என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • ரிஷப வாகனத்தில் அமர்ந்து குரு பகவானுக்கு லட்சார்ச்சனை.
    • தருமபுர ஆதீனம் அருளாசியுடன் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    குரு பெயர்ச்சி விழா ஏப்ரல் 22 ம்தேதி சனிக்கிழமையில் இரவு 11. 24 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

    அதனை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை சேந்தங்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வதான்யேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் (வள்ளலார் கோயிலில்) ரிஷப வாகனத்தில் அமர்ந்து ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி குரு பகவானுக்கு லட்சார்ச்சனை ஒவ்வொரு தினம் மாலையில் நடைபெற்றுவருகிறது.

    இதில் பரிகார ராசிகள், பயன்பெறும் ராசிகள், பரிகாரத்தில் மற்றும் யாகத்திலும் பங்கு பெற்று பயனடைய தருமபுர ஆயுதம் 27ஆவது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் நடைபெறுகிறது.

    • திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடிகர் செந்தில் பீமரத சாந்தி வழிபாடு செய்தார்.
    • 60 வயது பூர்த்தி அடைந்த போது சஷ்டியப்த பூர்த்தி வழிபாடு ெசய்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில்தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.

    அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வருடம் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோவிலுக்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு

    நேற்று இரவு கோவிலுக்கு மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்டபிரபு, ஹேமசந்திர பிரபு மற்றும் மருமகள்கள், பேரக்குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்க ளுடன் கோவிலுக்கு வந்து கஜபூஜை, கோபூஜை செய்து முதல்கால யாகசாலை பூஜையில் பங்கேற்று சுவாமி அம்பாளை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து நேற்று கோவிலுக்கு வந்த நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

    பின்னர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி மாலை மாலை மாற்றிக் கொண்டு மாறி மாறி இனிப்பு வழங்கி கொண்டனர்.

    பூஜை ஏற்பாடுகளை கனேச குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.

    அதனை தொடர்ந்து குடும்பத்தி னருடன் கோவிலை சுற்றி வந்து கள்ள விநாயகரை வழிபட்டு விட்டு, அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

    60 வயது பூர்த்தி அடைந்த போது இக்கோவில் சஷ்டியப்த பூர்த்தி விழா செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • சீர்காழியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.
    • விற்பனையில் ஈடுப்பட்ட 4 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1500 அபராதம் விதித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், டீ கப்புகள் விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து நகராட்சி ஆணையர் வாசுதேவன் உத்தரவின்படி, சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, களபணி உதவியாளர் சீதாலெட்சுமி, இளநிலை உதவியாளர் நல்லதம்பி மற்றும் பரப்புரை மேற்பார்வையாளர்கள் ஆகியோர் சீர்காழி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப்பை விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து கடைகள் மற்றும் குடோன்களில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழிப்பைகள், டீ கப்புகள் என சுமார் 400 கிலோ நெகிழிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    விற்பனையில் ஈடுப்பட்ட 4 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1500 அபராதம் விதித்தனர்.

    ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

    மேலும் இதுபோன்று திடீர் அதிரடி ஆய்வு தொடரும் எனவும் கூறினார்.

    • முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம்.
    • சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தீப்பந்தத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தீப்பந்தத்துடன் ஜனநாயகத்தை காப்போம் என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி தலைவி சித்ரா செல்வி தலைமை வகித்தார்.

    நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணன், கொள்ளிடம் வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், கொள்ளிடம் ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கண்டன உரையாற்றினார்.

    இதில் முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரியகுமார், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் காங்கிரஸ் துணைத் தலைவர் செலினா நன்றி கூறினார்.

    • திருமணத்திற்கு முன்பே தாட்சாயிணிக்கும், ராஜசேகருக்கும் பழக்கம் இருந்து உள்ளது.
    • ஆத்திரம் அடைந்த தாட்சாயிணி சம்பவத்தன்று தனது காதலர் ராஜசேகரை தனது வீட்டுக்கு வரவழைத்து உள்ளார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 30). இவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த நந்தினி என்கிற தாட்சாயிணிக்கும்(25) கடந்த மாதம் 3-ந்தேதி திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி தாட்சாயிணி தனது காதலரான நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (38) என்பவருடன் சேர்ந்து சரவணனை தாக்கி கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றார்.

    இதுகுறித்து சரவணன் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தீவிர விசாரணைக்கு பின்னர் தாட்சாயிணி மற்றும் அவரது காதலன் ராஜசேகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

    திருமணத்திற்கு முன்பே தாட்சாயிணிக்கும், ராஜசேகருக்கும் பழக்கம் இருந்து உள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் தாட்சாயிணி, சரவணனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    திருமணத்திற்கு பிறகும் தாட்சாயிணி, தனது காதலன் ராஜசேகருடன் பேசி வந்துள்ளார். இதை அறிந்த சரவணன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தாட்சாயிணி சம்பவத்தன்று தனது காதலர் ராஜசேகரை தனது வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சரவணனை கட்டிப்போட்டு தாக்கி கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்று உள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட தாட்சாயிணி மற்றும் அவரது காதலன் ராஜசேகர் ஆகிய இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உழவர் சந்தையில் 33 கடைகள் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு கடை இலவசம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை உழவர் சந்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ. 28.06 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் மறுசீரமைக்கும் பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    மயிலாடுதுறை உழவர் சந்தையில் 33 கடைகள் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் புதிய கழிப்பறைகளும், புதிய பம்ப் செட் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

    மின்னும் எடை எந்திரம் வைக்கப்படும். டிஜிட்டல் விளம்பர பலகை வைக்கப்படும்.

    இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யலாம்.

    நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு கடை இலவசம்.

    மின்னும் எடை எந்திரம், (இலவச தராசு) போக்குவரத்து வசதி இலவசம், நல்ல விலை கிடைக்க நிர்ணயம் செய்து தரப்படும். இப்பணிகள் இன்னும் 15 நாட்களில் புது பொலிவுடன் உழவர் சந்தை இயக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், வேளாண்மை அலுவலர் கீர்த்திகா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வாலிபர்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை பஸ்சின் முன் பக்க கண்ணாடி மீது தூக்கி வீசினர்.
    • முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொண்டல் வழியாக வடரங்கம் கிராமத்திற்கு அரசு நகர பஸ் சென்று கொண்டிருந்தது. சீர்காழி அடுத்த பழைய பாளையத்தை சேர்ந்த ரமேஷ் பேருந்து ஓட்டிச் சென்றார்.

    அதில் நடத்துனராக வள்ளுவக்குடியை சேர்ந்த அகோரமூர்த்தி பணியில் இருந்தார்.

    பஸ்சை மன்னங்கோயில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் கையில் வைத்திருந்த பீர் நிறைந்த பாட்டிலை பஸ்சின் முன் பக்க கண்ணாடி மீது தூக்கி வீசி சென்றனர்.

    இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்த நொறுங்கியதோடு பாட்டிலில் இருந்த பீர் மற்றும் கண்ணாடி துகள்கள் முழுவதும் ஓட்டுநர் ரமேஷ் மீது கொட்டியது.

    நிலை தடுமாறிய ஓட்டுனர் ரமேஷ் சாதுரியமாக ஓடிய பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பஸ்சின் முன் பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியதில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சின் கண்ணாடியை உடைத்த போதை கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காண்ட்ராக்டர் மற்றும் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பிரேத பரிசோதனைக்காக உடலை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 25) கொத்தனார்.

    இவர் வழுதலைகுடியில் இருந்து வடகால் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.

    எடமணல் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லியில் வழுக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுரேந்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விபத்தில் உயிரிழந்த சுரேந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

    அப்போது அங்கு திரண்ட சுரேந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்கு காரணமான கட்டுமான பணி காண்ட்ராக்டர் மற்றும் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அந்த சாலையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து எடமணல் பகுதியில் இருந்து புறவழிச் சாலை பணிக்காக மண் ஏற்றிச் சென்ற லாரி தான் விபத்தை ஏற்படுத்தியது என்பதை கண்டறிந்து லாரி ஓட்டுநர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் கூறினர்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    அதன் பின்னர் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
    • அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குவதாக வரலாறுகள் கூறுகின்றன.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலில் பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர்.

    வைணவ பெரியார்களில் முக்கியமானவராக கருதப்படும் திருமங்கை ஆழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது.

    மேலும் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.

    ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாள் இந்த கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

    திருமண தோஷம் இருப்பவர்கள் இங்கு மாலை மாற்றி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குவதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலில் பங்குனி பெருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இதனை ஒட்டி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    பின்னர் கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கையாழ்வார் முன்னிலையில் பட்டாச்சாரி யார்கள் கொடி ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அன்பரசன், திருவிழா கமிட்டி செயலாளர் ரகுநாதன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    • 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் அடுத்த காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் மிக பழமைவாய்ந்த காலபைரவர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி, கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமங்களுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    2,3-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்தை அடைந்தனர்.

    கோவில் குருக்கள் சண்முக சுந்தரம் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் ஓத, வானில் கருடன் வட்டமிட கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர், கருவறையில் உள்ள காலபைரவருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    விழாவில் ஊராட்சி தலைவர் ஜோதிவள்ள ராஜேந்திரன், துணை தலைவர் சரவணன், வி.ஏ.ஓ. சிவராமன் மற்றும் விழா குழுவினர்கள், கிராமமக்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை காவி ரிக்கரையில் அமைந்துள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் கோவிலில் 131-வது ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு, கூறைநாடு காக்கும் பிள்ளையார் கோயிலிருந்து பக்தர்களுக்கு விரதமிருந்து அலகு காவடி, சக்தி கரகம், சிவப்பு மஞ்சள் உடை உடுத்தி மேளதாள வாத்தியங்கள் முழங்க காளிஆட்டத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே வீதிஉலாவாக கோயிலை வந்தடைந்தனர்.

    கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவில் மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

    கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கமேட்டு தெரு நாட்டாமை ஞானசேகரன், பொருளாளர் செல்வம், கோயில் நிர்வாகிகள் லட்சும ணன், வெங்கட்ராமன், மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

    • வெயில் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் வெளியில் சென்று வருகின்றனர்.
    • நீர்மோர் பந்தலை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

    வெப்ப சலனம் அதிகம் உள்ள காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் வெளியில் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெயிலை சமாளிக்க பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற நகரின் முக்கிய இடங்களில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல், மயிலாடுதுறை ஆஞ்சநேயர் கோவில் அருகே தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

    பின்னர், பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி பழங்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் சதீஷ்குமார், தன்னார்வலர் ஆனந்தன் மற்றும் கலந்து கொண்டனர்.

    ×