என் மலர்
மதுரை
- அலங்காநல்லூர் அருகே தைப்பூச விழாவையொட்டி பக்தர்கள் பறவை காவடி எடுத்தனர்.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி வகுத்துமலை அடிவரத்தில் சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்தகோவிலின் 14-ம் ஆண்டு தைப்பூச உற்சவ விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக முருக பக்தர்கள் கொண்டையம்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் வேல்குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.
- பாலமேடு அருகே ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பூமிபூஜை நடந்தது.
- அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலையபட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.82 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வள்ளி, பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன், வாட்டார கல்வி அலுவலர்கள் ஆஷா, ஜெஷிந்தா, தலைமை ஆசிரியர் ஞானசேகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜா, இல்லம் தேவி கல்வி ஒன்றிய பொறுப்பாளர் சுதாகர், ஒப்பந்ததாரர் கண்ணன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் பல்வேறு பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலைய பட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.
- ஐஸ்கிரீமில் தவளை கிடந்தது பற்றி ஜானகிஸ்ரீ திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை:
மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ. தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று இவர் தனது மகள்கள் மித்ராஸ்ரீ(வயது 8), ரக்சனாஸ்ரீ(7) மற்றும் உறவினர் மகள் தாரணி(4) ஆகியோரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அழைத்து வந்தார்.
அப்போது கோவில் அருகில் உள்ள ஒரு குளிர்பான கடையில் குழந்தைகளுக்கு ஜிகர்தண்டா வாங்கி கொடுத்தார். அதனை குடித்த 3 குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்தனர். இதனால் சந்தேகமடைந்த ஜானகிஸ்ரீ குழந்தைகள் குடித்த ஜிகர்தண்டாவை வாங்கி பார்த்தார்.
அப்போது அதில் போடப்பட்டிருந்த ஐஸ்கிரீமில் ஒரு தவளை செத்து கிடந்தது. இதையடுத்து வாந்தி எடுத்த 3 குழந்தைகளும் திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஐஸ்கிரீமில் தவளை கிடந்தது பற்றி ஜானகிஸ்ரீ திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குளிர்பான கடையின் உரிமையாளர் துரைராஜன்(60) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
- மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
- திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை:
மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதையொட்டி இன்று (6-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று மட்டும் திண்டுக்கல் வரை இயக்கப்படும்.
திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் நாளை ( 7-ந் தேதி) கூடல் நகர் வரை மட்டும் செல்லும். மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் 6,7,8-ந் தேதிகளில் கூடல் நகரில் இருந்து இயக்கப்படும். நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும்.
மதுரை-செங்கோட்டை முன்பதிவற்ற பயணிகள் ரெயில், இரு மார்க்கங்களிலும் விருதுநகர் வரை மட்டும் செல்லும். விழுப்புரம்-மதுரை ரெயில் இரு மாருகங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் செல்லும்.
மதுரை-கோவை ரெயில் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் 7-ந் தேதி நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில், நாளை (7-ந் தேதி) ஒரு நாள் மட்டும் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை இயக்கப்படும்.
குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரெயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் 8-ந் தேதி வரை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும். கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் நாளை (7-ந் தேதி) விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக செல்லும்.
ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இன்று (6-ந் தேதி) மற்றும் 8-ந் தேதி மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செல்லும். தேனியில் இருந்து மதுரை வரும் பயணிகள் சிறப்பு ரெயில், 30 நிமிடம் தாமதமாக மாலை 6.45 மணிக்கு வரும். திருச்சி பயணிகள் ரெயில், 30 நிமிடம் தாமதமாக மானாமதுரைக்கு வரும்.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு குறித்து அறிக்கை வெளியிடுவேன் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
- மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., உள்பட பலர் உடனிருந்தனர்.
மதுரை
மதுரை விமான நிலையத்திற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்தார். அவரிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு படிவம் குறித்து நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளிக்க மறுத்த ஓ.பி.எஸ். மாலை 3 மணிக்கு மேல் இதுகுறித்து அறிக்கை வெளியிடுவேன் என்று தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், வி.கே.எஸ்.மாரிசாமி, பி.எஸ்.கண்ணன், பேரவை குணசேகரன், சோலை இளவரசன், ராமநாதன், ஆட்டோ கருப்பையா, அர்ஜுன், கிரி உள்பட பலர் உடனிருந்தனர்.
- ஜெய பாரத் ஹோம்ஸ் சார்பில் டைட்டன் சிட்டி தொடக்க விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி மதுரையில் இன்று மாலை நடக்கிறது
- தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
மதுரை
ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யா நகரில் டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்திற்கான தொடக்க விழா இன்று (5-ந் தேதி) மாலை நடக்கிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்கிறார்.
இதுகுறித்து ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் கூறியதாவது:-
கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்ட உள்ளது.
