என் மலர்
மதுரை
- மதுரையில் கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது.
- இதற்கான ஏற்பாடுகளை மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜ நாடார்-கிருஷ்ணம்மாள் மன்றத்தினர் செய்துள்ளனர்.
மதுரை
மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜநாடார்- கிருஷ்ணம்மாள் மன்றம் கல்யாண விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது.விழாவை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,புண்ணியாஹவாசனம், 11 மணிக்கு தன பூஜை, மகா கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம்,வாஸ்து சாந்தி நடந்தது. மாலை 5மணிக்கு விக்னேஸ்வர பூஜை,புண்ணியா ஹவாசனம்,முதற்கால யாக பூஜை ஆகியவை நடக்கிறது.
கும்பாபிஷேக விழா நாளை 5-ந்தேதி நடக்கிறது. காலை 6மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், 2-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கலசங்கள் புறப்பாடு, 9.15 மணிக்கு கல்யாண விநாயகர் விமான மகா கும்பாபிஷேகம், கல்யாண விநாயகர் மூலாலய கும்பாபிஷேகம், மகா அபிஷேகம்,மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. 6-ந் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி 48 நாட்களுக்கு நடக்கிறது.
கும்பாபிஷேக பூஜைகளை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இரண்டாம் தானீகம் ராஜா பட்டர் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை நாடார் உறவின்முறை சுப்புராஜ நாடார்-கிருஷ்ணம்மாள் மன்றத்தினர் செய்துள்ளனர்.
- ஜம்புரோபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் -முளைப்பாரி உற்சவம் நடந்தது.
- 7-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.
மதுரை
மதுரை மாநகர் 28-வது வட்டம் ஜம்புரோபுரம் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் முளைப்பாரி 83-வது ஆண்டு உற்சவம் கடந்த 28-ந்தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. அன்று நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கயிறு கட்டினர். விழாவை முன்னிட்டு தினமும் கும்மி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இன்று (4-ந்தேதி) மாலை 5 மணிக்கு நையாண்டி மேளத்துடன் வைகை ஆற்றுக்கு சென்று சாமி கரகம் எடுத்து வீதி உலா வரும் நிகழ்ச்சி, மாவிளக்கு வழிபாடு, பொங்கல் பூஜை நடக்கிறது.
நாளை (5-ந்தேதி )மாலை 6 மணிக்கு மேல் செல்லூர் மகாதேவன் குழுவினர் நாசிக் டோல் மேளதாளத்துடன் கீழமாசிவீதி, ரகுராம் குழுவினர் வான வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு கிராமத்து பிள்ளையார் கோவில், கிராமத்து மாரியம்மன் கோவில், அழகர்கோவில் ரோடு வழியாக தல்லாகுளம் பெருமாள் கோவில், கருப்பணசாமி கோவில் சென்று கோரிப்பாளையம் பள்ளிவாசலில் இறக்கி வைத்து கல்பாலம் ரோடு வழியாக பவனி வந்து வைகை ஆற்றில் சாமி கரகமும், முளைப்பாரியும் கரைக்கப்படும். 6-ந்தேதி காலை 6 மணி முதல் 8 வரை மஞ்சள் நீராட்டு நடக்கிறது. 7-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.
- மதுரையில் அரிமா சங்க கூட்டம் நடந்தது.
- ஸ்மார்ட் சிட்டி மற்றும் ராயல் எம்பரர் சங்கங்கள் ஏற்பாடு செய்தன.
மதுரை
அகில உலக அரிமா சங்கம் மாவட்டம் 324 பி வட்டாரம் 31 உள்பட அரிமா சங்கங்கள் மாவட்ட ஆளுநரின் வருடாந்திர அதிகாரபூர்வ வருகை மற்றும் வட்டாரம் 31-ன் 3-வது வட்டார கூட்டம் அண்ணாநகரில் நடந்தது.
ஆளுநர் டாக்டர் ரவீந்திரன் உள்ளிட்ட அமைச்சரவை நிர்வாகிகள் சங்கங்களின் செயல்பாடு மற்றும் நிர்வாகம் சம்பந்தமாக ஆய்வு செய்து சங்கங்களின் செயல்பாடுகளை பாராட்டி பேசினர். வட்டாரதலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் 3-வது வட்டார கூட்டம் நடந்தது.
இதற்கு மதுரை செந்தமிழ், பென்னிகுக், ஸ்மார்ட் சிட்டி மற்றும் ராயல் எம்பரர் சங்கங்கள் ஏற்பாடு செய்தன.
சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வுக்கு மதுரை செந்தமிழ் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் பொறியாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
- உசிலம்பட்டியில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், நாளை (5-ந்தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி மற்றும் மாதாந்திர உதவித் தொகை ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே அந்தப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.
- டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
- அ.தி.மு.க. கவுன்சிலர் ரூபினிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 48-வதுவார்டு கவுன்சிலர் ரூபினிகுமார் பேசும்போது கூறியதாவது:-
மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் முழுமையாக செய்து தரவில்லை. அதனை விரைந்து செய்ய வேண்டும்.
மேலும் மதுரைக்கு புகழ் சேர்த்த சினிமா பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர ராஜன் அவர்களுக்கு சிலை அமைக்கவும், மணிமண்டபம் அமைக்கவும் சட்டசபையில் முதலில் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள். தற்போது தமிழக அரசு டி. எம். சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக சட்டசபையில் குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் மதுரையில் டி. எம்.சவுந்தரராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் சட்ட சபையில் குரல் கொடுத்த செல்லூர் ராஜூ அவர்களுக்கு நன்றிதனையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறோம்.
இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் மதுரை மாநகராட்சியின் அடுத்த கூட்டத்தில் டி.எம். சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எனது வார்டு மக்கள் சார்பாகவும் அ.தி.மு.க. சார்பாகவும் கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா கட்சியின் கைப்பாவை ஆகிவிட்டார்.
- அ.ம.மு.க. பொது செயலாளர் பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா கட்டி காத்த அ.தி.மு.க. இயக்கத்தை இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தனதாக்கிக் கொள்ள நினைக்கிறார்.
இதற்காக மத்திய பாரதிய ஜனதா அரசின் கை பாவையாக மாறிவிட்ட அவர் அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை மதிக்காமல் தன்னை பொதுச் செயலாளராக பிரகடனம் செய்து வருகிறார்.
அ.தி.மு.க. தொடங்கப்பட்ட போது எம்.ஜி.ஆர். பொதுக்குழுவுக்கு எந்த ஒரு அதிகாரத்தையும் வழங்கவில்லை. தி.மு.க.வில் இருந்து பொதுக்குழுவை கூட்டி எம்.ஜி.ஆர். நீக்கப் பட்டதன் காரணத்தினாலேயே பொதுக்குழு அதிகாரம் இல்லாத இயக்கமாக அ.தி.மு.க சட்ட விதிகள் தெளிவாக உள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதாக நாடகம் ஆடி வருகிறார். தென் மாவட்ட மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் தென் மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மத்திய பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை கபளிகரம் செய்ய முயற்சிக் கிறது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளது.
இதனை பயன் படுத்தி உடனடியாக அவரது எம்.பி. பதவியும் மத்திய பா. ஜனதா அரசு பறித்துள்ளது. இது நீதிமன்ற நடவடிக்கை களை மத்திய அரசு எந்த அளவுக்கு அவமரியாதை யாக நடத்தி வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.
இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அரசை வீட்டுக்கு அனுப்ப ஒட்டு மொத்த இந்தியாவே தயாராகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சித்திரைப்பெருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும் என கலெக்டரிடம் பா.ஜ.க. கோரிக்கை விடுத்தனர்.
- மாநகராட்சி நிர்வாகம் கணிசமான நிதியை ஒதுக்கி கங்கை, காவிரி போல ஓபுளா படித்துறை ஆழ்வார்புரம், பேச்சியம்மன் பகுதிகளில் படித்துறைகள் அமைக்க வேண்டும்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரிடம் பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் நாகராஜ், மேற்கு மாவட்ட தலைவர் காளிதாஸ் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மதுரையில் இந்த மாதம் 23-ந் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக மே 5-ந் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. விழாவை காண மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். விழாவையொட்டி வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.
கள்ளழகரை காண ஆற்றில் இறங்கிய பக்தர்கள், இருபுறமும் தடுப்புச் சுவர்கள் கட்டியதால் வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. நடப்பாண்டு வைகை ஆற்றில் பக்தர்கள் ஏறி இறங்க வசதியாக ஓபுளா படித்துறை, ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் சிரமமின்றி ஆற்றுக்குள் இறங்கி அழகரை தரிசித்து கரையேற முடியும். முடி காணிக்கை செலுத்துபவர்கள் ஆற்றில் இறங்கி புனித நீராடி வெளியேற இயலும். மாநகராட்சி நிர்வாகம் கணிசமான நிதியை ஒதுக்கி கங்கை, காவிரி போல ஓபுளா படித்துறை ஆழ்வார்புரம், பேச்சியம்மன் பகுதிகளில் படித்துறைகள் அமைக்க வேண்டும்.
சித்திரை திருவிழாவை தேசிய விழாவாக பிரதமர் மோடி அறிவிக்க ஏதுவாக, மதுரையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அழகர் கோவிலில் இருந்து வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம், ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கும் பகுதி, வண்டியூர் மற்றும் அழகர் திரும்பிச் செல்லும் வழித்தடங்கள் ஆகியவை புனித பாதையாக அறிவிக்க வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை மத்திய சிறையில் கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக வரும் செய்தி முற்றிலும் தவறானது.
- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மதுரை மத்திய சிறைக்கு அனுபவம் உள்ளது.
மதுரை:
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் தலை தூக்கி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றான மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் உள்பட 5 பேருக்கு கொரோனா பரவியதாகவும், அவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 'வைரஸ் காய்ச்சல்' என்ற பெயரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது.
ஆனால் அதற்கு சிறைத்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் கூறியதாவது:-
மதுரை மத்திய சிறையில் கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக வரும் செய்தி முற்றிலும் தவறானது. மதுரை மத்திய ஜெயிலில் சுமார் 1800 சிறைவாசிகள் உள்ளன. இவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு கிடையாது.
சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு வரும் கைதிகளுக்கும் அரசு மருத்துவமனையில் முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதன் பிறகு அவர்கள் ஜெயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா முடிவு வரும் வரை அவர்கள் சிறையில் தனியாக அடைக்கப்பட்டு வைக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, அவர்கள் சிறைக்குள் மாற்றப்படுகின்றனர்.
ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மதுரை மத்திய சிறைக்கு அனுபவம் உள்ளது. இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மத்திய சிறையில் கடந்த மாதம் 28-ந் தேதி விசாரணை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் மதுரை போலீசாரிடம் வழிக்காவல் கோரப்பட்டு உள்ளது. சிறைவாசிகளின் நலன், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஜெயில் நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டைக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்தது.
- இதனை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு குலசேகரன் கோட்டைக்கு திண்டுக்கல்- மதுரை நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி நகர்புற சாலையில் இருந்து 1½ கிலோமீட்டர் தூரம் ராமநாயக்கன்பட்டி, பொன்மலை பொன் பெருமாள் கோவில், பத்திரப்பதிவு அலுவலகம், பெருமாள் கண்மாய் வழியாக செல்ல வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலை யை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படியும், அமைச்சர் மூர்த்தி ஆலோசனையின்படியும் தற்போது நபார்டு வங்கி 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி பொறியாளர் கருப்பையா வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தார் சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி மோகன், ஜெயகாந்தன், திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா, பிரகாஷ், பிரபு, அரவிந்தன், முரளி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை அருகே உள்ள கடைக்குள் பைக் புகுந்தது.
- பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த பெண் படுகாயமடைந்தார்.
மதுரை
மதுரை தபால்தந்தி நகர், பேங்க் காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாமுவேல் தாய் மஞ்சுளா (49) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது திருமங்கலம், முல்லைநகர் பகுதியில், அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள், அங்குள்ள கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது. இதில் சாமுவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மஞ்சுளாவுக்கு தலை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாமுவேல், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.
- அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவம் பார்ப்பதற்காக பிரசவ வார்டு அருகே உள்ள நோயாளிகள் காத்திருப்பு அறையில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை ஊழியர்கள் மீட்டு வார்டில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு தீவிர உடல் நலபாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படுகாயமடைந்த 3 பெண்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
- அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து அரசு பஸ் பயணிகளுடன் நேற்று மதியம் மதுரைக்கு வந்து கொண்டிருந்தது.
சிவகங்கையை அடுத்த பூவந்தி அருகே உள்ள குயவன்வலசை பகுதியில் வந்தபோது பஸ்சும், எதிரே சிமெண்டு மற்றும் செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு ள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கீழக்கோட்யையை சேர்ந்த திருப்பதி(வயது60), சிவகங்கையை அடுத்த ராகினிப்பட்டியை சேர்ந்த கங்கா(24), மீமிசல் பகுதியை சேர்ந்த நாகஜோதி(45) ஆகிய 3பேர் பரிதாபமாக இறந்தனர்.
நாட்டரசன் கோ ட்டையை சேர்ந்த திவ்யா(29), அரசு பஸ் டிரைவர் ஈஸ்வரன், கண்டக்டர் சந்திரன், ஆர்.எஸ்.மங்கலம் எல்லம்மா ள்(70), கொந்தசாமி(65), சிவகங்கை குமரன் தெரு வெங்க டேசன்(22), முத்து நகர் ஆனந்தவல்லி(18), திருபுவனம் வன்னி க்கோட்டை பால முருகன்(50) உள்பட 14பேர் காயமடை ந்தனர்.
அவர்களில் சிலர் சிவகங்கை அரசு ஆஸ்ப த்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஆர்.எஸ்.மங்கலம் பிச்சம்மாள்(57), சிவகங்கை ஞானப்பழம்(52), பூவந்தி சாந்தா(57) ஆகிய 3 பேருக்கு கை- கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
எனவே அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






