என் மலர்
மதுரை
- அம்பேத்கர் நினைவுநாளில் பைக்குகளில் வந்து போலீசாரிடம் தகராறு செய்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- இதையடுத்து 3 மோட்டார் சைக்கிள்களில் வீலிங் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தலைமறைவான 5-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதற்காக மாநகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அன்று மதுரை சிந்தாமணி பஸ் நிறுத்த சந்திப்புக்கு, 3 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் இருந்த வாலிபர்கள் வீலிங் செய்து அமளியில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் எச்சரித்தனர். அந்த கும்பல் போலீசாரை சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டனர். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த கும்பல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 மோட்டார் சைக்கிள்களில் வீலிங் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தலைமறைவான 5-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஜெயலலிதா கோவிலில் 11-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் விழா டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.
- தனிப்பட்ட முறையில் நான் நடத்தும் திருமணவிழா அல்ல.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழகர் கோவில், பழமுதிர்சோலை ஆகிய கோவிலில் ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெறும், திருமணவிழாவிற்கான அழைப்பிதழ்களை தனது குடும்பத்துடன் சென்று வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த விழாவில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், எத்தனை நலத்திட்ட உதவிகள் செய்தாலும், அம்மாவிற்கு பிடித்த நிகழ்ச்சிதிருமண விழா நிகழ்ச்சியாகும். அம்மா இருக்கும்போது அம்மா பேரவையின் சார்பில் 80 திருமணத்தை நடத்தினோம்.அதனை தொடர்ந்து அம்மா பேரவை சார்பில் மதுரையில் 120 ஏழை, எளிய மணமக்களுக்கு திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.
தற்போது புரட்சித்த லைவர், புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டும், 51-வது பொன்விழா ஆண்டை யொட்டி, அம்மா பேரவையின் சார்பில், எனது மகள் பிரியதர்ஷினி திருமணம் உட்பட 51 எளிய மணமக்களுக்கு சமத்துவ, சமுதாய திருமண விழாவினை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி வரும் பிப்ரவரி 23-ந் தேதி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். சமத்துவம் சமுதாய திருமணவிழா என்பது, எல்லோருக்கும் சமத்துவம் படைக்கும் வகையில் அடித்தளமாக இருக்கும்.
இந்த திருமண விழாவிற்கான முகூர்த்த கால் அமைக்கும் பணி, வருகிற, 11-ந் தேதி காலை 10 மணிக்கு டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தங்கமணி, வேலுமணி, காமராஜ், செல்லூர் கே ராஜு, டாக்டர் விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம். கே.டி.ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா.
கருப்புசாமி பாண்டியன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, ரவிச்சந்திரன், செந்தில்நாதன், எம்.ஏ.முனியசாமி குட்டி யப்பா, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறனர்.
இந்த சமத்துவ சமுதாய திருமண விழா அம்மா பேரவையின் சார்பில், அனைத்து நல்ல உள்ளங்களின் பங்களி ப்புடன், நிதிஉதவியுடன் நடைபெறுகிறது. தனிப்பட்ட முறையில் நான் நடத்தும் திருமணவிழா அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார்.
- இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விமல், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்தலின்படி திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விமல், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர்.
வட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழைகளுக்கு தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், சலவைப் பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் புவனேசுவரி ராஜசேகர், அரசு வழக்கறிஞர் சிவராஜா நீதி மன்னன், ஏசு சாமுவேல், இளைஞர் அணி சாரதி, அவனியாபுரம் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்
- மதுரை பாலதண்டாயுதபாணி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
- விழா ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள் மற்றும் கார்த்திகை தீப குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் கார்த்திகை தீப திரு விழா நடந்தது. பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறத்தில் மலை மீதுள்ள தீப கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தொடங்கி வைத்தார். கவுன்சிலர் கார்த்திகா ராணி மோகன் முன்னிலை வகித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள் மற்றும் கார்த்திகை தீப குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.
- மேலூரில் ரூ.3.45 கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
- சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலூர் யூனியன் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், வெங்கடேசன், பூமிநாதன் மற்றும் பலர் உள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 3.45 கோடி மதிப்பில் புதிய யூனியன் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் பூமிநாதன், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா, மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், வள்ளாலபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மேலூர் யூனியன் வைஸ் சேர்மன் பாலகிருஷ்ணன், மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாசின், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர், மேலூர் வட்டாட்சியர் சரவண பெருமாள், மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், யூனியன் முன்னாள் சேர்மன்கள் செல்வராஜ், வெற்றிச்செழியன், முன்னாள் துணைச் சேர்மன் குலோத்துங்கன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சுபைத அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலூர் வட்டம் தெற்கு தெரு மற்றும் கருத்த புளியம்பட்டி கிராமத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ. 84.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள அடுக்கு மாடி குடியிப்பு கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஆணை களை வழங்கினார்.
- தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அடுத்துள்ள திரளி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது40), கட்டித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஹம்சவர்தணி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது மகளை கல்லூரிக்கு பஸ் ஏற்றி விட்டு சென்ற குமரேசன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் திரளி கவுண்டமா நதி தடுப்பணை அருகே ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.
இதுதொடர்பாக போலீ சார் விசாரணை நடத்திய போது தடுப்பணை யில் இறந்து கிடந்தது குமரேசன் என தெரியவந்தது. அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மதுரை அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
- விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஏ.தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்( வயது 47), ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு திருமேனி என்ற மனைவி யும், ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று மாரி யப்பன் மோட்டார் சைக்கி ளில் டி.கல்லுப் பட்டிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். டி.குன்னத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து ராஜ பாளையம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் தலையில் பலத்த காய மடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார்.
- இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூத்தி யார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் காசி விசுவநாதன்(26), கட்டிட தொழிலாளி.
