என் மலர்tooltip icon

    மதுரை

    • கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள் அசத்தினர்.
    • உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தியது.

    திருமங்கலம்

    உலக சோடகான் கராத்தே அமைப்பும், திருமங்கலம் லீ சாம்பியன் ஆர்ட்சும் இணைந்து உலக சாதனை நிகழ்ச்சியாக கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகளை நடத்தியது. திருமங்கலம் தனியார் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சி உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 5 மணிநேரம் கராத்தேயில் கிக்ஸ் (உதைத்தல்) நிகழ்ச்சியும், 2 கண்களை துணியால் கட்டியவாறு சிலம்பத்தில் இரட்டை கம்பு சுழற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

    ஆணழகன் சங்கத்தின் செயலாளர் மற்றும் சோழன் உலக சாதனை புத்தகத்தின் தென்மாநிலத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நிறுவனர் நிமலன் நீலமேகம் முன்னிலை வகித்தார். கராத்தே அமைப்பின் செயலாளர் பால்பாண்டி வரவேற்றார். கராத்தே கிக்சில் 101 மாணவர்களும், சிலம்பம் சுற்றுவதில் 166 மாணவர்களும் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிவராமன், இந்தியன் சிலம்ப பள்ளி தலைமை பயிற்சியாளர் மணி, மதுரை மாவட்ட சிலம்ப கழகத்தின் பொருளாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரெயில் டிக்கெட் பதிவு செய்ய புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    மதுரை

    ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் எடுக்க, கடைசி நேரத்தில் வரும் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக டிக்கெட் எடுக்கலாம். மேலும் சீசன்- பிளாட்பாரம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். சீசன் டிக்கெட்டுகளை எளிதாக புதுப்பிக்கவும் இயலும்.

    அதாவது ரெயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் முதல் 20 கி.மீ. தொலைவு வரை வீட்டில் இருந்தே பயணச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். மொபைல் போனில் அன்ரிசர்வ் டிக்கெட் எடுக்கும் முறையில் காகிதம் இல்லாத- காகிதத்துடன் கூடிய பயண சீட்டுகள் உள்ளன. அதன்படி சுற்றுச்சூழலுக்கு

    காகிதம் இல்லாத பயணச் சீட்டு எடுக்க முடியும். மொபைல் போன் யூடிஎஸ் செயலியில் "காண்க டிக்கெட்" (SHOW TICKET option) பகுதியில் உள்ள பயணச்சீட்டை எடுக்கலாம். அதனை டிக்கெட் பரிசோதரிடம் காண்பித்துக் கொள்ளலாம். இது காகிதம் இல்லாத முறை ஆகும்.

    அடுத்தபடியாக காகிதத்துடன் கூடிய முறை. இதன்படி பயணச்சீட்டு பதிவு செய்யும்போது வந்த அல்லது குறுஞ்செய்தியில் வந்த அல்லது பதிவு வரலாற்றில் உள்ள பதிவு அடையாள எண் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி டிக்கெட் பதிவு ரெயில் நிலையத்தில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு பதிவு எந்திரத்தில் பயணச்சீட்டு அச்சிட்டு கொள்ளலாம்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் சிறு சிறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருப்பது போல க்யூஆர் கோட், பயணச்சீட்டு அலுவலகம் அருகே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை ஸ்கேன் செய்தவுடன் போக வேண்டிய ரெயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்து மின்னணு வசதி வாயிலாக பணம் செலுத்தி டிக்கெட்டை எளிதாக பதிவு செய்யலாம்.

    காகிதம் இல்லாத முறையில் டிக்கெட் எடுக்கும் போது மொபைல் போனில் பதிவு செய்த பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும். இல்லையெனில் உரிய அபராதம் விதிக்கப்படும். தென்னக ரெயில்வேயில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை கடந்த 10 மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 2.51 கோடி பயணிகள், கூட்ட நெரிசல் இன்றி டிக்கெட் எடுத்து பயணம் செய்து உள்ளனர்.

    தென்னக ரெயில்வேயில் மொபைல் போன் பதிவு மூலம் பயண சீட்டு வருமானமாக ரூ.24.82 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

    • திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் குருத்திகா பட்டேல் கடத்தப்பட்டுள்ளார்.
    • குருத்திகா பட்டேல் குஜராத்திற்கு கடத்தப்பட்டதாக கூறி மாயமான குருத்திகாவை மீட்டு போலீசார் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    மதுரை:

    தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த வினித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி அருகே கொட்டாகுளத்தில் வசித்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றுகிறேன். இதே பகுதியில் இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன்பட்டேல். இவருடைய மகள் குருத்திகாபட்டேல். நானும் குருத்திகாபட்டேலும் கடந்த 6 வருடங்களாக காதலித்தோம். கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்.

