என் மலர்
மதுரை
- சில நாட்களாக குருத்திகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- குருத்திகாவின் பெற்றோர் தலைமறைவாக இருப்பதால் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குருத்திகாவின் தாத்தா மனு தாக்கல் செய்திருந்தார்.
மதுரை:
தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் வினித் (வயது 22). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த நவீன் படேல் என்பவரின் மகள் குருத்திகாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர்கள் இருவரும் வினித்தின் உறவினர்கள் முன்னிலையில் நாகர்கோவிலில் திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து நவீன்படேல் குற்றாலம் போலீசில் புகார் செய்தார்.
அதுசம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகி விட்டு சென்றபோது வினித்தை தாக்கி குருத்திகாவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்றனர். இதையடுத்து மனைவியை மீட்டு ஆஜர்படுத்தக்கோரி போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வினித், மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது கடந்த 7-ந்தேதி குருத்திகாவை போலீசார் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள், அவரை காப்பகத்தில் தங்க வைத்து விசாரணை நடத்தி, அதுசம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என்று தென்காசி மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டனர்.
சில நாட்களாக குருத்திகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தென்காசி மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி, அவரிடம் ரகசிய வாக்குமூலமும் பெறப்பட்டது. அது தொடர்பான அறிக்கையை போலீசார் நேற்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குருத்திகாவின் பெற்றோர் தலைமறைவாக இருப்பதால் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குருத்திகாவின் தாத்தா மனு தாக்கல் செய்திருந்தார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு வக்கீல் வாதாடுகையில், குருத்திகா மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணை நிலுவை சம்பந்தமான தகவல்களை அறிக்கையாக தகவல் செய்யும்படி தென்காசி போலீசாருக்கு உத்தரவிட்டு, இந்த ஆட்கொணர்வு மனுவை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- சின்ன கண்மாய் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவர், பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
- மணிரத்தினம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் அந்த மாணவி வீட்டின் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.
மதுரை:
மதுரை மேலஅனுப்பானடியில் உள்ள ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் சின்ன கண்மாய் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவர், பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இதனை அந்தப் பெண் ஏற்கவில்லை. எனவே மணிரத்தினம் தொடர்ந்து மாணவிக்கு டார்ச்சர் கொடுத்து வந்தார். எனவே அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் மணிரத்தினத்தை கைது செய்தனர். அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் மணிரத்தினம் பிளஸ்-1 மாணவியை சந்தித்து, "காதலர் தினம் அன்று நீ என் காதலை ஏற்க வேண்டும். என்னுடன் வெளியே வர வேண்டும்" என்று கூறி உள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுத்ததோடு கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிரத்தினம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் அந்த மாணவி வீட்டின் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மணிரத்தினம், மேலஅனுப்பானடி, வாசுகி தெரு வேல்முருகன் மகன் பார்த்தசாரதி (வயது 19), ஜெய், திலீப், ஜவகர் ஆகிய 5 பேரையும் தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.
- காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
- ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.
மதுரை:
பிப்ரவரி 14-ந்தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் வருடந்தோறும் நூதன போராட்டங்களை நடத்தி வருவது வழக்கம். அதன்படி காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சில அமைப்புகள் தெரிவித்து இருந்தது. இதையொட்டி நகரில் உள்ள ராஜாஜி பூங்கா, சுந்தரம் பார்க், நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம் பூங்கா உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலை தொண்டர்களுடன் மதுரை ராஜாஜி பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கம்-பண்பாட்டுக்கு காதலர் தினம் எதிரானது. எனவே அதனை இளைஞர்கள் கொண்டாடக்கூடாது. புல்வாமா தாக்குதலை நினைவு கூறும் வகையில் பயங்கரவாத ஒழிப்பு தினமாக அனுசரிக்க வேண்டும்" என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதன்படி இன்று காலை ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் அங்கு வந்திருந்த புதுமண தம்பதிகளுக்கு இனிப்பு வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஒரே இடத்தில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும், ஆதரித்து இனிப்பும் வழங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் மாயமானார்கள்.
- இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேலஅண்ணாதோப்பு பாண்டித்தெரு காம்பவுண்டை சேர்ந்தவர் சித்ரா. இவரது மகள் பவித்ரா(வயது21). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். பவித்ராவிற்கும், அவரது வீட்டு மாடியில் வசிக்கும் வாலிபர் சரவணகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த இரு குடும்பத்தினர் இருவரையும் கண்டித்தனர். அதன் பிறகு பவித்ராவிற்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி காலை வங்கிக்கு சென்று வருவதாக கூறி சென்ற பவித்ரா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மாடி வீட்டில் வசித்த சரவணகுமாரையும் காணவில்லை. இதுகுறித்து பவித்ராவின் தாயார் சித்ரா கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை அரசரடி முனிசிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்(44). வாடிப்பட்டி வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி(40). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனைவி மீனாட்சி, தனியார் நிறுவனத்திற்காக சர்வே பணிக்கு சென்று வந்தார். மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கணவர் மோகன் வலியுறுத்தினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி மாலை வீடு திரும்பிய மோகன், மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மேலும் அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கணவர் மோகன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- காதல் யோகம் யாருக்கு அமையும்? என்ற கணிப்பில் பிரபல ஜோதிடர் கரு. கருப்பையா விளக்கம் அளித்துள்ளார்.
