என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சிங்காரப்பேட்டை, பேரிகை, ஓசூர் டவுன், அட்கோ, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள சந்து கடைகள் மற்றும் பீடா கடைகளில் சோதனை செய்தனர்.
    • கல்லாவி சங்கர் (44), சிங்காரப்பேட்டை பாரதி (45), மத்தூர் ஜெயக்குமார் (40) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட போலீசார் கிருஷ்ணகிரி, மத்தூர், கல்லாவி, சிங்காரப்பேட்டை, பேரிகை, ஓசூர் டவுன், அட்கோ, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள சந்து கடைகள் மற்றும் பீடா கடைகளில் சோதனை செய்தனர்.

    இதில், கெலமங்கலத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது51), ஓசூர் அட்கோ பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (36), பேரிகையைச் சேர்ந்த முரளி (33), பாகலூரைச் சேர்ந்த பாரதி (30), ஓசூர் டவுன் சந்தியா (35), சாமல்பட்டி சினிவாசன் (60), கல்லாவி சங்கர் (44), சிங்காரப்பேட்டை பாரதி (45), மத்தூர் ஜெயக்குமார் (40) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஹான்ஸ், பான்பாராக், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • நேற்று இரவு அந்த வழியாக வந்த ஒரு கார் திடீரென தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
    • அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்தவித காயும் ஏற்படவில்லை.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை சாலையில், கோர்ட், தாலுக்கா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. எப்போதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையின் நடுவே தடுப்பு சுவர் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு அந்த வழியாக வந்த ஒரு கார் திடீரென தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதைக் கண்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு சென்று, காரின் உள்ளே இருந்த 3 வாலிபர்களை மீட்டனர்.

    அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்தவித காயும் ஏற்படவில்லை. மேலும் பொதுமக்கள் உதவியுடன் கார், தூக்கி நிறுத்தப்பட்டது.

    இந்த விபத்தில் காரின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரித்தபோது, பெங்களூரு எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியை சேர்ந்த சாப்ட்வேட் எஞ்சினியர் ரேவந்த், அவரது நண்பர் அபிஷேக், ஆகிய இருவரும் தங்கள் நண்பர் ஒருவரை ஒசூர் ரெயில் நிலையத்தில், திருப்பூருக்கு ரெயிலில் ஏற்றிவிட்டு, மீண்டும் பெங்களூரு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    • வாகனங்களை ஓட்டி செல்லும் பொழுது பாதுகாப்புடன் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும்.
    • பருவ மழை பெய்யும் காலங்களில் நீர் நிலைகளில் யாரும் செல்லக்கூடாது.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள் மூலமாக பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தீ தடுப்பு குறித்து செயல்முறை விளக்கங்கள் மாணவ, மாணவிகளிடையே ஏற்படுத்தப் பட்டது.

    தீ விபத்து பகுதிகளில் யாரிடம் சிக்கிக் கொண்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது தீ விபத்துகளில் ஏற்பட்ட தீயினை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து செயல்முறை விளக்கங்களுடன் தனியார் அரசு தேர்வு பயிற்சி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சிறப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி செயல்முறை விளக்கங்களை ஏற்படுத்தினார்.

    மேலும் பருவ மழை பெய்யும் காலங்களில் நீர் நிலைகளில் யாரும் செல்ல க்கூடாது எனவும் வாகனங்களை ஓட்டி செல்லும் பொழுது பாதுகாப்புடன் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும் என பல்வேறு பாதுகாப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டது. இந்த நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.

    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 செட் மேசை, நாற்காலிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மேசை, நாற்காலிகளை பள்ளிக்கு வழங்கி பேசினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அரசு மேல்நிலைப் பள்ளியில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படிக்கிறார்கள்.

    இங்குள்ள பல வகுப்பறை களில் மாண வர்கள் தரையில் அமர்ந்து படிப்பதால், பள்ளிக்கு மேசை மற்றும் நாற்காலி களை வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக் குமாரிடம் பள்ளியின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தனர்.

