என் மலர்tooltip icon

    மதுரை

    • அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிய வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு சிறப்பு பள்ளிகள் கவுன்சில் அமைப்பின் செயலாளர் வெற்றிவேல் முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அறிவு சார் குறைபாடு உடைய குழந்தைகள் நலன் கருதி சிறப்பு பள்ளிகளை நடத்தி வருகிறோம்.

    பல்வேறு மாவட்டங்களில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு உள்ள சிறப்பு பள்ளிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறோம்.

    அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இங்குள்ள சிறப்பு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான ஊதியம் மிக மிகக் குறைவு.

    மற்ற ஆசிரியர்களைப் போல அவர்களுக்கும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய உரிய சம்பளத்தை வழங்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். இதுவரை அது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

    எனவே அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களைப் போல சலுகைகள் உடன் கூடிய உரிய சம்பளத்தை வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சாமித்துரை ஆஜராகி, மாணவர்கள் 8 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சிறப்பு பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான ஊதிய முறைகள் குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது. அந்த உத்தரவுகளை உரிய முறையில் அமல்படுத்த வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில், சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்ற ஆசிரியர்களைப் போல ஊதிய நடைமுறைகள் வழங்குவது குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • சரசுவதி நாராயணன் கல்லூரியில் பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • பெண்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்களிடம் கலந்து பேச தயங்கக்கூடாது என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசினார்.

    மதுரை

    மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் பெண்கள் சட்ட விழிப்புணர்வு மையம் சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உமா வரவேற்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    பெண்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்து பேச தயங்கக்கூடாது. எந்த ஒரு பிரச்சினையையும் மனதில் வைத்து கொள்ளக்கூடாது. தேவைப்பட்டால் உடனடியாக காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். தமிழக காவல் துறை பெண்களுக்கு எதிராக அனைத்து வகையான குற்றங்களை விசாரிக்க ''ஒன்ஸ்டாப் சென்டர்'' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் கட்டணமில்லா உதவி எண்: 181. இதன் மூலம் பெண்கள் எல்லாவித புகாரையும் தெரிவிக்கலாம்.

    காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. மேலும் கவனிப்பாறற்று தனிமையில் மற்றும் துன்புறுத்தப்படும் முதியோர் குறித்து 14567 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அவருக்கு உதவி கிடைக்கும் என்றார். சிறப்பு சார்பு ஆய்வாளர் சாந்தி, தலைமை காவலர் சிநேகலதா மற்றும் பலர் பங்கேற்றனர். மாணவி ராதிகா நன்றி கூறினார்.

    • மதுரையில் வீரமாமுனிவருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபநிதி சுப்பிரமணியன், வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை எடுத்துரைத்தார்.

    மதுரை

    வீரமாமுனிவரின் 343-வது பிறந்த நாளையொட்டி மதுரை பாத்திமா கல்லூரி ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர், உதவி தலைமை ஆசிரியர் மரிய அருள்செல்வம், தலைமை ஆசிரியர் ஜோசப், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாக அதிபர் மரியநாதன், தாளாளர் ஸ்டீபன் லூர்து பிரகாசம், தலைமை ஆசிரியர் சேவியர் ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அறக்கட்டளை செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபநிதி சுப்பிரமணியன், வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை எடுத்துரைத்தார்.

    மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வீரமாமுனிவருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும். சிலை வளாகத்தை சீர்மிகு வளாகமாக மாற்றி அமைக்கவும், அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    • மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கழிவுநீர் ஆறாக ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பக்தர்கள் வெறும் காலில் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் சித்திரை வீதிகள் முழுவதும் பதிக்கப்பட்டுள்ள கருங்கற்கள் பக்தர்களின் கால்களை பதம் பார்க்கின்றன. இதனால் பக்தர்கள் காலணி அணிந்தபடி கிரிவலம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கிழக்கு சித்திரை வீதியில் உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி ஆறாக வழிந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் முகச்சுளிப்புடன் அந்தப் பகுதிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அங்குள்ள கடை வியாபாரிகள் கூறுகையில், மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் ஓராண்டாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தோம். எந்த வித நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • மதுரையில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.

    மதுரை

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று மற்றும் இன்று அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. மதுரை நகரில் உள்ள பெரு ம்பாலான கோவில்களில் இன்று காலை அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

    மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு நன்மை தருவாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 110 படி சாதம் தயாரிக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம் களைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சாதத்தால் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதே போல் நகரில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான சிவன் கோவில்களில் இன்று காலையிலேயே அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.

