என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    பேஸ்புக்கில் காதலனை பார்க்க ஓசூர் வந்த கேரளா மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அடைக்கலம் கொடுத்த காதலனை கேரள போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த நேரலகிரியை சேர்ந்த கூலித்தொழிலாளி தரணி (22) என்பவருக்கும் இடையே முகநூல் (பேஸ்புக்) மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டது.

    தனது காதலனை பார்க்க விரும்பிய மாணவி தன்னை கிருஷ்ணகிரி அழைத்து செல்லுமாறு ஏற்கனவே பழக்கமான கோழிக்கோடு அடுத்த மணாசேரியை சேர்ந்த விபின்ராஜ் (22) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். விபின்ராஜ் கடந்த 2-ந்தேதி தனது நண்பர்கள் அகித்ராஜ் (23), ஜோபின் (23) ஆகியோருடன் மாணவியை காரில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அழைத்து வந்தார். வரும் வழியில் விபின்ராஜ் உள்பட 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    பின்னர் ஓசூர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தனது காதலன் தரணியை தொடர்பு கொண்ட மாணவி, நடந்த விவரத்தை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை காமராஜ் நகரில் உள்ள தனது பெரியப்பா மகள் நதியா என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்று மாணவிக்கு அடைக்கலம் கொடுத்தார். மாணவி மாயமானது தொடர்பாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்படி அவரது காதலன் தரணியை கேரள மாநிலம், முக்கம் போலீசார் தேடி வந்தனர்.

    அவர் பேரிகை காமராஜ் நகரில் இருப்பதை அறிந்த போலீசார் தரணியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவியை மீட்ட போலீசார் அவர் கொடுத்த புகாரின் பேரில் பலாத்காரம் செய்த விபின்ராஜ், அகித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி மற்றும் போலீசார் பழையபேட்டை வாணியர் சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சுப்பிரமணியம் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 46), ரெயில்வே காலனி சக்திவேல் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதே போலீசார், காந்தி சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பாப்பாரப்பட்டியை சேர்ந்த திருப்பதி (50), காவேரி (50) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கே.ஏ.தர்கா பின்புறம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பாப்பாரப்பட்டி லோகேஷ் (37), கே.ஏ.தர்கா பகுதியை சேர்ந்த மூர்த்தி (37), அக்பர் (52) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.150-ஐ பறிமுதல் செய்தனர்.

    கந்திகுப்பம் போலீசார் பி.ஆர்.ஜி மாதேப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த அம்புரோஸ் (50), பர்கூர் வடிவேல் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.400-ஐ பறிமுதல் செய்தனர். நாகரசம்பட்டி போலீசார், கோவிலூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த தளிஅள்ளி கதிர்வேல் (40), கோவிலூர் வெங்கடேசன் (30), ராஜா (30) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ. 300-ஐ பறிமுதல் செய்தனர்.

    ஓசூர் டவுன் போலீசார், பார்வதி நகர் மலைக்கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த காளேகுண்டா பகுதியை சேர்ந்த ரமேஷ் (21), அலசநத்தம் சிவா (20), பார்வதி நகர் ஸ்ரீதர் (29) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.300-ஐ பறிமுதல் செய்தனர். பர்கூர் போலீசார், காரகுப்பம் ரவிச்சந்திரன் என்பவரது மாந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய எலத்தகிரி ராஜா (42), பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி சுப்பிரமணி (52) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர். கெலமங்கலம் போலீசார், அங்குள்ள சந்தை மைதானம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அர்ஜூனன் (32), அருண் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த பணம் ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர். மொத்தம் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக 30 பேர் கைது செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தேன்கனிக்கோட்டை அருகே பா.ஜனதா பிரமுகர் வீட்டுக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கோவிந்தப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 30) பாஜக எஸ்.சி.அணி மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். இந்திரா நகர் தொகுப்பு வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    இந்த நிலையில் ஆனந்தன், தனது வீட்டை ஒட்டி 6 சென்ட் நிலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாங்கி உள்ளார். அந்த இடத்தில் தற்காலிகமாக ஓலைக்குடிசை அமைத்துள்ளார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் மர்ம கும்பல், ஆனந்தனின் ஓலைக்குடிசைக்கு தீ வைத்தனர். இதில் தீ மளமள என்று பரவியது.

