என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் அனுமதியின்றி சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- பொதுமக்கள் அன்றாட தேவைக்கு குடிநீரை பயன்படுத்த முடியாமல் அல்லாடி வருகின்றனர்.
- நிலத்தடி நீரை சுரண்டி லாரிகள் மூலம் தண்ணீர் விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை:
மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, 28 லட்சம் ஆகும். இதில் நகர்ப்புறத்தில் மட்டும் 16 லட்சம் பேர் வசிக்கின்றனர். மதுரை மாநகரில் வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
மதுரை மாநகரில் கடந்த 2010-ம் ஆண்டு வரை 72 வார்டுகள் மட்டுமே இருந்தன. இந்த நிலையில், மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மேலும் 28 வார்டுகள் உருவாக்கப்பட்டன. அதுவும் தற்போது மதுரை மாநகராட்சியில் இணைக்கப்பட்டு உள்ளன. எனவே மதுரை மாநகரில் 100 வார்டுகள் உள்ளன.
மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து 115 மெட்ரிக் டன் கன அடியும், ஆற்றுப்படுகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக 30 மெட்ரிக் டன் கன அடி, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 10 மெட்ரிக் டன் கனஅடி உள்பட மொத்தம் 155 மெட்ரிக் டன் கன அடி தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
மதுரை மாநகரில் நபர் ஒருவருக்கு சராசரியாக 100 லிட்டர் வீதம் குடிதண்ணீர், மதுரை மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டது. எனவே 100 வார்டுகளுக்கும் சேர்த்து 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைக்கு குடிநீரை பயன்படுத்த முடியாமல் அல்லாடி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில நிறுவனங்கள் தனியார் நிலத்தில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக ரீதியாக விற்பனை செய்து வருகின்றனர்.
மதுரை கோச்சடை, பரவை, கருப்பாயூரணி, உச்சபரம்புமேடு, செல்லூர், விளாங்குடி , விரகனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி தனியார் நிலத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு இருந்து தினந்தோறும் கோடிக்கணக்கான லிட்டர் கணக்கில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதுவும் தவிர விவசாய கிணறுகளில் இருந்தும் லாரிகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகின்றன.
இங்கு ஒரு லாரிக்கு ரூ.150 வீதம் 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. அதன் பிறகு அவை மதுரைக்கு கொண்டு வரப்பட்டு லாரிக்கு ரூ.1600 முதல் ரூ.3000 வரை தொலைவுக்கு ஏற்ப வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள், ஆழ்துளை கிணற்றில் இருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி 24 மணி நேரமும் தண்ணீரை வணிக ரீதியாக விற்பனை செய்து வருகிறது. எனவே சட்டவிரோதமாக அனுமதி இன்றி ஆழ்துளை கிணறு அமைத்து நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு சட்ட விரோதமாக அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடந்தையாக இருக்கும் ஒரு சில அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கும்போது சட்டவிதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன் கூறுகையில், 'தனியார் நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க, மாநகராட்சி சார்பாக எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றார். மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி தரப்பட்டு உள்ளதா? என்று மதுரை கோட்டாட்சியர் வட்டாரத்தில் விசாரித்த போது அவர்களும் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
எனவே மதுரை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை சுரண்டி லாரிகள் மூலம் தண்ணீர் விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






