என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமரசம் பேச சென்றவர் முகத்தில் கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்
- தொடர்ந்து நீடித்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தீனதயாளன், ராஜாவுடன் சமரசமாக செல்ல முடிவு செய்தார்.
- கொதிக்கும் பால் முகத்தில் பட்டவுடன் வலியால் தீனதயாளன் அலறித்துடித்தார்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு முத்தராமலிங்க பட்டியை சேர்ந்தவர் தீனதயாளன்(வயது40). இவருக்கும், தனியாமங்கலத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து நீடித்த இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தீனதயாளன், ராஜாவுடன் சமரசமாக செல்ல முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று அவர் தனியாமங்கலத்தில் உள்ள ராஜா வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு அவரது சகோதரி சூரியகலா(40), அம்மாபட்டி விக்னேஷ் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் தீனதயாளன் சமரசமாக சென்று விடலாம் என கூறினார். ஆனால் அதனை ஏற்காமல் சூரியகலா, விக்னேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூரியகலா வீட்டின் சமையலறைக்கு சென்று அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த பாலை எடுத்து வந்து தீனதயாளனின் முகத்தில் ஊற்றினார். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
கொதிக்கும் பால் முகத்தில் பட்டவுடன் வலியால் தீனதயாளன் அலறித்துடித்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியகலா, விக்னேஷை கைது செய்தனர்.
சமரசம் பேச சென்றவரின் முகத்தில் கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