    • மதுரை அமெரிக்கன் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான சர்வதேச பயிலரங்கம் நடந்தது.
    • மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் மற்றும் இலக்குகளை வைத்திருக்க வேண்டும் என பஞ்சாயத்து ராஜ் சிறப்புச்செயலர் பேசினார்.

    மதுரை

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை மற்றும் பொருளாதார ஆராய்ச்சித்துறை சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான புள்ளியியல் சர்வதேச பயிலரங்கம் நடந்தது.

    இதில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சிறப்புச்செயலர் கருணாகரன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் மற்றும் இலக்குகளை வைத்திருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான வழக்கமான பயிற்சிகள் மற்றும் தயாரிப்புக்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

    புள்ளியியல் பற்றிய கற்றல் மற்றும் நடைமுறைப் பயிற்சி மாணவர்கள் உலகளாவிய, தேசிய மற்றும் மாநில அளவில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுகிறது. இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் மற்றும் செயலர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்கள் புள்ளி விவரங்களை கற்றுக் கொண்டால் பாடங்களில் தேர்ச்சி பெற்று, பிரகாசித்து, போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள்.

    நாளுக்கு நாள் வெகுஜனப் பயிற்சியைக்காட்டிலும் விநியோகப் பயிற்சியைப் பின்பற்றுவது, வாரத்திற்கு ஒரு முறையாவது முக்கோணங்கள் அல்லது குவாட்களில் படிப்பது, சூத்திரங்களை மனப்பாடம் செய்யாமல், கருத்துகளைப் படிப்பது போன்ற 7 படிகளைக் கற்றுக்கொள்வதற்கான புள்ளி விவரங்களை அவர் எடுத்துரைத்தார்.

    • தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி பேரூராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இவர் டி.கல்லுப்பட்டி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகுடாதிபதி (வயது54). இவர் டி.கல்லுப்பட்டி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். நேற்று மாலை 5.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்தில் ஏழு ஊர் அம்மன் திருவிழாவிற்கு தனது வார்டில் சாலையை சுத்தம் செய்வதற்காக துப்புரவு பணியாளர்களை அனுப்ப வேண்டும் என மகுடாதிபதி டி.கல்லுப்பட்டி செயல் அலுவலர் மற்றும் என்ஜினியரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேரூராட்சி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான முத்துகணேஷ் மற்றும் மேஸ்திரி கனகராஜ் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் மகுடாதிபதி புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரூராட்சித் தலைவர் முத்து கணேசன் மற்றும் உடந்தையாக இருந்த பேரூராட்சி மேஸ்திரி கனகராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரையில் மணலில் புதைந்து தொழிலாளி பலியான சம்பவத்தில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஒப்பந்த நிறுவனங்களிடம் தொழிலாளிக்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் கூறினார்.

    மதுரை

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் நேற்று மதுரை கூடல்புதூர் அசோக்நகர் 2-வது தெருவில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டபோது மணல் சரிவில் சிக்கி புதைந்து பலியானார். அவரது உடல் 5 மணிநேரம் போராடி மீட்கப்பட்டது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை பார்த்ததால் சக்திவேல் மணலில் புதைந்து பலியானதாக சக தொழிலாளர்கள் கூறினர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் கோவையைச் சேர்ந்த தனியார் கட்டிட நிறுவன உரிமையாளர் அசோகன், மேலாளர் ரவிக்குமார், மேற்பார்வையாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாநகரில் நடப்பாண்டு மட்டும் 6 பேர் புதைக்குழிக்குள் சிக்கி பலியாகி உள்ளனர். மதுரையில் கடந்த ஏப்ரல் மாதம் பழங்காநத்தம் கழிவு நீரேற்று நிலையத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் இறங்கிய சிவகுமார் (வயது 45), சரவணன் ( 32), அலங்காநல்லூர் லட்சுமணன் (வயது 31) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    விளாங்குடியில் கடந்த ஜூன் மாதம் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்ட ஈரோடு வீரணன் என்பவர், புதைகுழிக்குள் சிக்கி பலியானார். கூடல்புதூர், சொக்கலிங்கம் நகரில் குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தில், சமையல்காரர் ரமேஷ் என்பவர் தவறி விழுந்து இறந்தார்.

    இது தொடர்பாக மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் கூறுகையில், "மாநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகள் ஈரப்பதத்துடன் உள்ளன. எனவே 10 அடிக்கு மேல் பள்ளம் உள்ள பகுதிகளில், மறுசீரமைப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளோம்.

