஆளுமை முக மையால் விண்ணப்பத்தை சரிபார்க்க ப்பட்டு, இ-சேவை குறியீடு மற்றும் கடவுச்சொல்லை குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெற்று கொள்ளலாம். கிராமப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.3000 மற்றும் நகர்ப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.6000- விண்ணப்பம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதுவரை, 1,369 விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை ஒரு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமாக பயன்படுத்திக்கொள்ள படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்ற அனைவரையும், இத்திட்டத்தில் விண்ணப்பி த்து பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24-ந்தேதி நடக்கிறது.
- மயிலாடுதுறை-விழுப்புரம் இருமார்க்கத்திலும் சிறப்பு ெரயில்கள் இயக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் மே 24-ந்தேதி நடை பெற்றவுள்ளதையொட்டி மயிலாடுதுறை-விழுப்புரம் இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட வலியுறுத்தி ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் தென்னக ெரயில்வே பொது மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.
அதில் கூறியிப்பதாவது:-
பிரசித்திப்பெற்ற சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 24-ந்தேதி நடைபெற உள்ளது.
தேவார திருப்பதிகம் அருளிய திருஞானசம்பந்தர் அவதரித்த தலம், காசிக்கு இணையான அஷ்டபைரவர் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் கோயில் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடு களிலிருந்து பல லட்சம் பக்தர்கள் வருகைபுரிய உள்ளதாக தருமபுரம் ஆதீனம் செய்தியாளர்கள் சந்திபின்போது தெரிவித்தார்.
இதனிடையே சீர்காழி ெரயில் நிலையத்தில் பல ெரயில்கள் நின்று செல்வதில்லை என வணிகர்கள், ெரயில் யணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சீர்காழி ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரன், செயலாளர் முஸ்தபா, பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் மத்திய ரெயில்வே தலைவர், தெற்கு ெரயில்வே பொதுமேலாளர், திருச்சி கோட்ட மேலாளர், இயக்கவியல் மேலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.
அதில் தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் விரைவு ெரயிலுக்கு சீர்காழி ெரயில் நிலையத்தில் நின்று செல்லவும், மயிலாடுதுறை-விழுப்புரம் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் மூலம் பல லட்சம் பக்தர்கள் பயனடைவர் என அதில் கூறியுள்ளனர்.






