என் மலர்
கிருஷ்ணகிரி
கந்திகுப்பம் அருகே கார் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே உள்ள சுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது 36). கார் மெக்கானிக். இவர் அஸ்வினி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவருக்கு அதிக அளவில் கடன் இருந்துள்ளது. பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் மனமுடைந்த மாது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி அருகே வேலைக்கு செல்ல கணவன் அனுமதிக்காததால் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். இதில் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள துவாரகபுரி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி சரண்யா(வயது 23). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சரிகா(5), ஜான்விகா (2) என 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு நகை கடையில், சரண்யா வேலைக்கு சென்று வந்துள்ளார். இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால் வேலைக்கு செல்லாமல் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார். குழந்தைக்கு 2 வயது ஆனதால் தற்போது சரண்யா மீண்டும் வேலைக்கு செல்ல தனது கணவரிடம் அனுமதி கேட்டார். ஆனால் வேலைக்கு செல்ல சக்திவேல் அனுமதிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த சரண்யா கடந்த 13-ந்தேதி தனது 2 குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தானும் அதை குடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அக்கா கலைவாணி மற்றும் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சரண்யா வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் 3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.
இதையடுத்து அவர்கள், 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 வயது குழந்தை ஜான்விகா பரிதாபமாக இறந்தது. தொடர்ந்து சரண்யா மற்றும் மற்றொரு குழந்தை சரிகா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சரண்யாவின் தாயார் கிருஷ்ணகிரி அணை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரியில் கம்பளி வியாபாரியை எரித்து கொலை செய்ய முயன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது அண்ணனை தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் அருகே உள்ள லைன்கொள்ளை பகுதியை சேர்ந்தவர் காதர்பாஷா (வயது 38). கம்பளி வியாபாரி. இவர் கடந்த 11-ந் தேதி பெங்களூரு சாலையில் உள்ள டான்சி அருகே கம்பளி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர், கம்பளி வாங்க விலை கேட்டதுடன், விலை குறைத்து தருமாறு பேரம் பேசினர். ஆனால் விலையை குறைத்து தர முடியாது என காதர்பாஷா கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், காதர்பாஷாவிடம் தகராறு செய்து விட்டு அங்கிருந்து சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த 2 வாலிபர்களும் மீண்டும் காதர்பாஷாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதுடன், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த காதர்பாஷாவை மீட்டு அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், ராயக்கோட்டையை அடுத்த கொப்பக்கரை அருகே உள்ள சென்னேகொத்தள்ளியை சேர்ந்த ரவிச்சந்திரன் (28), அவரது அண்ணன் சாரதி (30) ஆகிய 2 பேரும் காதர்பாஷா மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றது தெரிந்தது. இதையடுத்து, ரவிச்சந்திரனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது அண்ணன் சாரதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓசூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் வளாகத்தின் அருகே ஜூஜூவாடியில் போக்குவரத்து சோதனைச்சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை தணிக்கை செய்து தற்காலிக பர்மிட் வழங்கும் பணியையும், அதேபோல கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்களை தணிக்கை செய்து தற்காலிக பர்மிட் வழங்கும் பணியையும் அலுவலர்கள் மேற்கொள்கிறார்கள். தினமும் இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த நிலையில் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு பர்மிட் வழங்குவதற்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சோதனைச்சாவடியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை நேற்று அதிகாலை வரை நீடித்தது. அப்போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 120-ஐ மேசைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சோதனைச்சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சுப்புரத்தினம், உதவியாளர் ராமலிங்கம் ஆகிய 2 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்தை முற்றிலுமாக ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடுதல் டி.ஜி.பி.ராஜேஷ்தாஸ் கூறினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தமிழக கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) ராஜேஷ் தாஸ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சக்திவேல், ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மைலான் நிறுவன மனித வள மேம்பாட்டு துறை அதிகாரி பழனிகுமார், துணை தலைவர் ரவிக்குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி.ராஜேஷ்தாஸ் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரவுடிகள், கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் காவல் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் குறைகளை அவர்களின் இடத்திற்கே சென்று விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் லாட்டரி, கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை, மணல் கடத்தல், கள்ளச்சாராயம், உரிமம் பெறாமல் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள், சட்டத்திற்கு புறம்பான வெடி பொருட்கள் வைத்திருப்பவர்கள் குறித்து காவல் துறையினர் தணிக்கை செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மின் விசிறி, குடிநீர், கழிப்பறை ஆகிய அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை கூடுதல் டி.ஜி.பி. திறந்து வைத்தார்.
