என் மலர்
மதுரை
- பள்ளிகளுக்கு முன்பு போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது.
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது குடிக்கின்றனர்.
தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை மற்றும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க சார்பில் பரவை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு தலைமை தாங்கிய பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதாவது:
குஜராத்தை பொறுத்தவரை அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு சொந்த ஊர். எனவே அப்பகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். காசியில் தமிழ் பற்றி பேசியதால் அப்பகுதி தமிழர்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து வருகிற கட்சி. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும். அது பா.ஜ.க கையில்தான் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
கோவை செல்வராஜ் ஏற்கனவே காங்கிரசில் இருந்தார். பின்னர் இப்போது தி.மு.க.வில் சேர்ந்துள்ளார். அவர் அடிக்கடி கட்சி மாறுவார். அ.தி.மு.க.வில் இருந்து கட்சி மாறியவர்கள் கூட தி.மு.க.வில் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். தற்போது தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடவில்லை, எங்கு பார்த்தாலும் போதை ஆறு தான் ஓடுகிறது. ஒரு காலத்தில் பெரியவர்கள் மட்டுமே மது குடித்த நிலை இருந்தது.
ஆனால் தற்போது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மது குடிக்கின்றனர். பள்ளிகளுக்கு முன்பாக போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகிறது. இதை பார்க்கும் போதும், கேட்கும் போதும் வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
- ராமேசுவரம்- தனுஷ்கோடி புதிய ரெயில் பாதைக்கான நிலஆர்ஜித பணிகள் நடந்து வருகிறது.
- ராமேசுவரத்தில் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை
தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் இன்று ராமேசுவரம் சென்றார். அங்குள்ள ரெயில் நிலையத்தில் ரூ.90 கோடி செலவில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள், ராமேசுவரம் -தனுஷ்கோடி புதிய ரெயில் பாதை திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராமேசுவரம் ரெயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் 2 மாதத்தில் தொடங்கும். இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது. ஒப்பந்ததாரர் வரை படங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ராமேசுவரம் போன்ற பெரிய சுற்றுலா தலத்தில் பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடுக்கு தனித்தனி முனையங்கள் அமைய உள்ளன. அங்கு விசாலமான வாகன நிறுத்துமிடம், 2 மாடி ரெயில் நிலைய கட்டிடத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் அமைய உள்ளன.
புதிய பாம்பன் ரெயில் பாலப் பணிகள் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்தில் முடிவடையும். ராமேசுவரம்- தனுஷ்கோடி புதிய ரெயில் பாதைக்கான நிலஆர்ஜித பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தேவையான நிலம் கிடைத்தவுடன் ஒப்பந்த புள்ளி கோரப்படும். ராமே சுவரம் வரையிலான மின்மயமாக்கல் பணிகள், உச்சிப்புளி கடற்படை விமானதள விரிவாக்கத்திற்கான ரெயில் பாதை மாற்றத்திற்கு பிறகு தொடங்கும் என்றார்.
மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், தெற்கு ரெயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் ஜிங்கர், ரெயில் விகாஸ் நிகம் திட்ட அதிகாரி கமலாகர ரெட்டி, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, துணை முதன்மை பொறியாளர் ரதி ஆகியோர் உடனிருந்தனர்.
- உலகின் அனைத்து ஜீவராசிகளின் உரிமையையும் காப்பது நமது கடமை மனித உரிமை கருத்தரங்கில் ஐகோர்ட்டு நீதிபதி பேசினார்.
- கருத்தரங்கின் நோக்கம் குறித்து உதவி பேராசிரியர் முத்துக்குமார் எடுத்துரைத்தார்.
மதுரை
மதுரை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி இயக்ககம் சார்பில் உலக மனித உரிமை தினத்தையொட்டி ''மனித உரிமை மற்றும் நீதியின் சவால்கள்'' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் பால கிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பங்கேற்றார். அவர் பேசுகையில், மனித உரிமை என்பது மனிதர்களை மட்டுமல்லாது இயற்கை யையும், பிற உயிர்களையும் பாதுகாப்பது ஆகும். மனி தர்களை போல பிற ஜீவரா சிகளுக்கும், மரங்கள் செடி, கொடிகளுக்கும், இயற்கைக்கும் அனைத்தை யும் பெற உரிமை உண்டு.
நாம் மனித உரிமையை மட்டுமல்லாது மற்ற அனைத்தையும் பாது காத்தால் மட்டுமே ஒட்டு மொத்தமாக முன்னேற முடியும். ஒவ்வொருவரும் மனித உரிமையை காப்பது அவசியம் என்றார்.
