என் மலர்tooltip icon

    மதுரை

    • சரக்கு வேன் மோதி ராணுவ வீரர் பரிதாப இறந்தார்.
    • மகன் கண் முன்னே பலியான சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது42). இவர் டேராடூனில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், சஞ்சய் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சஞ்சய் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    தர்மலிங்கம் விடுமுறை கிடைக்கும் போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துச்செல்வார். அதேபோல் கடந்த 17-ந் தேதி விடுமுறை எடுத்துகொண்டு சொந்த ஊருக்கு வந்தார்.

    அவரது தாய் திருமங்கலம் அருகே உள்ள கல்லனை கிராமத்தில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக தர்மலிங்கம் நேற்று இரவு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    விடத்தக்குளம்-எட்டுநாழி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வேகமாக வந்த மினி சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தர்மலிங்கம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவரது மகன் சஞ்சய்க்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து தர்மலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர், விபத்தில் சிக்கி மகன் கண் முன்னே பலியான சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வாடிப்பட்டியில் உள்ள காந்திஜி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் ஸ்ரீதர் ரங்கராஜன் பரிசு வழங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுப்பட்டி அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளியின் 70-வது ஆண்டு விழா நடந்தது. செயலாளர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான், வட்டார வளமைய (பொறுப்பு) மேற்பார்வை யாளர் தமிழ்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வி குழு தலைவர் தனபால் வரவேற்றார். தலைமை ஆசிரியர் வேங்கடலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். தேர்வு மற்றும் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் ஸ்ரீதர் ரங்கராஜன் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் ஆசிர்வாதம் பீட்டர், எஸ்தர்டார்த்தி மற்றும் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆனந்தி நன்றி கூறினார்.

    • டெல்லி போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய விவசாய சங்க தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் சென்றனர்.

    சோழவந்தான்

    டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் சென்றனர். இதற்கு விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க மாநில கவுரவத் தலைவர் எம்.பி. ராமன் கிராமத்திற்கு திரும்பினார். அவரை முதலைக்குளம் கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வரவேற்றனர். இதில் திருமங்கலம் பாசன கால்வாய் உறுப்பினர்கள் ஜெயக்குமார், சிவஅறிவழகன், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் முனியாண்டி, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராமன், கிளைச்செயலாளர் தவமணி, தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மூக்கன், தொழிலதிபர் பால்பாண்டி, ஊராட்சி செயலாளர் பாண்டி, காங்கிரஸ் நிர்வாகி செல்லசாமி, விவசாயிகள் பால்சாமி, பாண்டி, ஒச்சு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடம் குடமாக சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.
    • சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெறும்.

    பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலை மலை முருகன் கோவிலும் ஒன்றாகும். மதுரையை அடுத்த அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா 4-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு அழகர் மலை அடிவாரத்தில் உள்ள 18-ம் படி கருப்பணசுவாமி ராஜகோபுரம் முன்பு இருந்து பக்தர்கள் 108 பால் குடங்கள் பாதயாத்திரையாக சோலைமலை முருகன் கோவிலுக்கு எடுத்து செல்வார்கள். பின்னர் பகல் 12 மணிக்கு மூலவர் சுவாமிக்கு உச்சிகால பூஜைகள் நடைபெறும். குடம் குடமாக சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமி, பல்லக்கில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் வெளி பிரகாரங்களின் வழியாக புறப்பாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • திருக்கல்யாணம் 5-ந்தேதி நடக்கிறது.
    • 6-ந் தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில், 108 வைணவதலங்களில் ஒன்றானது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் தனி பெருமையுடையது.

    இந்த திருவிழாவானது நேற்று காலை தொடங்கியது. அன்று மாலை 6 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி வர்ணக்குடை பரிவாரங்களுடன் கள்ளழகர் என்ற சுந்தர்ராசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன், மனோரஞ்சித மாலைகள் அலங்காரத்தில், சுந்தரவல்லி யானை முன்செல்ல, பல்லக்கில் புறப்பாடாகி சென்று, அங்குள்ள நந்தவன ஆடி வீதிகள் வழியாக சென்று திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.பின்னர் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதன் பின்னர் இரவே சுவாமி கோவிலுக்குள் போய் இருப்பிடம் சென்றார். இதை தொடர்ந்து இன்றும், 4-ந்தேதி நாளையும் அதே நிகழ்ச்சிகள் அதே மண்டபத்தில் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா வருகிற 5-ந்தேதி அன்று காலை 9.50 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தர்ராசப்பெருமாள், ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் மணக்கிறார்.

