என் மலர்tooltip icon

    மதுரை

    • பிரமாண்ட மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி திறந்து வைக்க உள்ளார்.
    • டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த பிரமாண்ட மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினம் மேற்படி கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில், அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை இன்று 19-ந் தேதி மதியம் 12 மணி முதல் நாளை 20-ந்தி மதியம் 12.00 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும்.


    இணையதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் உடற்தகுதி சான்றுடனும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள், காளையர்கள் பங்கேற்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதற்கேற்றவாறு கீழக்கரை மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    • காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
    • தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆனந்தி ஷா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தனது இடத்தை அபகரித் துக் கொண்டதாக கூறி நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் மேற்கு வங்காளத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் மீது மதுரை குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் தற்போது தலைமறைவாகி உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிந்து ஓராண்டு ஆகியும், இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் இருக்கிறார் என தெரிந்தும் காவல்துறையினர் அவரை மீட்டு வந்து விசாரிக்கவில்லை.

    எனவே நில அபகரிப்பு வழக்கை விரைந்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் போதுமான தகவல் இல்லை என கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் மறைந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் தலைமறைவு குற்றவாளிகள் குறித்து காவல்துறை ஏன் முன்னணி நாளிதழ்களில் அவர்களது விவரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்துவதில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், அண்டை மாநிலமான கேரளத்தில் பிரபலமான முன்னணி நாளிதழ்களில் தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனை நாள்தோறும் பார்க்க முடிகிறது.

    காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை குற்றவாளிகளுக்கு உறுதுணையாக பாதுகாப்பது போல் உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் தென்மண்டல காவல்துறை தலைவர், ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் இந்த வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை:

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷே விழா நடைபெறுவதை ஒட்டியும், நாளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி 3 நாள் பயணமாக வருவதை முன்னிட்டும், மேலும் ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தினத்தை யொட்டியும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

    அந்தவகையில், மதுரையில் வைகை ஆற்றுக்கு வடக்கேயும், தெற்கேயும் இரு பிரிவுகளாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தல்லாகுளம் பெருமாள் கோவில், கோரிப்பாளையம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    அதேபோல் பெரியார் பேருந்து நிலையம், மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஆறு பேர் கொண்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் இந்த வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீவிர சோதனை இன்று முதல் ஜனவரி 26-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 810 காளைகள் பங்கேற்றன.
    • ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு.

    உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

    இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது.

    மொத்தம் 810 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

    அமைச்சர் மூர்த்தியின் அறிவுறுத்தல்படி எஞ்சிய காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

    18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் இரண்டாம் பரிசு பெற்றார்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு பெற்றுள்ளது.

    சிறந்த காளையாக 2ம் பரிசுக்கு மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது முதல் பரிசு பெறும் கருப்பாயூரணி கார்த்தி, 2022ம் ஆண்டிலும் முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • ஜல்லிக்கட்டு போட்டியை ஒழுங்குபடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    • மாடு முட்டிய அதிர்ச்சியில் போலீஸ்காரரும் திடீரென மைதானத்துக்குள் மயங்கி விட அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி சீறிவரும் காளைகளை மல்லுக்கட்டி மடக்கும் காளையர்கள் கூட்டமும் ஆர்ப்பரித்து வருகிறது.

    போட்டியில் ஜெயிக்கும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்க காசுகள், மோட்டார் சைக்கிள், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த போட்டியை ஒழுங்குபடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகளை வரிசைப்படுத்துவதிலும், அவிழ்த்து விடப்பட்ட காளைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் மீது திடீரென ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாய்ந்தது. இதில் நிலை குலைந்துபோன போலீஸ்காரர் மைதானத்துக்குள் கீழே விழ... காளையும் அவரை நோக்கி முன்னேறி முட்டியது. இதில் அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது. மாடு முட்டிய அதிர்ச்சியில் போலீஸ்காரரும் திடீரென மைதானத்துக்குள் மயங்கி விட அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவ குழுவினரிடம் அழைத்துச் சென்றனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். ஜல்லிக்கட்டு மைதானத்துக்குள் காளை முட்டியதில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதியம் வரை 2 போலீஸ்காரர்கள் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.

    • கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாளான மாட்டு பொங்கல் அன்று இங்கு பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விருந்து நடைபெறும். இந்தாண்டு கோபலாபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 61-வது பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி மற்றும் மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இந்த திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். நேற்று கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று காலை 250 பெண்கள் பால் குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    கோபாலபுரம், செங்கப்படை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் கோபாலபுரம் நாட்டாமை வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது.

    இதில் சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து நாட்டாண்மை வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு கிளம்பினர். இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர். பல பெண்கள் சாமியாடினர்.

    மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளரும், கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவில் நிர்வாகியுமான ராமமூர்த்தி கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள் அனைவரும் மாட்டு பொங்கல் அன்று நடைபெறும் முனியாண்டி சாமி கோவில் திருவிழாவில் பங்கேற்போம்.