    அதன்படி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 செட் மேசை, நாற்காலிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மேசை, நாற்காலிகளை பள்ளிக்கு வழங்கி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் மகேந்திரன், வேடியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாராயணசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், கட்டிகானப்பள்ளி ஊராட்சி துணைத் தலைவர் நாராயணகுமார், முன்னாள் கவுன்சிலர் ரவி, வங்கித் தலைவர் சின்னசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், கிளை செயலாளர்கள் மாரி, ராமமூர்த்தி, மோகன், பாசறை செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவராமனின் மகன் மதுகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • சரணடைந்த 2 பேரை சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள தமிழக மாநில எல்லையாக உள்ள ஜூஜூவாடி கிராமம் பாலாஜி நகரை சேர்ந்த சிவராமன் (வயது52) என்பவர் கால்நடை பண்ணை வைத்து

    பராமரிப்பு செய்து வந்தார். இவருக்கு போப்பம்மாள் என்ற மனைவியும், மதுகுமார் என்ற மகனும், சைத்ரா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி வழக்கம்போல் கால்நடைகளுக்கு தேவையான தீவன புல்லை வாங்கி கொண்டு ஆம்னி காரில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காரின் குறுக்கே வழி மறித்து கண்ணில் மிளகாய்பொடி தூவி பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிவராமனின் மகன் மதுகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையில் கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சிவராமனை கொலை செய்ததாக போச்சம்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.வீ.சண்முகநாதன் முன்னிலையில் நேற்று மதியம் 2 பேர் சரணடைந்தனர்.

    சரணடைந்த இருவரும் ஜூஜூவாடி காந்தி நகரை சேர்ந்த சேகர் என்பவரது மகன் சீனிவாஸ் என்கிற காந்தி (26) அவரது நண்பர் ஓசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சரணடைந்த 2 பேரையும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக ஓசூரை அடுத்த பேகைப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் முரளி (27), ஜூ ஜுவாடியைச் சேர்ந்த திலீப் குமார் என்கிற கொன்னே (28), மகேந்திரன் (32), ஊத்தங்கரையை அடுத்த ஆனந்தூரைச் சேர்ந்த சிம்புவின் மனைவி அனுசியா (23) ஆகிய 4 பேரை ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலையரசன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
    • இளைஞர்களுக்கு செல்போன் மூலம், ஒலி பெருக்கி மூலம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அம்மன் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கலையரசன் (வயது29). இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனில் வாஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதி நேர வேலையில் சிறிய முதலீடு செய்தால், அதிக சம்பளமும், அதிக கமிஷன் தொகையும் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை நம்பிய கலையரசன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டபோது, எதிர் முனையில் பேசிய மர்ம நபர்கள் குறிப்பிட்ட தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே அவர்கள் கூறிய வங்கி கணக்கில் கலையரசன் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபர்கள் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து அவர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது மர்ம நபரின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர். இதுகுறித்து கலையரசன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று ஓசூர் பத்தலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (39). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கும் முன்பு அதிக சம்பளத்தில் பகுதி நேர வேலை தருவதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதனை நம்பிய அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு அவர் அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து படித்த இளைஞர்களை குறிவைத்து இதேபோன்று ஆன்லைன் மூலம் பணமோசடியில் ஈடுபடும் மர்ம கும்பலை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், ஆன்லைன் மூலம் மோசடி நடைபெறுவதை தவிர்க்க இளைஞர்களுக்கு செல்போன் மூலம், ஒலி பெருக்கி மூலம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 2015-ம் ஆண்டு பிரவீன்குமாருக்கும், பூங்கொடிக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • நிச்சயம் செய்து விட்டு 8 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் பூங்கொடியை, பிரவீன்குமார் ஏமாற்றிய சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி (வயது26). இவர் எலத்தகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (30).

