என் மலர்
கிருஷ்ணகிரி
- தீ விபத்து தடுப்பது குறித்து ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அம்பிகா, ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தீ விபத்து தடுப்பது குறித்து ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு நிலைய அலுவலர் பச்சையப்பன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சரவணகுமார், ராஜ்குமார், பொண்மணி ஆகியோர் மாணவிகளுக்கு மழைக்காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, தீ விபத்து ஏற்படும் போது அதனை எவ்வாறு கையாள்வது, நீர் நிலைகளில் தவறி விழுந்தவர்களை எவ்வாறு விரைந்து மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அம்பிகா, ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி துணை மின் நிலையம், சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
- நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி துணை மின் நிலையம், சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
எனவே நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, பவர்ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1, 2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலை கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூளகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம்,
பில்லனகுப்பம், கல்லுகுறுக்கி, பூசாரிப்பட்டி, தானம்பட்டி, கொண்டேப்பள்ளி பகுதிகளிலும், அதை சுற்றி உள்ள கிராமங்களிலும் மின்சாரம் இருக்காது.
அதே போல சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காமராஜர் மறைவுக்கு பிறகு சென்னை காமராஜர் அரங்கில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
- வருகிற 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கத்திற்கு இந்த கார் திரும்ப அனுப்பப்படுகிறது.
கிருஷ்ணகிரி:
பெருந்தலைவர் காமராஜர் எம்.டி.டி.2727 என்ற எண் கொண்ட 1952-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சர் ஆன பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.
காமராஜர் மறைவுக்கு பிறகு சென்னை காமராஜர் அரங்கில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள மெக்கானிக் ஷெட்டிற்கு கடந்த மாதம் கொண்டு செல்லப்பட்டு இந்த கார் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
தற்போது கண்ணாடி, உதிரிபாகங்கள், விளக்குகள் பொருத்தப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ள காரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்து செல்கிறார்கள். வருகிற 15-ந் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் அரங்கத்திற்கு இந்த கார் திரும்ப அனுப்பப்படுகிறது.
- உத்தரவை மீறி மீன்வளர்ப்போர்கள் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்வளர்த்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்.
- பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும் அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயநிலை உருவாகும்.
கிருஷ்ணகிரி,
அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்து ள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளது.
இந்த மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இந்த மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை.
மேலும் எட்டு அல்லது மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியவை, இதனால் இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்து விட்டால் அவைகளை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று.
மேலும் இந்த மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கெண்ட மீன்களாகும்.
மேலும் இந்த மீன்கள் நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும் அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயநிலை உருவாகும்.
இந்த மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ, அல்லது மீன்வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், இவை மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துவிட வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு தப்பிச் செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகும்.
இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நமது உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் வழி இல்லாமல் போய்விடும்.
எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன் விவசாயிகள் அரசால் தடை செய்யப்பட்ட கொடூரமான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம். ஏற்கனவே மீன்பண்ணை களில் இந்த இன மீன்களை வளர்த்து வரும் மீன்வளர்ப்பவர்கள் மீன்பண்ணையில் வளர்ந்து வரும் மீன்களை அழிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த உத்தரவை மீறி மீன்வளர்ப்போர்கள் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்வளர்த்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்.
மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள மீன் பண்ணை யாளர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மீன்வளத் துறையின் ஆலோசனை பெற்று வளர்க்கவும், புதிதாக மீன்பண்ணை அமைக்கும் மீன் விவசாயி கள் கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை முதன்மை நிர்வாக அலுவ லரை தொடர்பு கொண்டு தங்கள் மீன்பண்ணையை பதிவு செய்து அரசு வழங்கும் மானியத்தினை பெற்று பயனடையலாம்.
மேலும் இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், கதவு எண் 24-25, வார்டு எண் 27, 4-வது கிராஸ், கோ-ஆப்ரேட்டிவ் காலனி, கிருஷ்ணகிரி 635 001 மற்றும் தொலைபேசி எண் 04343 - 235745 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகள் மற்றும் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள அந்தேரிப்பட்டி, சாமல்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
- இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், அந்தேரிப்பட்டி, சாமல்பட்டி ஊராட்சிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி திட்ட பராமரிப்பு கோட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகள் மற்றும் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள அந்தேரிப்பட்டி, சாமல்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்தேரிப்பட்டி அருகில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலை விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
எனவே மேற்கண்ட பகுதிகளில் இந்த 3 நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ளவும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- மனவேதனையில் இருந்த கோவிந்தராஜ் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலை சாந்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது62). விவசாயி. இவரது மகன் சீனிவாசன்.
இந்த நிலையில் கோவிந்தராஜூக்கு மூட்டு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும், அவருக்கு எந்த பலனும் அளிக்காததால், மனவேதனையில் இருந்த கோவிந்தராஜ் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவரது மகன் சீனிவாசன் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகுதியான விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்க 10 ஒன்றியங்களிலிருந்து 40 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி இன்று வழங்கப்பட்டது.
- விண்ணப்ப படிவங்கள் நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்வதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதாந்தோறும் ரூ.1000 செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு தகுதியான விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்க 10 ஒன்றியங்களிலிருந்து 40 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி இன்று வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில், தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்வது குறித்தும், விண்ணப்பங்கள் பதிவு செய்வது குறித்தும், தகுதியான நபர்கள் என்னென்ன விவரங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் அந்தந்த ஒன்றியங்களில் முகாமில் விண்ணப்பங்களை இணைய வழியில் ஏற்ற உள்ள தன்னார்வர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர். இதனால் 1978 தன்னார்வலர்கள் பயிற்சி பெற உள்ளனர். விண்ணப்ப படிவங்கள் நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
மேலும், முகாமிற்கு பயனாளர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் வர வேண்டும் என்பதற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. பயனாளர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர் ஜான் பம்ஸ், மின் ஆளுமை திட்ட மேலாளர் வினோத் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- ஆப்டிகல் பைபர் கேபிள்கள் 85 சதவீதம் மின் பாதை வழியாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் அமைக்கப்பட உள்ளன.
