என் மலர்
மதுரை
- மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ.18.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
- மின் திருட்டு தொடர்பாக தகவல் மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மதுரை
மதுரை மண்டல அம லாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக் குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதி காரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.அப்போது நெல்லை மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட குருவிகுளம், திருவேங்கடம், தெற்கு அப்பர்குளம், மறுகால்குறிச்சி, களக்காடு, மீனவன்குளம், திருக்குறுங்குடி, ராஜாபுதூர் ஆகிய பகுதிகளில் 16 இடங்களில் மின் திருட்டு கண்டறியப் பட்டது. எனவே மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப் பட்ட வாடிக்கையாளர் களிடம் 16 லட்சத்து 92 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டது. இதுதவிர வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக வாடிக்கையாளர்களிடம் ஒட்டுமொத்தமாக 18 லட்சத்து 26 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- மதுரையில் கூட்டுறவு வங்கி அதிகாரி மனைவியிடம் 20 பவுன் நகை பறித்த பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பிரவீன் மீது செல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மதுரை
மதுரை ஆத்திகுளம், ஏஞ்சல் நகர், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ஊர்க்காவலன். இவர் மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவரது மனைவி பானுமதி (வயது 58). இவர் கடந்த 31-ந் தேதி மதியம் நரிமேடு பகுதியில் நடந்து சென்றார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், பானுமதி அணிந்திருந்த 20 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியது.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மூதாட்டி பானுமதியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர், செல்லூர் ரவுடி என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் நள்ளிரவில் செல்லூருக்கு சென்று, வீட்டில் இருந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரித்தனர்.
அவர்கள் செல்லூர் நந்தவனம், நேதாஜி தெருவை சேர்ந்த குபேந்திரன் மகன் திக்குவாய் என்ற பிரவீன்குமார் (24), செல்லூர் குமரன் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் ( 24) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
திக்குவாய் என்ற பிரவீன் மீது செல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணி கண்டன் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார். 3 பேரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலைஞர் நூலக கட்டுமானபணிகள் வருகிற டிசம்பருக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மதுரையில் திறக்கப்படும் கலைஞர் நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
மதுரை
சென்னையில் ஆசியாவில் 2-வது பெரிய நூலகம் என்ற பெருமையை பெற்றது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2010-ம் ஆண்டு திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தை போல தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 3- ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதற்காக 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.
மதுரை புது நத்தம், ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் இந்த பிரம்மாண்ட நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இரவு, பகலாக பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் நூலக கட்டிடம் 90 சதவீத பணிக்கு மேல் நிறைவடைந்துள்ளது. சுமார் 7 தளங்கள் கொண்ட இந்த நூலகத்தில் 3 மாடிகள் உயரத்திற்கு அதன் முகப்பில் கண்ணாடி முகப்பு ஏற்படுத்தப்படுகிறது.
இது தவிர நூலகத்தில் டிஜிட்டல் திரைகள், சிற்றுண்டி கூடங்கள், 100 கார்கள், 200 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடங்கள் அமைகிறது. 3 இடங்களில் எஸ்கலேட்டர்கள் (நகர்வு படிகள்) அமைக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் செல்ல தனி பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கலைஞர் நூலக கட்டுமானபணிகள் வருகிற டிசம்பருக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் கலைஞர் நூலகம் ஜனவரி மாதம் திறக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
நூலகத்திற்கு தேவையான தமிழ் மொழி, ஆங்கில நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், கணிதம், கணினி அறிவியல், பொறியியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், மருத்துவம், இலக்கியம், சுயசரிதை, தொடர்பான 12 ஆயிரம் அரிய நூல்கள்உள்ளிட்ட2.50 லட்சம் புத்தகங்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் போட்டி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தேவையான புத்தகங்களும் கலைஞர் நூலகத்தில் வைக்கப்படுகிறது.
மதுரையில் திறக்கப்படும் கலைஞர் நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
- இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- மதியம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும்.