கருத்தரங்கின் நோக்கம் குறித்து உதவி பேராசிரியர் முத்துக்குமார் எடுத்துரைத்தார். இணை பேராசிரியர் குமரன் நன்றி கூறினார். சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா, மனித உரிமை அரசு வக்கீல் கணேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தென்மண்டல தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் முகாம் மதுரையில் 20-ந் தேதி நடக்கிறது.
- தபால் கவரின் முன் பக்கத்தில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்- டிசம்பர் 2022 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
மதுரை
தென்மண்டல தபால்துறை தலைவர் அலுவலக உதவி இயக்குநர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மண்டல தபால்துறை தலைவர் அலுவலகத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியா குமரிமாவட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் தொடர்பாக வாடிக்கையா ளர்களின் குறைதீர்க்கும் முகாம் வருகிற 20-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மதுரை பீ.பி.குளத்தில் உள்ள தென்மண்டல தபால் துறைத்தலைவர் அலுவலகத் தில் நடக்கும் இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ள புகார்தாரர்கள், தங்களது புகார் மனுக்களை வருகிற 13-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மனுவில், தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் பெயர், முகவரி, ரசீது எண், மணியார்டர், ஸ்பீடுபோஸ்ட், பதிவுத்தபால் ஆகிய விவரங் களை குறிப்பிட வேண்டும். சேமிப்பு வங்கி, தபால்
காப்பீடு, கிராமிய தபால் காப்பீடு உள்ளிட்ட புகார் மனுக்களில், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர், முகவரி, பணம் செலுத்திய விவரம், பணம் செலுத்திய தபால் அலுவலகத்தின் பெயர், தபால்துறையில் பெறப்பட்ட கடிதங்கள் இருப்பின் அதனையும் இணைக்க வேண்டும்.
இந்த முகாமை பொறுத்த மட்டில் சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களில் ஏற்கனவே மனு கொடுத்து கோட்ட தபால் கண்காணிப் பாளர் கொடுத்த பதிலில் திருப்தி இல்லாதவர்கள் மட் டும் தங்களது குறைகளை அனுப்ப வேண்டும். புதிய புகார்களின் மீது எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
அதேபோல, தனியார் கூரியர் மூலம் அனுப்பும் புகார் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புகார் மனுக்களை உதவி இயக்குநர், தபால் துறைத்தலைவர் அலுவலகம், தென் மண்டலம், மதுரை-2 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தபால் கவரின் முன் பக்கத்தில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்- டிசம்பர் 2022 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சாலை மறியலை கைவிட்டனர்.
அவனியாபுரம்
மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் அம்பேத்கர் சிலையை இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சிலைக்கு மாலை அணி விக்க மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அங்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களை தடுத்து நிறுத்தி பா.ஜ.க. கொடி இல்லாமல் செல்ல வேண்டும் என்று கூறினர். இதனால் இரு கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் கட்சி கொடி இல்லாமல் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம் என கேட்டனர்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு நாளை நேரம் தருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் மேற்கு மாவட்ட தலைவர் சசி குமார், வேல்முருகன், சுப.நாகராஜன், சடாச்சரம், வெற்றிவேல், முருகன் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
அதே வேளையில் பா.ஜ.க.வினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சாலை மறியலை கைவிட்டனர்.
- பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
- தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் ரங்கசாமி, துணை தலைவர்கள் ராமசாமி, மூர்த்தி, சுப்பையா முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சிந்தனை வளவன் வரவேற்றார்.
பேரூராட்சி பணியாளர்கள் சங்க தலைவர் பிச்சைமுத்து சிறப்புரையாற்றினார். இதில் 15 பேரை கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மாவட்ட பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் அமைத்து செயல்படுவது, அரசாணை எண் 115, 139, 152-ல் உள்ள பேரூராட்சி, மாநகராட்சி பகுதியில் பகுதி நேரமாக பணியாற்றும் கீழ்த்தல பணியாளர்களை நீக்கி தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும், வருகிற 9-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகள் உட்பட 3 அரசாணையை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர் விடுதலை முன்னணி அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.
- அலங்காநல்லூர்-பாலமேட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தி.மு.க. அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் அழகுராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், துணை செயலாளர் சம்பத், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோன்று பாலமேடு பேரூர் அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சி துணை சேர்மன் ராமராஜ், ராஜவேல் பாண்டியன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலமேடு பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சமுதாய நல்லிணக்கத்துக்கு வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது.
இந்த விருதானது தலா ரூ.20 ஆயிரம், ரூ.10ஆயிரம், ரூ.5 ஆயிரம் தகுதிஉடையோருக்கு வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயலாற்றல் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில இந்த பதக்கத்தைப் பெறத் தகுதிஉடையவர் ஆவார்.