- உலகமெங்கும் இன்று காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரை
காதல் யோகம் யாருக்கு அமையும் என்ற கணிப்பில் பிரபல ஜோதிடர் திருப்புவனம் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையா விளக்கம் அளித்துள்ளார்.
உலகமெங்கும் இன்று காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜோதிட ரீதியாக யார் யாருக்கு பொதுவாக ஆங்கில தேதி 6, 15, 24 பிறந்தவர்களுக்கும், வெள்ளிக்கிழமை பிறந்த வர்களுக்கும் காதல் வாய்ப்புகள் வரலாம். மேலும் சுக்கிர திசை, சுக்கிர புத்தி நடந்தாலோ, லக்னத்தில் அல்லது 7-ம் இடத்தில் சுக்கிரன் நன்றாக அமைந்தாலோ காதல் வாய்ப்புகள் வரலாம்.
மேலும் சுக்கிரனோடு ராகு-கேது சம்பந்தப் பட்டால் அல்லது சனீஸ்வரர் சம்பந்தப்பட்டாலும் காதலில் தடைகள் ஏற்படலாம். மேலும் வெள்ளை நிற பொருட்களை அதிகம் பயன்படுத்தினாலும் காதல் யோகம் கூடலாம் என்று ஒரு சிலரின் நம்பிக்கையாக உள்ளதாம். மொத்தத்தில் இரு மனங்கள் இணைந்தால் அன்பின் மிகுதியால் காதல் திருமணம் நிலைக்கும் என பிரபல ஜோதிடர் கரு. கருப்பையா விளக்கம் அளித்துள்ளார்.
- திருமங்கலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- 7ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சின்னஉலகாணியை சேர்ந்தவர் காளி முத்து(வயது 23). இவர் 16 வயதுடைய பள்ளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த தாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காளிமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருமங்கலம் அருகே சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட காரிகுட்டிபட்டியை சேர்ந்தவர் ராம்ஜி(23). இவர் 7ம் வகுப்பு படிக்கும் உறவினரின் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவனின் பாட்டி சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்ஜியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
- செல்லம்பட்டி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
- இதனால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியனுக்குட்பட்ட முதலைகுளம் ஊராட்சி எழுவம்பட்டி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பொது மக்களுக்கு குடிநீரை ஊராட்சி நிர்வாகம் சப்ளை செய்து வருகிறது.
இந்த நீர்தேக்க தொட்டியின் 4 சிமெண்டு தூண்களும் விரிசலடைந்து சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகிலுள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் மற்றும் குடியிருப்போர்களும் உயிர் பயத்தில் உள்ளனர்.
இது பற்றி கிராம மக்கள் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினர். இது குறித்து எழுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் கூறுகையில், இந்த கிராம குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு முதலைகுளம் கண்மாய் கரை பகுதியில் அமைந்துள்ளது.மின் மோட்டர் மூலம் மேல்நிலை தொட்டியில் நீர் நிரப்பி குடிநீர் வழங்கி வந்தநிலையில் தொட்டியின் 4 தூண்களும் சேதமாகி விரிசலடைந்து உள்ளது.
இதனருகே குழந்தைகள் மையமும், தொடக்க பள்ளிக்கு செல்லும் பாதையும், வீடுகளும் உள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் அச்சத்துடன் உள்ளோம். நீர்தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்ட வேண்டும் என்றார்.
மேலும் இதே கிராமத்தை சேர்ந்த லதா கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் சக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. செல்லம்பட்டி கூட்டுகுடிநீர் குழாய் மூலம் ஊருக்குள் வந்த தண்ணீர் ஏனோ பல மாதங்களாக வரவில்லை. இடிந்து விழும் நிலையில் இருக்கும் மேல்நிலை தொட்டியை இடித்து அப்புறப்படுத்துவதற்கு
- நாளை காதலர் தினம் என்பதால் மதுரை மலர் சந்தையில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிந்தன.
- ஒரு பாக்கெட் ரூ.200-க்கு விற்பனையாகிறது.
மதுரை
தமிழகம் முழுவதும் காதலர் தினம் நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூ கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவது வழக்கம்.
நாளை காதலர் தினம் என்பதால் ரோஜா மலர்கள் அதிகளவில் விற்பனையாகும். இதனை கருத்தில் கொண்டு மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தைக்கு ரோஜா மலர்கள் அதிகளவில் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ரோஜா மலர்கள் ஓசூர், கொடைக்கானல், ஊட்டி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஒரு பாக்கெட் ரோஜா பூக்கள் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்க வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் காதலர்கள் எல்லை மீறக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சி ராஜாஜி பூங்கா, எக்கோ பார்க், அழகர்கோவில் மலை, திருமலை நாயக்கர் மகால் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று முதலே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி பூங்காவுக்கு காதலர் தினத்தையொட்டி ஜோடியாக வந்திருந்த சில பெண்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் பலருக்கும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மதுரைக்காரர்களுக்கு ஏற்கனவே காதலர் வாரம் தொடங்கி விட்டது. காதலர் தினம் என்றால் பலருக்கும் ரோஜா பூக்கள் தான் நினைவுக்கு வரும். அது தவறு. ப்ரவரி 7-ந்தேதி ரோஜா தினம் ஆகும். அன்றுதான் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூக்களை கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.
