என் மலர்
மதுரை
- படுகாயமடைந்த 3 பெண்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
- அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து அரசு பஸ் பயணிகளுடன் நேற்று மதியம் மதுரைக்கு வந்து கொண்டிருந்தது.
சிவகங்கையை அடுத்த பூவந்தி அருகே உள்ள குயவன்வலசை பகுதியில் வந்தபோது பஸ்சும், எதிரே சிமெண்டு மற்றும் செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு ள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கீழக்கோட்யையை சேர்ந்த திருப்பதி(வயது60), சிவகங்கையை அடுத்த ராகினிப்பட்டியை சேர்ந்த கங்கா(24), மீமிசல் பகுதியை சேர்ந்த நாகஜோதி(45) ஆகிய 3பேர் பரிதாபமாக இறந்தனர்.
நாட்டரசன் கோ ட்டையை சேர்ந்த திவ்யா(29), அரசு பஸ் டிரைவர் ஈஸ்வரன், கண்டக்டர் சந்திரன், ஆர்.எஸ்.மங்கலம் எல்லம்மா ள்(70), கொந்தசாமி(65), சிவகங்கை குமரன் தெரு வெங்க டேசன்(22), முத்து நகர் ஆனந்தவல்லி(18), திருபுவனம் வன்னி க்கோட்டை பால முருகன்(50) உள்பட 14பேர் காயமடை ந்தனர்.
அவர்களில் சிலர் சிவகங்கை அரசு ஆஸ்ப த்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஆர்.எஸ்.மங்கலம் பிச்சம்மாள்(57), சிவகங்கை ஞானப்பழம்(52), பூவந்தி சாந்தா(57) ஆகிய 3 பேருக்கு கை- கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
எனவே அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஸ்ரீவில்லிபுத்தூர்-அழகர்கோவிலில் திருக்கல்யாண வைபவம் நாளை நடக்கிறது.
- கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை
108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றதாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ரெங்கமன்னார்-ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை(5-ந்தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி அணிந்த பட்டு வஸ்திரத்தை ஆண் டாள் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தான குழுவினர் கொண்டு வந்தனர்.
இந்த வஸ்திரத்தை அணிந்து நாளை ஆண்டாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்பார்.
நாளை இரவு கோவில் முன்புறமுள்ள ஆடிப்பூர கொட்டகையில் திருமணம் நடக்கிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மற்றொரு திவ்யதேச மான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் பங்குனி திருக்கல்யாண விழா 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை காலை நடக்கிறது.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டி மார்களையும் மணந்து கொள்கிறார். திருக்கல் யாணத்தை முன்னிட்டு 10 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்தளிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி பஸ் நிலையம் அருகில் உள்ள 2 கோவில் மண்டபங்கள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான கூடத்தில் கல்யாண விருந்து நடைபெறும்.
திருக்கல்யாண மொய் செலுத்த சிறப்பு கவுண் டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழகர்கோவில் திருக்கல்யாண விழாவில் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- மதுரை ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
- பல கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
மதுரை
பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அடிக்கடி அதிகரிக் கப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் சாமானிய மக்களின் தலையில் இடி யாக இறங்குகிறது.
பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் விலை யேற்றம் காரணமாக அன்றா டம் பயன்படுத்தும் அத்தி யாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகி றது. இதனால் பொது மக்கள் கடும் அவதியடை கின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் பொதுமக்களுக்கு மேலும் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மதுரை மாநக ரில் பெரும்பாலான ஓட் டல்கள், டீக்கடைகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலையை ரூ.1 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளனர். மார்ச் 31-ந்தேதி வரை ஓட்டல்களில் இட்லி, பொங்கல், தோசைக்கு ரூ.3 வரை விலை ஏற்றப் பட்டுள்ளது. சாப்பாடு ரூ.5 வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண விலை அதிகரிப்பு உள்ளிட்டவைகளை சமாளிக்க உணவுப் பொருட் களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்தனர்.