    ஒப்பந்த நிறுவனங்களிடம் தொழிலாளிக்கு உரிய உபகரணங்கள் வழங்க வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளோம். விபத்தில் இறந்த சக்திவேலுக்கு இன்சூரன்ஸ் போடப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் தமிழக அரசிடம் பேசி அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும் என்றார்.

    • அலங்காநல்லூர் அருகே நயினார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை நயினப்பன் அம்பலம் வகையறா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள கீழசின்னனம்பட்டி கிராமத்தில் நயினார் சுவாமி, நொண்டிசுவாமி, ஆண்டிசுவாமி, பட்டவர் சுவாமி, அக்காயிசுவாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, புண்ணியாசனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. 4 கால யாக பூஜையுடன் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி பீடத்தின் மீது அமைந்துள்ள நயினார் சுவாமி மீது சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேம் செய்தனர். சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நயினப்பன் அம்பலம் வகையறா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • மதுரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணைமின் நிலையத்தில் உள்ள காடுபட்டி பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மதுரை புதூர் மின்பிரிவு மாட்டுத்தாவணி துணைமின் நிலையத்தின் தொழிற்பேட்டை பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மூன்றுமாவடியின் ஒரு பகுதி, சர்ச் ரோடு, மாட்டு ஆஸ்பத்திரி, லோட்டஸ்ட் அபார்ட்மெண்ட், ஒய்.டபிள் யூ.சி. ஆஸ்டல், சம்பகுளம் 1 முதல் 5 தெருக்கள், சிவானந்தா தெரு, விவேகானந்தா தெரு, மீனாட்சி அபார்்ட்மெண்ட், கமிசனர் அலுவலகம், இ.பி. காலனி, 120 அடி ரோடு, பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மதுரை வண்டியூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை மறுநாள் (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை வண்டியூர், பி.கே.எம்.நகர், சவுராஷ்டிரா புரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்பு மலர்தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்ளி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி. நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • மதுரை கள்ளிக்குடி அருகே மினிவேன் மோதி வாலிபர் பலியானார்.
    • சிவரக்கோட்டையில் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையை நடந்து கடக்க முயன்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள சிவரக்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன் மகன் அழகேசன்(22). இதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் கதிர்வேலு (22).

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் இவர்கள் இருவரும் சிவரக்கோட்டையில் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையை நடந்து கடக்க முயன்றனர்.

    அப்போது விருதுநகரில் இருந்து பலசரக்கு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்ற மினிவேன் இவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள் அழகேசன், கதிர்வேலு இருவரில் வாலிபர் அழகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கதிர்வேலு படுகாய மடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் உயிரிழந்த வாலிபர் அழகேசன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்து தப்பியோடி மினிவேன் டிரைவரை தேடிவருகின்றனர்.

    • உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 15.12. 2000 அன்று முதல்வராக இருந்த கருணா நிதியால் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் 1.9.1998 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ் சுமார் 86 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்ற னர். இந்த ஓய்வூதியத் திட்டத்தில் 2 வகை யான அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 1.9.2010 முதல் அனைவருக்கும் ஒரே மாதிரியான அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது .

    கடந்த 2015 நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு வழங்காமல் முடக்கப்பட்டது. நவம்பர் 2015 முதல் முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு கடந்த 2.9.2022 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அகவிைைலப்படி உயர்வை நவம்பர் 2022 வழங்கவும். அமல்படுத்திய அறிக்கையை 25.11.2022ல் கோர்ட்டில் தாக்கல் செய்ய வும் உத்தரவிட்டது.

    தமிழக அரசு இந்த பிரச்சினையில் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தும் போக்கை கடைபிடிப்பதை கண்டித்து மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில தலைவர் எஸ். கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் தேவராஜ், சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து தொழி லாளர் சங்க மாநில சம்மே ளன துணைத்தலைவர் பிச்சை உள்பட பலர் பேசினர்.

    இதில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் முருகேசன். சவுரி தாஸ், ஆறுமுகம், செல்வராஜ், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாண்டியன், ஜேம்ஸ் கர்சன்ராஜ், ராஜேந்திரன், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் தங்கப்பழம், போஸ், முத்துச்சாமி, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் மகாலிங்கம், காமராஜ், நாகராஜன், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறை நிர்வாகம் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர்.

    ×