போச்சம்பள்ளி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
போச்சம்பள்ளி தாலுகா மேட்டுபுலியூரை சேர்ந்தவர் மாது (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் மொபட்டில் ஊத்தங்கரை-புலியூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மாதுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாது இறந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
வேப்பனப்பள்ளி போலீசார், தடதாரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற அத்திகுண்டா சண்முகராவ் (வயது 46) என்பவரை கைது செய்தனர். ஓசூர் டவுன் போலீசார் சானசந்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற ரவிக்குமார்(25) என்பவரை கைது செய்தனர்.
தளி போலீசார் உப்பாரப்பள்ளி பகுதியில் உள்ள மளிகை கடையினை சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த சீனிவாசன் (44) என்பவரை கைது செய்தனர். இதே போல உப்பாரப்பள்ளியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்து, அங்கிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சீனிவாசன்(50) என்பவரை கைது செய்தனர்.
கல்லாவி போலீசார் ஓலப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற மகாலிங்கம் (54) என்பவரை கைது செய்தனர். இதேபோல், சாமல்பட்டி போலீசார் குன்னத்தூர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையினை சோதனை செய்தனர். அங்கு புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கடையின் உரிமையாளரான முருகன் (55) என்பவரை கைது செய்தனர்.
ஓசூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
பாகலூர் அருகே உள்ள குட்டலப்பள்ளியை சேர்ந்தவர் சீனப்பா. இவரது மனைவி முனியம்மா (வயது 28). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் முனியம்மாவின் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் மனவருத்தத்தில் காணப்பட்ட முனியம்மா விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிரஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள தோரிப்பள்ளியை சேர்ந்தவர் லிங்கப்பா (வயது 60). விவசாயி. சம்பவத்தன்று இவர் காமன்தொட்டி- பேரிகை சாலையில் ரவுதப்பள்ளி ஏரிக்கரை பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தநேரம் அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் லிங்கப்பா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் லிங்கப்பா இறந்து விட்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடியாட்கள் மூலம் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 36). நகைக்கடை தொழிலாளி. இவர் கடந்த 5-ந்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்கொலைக்கு முன்பாக சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கோடிப்பள்ளியைச் சேர்ந்த கோபி (31) என்பவரிடம் சீட்டு கட்டி வந்ததாகவும், அந்த சீட்டை எடுத்து விட்டதாகவும், தற்போது வேலை இல்லாததால் பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை.
ஆனால் கோபி மற்றும் அவரது அடியாட்கள் என்னை தாக்கி பெற்றோரிடம் வீட்டை எழுதி வாங்கினார்கள். இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். அந்த வீடியோவுடன், சுரேசை கோபியின் அடியாட்கள் தாக்கும் வீடியோவும் வாட்ஸ்அப் குழுக்களில் வந்தது. இதுதொடர்பாக கோபி அவரது அடியாட்கள் கமல், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நகை தொழிலாளி தற்கொலையின் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடியாட்களை வைத்து ஏலச்சீட்டு நடத்தும் நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்து வருகிறார்கள். குறிப்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர், அடியாட்களை வைத்து ரூ.1 லட்சம், 2 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் ஏலச்சீட்டுக்களை நடத்துகிறார்கள். சீட்டு பணம் செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டுவது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் புகார் தெரிவிக்கிறார்கள்.
போலீசுடன் தங்களை நெருக்கமாக இருப்பதை போல காட்டிக் கொண்டு சில அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏலச்சீட்டுக்களை அடியாட்களை வைத்து தொடர்ந்து நடத்துவதாகவும், இதில் அப்பாவி மக்கள் பலரும் பாதிக்கப்படுவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன. இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ஏலச்சீட்டு நடத்துபவர்கள் யார்? அவர்களிடம் அடியாட்களாக யாரும் உள்ளார்களா? அவர்கள் இதேபோல பொதுமக்கள் யாரையும் மிரட்டி, தாக்கி உள்ளார்களா? என்ற விவரங்களை உளவு பிரிவு போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கூறுகையில், கந்து வட்டி கேட்டோ, சீட்டு பணம் தரவில்லை என்று ரவுடிகளை அனுப்பி மிரட்டினாலோ, தாக்கினாலோ எனது அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடியாட்களை வைத்து யாரேனும் ஏலச்சீட்டுகள் நடத்தி வந்தாலோ, அல்லது பொதுமக்களிடம் மிரட்டி பணம் கேட்டு வந்தாலோ என்னிடம் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சிங்காரப்பேட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் நாயக்கனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 60) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமரேசனை கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த 250 கிராம் கஞ்சா, ரூ.25 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் கஞ்சா விற்ற தொன்னையன்கொட்டாய் கோகுல்நாத் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சூளகிரி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குருபரப்பள்ளி, காமன்தொட்டி, சூளகிரி துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, கக்கன்புரம், சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், எப்ரி, தம்மண்டரப்பள்ளி, சூளகிரி நகரம், மாதரசனப்பள்ளி, உலகம், ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.