உணவுப் பொருட்களை போன்று பல கடைகளில் டீ, காபியின் விலை ரூ.1 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. சில கடைகளில் விலை உயர்த்தப்படாத நிலையில், வழக்கத்தை விட குறைவான அளவில் டீ, காபி கொடுப் பதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.
தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தணிக்கக்கூடிய பழங்கள் மற்றும் பழச்சாறு உள்ளிட்டவைகளும் பல கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
- அ.தி.மு.க. சார்பில் வீர தியாகிகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
- ரூ.1.47 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டார்.
மதுரை
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூரில் ஆங்கி லேயரின் ஏகாதி பத்திய கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தது. இதில் 17பேர் ஆங்கிலேயரின் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்தனர்.
அந்த வீரதியாகிகளின் 103-வது நினைவு தினத்தையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், நத்தம், விசுவ நாதன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து வீர தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
இதில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், டாக்டர் சரவணன், மாநில பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கைரேகை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத் தில் ஆங்கிலேயர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 17பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த நிகழ்வு தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் என்று கருதப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 3-ந் தேதி, வீர தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, அ.தி.மு.க.சார்பில் அந்த தியாகி களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்யப் பட்டது. ஏற்கனவே அம்மாவின் ஆட்சி காலத்தில் இங்கு நினைவு தூண் அமைக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு, 100-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று, மணிமண்டபம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, இதற்காக ரூ.1.47 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நினைவு தினத்தை அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். நிச்சயம் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். அப்போது தமிழக அரசின் சார்பில் இந்த நினைவு நாளை அரசின் சார்பில், அரசு விழாவாக நடத்துவதற்கு உரிய அரசாணையை பிறப்பிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 வயது குழந்தையுடன் தாய் மாயமானார்.
- சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பசும்பொன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்பாண்டி. இவரது மனைவி கலைமலர் (வயது23). இவர்களது 2 வயது மகன் அருள்கருப்பு. கடந்த 31-ந் தேதி அருள்கருப்புடன் வெளியே சென்ற கலைமலர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து சதீஷ்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மேடு- பள்ளம், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.
- துணைமேயரின் நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகிலுள்ள தீயணைப்பு நிலையம் எதிரே, போக்குவரத்து சாலை உள்ளது.இங்கு குடிநீர் குழாய் பதிப்பதற்காக, பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அதன் பிறகு அங்கு போக்குவரத்து சாலை சமன்படுத்தப்பட வில்லை.
எனவே அங்கு ரோடுகள் மேடும்- பள்ளமுமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மேடு- பள்ளம், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் இன்று காலை, மாமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்றார். அப்போது தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள போக்குவரத்து சாலையில் மேடு- பள்ளங்கள் இருப்பது தெரியவந்தது.
எனவே துணை மேயர் உடனடியாக காரில் இருந்து இறங்கினார். அதன்பிறகு அவர் செல்போன் மூலம், மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது துணை மேயர் போக்குவரத்து சாலையில் மேடு பள்ளம் தொடர்பாக, அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகள் தொடங்கியது. சாலை சீரமைக்கப்பட்ட பிறகுதான் அவர், சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். துணைமேயரின் நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்த னர்.
- மாமன்ற உறுப்பினர் நிதியை உயர்த்தக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள், மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பான விவாதம் நடந்தது.
மதுரை
மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் துணைமேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் தி.மு.க. மாமன்ற குழு தலைவர் ஜெயராமன் பேசும்போது, எங்களுக்கு உரிய இருக்கை வசதி செய்துதர வேண்டும் என்றார்.