    இதற்கிடையே தன்னுடைய மகளை காணவில்லை என நவீன்பட்டேல் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தாா். அது தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம் 4-ந்தேதி நான் எனது மனைவியுடன் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானேன். அங்கு போலீசார் முன்னிலையில் கணவர் என்ற முறையில் என்னுடன் செல்ல விரும்புவதாக குருத்திகா பட்டேல் தெரிவித்தார். அதன் பெயரில் நான் அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

    இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி என்னுடைய மனைவியுடன் தென்காசியில் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு அவரது பெற்றோர் வந்து என்னுடன் தகராறில் ஈடுபட்டனா்.

    இதுகுறித்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன். இந்த புகாா் மனுவின் மீதான விசாரணைக்கு நான், என் மனைவி, என் தந்தை, சகோதரா் ஆகியோருடன் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானேன். ஆனால் என் மனைவியின் பெற்றோர் வருவதற்கு தாமதமானது. இதையடுத்து நாங்கள் எங்கள் வீட்டிற்கு காரில் சென்று கொண்டு இருந்தோம்.

    அப்போது எங்களை வழிமறித்து குருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடுமையாக தாக்கி என் மனைவி குருத்திகாவை கடத்திச் சென்றுவிட்டனர்.

    நான் இது குறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தேன். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், குருத்திகா பட்டேலை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் குருத்திகா பட்டேல் கடத்தப்பட்டுள்ளார். எனவே என் மனைவி குருத்திகா பட்டேலை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைதாகியுள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே குருத்திகா பட்டேல் குஜராத்திற்கு கடத்தப்பட்டதாக கூறி மாயமான குருத்திகாவை மீட்டு போலீசார் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை காப்பகத்தில் வைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தென்காசி கோர்ட்டில் குருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தென்காசி போலீசார் தாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து நீதிபதிகள், குருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணையில் அவர் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்ததாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர். அதற்கு மனுதாரர் சார்பில் வக்கீல் ஆஜராகி, குருத்திகா பட்டேலிடம் பெறப்பட்ட விசாரணை முறையாக இல்லை என தெரிவித்தார்.

    இதனையடுத்து நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை பொருத்தவரையில் பெண் யாருடன் செல்வதாக தெரிவிக்கிறாரோ, அவருடன்தான் அனுப்பப்படுவார் என்றனர்.

    அரசு தரப்பில், குருத்திகா பெற்றோர்கள் தலைமறைவாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது குருத்திகா பெற்றோர் சார்பில் வக்கீல் ஆஜராகி, உறவினர்களிடம் குருத்திகாவை ஒப்படைக்கலாம் என தெரிவித்தார்.

    இதனையடுத்து நீதிபதிகள், குருத்திகா உறவினர்கள் தரப்பில் குருத்திகாவை அழைத்துச் செல்வதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அதனை போலீசார் முறையாக விசாரணை செய்ய வேண்டும். குருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம் எனக் கூறி வழக்கு விசாரணையை நாளை (14-ந்தேதி)க்கு ஒத்திவைத்தனர்.

    குருத்திகா பெற்றோர் தரப்பில், இந்த விவகாரத்தில் மீடியாக்கள் மீது புகார் தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள் நீங்களாக விருப்பப்பட்டு செய்தது. இதில் மீடியாக்களை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை என தெரிவித்தனர்.

    • பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு பக்தர்கள் அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
    • பக்தர் ஒருவர் 18 அடி உயரமுள்ள அரிவாளை காணிக்கையாக செலுத்தினார்.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தானியங்கள், காசு, பண முடிச்சு மற்றும் கன்றுகுட்டிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படிகருப்பணசுவாமிக்கு பக்தர்கள் சந்தனம், எலுமிச்சம்பழ மாலைகள், பூவண்ண மாலைகள் மற்றும் அரிவாள்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்,

    இதில் நேற்று ஒரு பக்தர் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள அரிவாளை காணிக்கையாக செலுத்தி, சாமி தரிசனம் செய்தார். மேலும் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட அரிவாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் அன்றாட தேவைக்கு குடிநீரை பயன்படுத்த முடியாமல் அல்லாடி வருகின்றனர்.
    • நிலத்தடி நீரை சுரண்டி லாரிகள் மூலம் தண்ணீர் விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, 28 லட்சம் ஆகும். இதில் நகர்ப்புறத்தில் மட்டும் 16 லட்சம் பேர் வசிக்கின்றனர். மதுரை மாநகரில் வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    மதுரை மாநகரில் கடந்த 2010-ம் ஆண்டு வரை 72 வார்டுகள் மட்டுமே இருந்தன. இந்த நிலையில், மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மேலும் 28 வார்டுகள் உருவாக்கப்பட்டன. அதுவும் தற்போது மதுரை மாநகராட்சியில் இணைக்கப்பட்டு உள்ளன. எனவே மதுரை மாநகரில் 100 வார்டுகள் உள்ளன.

    மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து 115 மெட்ரிக் டன் கன அடியும், ஆற்றுப்படுகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக 30 மெட்ரிக் டன் கன அடி, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 10 மெட்ரிக் டன் கனஅடி உள்பட மொத்தம் 155 மெட்ரிக் டன் கன அடி தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

    மதுரை மாநகரில் நபர் ஒருவருக்கு சராசரியாக 100 லிட்டர் வீதம் குடிதண்ணீர், மதுரை மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டது. எனவே 100 வார்டுகளுக்கும் சேர்த்து 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைக்கு குடிநீரை பயன்படுத்த முடியாமல் அல்லாடி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில நிறுவனங்கள் தனியார் நிலத்தில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக ரீதியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    மதுரை கோச்சடை, பரவை, கருப்பாயூரணி, உச்சபரம்புமேடு, செல்லூர், விளாங்குடி , விரகனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி தனியார் நிலத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு இருந்து தினந்தோறும் கோடிக்கணக்கான லிட்டர் கணக்கில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதுவும் தவிர விவசாய கிணறுகளில் இருந்தும் லாரிகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகின்றன.

    இங்கு ஒரு லாரிக்கு ரூ.150 வீதம் 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. அதன் பிறகு அவை மதுரைக்கு கொண்டு வரப்பட்டு லாரிக்கு ரூ.1600 முதல் ரூ.3000 வரை தொலைவுக்கு ஏற்ப வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள், ஆழ்துளை கிணற்றில் இருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி 24 மணி நேரமும் தண்ணீரை வணிக ரீதியாக விற்பனை செய்து வருகிறது. எனவே சட்டவிரோதமாக அனுமதி இன்றி ஆழ்துளை கிணறு அமைத்து நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு சட்ட விரோதமாக அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடந்தையாக இருக்கும் ஒரு சில அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

    ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கும்போது சட்டவிதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன் கூறுகையில், 'தனியார் நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க, மாநகராட்சி சார்பாக எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றார். மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி தரப்பட்டு உள்ளதா? என்று மதுரை கோட்டாட்சியர் வட்டாரத்தில் விசாரித்த போது அவர்களும் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

    எனவே மதுரை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை சுரண்டி லாரிகள் மூலம் தண்ணீர் விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சோழவந்தான் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடந்தது.
    • வீடுகள் மற்றும் கடைகளில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் மாதத்தின் 2-வது சனிக்கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொதுஇடங்களில் தூய்மைபணி செய்தல், வீடுகள் மற்றும் கடைகளில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலையில் சோழவந்தான் பஸ் நிலையம், ரெயில்வே பீடர் ரோடு, ஒற்றைஅக்ரஹாரம், இரட்டைஅக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றினர்.

    கழிவுகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு பரிசு வழங்கியும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், இளநிலை பொறியாளர்கள் லீலாவதி, கருப்பையா, துணைத்தலைவர் லதாகண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவரும்உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுகாதார மேற்பார்வையாளர் வினோத்குமார் வரவேற்றார்.பணியாளர் சத்திய நாராயணன் நன்றி கூறினார்.

    • இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் அவசரகால பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடந்தது.
    • மதுரை மண்டல செயல்மேலாளர் சிவகுருநாதன் தலைமை வகித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே பெருமாள்பட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் அவசரகால பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மண்டல செயல்மேலாளர் சிவகுருநாதன் தலைமை வகித்தார். முதுநிலை பராமரிப்பு மேலாளர் கார்த்திக்குமார், செயல்மேலாளர் சுந்தர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார், தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராணி, செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மதுரை கப்பலூரில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு டீசல், பெட்ரோல் லாரிகள் மூலமாக அனுப்பிவைக்கப்படுகிறது. இதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் வெளிநபர்கள் தேவையில்லாமல் தோண்டக்கூடாது. எண்ணெய் குழாய்களை சேதப்படுத்துவதை குழாய் செல்லும் வழியில் உள்ள கிராமமக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதை விளக்கும் வகையிலும், அவசர காலத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி கையாள்வது? என்பது குறித்தும் பெருமாள்பட்டி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பெட்ரோல் மற்றும் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரிகளில் திடீரென தீப்பிடித்தால் அவற்றை எப்படி அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு படையினர் செய்து காட்டினர்.