    திருக்கல்யாணம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்படும். அப்போது திருக்கல்யாண மொய் எழுதப்படும். பின்னர் அன்று இரவு பெருமாள் நான்கு தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் 6-ந் தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தொடர்ந்து நீடித்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தீனதயாளன், ராஜாவுடன் சமரசமாக செல்ல முடிவு செய்தார்.
    • கொதிக்கும் பால் முகத்தில் பட்டவுடன் வலியால் தீனதயாளன் அலறித்துடித்தார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு முத்தராமலிங்க பட்டியை சேர்ந்தவர் தீனதயாளன்(வயது40). இவருக்கும், தனியாமங்கலத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து நீடித்த இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தீனதயாளன், ராஜாவுடன் சமரசமாக செல்ல முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று அவர் தனியாமங்கலத்தில் உள்ள ராஜா வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு அவரது சகோதரி சூரியகலா(40), அம்மாபட்டி விக்னேஷ் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் தீனதயாளன் சமரசமாக சென்று விடலாம் என கூறினார். ஆனால் அதனை ஏற்காமல் சூரியகலா, விக்னேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூரியகலா வீட்டின் சமையலறைக்கு சென்று அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த பாலை எடுத்து வந்து தீனதயாளனின் முகத்தில் ஊற்றினார். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    கொதிக்கும் பால் முகத்தில் பட்டவுடன் வலியால் தீனதயாளன் அலறித்துடித்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியகலா, விக்னேஷை கைது செய்தனர்.

    சமரசம் பேச சென்றவரின் முகத்தில் கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • நீதிமன்ற வளாகத்தில் இருந்தபடி ஸ்ரீபுகழ் இந்திரா, உறவினர்கள் சிலரிடம் செல்போன் மூலம் பேசினார்.
    • போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் கார்த்திகேயன், அய்யனன் ஆகிய 2 பேரும் கைதிக்கு செல்போன் கொடுத்தது தெரியவந்தது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் 'வீடு ஒத்திக்கு விடப்படும்' என்று விளம்பரம் கொடுத்தார். இதனை நம்பி பலர் அவரை தொடர்பு கொண்டனர். அப்போது அவர்களிடம் ஸ்ரீபுகழ் இந்திரா பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு ஒத்திக்கு வீடுகள் தரப்பட வில்லை.

    எனவே பாதிக்கப்பட்டவர்கள் மாநகர போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீ புகழ் இந்திரா குத்தகை என்ற பெயரில் பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்காக ஸ்ரீபுகழ் இந்திராவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்தபடி ஸ்ரீபுகழ் இந்திரா, உறவினர்கள் சிலரிடம் செல்போன் மூலம் பேசினார்.

    மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கைதி ஒருவர் செல்போனில் பேசிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் கார்த்திகேயன், அய்யனன் ஆகிய 2 பேரும் கைதிக்கு செல்போன் கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    • மதுரையில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட குழு உறுப்பினர் ஷாஜகான் நன்றி கூறினார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி இஸ்மாயில்புரம் 12-வது தெரு வள்ளியம்மை அரங்கத்தில் நடந்தது.

    மாவட்ட குழு உறுப்பினர் சாம்பசிவம் தலைமை தாஙகினார்.மாவட்டத் துணைத் தலைவர் எகியா, மாவட்ட குழு உறுப்பினர் மாயழகு முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் வரவேற்றார்.

    மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாவட்ட தலைவர் அலா வுதீன், அருட்தந்தையர்கள மரியநாதன், லாரன்ஸ், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கணேசன், தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர்கள் செய்யது அபுதாஹிர், தமிழ்ச்செல்வி காளிமுத்து, குமரவேல்.

    மாவட்ட செயலாளர் கணேச ஒமூர்த்தி, பொரு ளாளர் ஜான்சன், துணை செயலாளர் போனிபேஸ், தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் உஸ்மான் அலி, முஸ்லிம் ஜமாத் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சேக் அப்துல்காதர், செயலாளர் முகமது முஸ்தபா, துணைச் செயலாளர் காஜா மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் இக்பால் பாட்சா, ஆகியோர் பேசினர்.