அவரை தொடர்ந்து மாமன்ற குழு துணைத் தலைவர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் இருக்கை கேட்டு பிரச்சினை செய்தனர். 92-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கருப்புசாமி பேசும்போது, இது உள்கட்சி பிரச்சினை. இங்கு மக்கள் பிரச்சினையை மட்டும் தான் பேச வேண்டும் என்றார். இதனால் தி.மு.க. மாவட்ட உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் விவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, மக்கள் பிரச்சினையை மாமன்ற கூட்டத்தில் பேசுங்கள். வேறு பிரச்சி னையை தனியாக மேயரிடம் சென்று கூறுங்கள் என தெரிவித்தார். உடனே அவரை எதிர்த்து ஒரு தி.மு.க. கவுன்சிலர், "நீங்கள் மட்டும் மாமன்ற கூட்டத்திற்குள் ராகுல்காந்தி படத்தை கொண்டு வந்து பேசியது எந்த வகையில் நியாயம்? என ஒருமையில் பேசியதால் சலசலப்பு அதிகமானது.
இரு தரப்பையும் சமாதானம் செய்ய மேயர் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. சுமார் 1 மணி நேரம் மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் அருகில் வந்து வாக்குவாதம் செய்தனர்.
முடிவில் மேயர் பேசும்போது, உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் காவலர்களை வைத்து வெளியேற்ற செய்ய வேண்டியது இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் அனைவரும் அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர்.
பின்னர் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடந்தது.
67-வது வார்டு உறுப்பினர் நாகநாதன் பேசும்போது, விராட்டிபத்து பகுதியில் சாலை வசதி சரியில்லை. அந்த பகுதியில் பாலம் கட்டும் பணியை செய்த தனியார் நிறுவனம் சாலைகளை சேதப்படுத்தி விட்டது. மேலும் எச்.எம்.எஸ்.காலனி பகுதியில் பாதாள சக்கரை வசதி போன்றவை செய்து தர வேண்டும்.
அவரை தொடர்ந்து பேசிய 64-வது வார்டு உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சோலை ராஜா பேசும்போது, மதுைரயைவிட குறைந்த வருவாய் ஈட்டக்கூடிய கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு மேம்பாட்டு நிதியாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை குறைவாக உள்ளதால் அதனை தலா ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.
- யூ-டியூபர் மீதான வழக்கு மதுரை கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
- பீகார் மாநிலத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
மதுரை
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இது வடமாநில தொழிலாளர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சட்டம்- ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இதுகுறித்து பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் இது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போலி வீடியோக்களை பகிர்ந்த யூ-டியூபர் மணிஷ் காஷ்யப் மீது மதுரை பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனீஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்து வந்தனர். அதன் பிறகு அவர் கடந்த 30-ந் தேதி மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிபதி டீலாபானு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது மனீஷ் காஷ்ய ப்பை 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்து 3-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
யூ-டியூபர் மனீஷ்காஷ்யப் பின் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து அவரை இன்று மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர் படுத்துவதாக இருந்தது. இன்று விடுமுறை என்பதால் தாமரை தொட்டி பகுதியில் உள்ள நீதிபதி வீட்டில் மனீஷ் காஷ்யப் ஆஜர்படுத்தப் பட்டார்.
அப்போது அவரை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனீஷ் காஷ்யப் விசா ரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. ஒரு சில கேள்வி களுக்கு மட்டும் பதில் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. அவரை பீகார் மாநிலத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த வேண்டி யுள்ளது. மனீஷை மேலும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கோர்ட்டு விடுமுறை என்பதால் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலையில் வருகிற புதன்கிழமைக்கு (5-ந் தேதி) வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
- தமிழகத்தில் கிராமிய கலைகளை மீட்டெடுப்போம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
- கிராமிய கலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும்.
மதுரை
தமிழ்நாடு கிராமிய கலைஞர் மற்றும் கலைத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 25-ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது.
இதில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர் விஜயா தாயன்பன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ. தங்கராஜ், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மாநில தலைவர் சோமசுந்தரம், தென்னக பண்பாட்டு மையம் இயக்கு னர் கோபாலகிருஷ்ணன், முத்தமிழ் பேரவை தலைவர் ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிராமிய கலைஞர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், நையாண்டி மேளம், கட்டை கால் ஆட்டம், நாதஸ்வரம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஆடியபடி பேரணியாக வந்தனர். இதனை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அனீஸ்சேகர், பூச்சி முருகன் ஆகியோர் தனி மேடையில் அமர்ந்து கண்டு ரசித்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக பண்பாட்டில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக கிராமிய கலைகள் திகழ்ந்து வருகின்றன.