திருமங்கலம்
திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் சந்திரகி ரகணத்தையொட்டிவருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 வரை நடைஅடைக்கப்படும்.
சந்திரகிரகணம் மாலை 2.39க்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைவதால் நடை சாற்றப்படுகிறது. பின்னர் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதே நேரத்தில் இந்த கோவிலில் மதியம் நடைபெறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- ஆனையூர்-கூடல்நகர் பகுதிகளில் மழையால் சேதமான சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் வீதிகள் சேதம் அடைந்துள்ளன.
மதுரை
மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் வீதிகள் சேதம் அடைந்துள்ளன.
பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் சாலைகள், வீதிகள் உள்ளதால் அதனை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், குடியிருப்போர் சங்கத்தின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்திற்கும், மதுரை மாநகராட்சிக்கும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர், கூடல் நகர் பகுதிகளில் அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகளுடன் சென்று மழையால் சேதம் அடைந்த சாலைகள் மற்றும் வீதிகளை ஆய்வு செய்தார்.
அவருடன் கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மேயர் இந்திராணி, மண்டல தலைவர் வாசுகி மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
சேறும் சகதியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் செல்ல முடியாத அளவில் இருந்த பல்வேறு பகுதிகளை அமைச்சர் மூர்த்தி நடந்து சென்று பார்வையிட்டார்.
அப்போது பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சேதம டைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்கும்படி அதிகாரிக ளுக்கும் உத்தரவிட்டார்.
மேலும் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்த பகுதி களை கண்டறிந்து மழை நீரை உடனடியாக அகற்று வதற்கு தேவையான நடவடிக்கை களை எடுக்கவும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
ஆனையூர், கூடல் நகர், தபால் தந்தி நகர் உள்ளிட்ட பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளையும் விரைந்து செய்யவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தினார்.
அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தபோது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர்.
- மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
- தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அக்டோபர் 2-ந் தேதி பேரணி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மதுரை
தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அக்டோபர் 2-ந் தேதி பேரணி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் ஆளும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பேரணி வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி அணிவகுப்பு நடத்துவதற்காக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நாளை (6-ந் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வண்டியூர் சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் வரை ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் நிர்வாகிகள் செயல்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சீனிவாசன், மங்கள முருகன், மகேஷ், மாநிலச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தலைவர் அழகர்சாமி மற்றும் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சுசீந்திரன் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து முன்னணி தலைவர் அழகர்சாமி கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மீண்டும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
- கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கக்கூடாது. நாகரிகமான உடைகளை அணிய வேண்டும். .
- நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி எபவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் வருகிற 8-ந்தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து உரிய அனுமதி கோரி காவல் துறையிடம் மனு சமர்ப்பித்துள்ளோம். எனவே கரகாட்டம் நடத்த அனுமதியும், நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கரகாட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கக்கூடாது. நாகரிகமான உடைகளை அணிய வேண்டும். நிகழ்ச்சியில் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது.
எந்த ஒரு அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்கக்கூடாது. சாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.
நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கடுமையான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- ெரயில்வே மேம்பால பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
- திருமங்கலம் நகராட்சியில் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சி யில் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் -விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள வார்டுகள் 21, 21 26 மற்றும் 27 வார்டு களுக்கான பகுதி சபை கூட்டம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் ஆதவன்அதியமான் முன்னிலை வகித்தார். இதில் 4 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய டோல்கேட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அருண், திருமங்கலத்தில் பெரிய பிரச்சினையாக ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பால பணிக்காக பூமிபூஜை போடப்பட்டது. அதன்பின் பணிகள் தொடங்கவில்லை. விதிமுறை மீறி கப்பலூர் டோல்கேட் அமைந்துள்ளது இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த நகராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் கூறுகையில், ெரயில்வே மேம்பால பணிகள் குறித்து தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பணிகள் தொடங்கும். கப்பலூர் டோல்கேட் பிரச்சினை தொடர்பாக நாங்கள் பதவிக்கு வந்தவுடன் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
தற்போது டோல்கேட் எதிர்ப்புக்குழுவினர் முதல்வரை சந்திக்க வேண்டும். எங்களிடம் வழங்கிய கடிதத்தினை முதல்வருக்கு அனுப்பி உள்ளோம். தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் விரைவில் முதல்வரை இது தொடர்பாக சந்திக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றனர்.
கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, வினோத், ரவி, ராஜகுரு, முத்துகாமாட்சி, சாலிகாஉல்பத் ஜெய்லானி, ரம்ஜான்பேகம் ஜாகீர், பகுதி சபை செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உசிலம்பட்டியில் பெண் வியாபாரியை தாக்கிய வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.
மதுரை
உசிலம்பட்டி, மாயன் நகரை சேர்ந்த காட்டுராஜா மனைவி சீதாலட்சுமி (வயது 42). இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சீதா லட்சுமி அங்குள்ள தனியார் வங்கியில் ரூ.25 லட்சம் கடன் வாங்கினார். இதற்கான தவணையை செலுத்தி வந்தார். அவர் 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லையாம்.
சம்பவத்தன்று இரவு சீதாலட்சுமி கடையில் இருந்தார். அப்போது தனியார் வங்கி ஊழியர்கள் வந்து தகராறில் ஈடுபட்டனர். இதில் சீதாலட்சுமிக்கு அடி உதை விழுந்தது. இதை கணவர் காட்டுராஜா தட்டி கேட்டார். அவருக்கும் அடி- உதை விழுந்தது.
கணவன்-மனைவி இருவரையும் உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சீதாலட்சுமி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சீதாலட்சுமியை தாக்கியது ஆரியப்பட்டி விக்னேஷ், பெருங்காமநல்லூர் தங்கம் மற்றும் 2 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அலங்காநல்லூர் அருகே முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- விழா ஏற்பாடுகளை கரட்டு காலனி சிவனடியார்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் வெள்ளிமலை கரட்டு காலனியில் அமைந்துள்ள சிவன், அங்காள ஈஸ்வரி அம்மன், பெருமாள், அனுமார், முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களுடன் யாகவேள்வி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. அனைத்து தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கரட்டு காலனி சிவனடியார்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
- கல்லூரி வாசலில், பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததைக் கண்டு கல்லூரி மாணவிகள் அலறியடித்து ஓடினர்.
- செல்லூர் போலீசார் இச்சம்பவத்தின் பேரில் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் நேற்று முன்தினம் மாலை மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி வந்தது. இதன் முன்பாக சில இளைஞர்கள் குடிபோதையில் டூவீலர்களில் ஹார்ன் அடித்து கொண்டும், கத்திக் கொண்டும் கொண்டும் அதிவேகமாக ஓட்டி வந்தனர். அப்போது, அந்த ரோட்டில் சென்றவர்கள் அனைவரும் பீதியடைந்து ஓடினர். சரியாக அந்தநேரம், கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவிகளும் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர்.
அப்போது கல்லூரியில் படிக்கும் தன் மகளை அழைத்து செல்ல வந்த ஒரு தந்தை, டூவீலரில் கத்தி கொண்டு வந்த குடிமகன்களை பார்த்து கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த போதைக் கும்பல், உடனே தங்களது வண்டிகளை நிறுத்திவிட்டு இறங்கி வந்து மகளின் கண் முன்பாகவே அந்த தந்தையை தாங்கள் வைத்திருந்த ஹெல்மெட் உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். கல்லூரி வாசலில், பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததைக் கண்டு கல்லூரி மாணவிகள் அலறியடித்து ஓடினர்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே செல்லூர் போலீசார் இச்சம்பவத்தின் பேரில் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மதுபோதையில் தகராறு செய்த அச்சம்பத்துவை சேர்ந்த ராமமூர்த்தி, சோமசுந்தரம், சிவஞானம், நாகப்பிரியன், சதீஷ்குமார், அஜித்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரி முன்நின்ற மாணவியின் தந்தையை தாக்கிய நிலையில் 6 பிரிவுகளின் கீழ் செல்லூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