இந்த விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த 3 விண்ணப்பப் படிவங்கள் வருகிற 12-12-2022 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மேற்படி தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து விருதினை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை ஆரப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது மற்றும் களப்பணி குழுவினரின் பணிகளை காணொலி காட்சி மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்களை முதலமைச்சர் வழங்கினார்.
மதுரை:
தூய்மை பணியாளர்களின் வாழ்வினை மேப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த திட்டம் தொடங்கியது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா மதுரை மாநகராட்சியில் உள்ள அண்ணா மாளிகையில் இன்று காலை நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இதற்கான இலட்சினை (லோகோ) மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்பின் தூய்மைப்பணியாளர்களுக்கான செல்போன் செயலியையும் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை, காலுறை, ஒளிரும் மேல்சட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். பின்பு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கள ஆய்வு பணிகள் மற்றும் மேம்பாட்டு திட்ட குறும்படங்களை பார்வையிட்டார். இதையடுத்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த தி.மு.க. கவுன்சிலர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் சால்வைகளை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், தளபதி, தமிழரசி, மேயர் இந்திராணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண்குமார் குராலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சியில் நடந்த விழாவை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருங்குடிக்கு சென்றார். அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கார் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் உருவ படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மதுரை விமான நிலையத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விழாக்கள் நடந்த மாநகராட்சி அலுவலகம் முதல் பெருங்குடி பகுதி மட்டுமின்றி முதலமைச்சர் சென்ற வழி நெடுகிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- மதுரையில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மதுரை:
மதுரையில் நாளை மாநகராட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து பெருங்குடியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையையும் திறந்து வைத்து பேசுகிறார்.
மதுரை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ரெயில் பயணம் செய்யும் மு.க.ஸ்டாலின் இன்று காலை தென்காசி சென்றடைந்தார்.
ரெயில் நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்காசியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பின்னர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வருகிறார். சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் காரில் புறப்பட்டு மதுரை வருகிறார். அவருக்கு மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் தே. கல்லுப்பட்டி பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து வழிநெடுகிலும் தி.மு.க. வினர் பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இன்று மாலை மதுரை வரும் மு.க.ஸ்டாலின் அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை (9-ந் தேதி) காலை 10 மணியளவில் மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகிறார்.
அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொன்விழா நினைவு நுழைவாயிலை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து மாநகராட்சி அரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டுத்திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
பின்னர் காரில் புறப்படும் மு.க.ஸ்டாலின் தல்லாகுளம், கோரிப்பாளையம், வில்லாபுரம் வழியாக பெருங்குடி வருகிறார். மதுரை விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
- திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை கீழவெளி வீதி, சுங்கம் பள்ளி வாசல், பதிமுத்து இல்லத்தை சேர்ந்தவர் அப்துல்ஹமீது. இவரது மகன் சம்சுதீன் (வயது30). இவர் 2003-ம் ஆண்டு கீழவாசல் பஸ் நிறுத்தம் முன்பு 4 ½ பவுன் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் சம்சுதீனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி சம்சுதீன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மற்றொரு வழக்கு
திருப்பூர் முருகப்பாளையபுரம், குமார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஸ்டீபன் (37). இவர் 2008-ம் ஆண்டு மதுரை தெற்காவணி மூல வீதி எம்.எஸ். தங்க மாளிகை நகை கடை முன்பு நின்ற இருசக்கர வாகனத்தின் மீது வைத்திருந்த சுமார் 520 கிராம் தங்க நகைகள் கொண்ட பையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமைறைவாகி விட்டார்.பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் ஸ்டீபனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி ஸ்டீபன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம் கூட்டும் பொதுக்குழு கண்காட்சி கூட்டமாகவே இருக்கும் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
- நிர்வாகிகளும் இல்லை, தொண்டர்களும் இல்லை, கட்சியும் இல்லை.
திருப்பரங்குன்றம்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மக்கள் விரோத அரசு ஆண்டு கொண்டிருக்கிறது. மக்களை வஞ்சிக்கும் வகையில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத போக்கை தி.மு.க. அரசு செய்து வருகிறது. இதனை கண்டித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் வருகிற 9, 13, 14 ஆகிய நாட்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து ஓ.பி.எஸ். உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அவரிடம் தற்போது கட்சி நிர்வாகிகளும் இல்லை. தொண்டர்களும் இல்லை. கட்சியும் இல்லை. இதை உணர்ந்ததால் தான் அவருக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாட வழக்கறிஞர்கள் இல்லாமல், இலவச சட்ட மையத்தை நாட வேண்டிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் கூட்டப் போகும் பொதுக்குழு வெறும் கண்காட்சி கூட்டமாகவே இருக்கப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே. சந்திரன், இலக்கிய அணி செயலாளர் மோகன் தாஸ், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தினம், பாலா, பொன்.முருகன், என்.எஸ்.பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






