search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிய வழக்கில்  அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு
    X

    சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிய வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

    • அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிய வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு சிறப்பு பள்ளிகள் கவுன்சில் அமைப்பின் செயலாளர் வெற்றிவேல் முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அறிவு சார் குறைபாடு உடைய குழந்தைகள் நலன் கருதி சிறப்பு பள்ளிகளை நடத்தி வருகிறோம்.

    பல்வேறு மாவட்டங்களில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு உள்ள சிறப்பு பள்ளிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறோம்.

    அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இங்குள்ள சிறப்பு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான ஊதியம் மிக மிகக் குறைவு.

    மற்ற ஆசிரியர்களைப் போல அவர்களுக்கும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய உரிய சம்பளத்தை வழங்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். இதுவரை அது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

    எனவே அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களைப் போல சலுகைகள் உடன் கூடிய உரிய சம்பளத்தை வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சாமித்துரை ஆஜராகி, மாணவர்கள் 8 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சிறப்பு பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான ஊதிய முறைகள் குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது. அந்த உத்தரவுகளை உரிய முறையில் அமல்படுத்த வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில், சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கும் மற்ற ஆசிரியர்களைப் போல ஊதிய நடைமுறைகள் வழங்குவது குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×