என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவனர் மீது போலீசார் வழக்கு
குருபரப்பள்ளி அருகே தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 36). இவர், கிருஷ்ணகிரி பழையபேட்டை உள்ள நகைக்கடையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ஆனந்தன், குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகன் கடன் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கோடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நிதி நிறுவனம் நடத்தி வரும் கோபி(31) என்பவரிடம் சீட்டு கட்டி வந்ததாகவும். அந்த சீட்டை எடுத்துவிட்டேன். ஆனால் தற்போது வேலை ஏதும் இல்லாததால் திருப்பி கட்ட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அந்த பணத்தை கொடுத்து விடுவதாக கூறினேன்.
ஆனால், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் கோபி, ஆதரவாளர்களுடன் வந்து என்னை தாக்கினர். மேலும், எனது பெற்றோரிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினார். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு நான் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டேன் என தெரிவித்துள்ளார். அதன்படி, பணம் கேட்டு சுரேஷ்குமாரை, கோபியின் ஆதரவாளர்கள் தாக்கும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த 2 வீடியோக்கள் பார்த்த, குருபரப்பள்ளி போலீசார் சுரேஷ்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக கோபி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தனியார் நிதி நிறுவனர் கோபி மற்றும் அவரது அடியாட்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






