என் மலர்
மதுரை
- ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.
- பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் மீது மணல் சரிந்து விழுந்தது. இதில் அவர் மண்ணில் புதைந்துவிட்டார்.
மதுரை:
மதுரை கூடல்புதூர் அசோக்நகர் 2-வது தெரு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் இந்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று காலை பாதாள சாக்கடை திட்டப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஈரோட்டைச் சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பவரும் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டார். இதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.
அப்போது பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் மீது மணல் சரிந்து விழுந்தது. இதில் அவர் மண்ணில் புதைந்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பள்ளத்தை தண்ணீர் மூடி விட்டதால் அவரது உடலை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால் மணலில் புதைந்த சக்திவேல் உயிருடன் புதைந்து பலியாகி விட்டார். அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் 1 மணி வரை அவரது உடலை மீட்க முடியவில்லை. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை அருகே டிரைவர்-வாலிபருக்கு கத்திகுத்து விழுந்தது.
- இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் இந்திரா நகர் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் சுகுமாரன் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று நேதாஜி தெருவில் ஒரு பெட்டிக்கடை முன்பாக தனது ஆட்டோவை நிறுத்தினார்.
அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த நவநீதன் மகன் சதீஷ்குமார் (24), ஜெயஹிந்த்புரம் என்.எஸ்.கே தெரு மாரிமுத்து மகன் மணிகண்டன் என்ற எம்டன் மணி (25), நேதாஜி தெரு பாண்டி மகன் பாலமுருகன் (19) மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் சுகுமாரனை வேறொரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சிறுவன் உள்பட 4 பேரும் சுகுமாரனை ஆபாசமாக பேசி கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், மணிகண்டன், பாலமுருகன், 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
ஆரப்பாளையம் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் நவீன் பாண்டி (21). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் விக்கி (20),வீரபிரபு (20), சரண்குமார் (20) ஆகிய 4 பேர் மேலப்பொன்னகரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வளர்மதி (54) மகனை மது குடிக்க அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நவீன்பாண்டி உள்பட 4 பேரும் வளர்மதியின் மகனை கேலி கிண்டல் செய்து கத்தியால் குத்தினர்.
இந்த சம்பவம் குறித்து வளர்மதி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் பாண்டி , விக்கி, வீரபிரபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராணுவ வீரர் பலியானார்.
- இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நீரேத்தான் நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 68) முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவருக்கு விக்ராந்த் என்ற மகன் உள்ளார். அவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி ஓட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றார். பழைய நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை வாடிப்பட்டி அரசு மருத்துவமனை க்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- மதுரையில் ஆலையில் ரேசன் அரிசி பதுக்கிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- கோழி தீவனமாக மாற்றி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
மதுரை
மதுரை மாநகரில் உள்ள அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து அரைத்து, கோழி தீவனமாக மாற்றி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் மதுரை மண்டல ரேசன் அரிசி தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா தலைமையில் போலீசார், சோதனை நடத்தினர். அப்போது 4 அரிசி ஆலைகளில் 27 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே மதுரை மாநகரில் உள்ள அரிசி ஆலைகளில் ரேசன் அரிசி மூடைகள் பதுக்கப்பட்டு உள்ளதா? என்று சோதனை நடத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.
சின்ன அனுப்பானடியில் உள்ள அரிசி ஆலையில் ரேசன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றது. போலீசார் 4 பேரை மடக்கி பிடித்தனர். அந்த அரிசி ஆலையில் 23 சாக்கு மூடைகளில் 575 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. ரேசன் அரிசி கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் வண்டியூர் கோமதிபுரம், செவ்வந்தி வீதி தெய்வேந்திரன் (33), காமராஜர்புரம் கக்கன் தெரு முத்துராமலிங்கம் மகன் சதீஷ்குமார் (24), பீகார் மாநிலம் சுரேந்திர ராய் மகன் மனிஷ் குமார் (23), சுதீர்குமார் (25) என்பது தெரிய வந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்
- மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
- பொன்னமங்கலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த 4 வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
திருமங்கலம்
திருமங்கலம் தொகுதியில் உரப்பனூர், வாகைக்குளம் கண்மாய்கள் தொடர் மழை காரணமாக நிரம்பின.இதன் காரணமாக தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. மலர் தூவி வரவேற்றார். தொடர்ந்து பொன்னமங்கலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த 4 வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளது. பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. இந்த அரசு பயிர் காப்பீடு நிவாரணத்தை முழுமையாக பெற்று தர வேண்டும்.
எடப்பாடி ஆட்சி காலத்தில் 4 ஆண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பெற்று தரப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 7000 ரூபாய் அதிகபட்சமாக அதற்கேற்ற வகையில் நிவாரணம் வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஈடுபொருள் மானியமும் வழங்கப்பட்டது.
தற்போது தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு உரிய மானிய தொகை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாநில நிர்வாகி சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் வருகிற 8-ந்தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
- காலை 10மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி வருகிற 8-ந்தேதி (செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம்-2 அலுவலகத்தில் காலை 10மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்னசொக்கிக்குளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய பகுதி பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.
- நில அளவையர், வரைவாளர் பணிக்கான எழுத்து தேர்வு மதுரையில் இன்று நடந்தது.
- இதற்காக 47,623 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
மதுரை
தமிழகத்தில் 789 நில அளவையர், 236 வரைவாளர் உள்பட 1089 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்காக 47,623 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு இன்று மாநிலம் முழுவதும் எழுத்து தேர்வு நடந்தது.
மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரி, நரிமேடு நாய்ஸ் மெட்ரிகு லேஷன் மேல்நிலைப்பள்ளி, நாராயணபுரம் எஸ்.இ.வி மேல்நிலைப்பள்ளி, விஸ்வநாத புரம் பாலமந்திரம் மேல்நிலைப்பள்ளி, சின்ன சொக்கிகுளம் லேடி டோக் கல்லூரி, கோரிப்பாளையம் மீனாட்சி அரசினர் கல்லூரி, திருப்பாலை யாதவா பெண்கள் மற்றும் ஆண்கள் கல்லூரி, புதூர் சி.எஸ்.ஐ. கல்லூரி, நோபிலி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, அல் அமீன் மேல்நிலைப்பள்ளி, கே.கே. நகர் அருள்மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொழில்நுட்பம் சாராத 'மல்டி டாஸ்கிங்' பணிகளுக்கான ஸ்டாப் செலக்சன் கமிஷன் 2-ம் நிலை தேர்வு நடந்தது. இதில் 465 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
- மதுரையில் வருகிற 8-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன.
- எல்லீஸ்நகர், சமயநல்லூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
மதுரை எல்லீஸ்நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை எல்லீஸ் நகர் மெயின்ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், (எம்.எச்.டி, ஆர்.எச். பிளாக்குகள்), குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் (ஏ. முதல் எச். பிளாக்குகள்).
போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெருக்கள், டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள்.
சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி.ரோடு, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியரம் போலீஸ் நிலையம் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரிணி அபார்ட்மெண்ட், வசுதரா அபார்ட்மெண்டஸ், பெரியார் பஸ் நிலையம்.
ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்காதோப்பு, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் உள்ள கழிவுநீரேற்று நிலைய உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன்காரணமாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பாப்பாகுடி, வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம்,பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், தபால்துறை பயிற்சி நிலையம், காவலர் குடியிருப்பு, சின்ன உடப்பு, விமான நிலைய குடியிருப்பு, குரங்குத்தோப்பு, ஆண்டவர்நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 8-ந் தேதி (செவ்வாக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயநல்லூர், தேனூர், கட்டப்புளி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, பரவை மெயின்ரோடு, பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டம்பட்டி, சிறுவாலை, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- திருமங்கலம் அருகே வாலிபருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற மாணவி விபத்தில் பலியானார்.
- அவர்கள் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி பாலம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சாத்தங்குடியை சேர்ந்தவர் பூமிராஜா. இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இவரும் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் தென்னரசு (20) என்பவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் டி.கல்லுப்பட்டி சென்று விட்டு மீண்டும் திருமங்கலம் நோக்கி வந்தனர்.
அவர்கள் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி பாலம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மாணவி மகாலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மாணவி பரிதாபமாக இறந்தார். காயமடைந்த தென்னரசு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவீடு திரும்பினார்.
இந்த விபத்து குறித்து மாணவியின் தந்தை பூமிராஜா திருமங்கலம் தாலுகா போலீசில் புகார்செய்தார். அதில், தனது மகளை தென்னரசு கடத்தி சென்றபோது அவர் விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து தென்னரசை கைது செய்தனர்.
- திருமங்கலத்தில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள பைப் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பைப் மற்றும் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தற்போது தனியார் தொலைதொடர்பு நிறுவனம் 5ஜி இணைப்பு கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.
இதற்காக நகர் முழுவதும் புதிதாக பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் காமராஜபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இங்கு 49 பைப்புகள் ஒரு இடத்தில் தொலைதொடர்பு நிறுவனம் சார்பில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் 29 பைப்புகளை கடந்த 2-ந் தேதி முதல் காணவில்லை. இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவன மேலாளர் மதுரை கூடல்நகரை சேர்ந்த சீனிநிதன் கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.இதில் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சென்னப்ப நாயக்கனூரைச் சேர்ந்த சுரேஷ் (வயது35) மற்றும் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (42), செல்லூர் விஸ்வநாதன் (40), கோரிப்பாளையம் பிரவீன்ராஜ் (32) உள்பட 5 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பைப் மற்றும் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
- சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது.
- சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது. சனீஸ்வரன். லிங்கம். நந்திகேஸ்வரர். சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத் தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- மதுரையில் இருந்து காசிக்கு 18-ந் தேதி ஆன்மீக சுற்றுலா ெரயில் இயக்கப்படுகிறது.
- பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரை
இந்தியாவின் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்களை தரிசிக்க, தென்னக ெரயில்வே பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரையில் இருந்து காசிக்கு வருகிற 18-ந் தேதி சிறப்பு ெரயில் இயக்கப்பட உள்ளது. இது திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, விஜயவாடா வழியாக 19-ந் தேதி உ.பி மாநிலம் சித்திரக்கூடம் செல்லும்.
நவம்பர் 20-ந் தேதி சர்வ ஏகாதசி அன்று ராம்காட்டில் புனித நீராடி குப்த கோதாவரி குகை கோயில், காம்தகரி, சதி அனுசுயா கோவில்களை தரிசனம் செய்யலாம். 21-ந் தேதி பிரதோஷம் அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ராமஜன்ம பூமி கோவில் தரிசனம். 22-ந் தேதி சிவராத்திரி அன்று காசி கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களில் தரிசனம். 23-ந் தேதி சர்வ அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்கள் வழிபாடு முடிந்து விஷ்ணு பாத தரிசனம்.
24-ந் தேதி ஒடிசாவில் பூரி ஜெகநாதர் ஆலயம், கொனார்க் சூரியனார் கோவில் தரிசனம். 26-ந் தேதி ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோவில் 21 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம். 27-ம் தேதி சுற்றுலா ரயில் மதுரை வரும்.
பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை- காசி சுற்றுலா ரயிலில் பயணம் செல்ல www.ularail.com இணைய தளத்தில் பதிவு செய்யலாம்" என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.






