என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூர் அருகே வேன் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர்:

    ஓசூர் சானசந்திரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). வேன் டிரைவர். இவருக்கு கடன் பிரச்சினை இருந்தது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டதால் மனமுடைந்த முருகன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கல்லாவி காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் பெருமாள் (23). கட்டிட தொழிலாளி. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன் உள்பட 295 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கொரோனா பரவி வரும் நிலையில், தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தலைமையில், கிருஷ்ணகிரி ஒன்றியம், கங்கலேரி மற்றும் பெரியமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவதானப்பட்டி ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

    அதேபோல், குருபரப்பள்ளி அடுத்த பில்லனகுப்பம் பகுதியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் வேப்பனப்பள்ளி பி.முருகன் எம்.எல்.ஏ. மற்றும் ஊராட்சி தலைவர் சிவராஜ் ஆகியோர் தலைமையில், கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

    இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள். இதே போல காவேரிப்பட்டணம் ஒன்றியம், சவுட்டஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் மற்றும் பர்கூர் ஒன்றியம், காரகுப்பம் அடுத்த சமாதான நகர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் தலைமையிலும், கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

    இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட மொத்தம் 295 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 125 பேர் பெண்கள் ஆவார்கள்.
    பர்கூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    பர்கூர்:

    பர்கூர் ஒன்றியம் சூலாமலை ஊராட்சி குரும்பர்கொட்டாய் கிராமம். இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதை தீர்க்க கோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சூலாமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குரும்பர்கொட்டாய் பகுதியில் குடிநீர் பயன்பாட்டிற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் மோட்டார் பொருத்தி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த மோட்டார் கடந்த 8 மாதத்திற்கு முன்பு பழுதானது. அதன்பின் அதை சீர்செய்யாததால் நாங்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டபட்டு வருகிறோம். இது குறித்து பலமுறை ஊராட்சியில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர்.
    குருபரப்பள்ளி அருகே விவசாயி தற்கொலை செய்து செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குருபரப்பள்ளி அருகே உள்ள எண்ணேகொல்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 38). விவசாயி. மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், எந்த வேலைக்கும் செல்லாமல் மது குடித்து வந்தார். இதற்கு இவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்ததுடன், மது குடிக்கும் பழக்கத்தை கைவிட வலியுறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த அண்ணாதுரை சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு தோட்டத்தில் மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர கிசிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆன்லைனில் பாடம் படிக்க அக்கா மொபைல் போன் கொடுக்க மறுத்ததால் தம்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த சின்ன மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் திம்மப்பா. இவரது மகன் திலீப் (வயது 14). கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திலீப், பள்ளி பாடத்தை ஆன்லைனில் படித்து வந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி பாடத்தை படிப்பதற்காக தனது அக்காவிடம் மொபைல் போனை கேட்டுள்ளார். அதற்கு அக்கா, தானும் ஆன்லைனில் பாடம் படிக்க வேண்டியுள்ளது என்று கூறி திலீப்பிடம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த திலீப் வீட்டில் இருந்த போது திடீரென பூச்சிமருந்தை எடுத்து குடித்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், தீலிப்பை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சையில் இருந்த திலீப் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அக்கா மொபைல் போன் கொடுக்க மறுத்ததால் தம்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு மின்னணு அட்டையுடன் கைவிரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப் படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 1,094 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 1,058 கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 36 கடைகளும் செயல்படுகின்றன. இந்த மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 482 ரேஷன்கார்டுகள் உள்ளன.

    இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு மின்னணு ரேஷன் கார்டு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கைவிரல் ரேகை பதிவு செய்யும் முறை (பயோ மெட்ரிக்) மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் மின்னணு ரேஷன் கார்டுடன் கைவிரல் ரேகை பதிவு செய்வதன் மூலமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நடைமுறை அக்டோபர் 1-ந் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. கைரேகை பதிவு செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

    கைரேகை ஏற்று கொள்ளாத பட்சத்தில், ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி எண் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். மேலும், அவற்றிலும் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் மின்னணு ரேஷன் கார்டுவில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி எண் அனுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் நத்தன்கொட்டாய் சின்னப்பன் ஏரிகரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சாத்தனூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன்(வயது30), நத்தன்கொட்டாய் மோகன்(32), வண்டிகாரன்கொட்டாய் இளங்கோ(27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணை கொன்று தீ வைத்து எரித்த சம்பவத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    அஞ்செட்டி அருகே சின்னமலை வனப்பகுதியில் கடந்த 24-ந்தேதி தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் பிணம் கிடந்தது. இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் மஞ்சுமலை பகுதியை சேர்ந்த மணிமேகலை (வயது40) என்பதும், கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை கொலை செய்து தீவைத்து எரித்ததும் தெரியவந்தது. 
    இதுதொடர்பாக ஏத்தகிணறு பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கோவிந்தசாமி (47), சின்னமோட்ராகி பகுதியை சேர்ந்த பத்திநாதன்(62) ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். இதில் தொ.மு.ச. மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் பரமசிவம், மத்திய சங்க துணைத்தலைவர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சில் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்கள்.

    ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ராமநாதன், தவமணி, செல்வராஜ், ரவி, குணசேகரன், கமலேசன், முரளி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு பஸ்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. போக்குவரத்து கழக வழித்தடங்களில் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் முயற்சியை கைவிட வேண்டும். போக்குவரத்து கழக நிர்வாகமே அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும். குறைந்த பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை முழுமையாக அரசு ஈடுகட்ட வேண்டும். போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும். கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்த தொழிலாளர்களுக்கு ரூ.25லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பர்கூர் அருகே அம்மா நகரும் நியாய விலைக் கடையை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
    பர்கூர்:

    பர்கூர் தாலுகா கந்திகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்க விழா நடைபெற்றது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்தானம் வரவேற்றார்.

    இதில், பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர் ராஜதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் கனகராஜ், பர்கூர் கூட்டுறவு சார் பதிவாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ஞானபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மகிழரசி ஜெய்பிரகாஷ், ஊராட்சி செயலாளர் நாகராஜ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 507 முழு நேர நியாய விலைக்கடைகள், 521 பகுதி நேர நியாய விலைக் கடைகள், 30 மகளிர் நியாய விலைக்கடைகள் என மொத்தம் 1,058 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்க தொகுதிவாரியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் 31, பர்கூர் தொகுதியில் 29, வேப்பனபள்ளி தொகுதியில் 28, ஊத்தங்கரை தொகுதியில் 27, ஓசூர் தொகுதியில் 19, தளி தொகுதியில் 34 நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கந்திகுப்பம் நியாய விலைக்கடையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காமராஜ் நகரில் உள்ள பொதுமக்களுக்கு, அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காமராஜ் நகரில் உள்ள 175 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் முதல் மற்றும் இரண்டாவது வியாழக்கிழமைகளில் இவ்விடத்தில் நகரும் நியாய விலைக்கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். அப்போது பெற இயலாதவர்கள் கந்திகுப்பம் நியாய விலைக் கடையின் வேலை நாட்களில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

    கிருஷ்ணகிரி அருகே காதல் மனைவியை பிரித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி அடுத்த கே.வி.கோவில் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 24). இவரும், சுண்டேகுப்பம் அடுத்த மணி நகரை சேர்ந்த சவுமியா (20) என்பவரும், காதலித்து கடந்த 25-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 28-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

    இதையடுத்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் என பெண்ணின் குடும்பத்தினர் எழுதி கொடுத்துவிட்டு, அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் தேவராஜின் உறவினர் சின்னசாமி கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் காதல் திருமணம் செய்த 2 பேரையும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் காதல் மனைவியை பிரித்ததால் மனமுடைந்த தேவராஜ் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே நேற்று தேவராஜின் உறவினர்கள் அந்த மருத்துவமனை முன்பு காதல் திருமணம் செய்த 2 பேரையும் சேர்த்து வைக்க கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதற்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கந்திகுப்பம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கந்திகுப்பம் அருகே உள்ள அஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 33). லாரி டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சுரேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×