    நேர்த்திக்கடனாக ஆடுகளை செலுத்தி அசைவ அன்னதானம் நடைபெறும். எங்கள் ஓட்டலின் தினசரி முதல் வருவாயை உண்டியலில் சேகரித்து இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவோம். எங்கள் தொழில் சிறப்பாக நடைபெறவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறோம் என்றார்.

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை நடைபெறும்.

    அலங்காநல்லூர்:

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 7 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பாக உள்ள வாடிவாசல் திடலில் அரசு வழிகாட்டுதல்படி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, எம்.எல். ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், தளபதி, தமிழரசி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து சுவாமி காளைகளான முனியாண்டி சுவாமி கோவில் காளை, அருவிமலை கெங்கையம் மன், கருப்பசாமி கோவில் காளை, வலசை கருப்பு சாமி கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

    ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 1,000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. இதேபோல் தகுதி பெற்ற 600 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் லாரி, வேன்களில் கொண்டுவரப்பட்டு அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

    இன்று காலை போட்டி தொடங்கியதும் ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. கழுத்தில் மாலை, பட்டுத்துணி சகிதமாக சீறிப்பாய்ந்து வந்த நாட்டின காளைகள் துள்ளிக்குதித்து வீரத்தை காட்டியது. பெரும்பாலான காளைகள் தேங்காய் நார் பரப்பப்பட்ட களத்தில் கால்களை வாரி இறைத்து தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை பறை சாற்றியது.

    யாருக்கும் பிடிபடாமல் வளர்ப்பாளர்களின் அழைப்புக்கு செவி சாய்த்து அவர்களுடன் வெற்றியுடன் புறப்பட்டு சென்றது மேடையில் அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்த அமைச்சர்கள் மற்றும் பார்வையாளர்களை வியப்படைய செய்தது. களத்தில் இறங்கி விட்டால் போட்டிதான் என்ற உணர்வில் காளையும், காளையர்களும் மல்லுக்கட்டிய காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது.

    சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது. முதல் சுற்றில் 2 காளைகளை அடக்கிய மதுரை ஊர்சேரியை சேர்ந்த சரவணக்குமார் முதலிடம் பிடித்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, விலை உயர்ந்த டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசு களைப் பெற்றனர்.

    அதிக காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் சிறந்த காளைக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த காளை, மற்றும் மாடுபிடி வீரருக்கு இரண்டாம் பரிசாக பைக் வழங்க உள்ளனர்.

    சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்து தங்க நாணயம், அண்டா, மிக்ஸி, சைக்கிள், டி.வி., மின் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை நடைபெறும்.

    காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் அமருவதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. காயம் அடைந்த வீரர்களை ஏற்றிச் செல்ல 10-க்கும் ஆம்புலன்ஸ் வசதி வாடிவாசல் அருகிலேயே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் அலங்காநல்லூர் பேரூராட்சி பணியாளர்கள் வாடிவாசலை தூய்மைப்படுத்தினர்.

    தென்மண்டல ஐ.ஜி.நரேந்திரன் நாயர் மேற்பார்வையில், மதுரை சரக டி.ஐ.ஜி. ரம்யா பாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலையில் 10 கூடுதல் சூப்பிரண்டுகள், 55 துணை சூப்பிரண்டுகள், 10 கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 80 இன்ஸ்பெக்டர்கள், 185 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும்.
    • அவனியாபுரம் ஜல்லிகட்டு சிறப்பாக நடைபெற்ற நிலையில் இன்று பாலமேடு ஜல்லி கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    மதுரை எலியார்பத்தியில் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில், காளை குத்தி ஒருவர் உயிரிழந்துள்ளார். எலியார்பத்தி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர், வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அங்கு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் இருந்து ஓடிவந்த காளை, ரமேஷ் என்ற இளைஞரின் இடது மார்பில் முட்டியது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    உயிரிழந்த ரமேஷ்-க்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், ஒரு வயதில் பெண்குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளை வளர்க்க தன்னந்தனியாக கடுமையாக சிரமப்பட்டேன்.
    • பெண் வங்கி ஊழியர் நிலத்தை தானமாக வழங்கிய இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    மதுரை:

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் போன்ற தரும காரியங்களை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது கோடி புண்ணியங்களை செய்வதற்கான பலனை அளிக்கும் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கி உள்ளார். அவரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த பெருமைக்கு சொந்தக்காரர் மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் (வயது52) ஆவார். இவர் தல்லாக்குளம் பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வங்கியில் பணியாற்றியபோது கடந்த 1991-ம் ஆண்டு இறந்தார்.

    இதையடுத்து ஆயி பூரணத்திற்கு அதே வங்கியில் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. கணவர் இறந்த நிலையில் மகள் ஜனனியை பாசத்தோடு வளர்த்து வந்த ஆயி அம்மாளுக்கு மீண்டும் பேரிடி காத்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகள் ஜனனி திடீரென இறந்தார். இது ஆயி பூரணத்தை பெருமளவில் பாதித்தது. தனது மகள் இருக்கும்போது மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என அடிக்கடி தாய் ஆயி பூரணத்திடம் கூறி வந்துள்ளார்.

    மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மதுரை மாவட்டம் கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தனக்கு சொந்தமான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.