இதற்கான தொடக்க விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.ஜெயகுமார் தலைமை தாங்குகிறார். நிர்வாகி ஜெ.நிர்மலாதேவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமங்கலம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
- மழைநீரை அப்புறப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உச்சப்பட்டி கிராமத்தில் சிவன் நகர், இந்திராநகர் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது. இப்பகுதி விரிவாக்க பகுதி என்பதால் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் அமைத்து தராமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் உச்சப்பட்டி கண்மாயில் தண்ணீர் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்வது வழக்கமாக உள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை இப்பகுதியில் மழை வெள்ளம் புகுந்து குடியிருப்பு வாசிகள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 4 மாதமாக தண்ணீர் வற்றாததால் இப்பகுதி மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும், விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் நுழைவதாகவும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
மழைநீரை அப்புறப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கழிவு நீர் தொட்டியில் பெண் சிசு பிணம் மிதந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு அருகில் உள்ள ஒரு கழிவு நீர் தொட்டியில் ஒரு குழந்தை பிணமாக மிதந்த நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று கழிவுநீர் தொட்டியில் கிடந்த அந்த குழந்தை உடலை மீட்டனர். அது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஆகும்.
அந்த குழந்தையை கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்காக வந்திருந்த யாரோ பெண் தான், பெண் சிசு சடலத்தை கழிவு நீர் தொட்டியில் வீசிச்சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
கள்ளக்காதலில் பிறந்ததால் வேண்டாம் என்று குழந்தையை பெற்றெடுத்த பெண் வீசி சென்றாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலத்தில் விபத்தில் பட்டாசு ஆலை தொழிலாளி பலியானார்.
- இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
சிவகாசியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது50). பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது உறவினர்கள் கணேசன் மற்றும் போசுடன் காரியாபட்டியில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஆவல்சூரன்பட்டி அருகே வந்த போது அங்கிருந்த கண்மாய் பாலத்தில் ஏறிய போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பாலத்திற்கு கீழே விழுந்தனர்.
இதில் படுகாயமடைந்த மாரிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிச்சாமி உடலை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அருகில் காயங்களுடன் கிடந்த கணேசன், போஸ் ஆகியோரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 30). மாணவரணி தி.மு.க. அமைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை இருந்தனர்.
மணிகண்டபிரபுவின் மனைவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் மணிகண்டபிரபு இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்த கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மணிகண்ட பிரபுவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அது தவிர இவர் அதே பகுதியில் சிறு தொழில் ஒன்றையும் செய்து வந்தார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வேதனையில் இருந்துள்ளார்.
இதனால் அவர் வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டுள்ளது.
- ஜெயிலில் கைதிகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்ய அதிநவீன கருவிகள் இல்லை.
மதுரை
தமிழகத்தில் மதுரை உள்பட 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அங்கு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மதுரை கரிமேடு பகுதியில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 1850 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பாதுகாக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்ட சிறைத்துறை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மத்திய ஜெயிலில் கைதிகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்ய அதிநவீன கருவிகள் இல்லை. எனவே ஜெயிலுக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டன.
எனவே மதுரை மத்திய ஜெயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதன்படி மதுரை மத்திய ஜெயிலுக்குள் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன. அடுத்த படியாக சிறைவாசிகளுக்கு இன்டர்காம் நேர்காணல் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது. மேலும் புதிதாக ஒரு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கைதிகளின் உடைமைகளை சோதனை செய்யும் வகையில் அதிநவீன சாதனங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று டி.ஜிபி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதன்படி மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன் மற்றும் அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிநவீன கருவிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இதன் அடிப்படையில் புதிய எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் கொள்முதல் செய்யப்பட்டு, மதுரை மத்திய ஜெயில் நுழைவாயிலில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறைக்குள் கொண்டு செல்லும் பொருட்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். மதுரை மத்திய ஜெயிலில் புதிய எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் செயல்பாட்டை, சிறைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-
மதுரை மத்திய ஜெயில் வளாகத்தில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டு உள்ளது. இது கைதிகளின் உடமைகளை துல்லியமாக பரிசோதனை செய்யும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்ல முயன்றால், அதனை இந்த அதிநவீன எந்திரம் உடனடியாக காட்டிக் கொடுத்து விடும்.
மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டு இருப்பதால், ஜெயிலுக்குள் இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு முற்றிலுமாக தடுக்கப்படும் .
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மின் மீட்டர்கள் மாயமானது
- 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுரை
மதுரை டி.வி.எஸ்.நகர் மின்வாரிய அலுவ லகத்தில் பழைய மின் மீட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை திடீரென மாயமானது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் தரப்பில் பதில் இல்லை.
இதற்கிடையே டி.வி.எஸ்.நகர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து சிலர் தனியார் வாகனங்களில் பழைய மின் மீட்டர்களை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மதுரை சத்ய சாய்நகர், ரோஜா தெருவை சேர்ந்த என்.ஜி.மோகன் என்பவர், மதுரை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார்.
இந்த புகார் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திராவின் கவனத்திற்கு வந்தது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது இந்த சம்பவத்தில் 4 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உதவி மின் பொறியாளர் ஆனந்தகுமார், மின் கணக்கீட்டு ஆய்வாளர் ஜவகர், மின் வணிக ஆய்வாளர் தாளமுத்து நேரு ஆகிய 3 பேருக்கான ஓராண்டு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழைய மின்சார மீட்டர்கள் மாயமான விவகாரத்தில், அதிகாரி சுதந்திர பாண்டியனின் 3 மாத ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் உடனடியாக ரூ. 54 ஆயிரத்து 750 -ஐ அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