பொதுவான கருத்துக்களை மற்றவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறும் வல்லமை கிராமிய கலைகளுக்கு உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த கிராமிய கலைகளை பாது காக்க வேண்டியது நமது கடமை ஆகும்.
இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றை மீட்டெ டுக்கும் விதமாக அந்த துறையை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.
- தபால் பொருட்களுடன் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
- கீழமுத்துப்பட்டி வீரமுடையான் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் மதன்குமாரை (22) கைது செய்தனர்.
மதுரை
மதுரை பசுமலையை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் திவ்யா (27). மத்திய அரசு அலுவலகத்தில் தபால் டெலிவரி ஊழியராக உள்ளார். சம்பவத்தன்று மதியம் இவர் சைக்கிளில், தபால் பொருட்களுடன் சென்றார். திருப்பரங்குன்றம் ரோட்டில் ஒரு வீட்டுக்கு தபால் கொடுக்க வேண்டி இருந்தது. அங்குள்ள போலீஸ் பூத் அருகே, சைக்கிளை நிறுத்தினார்.
திரும்பி வந்து பார்த்த போது தபால் பொருட்களுடன் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் பைக்காரா முத்துராமலிங்கபுரம் மேட்டு தெருவை சேர்ந்த பாண்டியை (46) கைது செய்தனர்.
மதுரை புதுராமநாதபுரம் ரோடு ஜவகர் சாலையை சேர்ந்தவர் டார்ஜான் ராஜா(வயது35). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு மதுரை-ராமேசுவரம் ரிங் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை தாக்கி செல்போனை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பசுமலை ராயப்பன் நகரை சேர்ந்த சுரேந்திரன் மகன் ராஜசேகர் (21). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பைக்கை திருடிய கீழமுத்துப்பட்டி வீரமுடையான் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் மதன்குமாரை (22) கைது செய்தனர்.
- கணவர் பிரிந்து சென்றதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- திருமணமாகி கணவருடன் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்த புதுப்பெண் தற்கொலை செய்தார்.
மதுரை
மதுரை திருப்பாலை பசும்பொன் நகரை சேர்ந்த வர் பெருமாள். இவரது மகள் அருணாதேவி (வயது 23). இவருக்கும், அருண் குமார் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி திருமணம் நடை பெற்றது. இருவரும் தனி குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அருணா தேவிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர். அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இதைத்தொடர்ந்து கணவர் அருண்குமார், அருணாதேவிக்கு வலிப்பு நோய் இருப்பதாக கூறி தகராறு செய்து மனைவி யுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறி விட்டார். அதன் பின்னர் அருணாதேவி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
திருமணமான ஒரு மாதத்தில் கணவர் வலிப்பு நோயை காரணம் காட்டி பிரிந்து சென்றதால் அருணாதேவி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இதுதொடர்பாக தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வந்தார்.
இந்த நிலையில் நேற்று பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் அருணாதேவி மட்டும் தனியாக இருந்தார். ஏற்கனவே மனம் உடைந்த நிலையில் இருந்த அவர், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று மதியம் வெளியில் சென்ற பெருமாள் வீட்டிற்கு வந்தார். அப்போது மகள் தூக்கில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மின் விசிறியில் தொங்கிய அருணாதேவி உடலை மீட்டு உறவினர்கள் பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பாலை போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருணா தேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி கணவரு டன் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- திருநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம், தனியார் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. தலைவர் அய்யல் ராஜ் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் இந்திரா காந்தி, விஜயா, முன்னாள் அறங்காவலர் மகா.கணேசன், பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். டாக்டர்கள் சரவணன், ஹேமா ஆகியோர் தலைமையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.
திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். சங்க நிர்வாகி வேட்டையர், கெங்கபிரகாஷ், அண்ணாமலை மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், அரவிந்தன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