    அப்போது குடிசையில் இருந்த ஆனந்தனின் தாயார் கூச்சல் போட்டார். உடனே சத்தம் கேட்டு ஆனந்தன் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    பா.ஜனதா பிரமுகர் வீட்டிற்கு யார் தீ வைத்தது என்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த தீ வைப்பு சம்பவம் நடந்ததா? என்றும் தெரியவில்லை.

    இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பா.ஜனதா பிரமுகர் வீட்டுக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், மாவட்ட மைய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித மேலாண்மைத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், மாவட்ட மைய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித மேலாண்மைத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடராஜன் வரவேற்று பேசினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தோழமை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வெங்கடாசலபதி, மஞ்சுளா, திம்மராஜ், ஹரிஷ்பாபு, கல்யாணசுந்தரம், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முடிவில், மாவட்ட பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித மேலாண்மை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்த பின் செயலாக்கிட வேண்டும். அதுவரை பழைய முறையிலேயே சம்பளப் பட்டியல் தயாரித்து வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    குருபரப்பள்ளி அருகே தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 36). இவர், கிருஷ்ணகிரி பழையபேட்டை உள்ள நகைக்கடையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ஆனந்தன், குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகன் கடன் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கோடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நிதி நிறுவனம் நடத்தி வரும் கோபி(31) என்பவரிடம் சீட்டு கட்டி வந்ததாகவும். அந்த சீட்டை எடுத்துவிட்டேன். ஆனால் தற்போது வேலை ஏதும் இல்லாததால் திருப்பி கட்ட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அந்த பணத்தை கொடுத்து விடுவதாக கூறினேன்.

    ஆனால், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் கோபி, ஆதரவாளர்களுடன் வந்து என்னை தாக்கினர். மேலும், எனது பெற்றோரிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினார். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு நான் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டேன் என தெரிவித்துள்ளார். அதன்படி, பணம் கேட்டு சுரேஷ்குமாரை, கோபியின் ஆதரவாளர்கள் தாக்கும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த 2 வீடியோக்கள் பார்த்த, குருபரப்பள்ளி போலீசார் சுரேஷ்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக கோபி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தனியார் நிதி நிறுவனர் கோபி மற்றும் அவரது அடியாட்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன்-மனைவி பலியானார்கள். விவசாயி படுகாயம் அடைந்தார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மூன்றம்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). விவசாயி. இவருடைய மகன் குமார் (33). இவரது மனைவி லதா (30). இவர்கள் 3 பேரும் நேற்று காலை மோட்டார்சைக்கிளில் முன்றம்பட்டியில் இருந்து ஊத்தங்கரைக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டி சென்றார். குமாரும், அவரது மனைவி லதாவும் பின்னால் அமர்ந்து இருந்தனர்.

    அவர்கள் ஊத்தங்கரை அருகே சென்னப்பநாயக்கனூர் வேடியப்பன் கோவில் அருகில் சென்றபோது பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிளின் மீது மோதியது. இதில் நிலைக்குலைந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அப்போது குமாரும், அவருடைய மனைவி லதாவும் சம்பவ இடத்திலேயே லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள்.

    இந்த விபத்தில் மோகன் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த கணவன்-மனைவி 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் கணவன்-மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள களர்பதி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது45). விவசாயி இவருக்கு நளினி (42) என்ற மனைவியும் 3 மகள் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் மணி நேற்றிரவு விவசாய வேலை யை பார்த்து விட்டு அருகே இவருக்கும் சொந்தமான இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கியுள்ளார்.

