என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொலை செய்த அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
    ஓசூர்:

    ஓசூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொலை செய்த அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த சிந்துஜா (27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் ஓசூரில் லட்சுமி நாராயண நகர் 9-வது கிராசில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

    இந்த நிலையில் மணிகண்டனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தன்னையும், தனது தாய், தந்தையையும் மனைவி சிந்துஜா மதிக்கவில்லை என கூறி மணிகண்டன் அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கத்தியால் சிந்துஜாவின் கழுத்தை அறுத்தார். இதில் பலத்த காயமடைந்த சிந்துஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மனைவியை கொலை செய்த மணிகண்டன் ஓசூர் அட்கோ போலீசில் சரண் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிந்துஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கழுத்தை அறுத்துக்கொலை செய்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அட்கோ போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஓசூர் லட்சுமி நாராயணநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயி. இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 22). இவர் குருபரப்பள்ளி அருகே உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இவர் மோட்டார்சைக்கிளில் குந்தாரப்பள்ளியில் இருந்து பல்லேரிப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வசந்தகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் வசந்தகுமார் இறந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஊத்தங்கரை அருகே விபத்தில் பால் பண்ணை ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொம்மிடி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஜடகானூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 38). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பால் பண்ணையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று திண்டுக்கல்லில் இருந்து ஊத்தங்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோம்பூர் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா சாலிவாரம் அருகே உள்ள பேலாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சியப்பா (வயது 67). இவர் கஞ்சா விற்பனை செய்வதாக தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆஞ்சியப்பாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    சூளகிரி அருகே லாரி மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    சூளகிரியை அடுத்த கோபசந்திரத்தை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி லட்சுமியம்மா (வயது 65). இவர் நேற்று சுண்டகிரி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, குஜராத்தில் இருந்து சென்னைக்கு கெமிக்கல் ஏற்றி வந்த டேங்கர் லாரி, மூதாட்டி மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதற்கிடையே, விபத்திற்கு காரணமான டேங்கர் லாரிக்கு பின்னால் வந்த கார், லாரி மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதி, தரைமட்ட பாலத்தின் தடுப்புச்சுவரின் மீது ஏறி நின்றது. 

    இதில் காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான லாரி, கார் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குருபரப்பள்ளி அருகே நகை தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 36). இவர், கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்த அவர் கடந்த 5-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    அதில் கோடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் கோபி(31) அவரது ஆட்களுடன் வந்து சீட்டு பணம் கேட்டு தன்னை தாக்கி, எனது பெற்றோரை மிரட்டி கையெழுத்து வாங்கினார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு நான் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டேன் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து குருபரப்பள்ளி போலீசார் சுரேஷ்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக கோபி மற்றும் அவரது அடியாட்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நிதி நிறுவன உரிமையாளர் கோபி, அவரது அடியாட்களான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கமல் (30), கோடிப்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
    சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள குமுதேப்பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 40). இவர் நேற்று மாலை அட்டகுறுக்கி என்ற இடத்தில் சாலையோரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு தனது நண்பர்கள் 3 பேருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பார்சல் மினி லாரி ஒன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

    இந்த விபத்தில் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய நண்பர்கள் அதே கிராமத்தை சேர்ந்த மல்லேஷ் (31), கல்லுகுறுக்கியை சேர்ந்த முனிராஜ், அங்கேபள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மல்லேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த முனிராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் விரைந்து சென்று வெங்கடேஷ், மல்லேஷ் ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் இறந்ததால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது.
    இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் ஓசூர் அருகே லாரி மீது மொபட் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். தாய் கண் முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
    ஓசூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன். இவருடைய மனைவி வனிதா(45). இவர்களது மகள் ஜமுனா (வயது 24). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மாதேவபுரா பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் ஜமுனாவும், அவரது தாயார் வனிதாவும் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் ஜமுனாவுக்கும், திருப்பத்தூர் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து மொபட்டில் ஜமுனாவும், அவரது தாயார் வனிதாவும் திருப்பத்தூருக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.

    ஓசூர் அருகே குமுதேப்பள்ளி என்ற இடத்தில் அவர்கள் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மொபட் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து ஜமுனா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாயார் வனிதாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், தாய் கண் முன்னே இளம்பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குருபரப்பள்ளி அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு பி.டி.எம். லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஷேக்பாஷா (வயது 67). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் குருபரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தாபா ஓட்டல் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். வாய் பேச இயலாத மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது தந்தை விவசாயி ஆவார். கடந்த 25.8.2015 அன்று விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது தந்தைக்கு இளம்பெண் உணவு எடுத்து சென்று கொண்டிருந்தார்.

    அவர் கிருஷ்ணாபுரம்-நொகனூர் சாலையில் சென்ற போது, அதே ஊரைச் சேர்ந்த மாதேஷ் (24) என்ற வாலிபர் அங்கு வந்தார். அவர் அந்த இளம்பெண்ணை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, வாலிபர் மாதேசை கைது செய்தார். அவர் மீது பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாதேசிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.
    தேசிய கட்சியோ, மாநில கட்சியோ அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்போரே கூட்டணியில் இருக்க முடியும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறியுள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

    எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் அதிமுக கூட்ணியில் இருக்க முடியாது. 

    அதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை கூட்டணி வேட்பாளராக ஏற்க பாஜக தங்கும் நிலையில் கேபி முனுசாமி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 

    பேரண்டப்பள்ளி அருகே வாகனம் மோதி பொம்மை வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் நகரா மாவட்டம் குளிபுரா தாலுகா சிக்கோலா டேம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 36). இவர் ஓசூரில் பேரண்டப்பள்ளியில் தங்கி பொம்மைகள் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் பேரண்டப்பள்ளி வளைவு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜீவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×