    • ராமேசுவரம் கடலில் தங்க கட்டிகளை வீசிய கொள்ளையர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    மதுரை

    ராமேசுவரம் கடல் பகுதியில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது நாட்டுப் படகில் தங்கம் கடத்தி வந்த நாகூர் ஹனி (32), முகமது சமீர் (29), முகமது இப்ராஹிம் மகன் சகுபர் சாதிக் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடுக் கடலில் வீசிய ரூ. 150 கோடி மதிப்புடைய 17.74 கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

    பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தங்கம் கடத்தலில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்கள் கொடைக்கானலில் இருந்து தப்பி வந்து மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் ஜஹாங்கீர் அப்பாஸ் (29), முகமது சாதிக் (33), அசாருதீன் (25) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ராமேசுவரம் கடலில் தங்கம் கடத்தி வந்த மேற்கண்ட 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கப்பலூர் சிட்கோ பகுதியில் குப்பைகளை சரிவர அள்ளாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
    • இதில் 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதில்

    500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சிட்கோ இதுவாகும்.

    கடந்த சில மாதங்களாக சிட்கோவில் முக்கிய பகுதிகளில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

    இங்கு பஞ்சுக்கழிவுகள், துணிமூடைகள், காகித குப்பைகள், பழைய இரும்பு கழிவுகள் உள்ளிட்டவை ேசர்ந்து காணப்படுகின்றன.

    இது குறித்து சிட்கோவில் நிறுவனம் நடத்திவரும் கதிரேசன் கூறுகையில், கப்பலூர் சிட்கோவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் குப்பை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்தி வருகிறோம். மதுரை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் பஞ்சாயத்தாக உச்சப்பட்டி பஞ்சாயத்து உள்ளது. ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் சிட்கோவைப் பொறுத்தவரை பராமுகமாக இருந்து வருகிறது. குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை.

    இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் சிட்கோ தொழில்அதிபர் சங்கத்தில் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. குப்பைகள் அதிகமாக தேங்குவதால் துர்நாற்றம் வீசி தொழிலாளர்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது என்றார். சிட்கோ தொழில் அதிபர்கள் சங்கத்தலைவர் ரகுநாதராஜா கூறுகையில், மின்கட்டணம் செலுத்துதல், மாசுபரவாமல் இருக்க அடர்காடுகளுடன் மரங்கள் வளர்த்தல், இரவு நேர காவலாளி ஊதியம் உள்ளிட்டவற்றை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

    இதுதவிர அனைத்து விதமான வரிகளையும் உச்சப்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் குப்பைகளை அள்ள வருவதில்லை. சாலை வசதிகளை செய்துதர மறுக்கின்றனர்.

    இது சம்பந்தமாக திருமங்கலம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் செய்தோம். அவர் விரைவில் திருமங்கலம் யூனியனுக்கு பேட்டரி வாகனங்கள் வரவுள்ளன. அவற்றில் ஒன்றை சிட்கோவிற்கு குப்பைகள் அள்ள ஒதுக்கிதருவாக கூறியுள்ளார் என்றார்.

    • வயல்வெளியில் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி, மேல் நாச்சிகுளம், கீழ் நாச்சிகுளம், கரட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஒரு சமுதாயத்திற்கு தனி சுடுகாடு உள்ளது.

    இந்த சுடுகாடு கோட்டை மேடு-நரிமேடு 2 கிராமங்களுக்கும் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல முன்பு பெரியாறு பாசன கிளை கால்வாய் வழியாக படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது. அதையொட்டி உள்ள கரை ஓரமாக சென்று மயானத்திற்கு சென்று வந்தனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு கிளை கால்வாய் அகலப்படுத்தப்பட்ட போது படிக்கட்டுகள் இருந்த இடத்தில் மீண்டும் படிக்கட்டு அமைக்காமல் சமதளமாக பூசி விட்டனர்.இதனால் மயானத்திற்கு செல்லும் வழி தடைபட்டது.

    தற்போது நரிமேடு சாலை வழியாக வயல்வெளியில் பிணத்தை தூக்கி செல்ல வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்து பொதுப்பணித்துறை மூலம் சிறுபாலம் அமைக்க உத்தரவு பெறப்பட்ட பிறகும் பாலம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த அவல நிலை தொடராமல் இருக்க விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.6 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது.