இவர் இரவு நேரத்தில் வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது காசி விசுவநாதன் மீது அந்த வழியாக வந்த ரெயில் மோதியது.
இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் காசி விஸ்வநாதன் நீண்டநேர மாகியும் வீடு திரும்பாததால் காலையில் உறவினர்கள் தேடிப்பார்த்தனர். அப்போது காசி விசுவநாதன் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தது தெரியவந்தது. மதுரை ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோத னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஸ் பூஜாரி, மதுரை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.
- சிறையில் பணியாற்றிய 9 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
மதுரை:
மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் அது தொடர்பான எவ்வித அறிக்கையும் நிர்வாகத்தில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. மேலும் அந்த புகார் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில் சிறையில் அதிகாரிகளால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு சில மோசடி நடந்தது உண்மை என்பது தெரியவந்ததில் அங்கு பணிபுரியும் சிலரிடம் அது தொடர்பான பணத்தையும் சிறை நிர்வாகம் பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது.
சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஸ் பூஜாரி, மதுரை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அவரும் இது குறித்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறையில் பணியாற்றிய 9 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
- தினமும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 392 லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மதுரை மக்களுக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
- ஆவின் தரப்பில் விசாரித்தபோது அங்கு பால் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், வாகனங்களில் அனுப்பி வைக்கவும் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
மதுரை:
மதுரையில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக மதுரையில் 47 ஆவின் பாலகங்கள், 390 டெப்போக்கள் மூலம் இந்த ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படு கின்றன.
இதற்காக மதுரை கே.கே. நகரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் பாக்கெட்டுகளை வாகனங்களில் ஏற்றி சம்பந்தப்பட்ட பால் பூத்துகள் மற்றும் ஆவின் பாலகங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
ஆனால் கடந்த சில வாரங்களாக ஆவின் பால் விநியோகத்தில் அடிக்கடி காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பால் விநியோக முகவர்கள் ஆவின் நிறுவனத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் முற்றுகையிட்டு தாமதம் இன்றி பால் விநியோகத்தை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இன்று காலை வழக்கம் போல 5 மணிக்கு சப்ளை செய்ய வேண்டிய ஆவின் பால் பாக்கெட் சுமார் 2 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு மேல் பால் பூத்துகளுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட முகவர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்க தயக்கம் காட்டினர். காரணம் 7 மணிக்கு மேல் பால் பாக்கெட் விற்பனை வழக்கம் போல இருக்காது என்பதால் முகவர்கள் ஆவின் ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
தினமும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 392 லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மதுரை மக்களுக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காலதாமதம் காரணமாக இந்த விற்பனை பெருமளவில் சரிவை சந்தித்துள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆவின் தரப்பில் விசாரித்தபோது அங்கு பால் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், வாகனங்களில் அனுப்பி வைக்கவும் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வராதாலும், பலர் விடுமுறையில் இருப்பதாலும் பால் பாக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்வதில் பிரச்சனை எழுந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக ஆவின் அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து காலதாமதம் இன்றி பால் பாக்கெட்டுகளை விநியோகத்திற்கு அனுப்பினால் தான் மதுரை ஆவின் தனது விற்பனை இலக்கை தொடர்ந்து சரி கட்ட முடியும் என்று பாதிக்கப்பட்ட முகவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வியாபாரிகளிடையே மோதலை தவிர்க்க மார்க்கெட் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
மதுரை:
மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சில கடைகள் திறக்கப்பட்டதால் அங்கு மோதலை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிக சென்ட்ரல் மார்க்கெட் இயங்கி வருகிறது.இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாத வாடகை கடைகளும், 800-க்கும் அதிகமான தரைக்கடைகளும் உள்ளன. இங்குள்ள வியாபாரிகள் மாநகராட்சிக்கு மாத வாடகை செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு உள்ள காலங்களில் சுமார் 36 மாத வாடகையை கட்டாயப்படுத்தி மதுரை மாநகராட்சி வசூல் செய்து வருகிறது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தியும், கோர்ட்டு உத்தரவின்படி புதிதாக அமல்படுத்திய நிலுவைத் தொகை வாடகைக்கு விதிக்கப்படும் அபராத வட்டியை ரத்து செய்வது, வாடகை தொகையில் ஜி.எஸ்.டி. விலக்கு பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அதன்படி சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள சுமார் 75 சதவீத கடைகள் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்தனர். ஆனாலும் 25 சதவீத கடைகள் திறக்கப்பட்டு இன்று விற்பனைக்கு வந்த காய்கறிகளை பொது மக்களுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறார்கள்.
எனவே திறக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் தடையின்றி நடைபெறும் வகையிலும், வியாபாரிகளிடையே மோதலை தவிர்க்கவும் மார்க்கெட் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
சுமார் 75 சதவீதகடைகள் அடைக்கப்பட்டதால் சென்ட்ரல் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் பரவை மார்க்கெட்டுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாட்டுத் தாவணி சென்ட்ரல் மார்க்கெட் வளாகம் வாகனங்கள், மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது.
இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு மதுரை மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்த்து எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாட்டுத் தாவணி வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- சமுதாய நல்லிணக்கத்துக்கு வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேற்படி தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து விருதினை பெறலாம்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது.
இந்த விருதானது தலா ரூ.20 ஆயிரம், ரூ.10ஆயிரம், ரூ.5 ஆயிரம் தகுதிஉடையோருக்கு வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயலாற்றல் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில இந்த பதக்கத்தைப் பெறத் தகுதிஉடையவர் ஆவார்.
இந்த விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த 3 விண்ணப்பப் படிவங்கள் வருகிற 12-12-2022 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மேற்படி தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து விருதினை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