பிப்ரவரி 8-ந்தேதி முன்மொழிவு நாள். அன்றுதான் நேசிப்பவர்க ளிடம் காதலை வெளிப் படுத்த வேண்டும். பிப்ரவரி 9-ம் தேதி சாக்லேட் தினம். அன்றைய நாளில் காதலர்கள் விரும்பத்தகாத மற்றும் மோசமான நிகழ்வு களை மறந்து, சாக்லேட் பகிர்ந்து காதலை பரிமாறிக் கொள்வார்கள்.
பிப்ரவரி 10-ந்தேதி டெடி டே அன்று அழகான பொம்மையை வழங்கியுள்ளோம். அது எங்களின் மன அழுத்தத்தை குறைக்க, முகத்தில் புன்ன கையை வரவழைக்க உதவியாக இருக்கும். பிப்ரவரி 11-ந்தேதி வாக்குறுதி தினம். அன்றைய நாளில் காதலர்கள் உறவை ஆழப்படுத்திக் கொள்வோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும் உறுதியேற்றுக் கொண் டோம்.
பிப்ரவரி 12 - கட்டிப்பிடி நாள். அன்றைய நாளில் அன்புக்குரியவர்களை அரவணைப்பதன் மூலம் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளோம். அது நிச்சயமற்ற தன்மை அல்லது எதிர்காலம் பற்றிய கவலையை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும்.
- ஜவுளி கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- கைதான இருவர் மீதும் மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மதுரை
மதுரை வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர் அந்த பகுதியில் ஜவுளி கடை வைத்துள்ளார். நேற்று மதியம் இவர் கடையில் இருந்தபோது 2 பேர் வந்தனர். அவர்கள் சரவணனிடம் மாமூல் கேட்டனர். அவர் தர மறுத்தார்.
ஆத்திரமடைந்த 2 பேரும் ஜவுளிக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் கடை மீது கல் வீசி தாக்கினர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் ஜவுளி கடையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த பைப் குமார் (42), திருமங்கலம் ஆனந்தன் தெரு சிவராஜா(43) ஆகியோரை கைது செய்தனர்.
கைதான இருவர் மீதும் மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.பி.சி. ஆவணப்படத்தை தடுக்க முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதனால் காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.
அவனியாபுரம்
வில்லாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.பி.சி. ஆவண படத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் வெளியிட முயன்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் அந்த திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் தலைமையில் சோலை மணிகண்டன், ஜெயகணேஷ், கருப்பையா, மதன், தமிழ்செல்வி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலீசாருக்கும் கைதான பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் காளிதாஸ்ல, பிரசார பிரிவு நிர்வாகி சடாச்சரம், அவனி ஆனந்த், மூர்த்தி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் விடுவித்தனர். இந்த சம்பவத்தில் மாவட்ட தலைவர் சசிகுமாரை, போலீசார் மற்றும் எதிர்தரப்பினர் தள்ளிவிட்டதாகவும் இதனால் அவர் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.
- கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை
மதுரை அவனியாபுரம் துக்காராம் தெரு, மருத்துவ காலனி பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் சாக்கடையை சுத்தம் செய்யாததால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீர் வீட்டுக்குள் புகுந்தது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இதையடுத்து பொதுமக்கள் இன்று அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவனி யாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்கள் கலைந்து செல்ல வலியுறுத்தினார்.
அதற்கு பொதுமக்கள் மறுத்ததால் உதவி பொறி யாளர் செல்வ விநாயகம் விரைந்து வந்து உங்கள் கோரிக்கையை சரி செய்கிறேன். சாக்கடையை சுத்தம் செய்கிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- மத்திய பட்ஜெட் குறித்த பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
- 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தானில் பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த தெருமுனை பிரசார கூட்டம் வட்ட பிள்ளையார் கோவில் முன்பு நடந்தது. மண்டல தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முத்துராமன், ரவிசந்திரன், ரங்கசாமி, முத்துசெல்வம், குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முன்னதாக நடந்த மண்டல கூட்டத்தில் கட்சி நிதி வழங்கப்பட்டது. நிர்வாகி ராஜாராம் நன்றி கூறினார்.
இதேபோல் முள்ளிப்பள்ளம் கிராம சமுதாய கூடத்தில் பா.ஜ.க. வாடிப்பட்டி தெற்கு மண்டல செயற்குழு கூட்டம் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடந்தது. மண்டல பார்வையாளர்-மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்ட விவசாய அணி தலைவர் பூமிராஜன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட 10 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.