    இவரும், பூங்கொடியும் நண்பர்களாக பழகி காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு பிரவீன்குமாருக்கும், பூங்கொடிக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    அதன்பிறகு இருவரும் லிவிங்டூ-கெதர் பாணியில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிச்சயம் செய்து 8 வருடங்கள் ஆகியும் திருமணம் செய்யாமல் பிரவீன்குமார் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து பூங்கொடி அவரிடம் கேட்டபோது, உன்னை திருமணம் செய்து கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து பூங்கொடி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிச்சயம் செய்து விட்டு 8 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் பூங்கொடியை, பிரவீன்குமார் ஏமாற்றிய சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆந்திரா மாநில சித்தூர் போலீசார் சித்ரவதை செய்து, கொடுமைப் படுத்தியவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
    • பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்களுக்கும், ஆண்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியாண்டப்பட்டியைச் சேர்ந்த குறவர் இன மக்களை, ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் சித்ரவதை செய்ததாக கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், குறிஞ்சி தமிழர் விடுதலை இயக்கம், பழங்குடியினர் விடுதலை இயக்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு குறிஞ்சி விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் தேவ கலையழகன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் முருகன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கனியமுதன், மாநில துணை செயலாளர் அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில், புளியாண்டப்பட்டியைச் சேர்ந்த குறவர் இன பெண்களை ஆந்திரா மாநில சித்தூர் போலீசார் சித்ரவதை செய்து, ஆண்களிடம் 4 கிலோ தங்கத்தைக் கேட்டு கொடுமைப் படுத்தியவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்களுக்கும், ஆண்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். 8 நபர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். குறவர் இனத்தின் மீது தொடரும் போலீசாரின் அடக்குமுறையை தமிழக அரசும், காவல்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    • சோமேஸ்வரர் கோவிலில் 7-ஆம் ஆண்டு சம்பத் சராபிஷேகம் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை விழா 2 நாட்கள் நடைபெற்றது.
    • லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர பாராயணம் உள்ளிட்டவைகள் நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம் நகரில் உள்ள சொர்ணம்பிகை சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் கோவிலில் 7-ஆம் ஆண்டு சம்பத் சராபிஷேகம் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை விழா 2 நாட்கள் நடைபெற்றது.

    கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேக தினத்தை சம்பத் சராபிஷேகம் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி விழாவானது, நேற்று முன்தினம் ,கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, புண்ணியாவசனம், மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர பாராயணம் உள்ளிட்டவைகள் நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது.

    இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், நேற்று ருத்ரயாகத்துடன் தொடங்கி மூலவர்களுக்கும் கலச அபிஷேகம் நடத்தி, தீபாராதனை செய்யப்பட்டது.

    பின்னர் காலை முதல் மாலை வரை ஏகதின லட்சாச்சனை நடைபெற்றது. இதில் மூலவர் சிவபெருமானுக்கு வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, வில்வ இலைகளாலும் மலர்களாலும் லட்ச அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

    பின்னர் மூலவருக்கு மகா தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு நடத்தினர்.

    • தொடர் மழையில் காரணமாக ஏரி நிரம்பி 12 கிராம பாசன விவசாயி களும், பொது மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
    • ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியின் பரப்பளவை அளவீடுகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு ஊராட்சியில் ஆலஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையில் காரணமாக ஏரி நிரம்பி 12 கிராம பாசன விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.  தற்போது ஏரியை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. நீர்வரத்து பாதை அடைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியின் பரப்பளவை அளவீடுகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 366 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவியை கலெக்டர் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 366 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சரயு, தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவியை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த உதவித்தொகையை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.

    கிருஷ்ணகிரி,  

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதந்திர உதவித்தொகையாக ரூ.200ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.600ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000ம் என உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இந்த உதவித்தொகையை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை. பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச்சான்று தேவையில்லை.

    மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவிகளாக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இந்த அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்கள் முடிவுற்ற புதுப்பித்திருப்பின் மற்றும் மாற்றுத்திறனாளி எனில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்று காத்திருப்போர் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம்.

    அதற்கான விண்ணப்ப படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் விண்ணப்ப படிவத்தினை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    எனவே, உரிய சான்றுகளுடன் தங்களது விண்ணப்பங்களை வருகிற 31ந் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் கையொப்பம் பெற தேவையில்லை. ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவராக இருப்பின், சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×