    மதுரை:

    மதுரையில் 'சுற்றுச் சூழலை பாதுகாப்போம். பொது போக்குவரத்தை பலப்படுத்துவோம்' என்பதை வலியுறுத்தி, தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி இன்று நடந்தது.

    திருநகரில் உள்ள பள்ளிக்கூடம் முன்பு இருந்து பொது பிரிவினருக்கான மாரத்தான் போட்டி தொடங்கியது. இந்த போட்டியை மதுரை எம்.பி. வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.

    12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டி, பசுமலை மன்னர் கல்லூரி முன்பு தொடங்கியது. மதுரையில் நடந்த இந்த 2மாரத்தான் போட்டிகளிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து மதுரை பைபாஸ் ரோடு தமிழக அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு, மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் பொது பிரிவினருக்கான மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.6 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது.

    இதே போல பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.8 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.4ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 2 ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் அழகர்சாமி, ராஜேந்திரன், கனகசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருகிற மார்ச் 1ம் தேதி பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையைஒத்தி வைப்பு.
    • மதுரை விமான நிலையத்திற்கு அவர்கள் வந்தால், அங்கு பெற்றோரிடம் இருந்து குருத்திகாவை மீட்க நடவடிக்கை.

    தென்காசி அருகே உள்ள கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் பட்டேல் என்பவரது மகள் குருத்திகா(22) என்பவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 27-12-2022 அன்று நாகர்கோவிலில் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து குருத்திகா, வினித்தின் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி குற்றாலம் போலீஸ் நிலையத்துக்கு வினித், குருத்திகா உள்ளிட்டோர் வந்து விட்டு திரும்பினர்.

    குத்துக்கல்வலசையில் ஒரு மர ஆலை அலுவலகத்தில் இருந்தபோது நவீன் பட்டேல் மற்றும் சிலர் அங்கு புகுந்து அவர்களை தாக்கி குருத்திகாவை காரில் கடத்தி சென்றனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது.

    இதைத்தொடர்ந்து நவீன் பட்டேல் மற்றும் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். குருத்திகா மற்றும் அவரது பெற்றோர் கேரளா, கோவா, குஜராத் போன்ற இடங்களுக்கு மாறி மாறி சென்றனர்.

    இதனை போலீசார் அவர்களது செல்போன் சிக்னல் மூலம் பார்த்து சென்றபோது, வெவ்வேறு இடங்களுக்கு சென்றதால் அவர்கள் சிக்கவில்லை. அவர்களை பிடிக்க தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் குஜராத்தில் முகாமிட்டு தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அந்த வழக்கில் திடீர் திருப்பமாக குருத்திகா பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர், "நான் நன்றாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு ஏற்கெனவே மைத்ரிக் பட்டேலுடன் திருமணமாகிவிட்டது. நான், அவர் மற்றும் எனது பெற்றோருடன் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு எந்த விதமான பிரஷரோ, டார்ச்சரோ கிடையாது" என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே வினித் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மனைவி குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் சென்று விட்டனர். அவர் குஜராத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை என்னுடன் சேர்த்து வைக்கும் வேண்டும். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    எனவே அவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கு குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருகிற மார்ச் 1-ந்தேதி பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

    இதற்கிடையே குருத்திகாவை போலீஸ் விசாரணைக்காக ஆஜர்படுத்த அவரது பெற்றோர் வடமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் இன்று அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. மதுரை விமான நிலையத்திற்கு அவர்கள் வந்தால், அங்கு பெற்றோரிடம் இருந்து குருத்திகாவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    இதற்கிடையே குருத்திகாவை போலீஸ் விசாரணைக்காக ஆஜர்படுத்த அவரது பெற்றோர் வடமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். பின்னர் மதுரை நீதிமன்றத்தில் குருத்திகா ஆஜரானார். குருத்திகாவை இரண்டு நாட்களுக்கு காப்பகத்தில் தங்க வைத்து ரகசிய வாக்குமூலம் பெறவும், அவருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது, யாரும் குருத்திகாவை சந்திக்க கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பின்னர், குருத்திகாவை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில், குருத்திகாவை இன்று செங்கோட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு, குற்றவியல் நடுவர் சுனில் ராஜா முன்னிலையில் குருத்திகா ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலத்தில் குருத்திகா என்ன சொல்லி இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

    வாக்குமூலம் முடிந்த பிறகு போலீஸ் பாதுகாப்புடன் குருத்திகாவை காப்பகம் அழைத்துச் சென்றனர். சீல் வைக்கப்பட்ட வாக்குமூலம், 13ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படுகிறது.

    ×