    வங்கி பெண் ஊழியரின் இந்த கொடை செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆயி பூரணம் கூறியதாவது:-

    எனது கணவர் இறந்தபோது மகள் ஜனனிக்கு 1½ வயது. மகளை வளர்க்க தன்னந்தனியாக கடுமையாக சிரமப்பட்டேன். சிறு வயது முதலே எனது மகள் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அடிக்கடி கூறி வந்தார். எனது தந்தைக்கும் அதே நோக்கம் இருந்தது.

    அவர் மூலம் பலர் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெற்று பயனடைந்துள்ளனர். எனது தந்தை வழியிலும், மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையிலும் திருமணத்தின்போது எனக்கு சீதனமாக வழங்கப்பட்ட நிலத்தை நான் படித்த பள்ளியான கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு தானமாக வழங்கி உள்ளேன்.

    உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எனக்கு சொந்தமான இடத்தை கல்வித்துறை பேரில் பத்திரம் பதிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஒப்படைத்துள்ளேன். இம்முயற்சிக்கு எனது உறவினர்கள் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். யாரும் தடை போடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த ஆயி பூரணம் வெளி உலகம் அதிகம் அறியாதவர். தான் உண்டு, தன் குடும்பம் வேலை என வாழ்ந்து வருகிறார். இவரது கொடை செயலை அறிந்து மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராட்ட வங்கிக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். ஆனால் வந்தது எம்.பி. என்று கூட அறியாமல் ஆயி பூரணம்மாள் இருந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் எடுத்து கூறிய பின்பு தான் தனக்கு வாழ்த்து கூற எம்.பி. வந்துள்ளார் என ஆயி பூரணம்மாளுக்கு தெரிய வந்துள்ளது. பெண் வங்கி ஊழியர் நிலத்தை தானமாக வழங்கிய இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அதற்கு முத்தாய்ப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயி பூரணத்தை பாராட்டி உள்ளார்.

    மேலும் முதலமைச்சர் சிறப்பு விருது ஆயி அம்மாளுக்கு வருகிற குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    • முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து தெய்வங்களான 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாரம்பரியம் மிகுந்த ஊராகும்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் வாய்ந்ததாகும்.

    காளையாக இருந்தாலும், காளையர்களாக இருந்தாலும் வீரத்தை மட்டுமின்றி அன்பையும், பாசத்தையும், விசுவாசத்தையும் மண்ணில் விதைக்கும் திருவிழாவாகவே இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் பொங்கல் தினமான நேற்று அவனியாபுரத்தை தொடர்ந்து, இன்று பாலமேட்டில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் அரசு வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து தெய்வங்களான 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான காளைகள் மட்டுமே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 1,000 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அதேபோல் தகுதிபெற்ற 700 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் லாரி, வேன்களில் கொண்டு வரப்பட்டு இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. இந்த காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாரம்பரியம் மிகுந்த ஊராகும். அவனியாபுரம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட போதிலும், அதிக அளவிலான காளைகள் பாலமேட்டில்தான் அவிழ்க்கப்படுகிறது. அதன்படி நன்கு பயிற்சி பெற்ற காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்தன. அதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

    திமிலை உயர்த்தி கெத்து காட்டிய காளைகளின் அருகில் செல்லக்கூட அச்சப்பட்ட மாடுபிடி வீரர்கள் தடுப்புக்கட்டைகள் மீது ஏறி நின்று கொண்ட காட்சிகளையும் அவ்வப் போது காணமுடிந்தது. தில்லும், தெம்பும் இருந்தால் என்னை அடக்கிப்பார் என்று சீறியபடி காளைகள் களமாடியதை உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பார்த்து ரசித்தனர்.

    இதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றனர். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது. படுகாயம் அடையும் வீரர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தன.

    போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, விலை உயர்ந்த டிவி, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடி படாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளைப் பெற்றனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் இரண்டாம் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கன்று குட்டியுடன் மாடு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் பைக் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு சமூக ஆர்வலர் பொன்குமார் சார்பில் காங்கேயம் மயிலை பசு மற்றும் கிடாரி கன்று குட்டி வழங்க உள்ளனர். சீறிப் பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் மடக்கி பிடித்து தங்க நாணயம் முதல் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட் களை பரிசாக பெற்று சென்றனர்.

    காளைகளுக்கும், மாடு பிடி வீரக்ளுக்கும் காயம் ஏற்படாதவாறு தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் அமருவதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் கேலரிகள் அமைக்கப்பட்டி ருந்தது.

    • காளை மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
    • வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

    மதுரை:

    தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாகக் கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது, தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

    இதற்கிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

    இந்நிலையில், மதுரை பாலமேட்டில் இன்று காலை மாடுபிடி வீரர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் 1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளன. முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்ற உள்ளனர்.

    இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமாக மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

    • 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார்.
    • 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

    உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், 17 காளைகளை அடக்கு கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். இவருக்கு, தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கினார்.

    இதற்கிடையே, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 51 பேர் காயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த , 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    25 காளை உரிமையாளர்கள், 22 மாடுபிடி வீரர்கள், 2 பார்வையாளர்களை, 2 போலீசார் என 51 பேர் காயமடைந்துள்ளனர்.

    ×