    மற்றொரு வீட்டின் கதவின் பூட்டை உடைத்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை கண்டு மணி அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து அவர்மத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இதனால் கைரேகை நிபுணர்களை வர வழைக்கப்பட்டு கைரேகை பதிவு சேகரித்தும், மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பாலனப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பனப்பள்ளி:

    வேப்பனப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ்சேவியர் மற்றும் போலீசார், தீர்த்தம் - பூதிமுட்லு சாலையில் பாலனப்பள்ளி அருகில் உள்ள மலை குன்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது இரண்டு பேர் தப்பி ஓடினார்கள். அங்கிருந்த அத்திமுகத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது 37), நெரிகம் நாகேஷ்(27), தீர்த்தம் திம்மராஜ்(30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி வழியாக வாகனங்களில் அதிக அளவில் கால்நடைகளை ஏற்றிச்செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    கிருஷ்ணகிரி:

    பெருந்துறையில் இயங்கி வரும் இந்து அதிரடிப்படை அமைப்பின் மாநில தலைவர் தமிழ்செல்வன், நிறுவனத்தலைவர் ராஜகுரு ஆகியோர் தலைமையில், உறுப்பினர்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். இதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் அமைப்பு தமிழகம் முழுவதும் இந்து சமுதாய பணி மேற்கொண்டு வருகிறது. நாங்கள் வணங்குகின்ற பசு இனத்தை அழிக்கும் வகையில், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக மிகவும் சித்ரவதைகள் செய்யப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களை செய்து அடைத்து வைக்கப்பட்ட கன்டெய்னர் லாரியில் அதிக அளவிலான பசு உள்ளிட்ட கால்நடைகளை ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

    பசு இனத்தை அழிக்கும் வகையில் சிலர் மூச்சுகூட விடமுடியாத வாகனங்களில் கால்நடைகளை ஏற்றிக் கொண்டு தினசரி செல்கின்றனர். இது குறித்து போலீசார் அவ்வப்போது வழக்குப்பதிவு செய்கிறார்கள். ஆனால் சிலர் திட்டமிட்டு வாகனங்களில், பசு உள்ளிட்ட கால்நடைகளை அதிக அளவில் ஏற்றிச் செல்கின்றனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தால் சந்தூரில் நாளை (புதன்கிழமை) முதல் 10 நாட்களுக்கு கடைகளை மூட வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா காட்டாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் சந்தூர். மா ஒட்டுச்செடி விற்பனையை பிரதான தொழிலாக கொண்டு மக்கள் வசித்து வருகின்றனர். இதற்காக 200-க்கும் மேற்பட்ட நர்சரிகளில் மா செடிகள் விற்பனை செய்யப்படுகிறது. மா செடிகள் வாங்க வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் நேரடியாக கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சந்தூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்கள் வசித்து வந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து வணிகர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து நாளை (புதன்கிழமை) முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை கடைபிடிக்க முடிவு செய்தனர். அதன்படி நர்சரிகள் உட்பட அனைத்து கடைகளும் மூட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். தண்டோரா மற்றும் துண்டுபிரசுரங்கள் மூலம் காட்டாகரம் ஊராட்சி முழுவதும் அறிவித்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுகாதாரத்துறையினர் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். ஊராட்சியின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் நிலவேம்பு, கபசுர குடிநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சூளகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி போலீசார் தொட்டூர் முனீஸ்வரன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய எலத்தகிரி ராம் நகரைச் சேர்ந்த முருகன் (வயது 38), கூலியம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (33), எலசேப்பள்ளியைச் சேர்ந்த முரளி (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.29 ஆயிரத்து 760 பறிமுதல் செய்யப்பட்டது.
    மத்தூர் அருகே கொடமாண்டப்பட்டி கிராமத்தில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    மத்தூர்:

    மத்தூர் அருகே கொடமாண்டப்பட்டி கிராமத்தில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமிற்கான எற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரபீக், ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் மலர்க்கொடி சுந்தரவடிவேலு ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கொரோனாவின் தீவிரம் குறித்தும், அதிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
    ×