- சேவை மையங்களில் இருந்த 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள இணையதள வசதிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் அதிவேக இன்டர்நெட் சேவை இணைப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும், அதிவேக இணையதள இணைப்பு வழங்க பாரத் நெட் திட்டத்தின் 2-ம் கட்டம், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமாக, அனைத்து வட்டாரங்களும், கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன.
ஆப்டிகல் பைபர் கேபிள்கள் 85 சதவீதம் மின் பாதை வழியாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் அமைக்கப்பட உள்ளன.
இப்பணிகள் நிறைவடைந்ததும் கிராமப் பகுதிகளில் அகண்ட அலைவரிசை இணைப்புகளை வை-பை வசதி ஏற்படுத்துதல், தனிநபர் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கல், அகண்ட அலைவரிசை இணைப்புகளை குத்தகைக்கு விடுதல் மற்றும் செல்போன் டவர்களுக்கு இணைப்புகள் வழங்குதல் ஆகிய முன்னேற்றம் அடைந்த தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையங்கள் மற்றும் வட்டார ஊராட்சி சேவை மையங்கள் இந்த திட்டத்தின் இருப்புப் புள்ளியாக மாற்றப்பட்டுள்ளன. இந்த சேவை மையங்களில் இருந்த 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள இணையதள வசதிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணி முடிந்தவுடன் கிராம ஊராட்சி சேவை மையங்களில் இருந்து ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் 1 ஜி.பி.பி.எஸ். அதிவேக இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, கிராம ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி, உள்ளிட்ட வரி இனங்கள் மற்றும் கட்டிட அனுமதி ஆகியவற்றுக்கான கட்டணங்களை இணையதளம் மூலமாகவே பொதுமக்கள் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறி உள்ளதால், தகவல் புரட்சியை ஏற்படுத்தும் சிறப்பு மிக்க இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு, அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிகளும், விவசாயி–களும், பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களைக் கொண்டே நடத்திட வேண்டும்.
- காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில் இருந்து தர்மராஜா கோவில் சாலை வழியாக வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை பேரணி யும், ஆர்ப்பாட்டமும் நடந்தது.
மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மதியழகன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
மாநில செயலாளர் ஜெயந்தி தொடக்க உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் சந்திராச்சாரி, தனலட்சுமி, வெண்ணிலா, வெங்கடரத்தினம், குணவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் மஞ்சுளா நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களைக் கொண்டே நடத்திட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது 600-லிருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும். விருப்பத்தின் பேரில் பணி மாறுதல் வழங்க வேண்டும்.
பதவி உயர்வு வழங்கிட வேண்டும். உணவூட்ட செலவினங்கள் பிரதிமாதம் தடையின்றி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான வீட்டு மனை பட்டா, விவசாய நில பட்டா மற்றும் அரசின் அனைத்து சலுகை களையும் வழங்க வேண்டும்.
- இதுவரை எந்த வித அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஓசூர்,
ஓசூர் தாலுக்கா சென்ன சந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்ன சந்திரம், மாரசந்திரம், உளியாளம் உள்ளிட்ட 7 கிராமங்களில் 8000-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான வீட்டு மனை பட்டா, விவசாய நில பட்டா மற்றும் அரசின் அனைத்து சலுகை களையும் வழங்க வேண்டும் என பல்வேறு அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து இன்று காலை உளியாளம் கிராமத்தில், மக்கள் தங்கள் வீடுகளின் மீது கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புக் கொடி ஏந்தியும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அலசநத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.150-யை பறிமுதல் செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீஸ் நேற்று அலசநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது40), சுப்ரமணி (42), மாது (38) ஆகிய 3 பேரும் சூதாடியது தெரியவந்தது.
உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.150-யை பறிமுதல் செய்தனர்.
- சிறுமி நீரில் அடித்துச் செல்லப்பட்டாளா? அல்லது பாறையில் மோதி உள்ளாரா? என்று தெரியவில்லை.
- இன்று காலை மீண்டும் சிறுமியை தேடும் பணி தொடங்கியது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், ஓசூர் - மாலூர் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்திலிருந்து நேற்று இரவு 8 மணியளவில், சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி திடீரென கீழே ஆற்றில் குதித்து விட்டதாக அந்த வழியாக சென்ற ஒரு நபர் அலறல் சத்தம் எழுப்பினார்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மேலும் தகவல் அறிந்து பாகலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு சென்று சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ள நிலையில் சிறுமி நீரில் அடித்துச் செல்லப்பட்டாளா? அல்லது பாறையில் மோதி உள்ளாரா? என்று தெரியவில்லை.
மேலும் அந்த பகுதியில் இருள் சூழ்ந்திருப்பதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்று காலை மீண்டும் சிறுமியை தேடும் பணி தொடங்கியது.
இதனிடையே அந்த சிறுமி பாகலூர் ஜீவா நகரை சேர்ந்த ரவி என்பவரது மகள் தேஜஸ்வினி (வயது16) என்பதும், அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில 10-ஆம் வகுப்பு படித்து வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.
அவர் ஏன் பாலத்திலிருந்து குதித்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.