    மாவட்ட குழு உறுப்பினர்கள் சாந்தாரா, அப்துல் அஜீஸ், பிரபாகரன், அப்துல் குத்தூஸ், கிளை செயலாளர் புலி சேகர், துணை செயலாளர் அமிர்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் ஷாஜகான் நன்றி கூறினார்.

    • மதுரையில் ரெயில்வே என்ஜினீயரிடம் வழிப்பறி செய்ா 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 39). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். மதுரை ெரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரேம்குமார் சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது குடிபோதையில் இருந்த 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து தகராறு செய்தனர். அப்போது அவரது செல்போன் கீழே விழுந்து உடைந்தது.

    மேலும் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். பிரேம்குமார் வேறு வழியின்றி அவர்களிடம் ஆயிரம் ரூபாயை ெகாடுத்தார். அதை வாங்கி கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக தல்லா குளம் போலீசில் பிரேம் குமார் புகார் கொடுத்தார். இந்த புகார் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் கவனத்திற்கு சென்றது. இதில் தொடர் புடைய குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

    அதன்படி மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆகியோர் மேற்பார்வையில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பிரேம்குமாரிடம் வழிப்பறி செய்த வாலிபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் வழிப்பறி செய்தவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் முல்லை நகருக்கு சென்றனர். அங்கு நேருஜி தெருவில் பதுங்கி இருந்த 3 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முல்லை நகர், நேருஜி தெரு, சண்முக சுந்தரம் மகன் தினேஷ் குமார் என்ற மாணிக்கம் (22), அவரது சகோதரர் கணேசன் (24), செக்கானூ ரணி செந்தில்குமார் மகன் சந்துரு (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தல்லாகுளம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    • மதுரையில் இ-சேவை மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
    • அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

    மதுரை

    மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராமப்புற வறுமை ஒழிப்பு குழுக்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மற்றும் கண்டோன்மெண்ட் போர்டு ஆகியவை மூலம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்பாட்டில் ஏற்கனவே இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த மையத்துக்கு மேஜை, கணினி, பயனர் எண், கடவுச்சொல் ஆகியவை அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து சேவைகளும் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

    • மதுரை மாநகராட்சி பகுதிகளில் மகாவீர் ஜெயந்தியையொட்டி 4-ந் தேதி இறைச்சி கடைகள் அடைக்கடுகின்றன.
    • சுகாதாரச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகாவீர் ஜெயந்தியையொட்டி நாளை மறுநாள் (4-ந்தேதி) அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் இதர உயிரினங்கள் உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி விற்பனை கடைகளை திறந்து வைக்க வும் கூடாது.

    தடையை மீறி செயல்படு வர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதாரச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவற்றை செயல்படுத்துவது இல்லை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
    • திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடமாடும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது. அ.தி.மு.க இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர்.

    வட்டச் செயலாளர் பொன் முருகன் வரவேற்றார். இதில்

    அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி கோடை காலத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. திருப்ப ரங்குன்றம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத வகையில் தற்போது கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வருகிறது.

    பள்ளி மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் மது கடைகளும் அமைந்துள்ளன. இவற்றை அகற்றக்கோரி சட்டப்பேரவையில் நான் குரல் கொடுத்த போது அதற்காக ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் மழுப்பலான பதிலை தெரிவித்தார். மதுக்கடைகளை அகற்றுவது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மதுரைக்கு மெட்ரோ ெரயில் திட்டம் டைட்டல் பார்க் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது. அவர்கள் அறிவிப்போடு நிறுத்தி விடுவார்கள். அதனை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு இதுவரை செய்ததில்லை. மதுரை தொழில் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர்கள் அறிவிக்கவில்லை.

    அதே சமயத்தில் அ.தி.மு.க. ஒரு திட்டத்தை அறிவித்தால் அதை உடனடியாக செயல்படுத்தி காண்பிக்கும். தி.மு.க. அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வட்ட செயலாளர் நாகரத்தினம், என்.எஸ். பாலமுருகன், பாலா, தவிடன், முத்துக்குமார், அக்பர் அலி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×